Monday, December 17, 2012

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு




எந்த ஒரு தத்துவத்தையும் அறிவுப்பூர்வமாக விவாதிப்பது,அதை இழிவுபடுத்துவதாகாது.மாறாக,ஆதாரத்தின் அடிப்படையில்,ஒரு கொள்கை ஆராயப்படுவது ஆரோக்கியமான ஒன்றேயாகும்.ஆனால் மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை அவமதித்து,இழிவுபடுத்துவது,ஒரு சமூகத்தால் கடவுளாக கொண்டாடப்படுபவற்றை வசவுபாடி இழிவுபடுத்துவது ஏற்புடையதன்று.


'' ( நம்பிக்கையாளர்களே! ) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என)அழைக்கின்றார்களோ,அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.அதனால் அவர்கள்,அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள்.'' அல் குர்ஆன் ;-- ( 6 ;108 )

'' பெற்றோரை திட்டுவது பெரும்பாவங்களில் ஒன்று '' என பெருமானார் நபி (ஸல்) அவர்கள் நவின்றபோது, ஒரு மனிதன் தனது பெற்றோரையுமா திட்டுவான்? '' என நபித்தோழர்கள் வியப்போடு வினவினார்கள்.'' அடுத்த மனிதரின் பெற்றோரை திட்டும்பொழுது அவன் பதிலுக்கு இவனுடைய பெற்றோரை திட்டுவானல்லவா?'' என நாயகம் (ஸல்) பதிலளித்தார்கள். ( புகாரி ; 5973, முஸ்லிம் ; 90 )

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு அதன் சாதக, பாதகங்களைப் பற்றி சிந்திக்கவேண்டும்.நம்முடைய சொல்லால்,செயலால் தீய விளைவுகள் ஏற்படும் என்று பயந்தால் அதை கைவிடவேண்டும்.எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிக்கவேண்டும்.யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக்கூடாது.

ஒரு முறை ஒரு முஸ்லிமுக்கும், ஒரு யூதருக்கும் ஏதோ ஒரு வாக்குவாதம்.அப்போது அந்த முஸ்லிம் ( தனது வாதத்தை வலுவூட்டுவதற்காக) ''  அகிலத்தாரை விட முஹம்மதை தேர்ந்தெடுத்த இறைவனின் மீது ஆணையாக '' என்று கூறினார்.அதற்கு அந்த யூதர்,'' அகிலத்தாரை விட மூஸாவை தேர்ந்தெடுத்த இறைவனின் மீது ஆணையாக. '' என்று கூறினார். 

அதனால் கோபமடைந்த முஸ்லிம், அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவுமா?'' எனக்கேட்டவராக தனது கையை ஓங்கி யூதனை தாக்கினார்.உடனே அந்த யூதர்,முஹம்மது நபி (ஸல்)  அவர்களிடம் வந்து,தன்னை தாக்கிய அந்த முஸ்லிமைப்பற்றி புகார் செய்தார்.அப்போது அந்த முஸ்லிமை அழைத்து,அங்கு நடந்த விபரத்தை கேட்டறிந்த நபி (ஸல்) அவர்கள்,மற்ற நபிமாரை விட உன்னை உயர்த்தி பேசவேண்டாம்.மக்களெல்லாம் மறுமையில்,மயக்கத்தில் இருப்பார்கள். 

மயக்கம் தெளியும் முதல் நபராக நானே இருப்பேன்.அங்கே மூஸா,அர்ஷின் நிலைப்படியைப் பிடித்தவராக நிற்பார்,அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து விட்டாரா? அல்லது சினாய் மலையில் அவர் அடைந்த மயக்கத்திற்கு பகரமாக இங்கே அவருக்கு மயக்கம் ஏற்படவில்லையா? என நானறியேன்.'' எனக்கூறினார்கள். (புகாரி -- 2412 ) 

காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு.ஒவ்வொரு இனத்திற்கும் அவர்களின் தலைவரே சிறந்தவர்.இந்த வகையில், யூதர் தன்னுடைய தலைவரை முன்னிலைப்படுத்தியது தவறன்று.எனவே முஸ்லிம் அவரை அடித்தது சரியன்று.நமது தலைவர்  உலகத்தலைவர்களை விட சிறந்தவர் என்று நாம் நம்புகின்றோம் என்பதற்காக அதை மற்றவர்களையும் ஏற்கச்செய்ய வன்முறை சரியான அனுகுமுரையன்று.

அறிவின் ஒளியில்,ஆதாரத்தின் அடிப்படையில்,ஆராயவேண்டிய தலைப்பை ஆத்திரத்தின் ஆக்கிரமிப்பில் அடித்து நொறுக்கி விடக்கூடாது.இந்த வகையில்தான், நம்பாதவர்களிடம் பொத்தாம் பொதுவில் என்னைஅவரை (மூஸாவை) விட சிறந்தவராக்கி பிரச்சனையாக்காதீர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

இது மத சகிப்புத்தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.உண்மை உரைக்கப்படவேண்டிய இடத்தில் தாம் உரைக்கவேண்டும்.உதாசீனப்படுத்தப்படும் இடத்தில் -- சமையத்தில் அதை உரைத்து ஊனப்படுத்திவிடக்கூடாது.

இரண்டாம் கலீபா ஹளரத் உமர் (ரலி) அவர்களின் நீதிமிக்க பொற்கால ஆட்சியில்,எகிப்தின் ஆளுனராக ஹளரத் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.அப்போது அங்கே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்துவிட்டது.யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபரால் ஏசுநாதரின் உருவச்சிலையில் மூக்குப்பகுதி உடைக்கப்பட்டுவிடுகின்றது. இதனால் அங்கு மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகின்றது.

குற்றவாளியைக்கண்டு பிடிக்கமுடியவில்லை.பதிலுக்கு நாங்களும் முஹம்மது நபிக்கு சிலை வடித்து அதில் அவரது மூக்கை உடைத்து சேதப்படுத்துவோம்,என போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டார்கள்.பதறிப்போன ஆளுனர், '' அப்படி ஒன்றும் செய்துவிடவேண்டாம்.வேண்டுமானால் எனது மூக்கை வெட்டி எறிந்து விடுங்கள்.

முஹம்மது நபியின் கற்ப்பனை உருவத்துக்கூட சேதம் விலைவிக்க நான் மட்டும் அல்ல உலகில் எந்த முஸ்லிமும் மனம் ஒப்பமாட்டான். '' என்று தனது மூக்கை அறுக்க நாளும்,நேரமும் அறிவித்துவிட்டார்.குறிப்பிட்ட தேதியில்,மிகப்பெரும் மக்கள் திரளில் வைத்து,ஆளுனரின் மூக்கைப் பதம் பார்க்க இருந்த தருணத்தில்,எங்கிருந்தோ வந்த சப்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினார்.''

தன்னால் ஒரு நிரபராதி,நீதிமிக்க ஆளுனரின் மூக்கு தாக்கப்படக்கூடாது.நான் தான் அந்தக்குற்றவாளி என்னை தண்டியுங்கள்.'' என்று சொல்லிக்கொண்டு தானாக முன்வந்து தனது மூக்கை நீட்டினான் குற்றவாளி இந்த சமத்துவ ஆட்சி கண்டு அகிலமே அசந்துபோனது.அன்று அசைக்க முடியாத மிகப்பெரிய வல்லரசாக இருந்த இஸ்லாமியக்குடியரசு,நினைத்து இருந்தால் போராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியிருக்கலாம்.

அல்லது இந்த நாட்டில் தனிமனித சுதந்தரத்தில் நாங்கள் தலையிடமுடியாது.எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை.என்று கருத்தாடியிருக்கலாம்.ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல்,தங்களது சகோதரத்துவ கிறிஸ்தவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆளுனரே அதற்கான தண்டனையை ஏற்க முன்வந்த இஸ்லாத்தின் உயர் பண்பை பாராட்டிய பாரதியார், ''

'' உருவப்படத்தை உடைப்பதும்,உயிருள்ளவரின் மூக்கை உடைப்பதும் இரண்டுமே குற்றமே '' எனக்கூறி தனது கையிலிருந்த வாளை உறையிலிட்டார்.இது தான் ஒரு வல்லரசுக்கு அழகும்,அறிவும்.இப்படி மக்களின் மன, மத உணர்வுகளை மதித்து,ஆட்சியாளர்கள் செயல்பட்டால் உலகில் வன்முறைக்கு இடமேது.ஸலாம் சத்து மலேசியா (SALAM SATU MALAYSIYA)அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்!! வஸ்ஸலாம்!!!..



என்றும் தங்களன்புள்ள

மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ்  எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர், மலேசியா)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Thursday, December 13, 2012

சால்னாவில் தண்ணீர் அதிகம்



''அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி வருவதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படி செய்தோம் '' அல்குர்ஆன் 32 ; 21 நீ, திருந்தி அவனிடம் திரும்பி வரவேண்டும் என்பதற்காகத்தான் அவன் உனக்கு சிறிய வேதனையைத் தருகின்றான்.

சந்தோஷங்கள் உன்னை இறைவனை விட்டும் தூரமாக்கும் போது கவலைகள் தாம் உன்னைக்கட்டிப்போட்டு அவனிடம் கொண்டு போய்ச்சேர்க்கின்றது. மௌலானா ரூமி கூறுவார்கள் ; தாய்மார்களுக்குப் பிரசவ வேதனை ஏற்படாதவரை குழந்தை பிறப்பதற்கு  வேறு வழி எதுவும் கிடையாது.அதாவது வேதனை மிகவும் முக்கியமானது.ஞானமெனும் அமானிதம் உள்ளத்தில் இருக்கின்றது. உயிரோ அதை கருவுற்றுள்ளது.

மற்றபடி இந்த அறிவுரைகளெல்லாம் அமானிதத்தை வெளிக்கொணர்வதற்கு தாதியைப் போன்றது.தாதியானவள் கூறுகிறாள் ; பெண்ணுக்கு இன்னும் பிரசவ வேதனை ஏற்படவில்லை.அந்த வேதனை ஏற்ப்பட்டால் தான் குழந்தை பிறப்பதற்கு வழி உண்டாகும்.அதாவது அறிவுரைகள் பயன்தரவில்லை என்றால் நன்மையின் செயல்பாடுகள் எதுவும் நடைபெறாது.  '' மஸ்னவி ஷரிஃபு.

உனக்கு வலி வந்தாலே உன்னிடம் உள்ள உண்மை பிரசவிக்கும். இது  ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல,எல்லாத் துறைக்கும் இது தான் பொது விதி.சாதனைப் படைத்தவர்களெல்லாம் வேதனைப்பட்டவர்கள் தாம்.கஷ்டப்பட்டு படித்தால் தான் பார் போற்றும் பேரறிஞனாக முடியும்.அல்லும் பகலும் அயராது பாடுபட்டால்தான் பெரிய தொழில் அதிபராக நீ உயர முடியும்.

எதிர்ப்புகள் கண்டு கண் கலங்காமல் எதையும் தாங்கும் இதயத்துடன் வீறு நடைபோட்டு தீரத்துடன் செயல்பட்டால்தான் நீ, தலைவன் ஆகி பிரகாசிக்க முடியும். உடலுக்கு வரும் வியாதி மனிதனுக்கு தனது உடலின் மீது கவனத்தை திருப்புகின்றது. தலைவலி,வயிற்றுவலி போன்ற நோய்கள் வரும்போது தான் தனக்கு தலையும்,வயிறும் இருக்கின்றதே என்ற ஞாபகமே வருகின்றது. 

ஆரோக்கியமாக இருக்கின்றபோது தனக்கு உடல் என்று ஒன்று இருக்கின்ற சிந்தனையே வருவதில்லை.எனவே வியாதி வருவதே,நம் உடலின் மீது நமது கவனத்தை திருப்பத்தான்.இப்படி வியாதி,உடலை கவனப்படுத்துவதைப்போல மனக்கவலை நமக்கு மனதைக்கவனப்படுத்துகிறது. '' தன்னை அறிந்தவனே தனது இறைவனை அறிகின்றான் '' என்பது நபிமொழி.

தன்னைப்பற்றிய நினைப்பே வராத போது எப்படி அதனைப்பற்றி அறிய முடியும்.இந்த வகையில் ; மனவேதனை தன்னைப்பற்றிய விழிப்பு நிலை உண்டாக வழி செய்கின்றது ஒருவருக்கு மனவேதனை ஏற்ப்படவிலையெனில் ஆணவம் தலைக்கேறி அவரது ஆன்மா அழிந்து விடும்.

மனதிற்கு உண்டாகும் வலிகள் மனிதனை பணிவும்,பண்பும் உள்ளவனாக,புடம் போட்ட தங்கமென அவனை மிளிரச்செய்கின்றது உராய்வில்லாமல் ரத்தினங்களை பள பளப்பாக்க முடியாது.சோதனைகளின்றி மனிதரை சரியானவராக்க முடியாது '' என்றார்கள் ஃபூயூசியஸ். மனசு -- நப்ஸு,ஒரு புற்று நோய்.அதற்கு வலியெனும் மின் அதிர்வைக் கொடுக்காமல் சிகிச்சை செய்ய முடியாது.

துன்பங்கள் தரும் வலியே,மனிதனை தியாண நிலைக்கு அழைத்துச்சென்று இதய தரிசணத்தின் மூலமாக,இறை தரிசணத்தைப் பெற்றுத்தருகின்றது'' துன்பத்தின் இன்பமே! சித்தரவதை,சிறை,வெறுப்பு,சாவினை நேருக்கு நேர் சந்திப்பது,தூக்கு மரத்தில் ஏறுவது ; துப்பாக்கி சூடுகளுக்கு அஞ்சாமல் நிதானமாக முன்னேறுவது கடவுளாகவே உண்மையில் மாறுவது'' வால்ட்விட்மன்.

'' நான் உடைந்து போன இதயத்தில் இருப்பேன் '' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) மறுமை நாளில் அடியானிடம் அல்லாஹ் ஆதமின் மகனே!  நான் நோயுற்று இருந்தேன் நீ ஏன் என்னிடம் வந்து நலம் விசாரிக்கவில்லை? பசியோடும்,தாகத்தோடும் உன்னிடம் உணவும்,தண்ணீரும் கேட்டேன் நீ எனக்கு தண்ணீரும்,உணவும் அளிக்கவில்லையே என்று கேட்பான்.

அதற்கு அந்த அடியான், '' நீ அகிலங்களின் அதிபதி.உனக்கு நான் எவ்வாறு உணவும், தண்ணீரும் அளிப்பேன்.உன்னிடம் வந்து எப்படி நலம் விசாரிப்பேன் '' என திருப்பிக்கேட்பான்.அப்போது அல்லாஹ், எனது இன்ன அடியான் (பசியுடன்) உன்னிடம் உணவு கேட்டான் நீ,அவனுக்கு உணவளிக்கவில்லை.நீ அவனுக்கு உணவளித்திருந்தால்..... அவ்வாறே,தாகித்து உண்ணிடம் தண்ணீர் கேட்டு வந்தவனுக்கு நீர்,புகட்டி இருந்தால்... '' அவனிடம் என்னைக்கண்டிருப்பாய் '' என்பான் நபிமொழி -- முஸ்லிம்

கொண்டாட்டங்கள் உன்னை வெளியே கொண்டு சென்று விடுகின்றபோது, கவலைகள்தாம் உன்னை உள்நோக்கி பயணமாக்கிவிடுகின்றது.உள்ளத்தின் உள்ளே...உள்ளின் உள்ளே..... உள்ளே..... செல்ல வலிகளை வழித்துணையாக 
ஆக்கிக்கொள்வோமாக!!! அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!! வஸ்ஸலாம்..



என்றும் தங்களன்புள்ள

மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர், மலேசியா)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Thursday, December 6, 2012

சால்னாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டை வீட்டுக்கும் வழங்கிடுவீர்!




நபித்தோழர் அபுதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.எனக்கு எனது நேசர் நபி (ஸல்) அவர்கள் மூன்று உபதேசம் செய்தார்கள். (1) தலைமையின் சொல் கேளு,கட்டுப்படு, அந்த சொல் மூக்கு அறுபட்ட அடிமைக்குரியதாக இருப்பினும்சரி, (2) சால்னா செய்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து,பின்னர் உனது அண்டை வீட்டுக்காரர்களைப்பார்த்து அவர்களுக்கு அதிலிருந்து கொடுத்து விடு. (3) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழு (நூல் --- முஸ்லிம்)


இனியசகோதரா! இம்மூன்று உபதேசத்தை நீயும் செயல்படுத்து, முதலாவது தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது,தலைமை என்றால் உனக்கு மேல் பொறுப்பிலுள்ளவர் என்று பொருள்.எனவே உனக்கு மேலுள்ள ஆட்சித் தலைவர்,குடும்பத்தலைவர், நீசார்ந்த அமைப்பின் தலைவர்,பணிசெய்யும் நிறுவனத்தலைவர்,இப்படி எல்லாத் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்.

இதன் மூலம் '' நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,அவனது தூதருக்கும்,உங்களில் அதிகாரமுள்ளவருக்கும் வழிப்படுங்கள்'' (4;50) என்ற இறைவாக்கை காப்பாற்றுங்கள்.புகாரி (7144) முஸ்லிமுடைய அறிவிப்பில் '' விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலைமையின் சொல் கேட்டு நடப்பது ஒரு முஸ்லிமின் மீது கட்டாயக்கடமை. பாவம் செய்ய உத்தரவிட்டாலே தவிர.அப்போது யார் சொல்லையும் கேட்டு நடக்கவேண்டியதில்லை '' என நபிகளார் (ஸல்) நவின்றார்கள்.

அனஸ் (ரலி) அறிவிக்கும் ஒரு நபிமொழியில்,உலர்ந்த திராட்சை போன்ற சிறு தலை இருக்கும் ஒரு அபிசினிய்யா கருப்பு அடிமையை உங்கள்மீது தலைவராக்கப்பட்டாலும்,நீங்கள் அவருக்கு செவிமடுங்கள் '' (புகாரி ; 7142) என வந்துள்ளது.முஸ்லிமின் (1477) மற்றொரு அறிவிப்பில்,தலைமைக்கு கட்டுப்படாமல் மரணித்தால் அறியாமைக்காலத்து (ஈமான் -- நம்பிக்கையில்லாத) மரணம் சம்பவிக்கும் '' என ஏந்தல் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

இரண்டாவது உபதேசம் ; வீட்டில் சால்னா சமைத்தால் அதை திக்காக கொஞ்சமாக காய்ச்சாமல், தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டைவீட்டாருக்கும் கொடுத்துவிடவேண்டும்.இதன் மூலம் பரஸ்பரம்,அன்பு,உதவி,உத்தாசைகளை பரிமாரிக்கொள்வதோடு,அவர்களின் பசியைப் போக்கவும் இது உதவும். மேலும் அவர்களின் ஏக்கப்பார்வை,ஆற்றாமையின் ஏக்கப் பெருமூச்சு விழாமல் உங்களைப் பாதுகாக்கும்.

நம் வீட்டின் சால்னாதாளிப்பு வாசனை பக்கத்து வீட்டினரின் மூக்கைத்துளைத்து,அது அவர்களுக்கு,குறிப்பாக சிறுவர்களுக்கு கிடைக்காது போனால் அவர்களின் நிறைவேறாத அந்த ஆசை ஆவியாகி அந்த உணவை உண்பவர்களுக்கு பல விதமான பாதிப்புகளை உண்டாக்கலாம்.

முஸ்லிம்கள் சேர்ந்து வாழும் ஊர்களில் இந்த நபிமொழி நடைமுறையில் இருந்தது.எனக்குத் தெறிய எனது வீட்டில் கறியோ,மீனோ சமைத்தால் எனது தாயார் முதலில் அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுத்தவீட்டுக்கு கொடுத்தனுப்புவார்கள். நானே சிறுவயதில் இப்படி பல முறை கொண்டு போய் கொடுத்திருக்கிறேன். அது மாதிரிஅங்கிருந்தும் வரும்.

சில சமயம் உரிமையோடு கேட்டும் வருவார்கள்.குறிப்பாக குழந்தைகளுக்காக பருப்புக்கறி பரிமாற்றம் அதிகம் நடக்கும். இது பரஸ்பரம்,பாசத்தையும்,நேசத்தையும் அதிகரிக்கச்செய்யும் சிறந்த முறையாக இருக்கின்றது.ஆனால் அழகான இந்த நபிமொழி இன்று நம்முடைய நடைமுறை பழக்கத்திலிருந்து எடுபட்டுவிட்டது.

இவ்வாறு கொடுப்பதற்கும் யோசிக்கிறார்கள்.அதை வாங்குவதற்கும் தயங்குகிறார்கள்.இப்படி வாங்குவதை கௌரவக்குறைச்சலாகவும்,சந்தேகத்திற்குரியதாகவும் இப்போது கருதுகிறார்கள்.புதுப்புது குடியேற்றங்கள் அதிகமாக நிகழும் நகர்ப்புற வீட்டமைப்பில் எல்லோரும் தனித்தனி தீவு போல் வாழ்வதால் இப்படி வாங்கி சாப்பிடுவதில் ப்ல சந்தேகங்களும் பரப்பிவிடப்பட்டுள்ளது.

முன்புள்ள வாழ்க்கை முறையில் விசாலமானதும் பரக்கத்தும்,அபிவிருத்தியும் இருந்தது. இப்போது எல்லாமே சுருங்கிவிட்டது. '' அல்லாஹ் உணவை ஊசிப்போகவைத்ததே,பணக்காரர்கள் ஏழைகளுக்கு கொடுக்காமல் அதை சேமித்து வைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான்'' என முன்வேதமொன்றில் கூறப்பட்டுள்ளதாக வஹ்ப் என்ற ப்ண்டிதர் கூறுகிறார்

இப்படி உணவு கெட்டுப்போக ஆரம்பித்தது கிமு 13 --க்குப்பிறகு -- பனூ இஸ்ராயில்கள் காலத்தில்தான்.அவர்களுக்கு முன்னர் எவ்வளவு நாட்கள் ஆனாலும் உணவு கெட்டுப்போய் துர்வாடையெல்லாம் வருவதில்லை '' இஸ்ரவேலர்கள் இல்லையெனில் இறைச்சி கெட்டுப்போய் இருக்காது. ஹ்வ்வா (ஏவால்) இல்லையெனில் எந்தப்பெண்ணும் தனது கணவனை ஏய்த்திருக்கமாட்டாள்'' என்றார்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்கள், (புகாரி ; 3330, முஸ்லிம் ; 1470)

ஏனெனில் அல்லாஹ்  '' மன்னு சல்வா '' என்னும் விசேச உணவை அவர்களுக்கு இறக்கி வைத்தபோது அதை நாளைக்கென சேமித்து வைக்கக்கூடாது என அவர்களுக்கு ஆணையிட்டான்.ஆனால் அவர்கள் அவநம்பிக்கையின் பேரில் அதை சேமித்து வைத்தார்கள்.அதற்குத் தண்டனையாகத்தான் உணவு ஊசிப்போக ஆரம்பித்தது.வாழ்வாதாரங்களும் வசதிகளும் பெருகிவிட்ட இந்த நவீன காலத்தில் இதயம் மட்டும் சுருங்கிவிட்டது.

எனவேதான் இப்போதெல்லாம் சாப்பிட்டபின் மிச்சம் இருந்தால் அதை குளிர்சாதனப் பெட்டியான ஃபிரிட்ஜில் வைத்து எத்தனை நாளானாலும் எடுத்து எடுத்து சூடாக்கி சூடாக்கி சாப்பிடுகிறார்களே தவிர அதை இல்லாத மக்களுக்கு கொடுப்பதில்லை.இப்படி இருக்கக்கூடாது.அண்டைவீட்டுக்காரனுக்கும் சேர்த்து சமைத்து அவனையும் கவனி என்று அண்ணல் நபி (ஸல்) அருளினார்கள்.

'' எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவாரோ அவர் அவரது அண்டைவீட்டாருக்கு உதவட்டும்'' (நபிமொழி ;முஸ்லிம் ; 48) '' அல்லாஹ்விடத்தில் சிறந்தவன் அண்டை வீட்டாரிடம்  சிறந்தவனே! '' (நபிமொழி அபூதாவூது ; 1586) ஹளரத் ஜிப்ரயீல் (அலை) அண்டைவீட்டாருக்காக தொடர்ந்து என்னிடம் வலியுறுத்திகொண்டே  வந்தார்கள். எங்கே சொத்தில் பங்கு கொடுக்கச் சொல்வார்களோ என நான் கருதுமளவிற்கு '' என்ற புகாரி (6014) முஸ்லிம் (2624) நபிமொழியை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

மூன்றாவது உபதேசம் ; தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடு. நிச்சயமாக தொழுகை முஃமின்கள் -- நம்பிக்கையாளர்கள் மீது நேரங்குறிக்கப்பட்ட  கடமையாகும் '' (4 ;103)  '' தொழுகையில் பாராமுகமாயிருக்கும் தொழுகையாளிக்கு கேடுதான் '' (107 ; 4,5) என்ற இறைவசனங்களுக்கு  '' காலதாமதமாக தொழுபவர்கள் '' என நபிமொழியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. (BAZZAR ; 392) அல்லாஹ்வுக்குப் பிரியமான தொழுகையை உரிய நேரத்தில் தொழுது அவனது பேரருளைப் பெற்றுக்கொள்ளுவோமாக! ஆமீன்!!! வஸ்ஸலாம்..



என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் S.S.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர் , மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.