Thursday, October 10, 2013

ஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது !!!



ஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது.

எனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல் போன ஹாஜி , அடுத்து வரும் இரவில் அங்கு தங்கினாலும் போதும். அவரது ஹஜ்ஜு நிறைவேறிவிடும் என்று ஃபிக்ஹு சட்டம் கூறுகிறது. அதாவது ஹஜ்ஜுடைய (ஃபர்ளு) கடமைகளில் அரஃபாவில் தங்குவதுதான் பிரதானதும் மிக மிக முக்கியமானதுமாகும். மக்காவுக்கு வந்து எல்லா வழிபாடுகள் திருக்கஃபாவில் வைத்து செய்தாலும் மினா,முஸ்தலிபா முதலிய திருத்தலங்களில் வந்து தங்கினாலும் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்கவில்லையானால் ஹஜ்ஜு நிறைவேறாது. எனவே அரஃபாவில் தங்காதவர் ஹாஜியாக முடியாது. ஏனெனில் "ஹஜ்ஜு என்றாலே அரஃபா(வில் தங்குவது)தான்"1  என ஏந்தல் நபி ஸல் கூறியுள்ளார்கள். எனவே எல்லா ஹாஜியும் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடியே ஆகவேண்டும் துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாள் சூரியன் நாடு உச்சியை விட்டும் சாய்ந்த பிறகுள்ள பகலில் அரஃபாவில் தங்குவதுதான் அதற்குரிய அவசியமான (வாஜிபான) நேரம். ஒருவேளை இந்த பகல் நேரத்தில் இங்கு வந்து தங்கும் வாய்ப்பு பெறாதவர்கள் இதைத் தொடர்ந்து வரும் இரவில் தங்கினாலும் ஹஜ்ஜு நிறைவேறிவிடும்.

இதற்கு காரணம் துல்ஹஜ்ஜு பத்தாம் நாள் இரவு முழுதும் ஸுபுஹ் சாதிக்- மெய் விடியற்காலை- வரை ஷரிஅத் முறைப்படி அது ஒன்பதாம் நாளின் பகலுடன் சேர்வதேயாகும் என்று சட்டமேதைகளான ஃபுகஹாக்கள் கூறுவார்கள். இதன்படி அரஃபாவுடைய ஒன்பதாம் நாளுக்கு இரண்டு இரவுகள். ஒன்று எப்போதும்போல அதற்கு முந்திய இரவு. இரண்டாவது அதன் பகலைத் தொடர்ந்து வரும் இரவு. எனவே பத்தாம் நாளுக்கு இரவே இல்லை. ஆகவே பத்தாம் நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினம் நாட்களில் இரவே இல்லாத பகல் என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆதலால்தான் அன்றைய விடியற்காலைப் பொழுதின் மீது சத்தியமாக!-(வல்ஃபஜ்ரி) என்று அல்லாஹ் குர்ஆனில் அதைப் பிரத்தியேகப் படுத்திக் கூறுகிறான். (தஃப்சீர் குர்துபி, மஆரிஃபுல் குர்ஆன்)
  -1(الحج عرفة)
أخرجه أبو داود (1949) والنسائي (2 / 45 - 46 ، 48) والترمذي (1/ 168) والدارمي (2 / 59) وابن ماجه (3015) والطحاوي (1 / 408)وابن الجارود (468) وابن حبان (1009) والدارقطني (264) / 464 ، 2 / 278) والبيهقي (5 / 116 ، 173) والطيالسي (1309) وأحمد(4 / 309 ، 309 - 310 ، 335)

                                                       என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

அறியவேண்டிய அரஃபா நாள் !!!




عن طلحة بن عبيد الله بن كريز : أن رسولَ الله صلى الله عليه وسلم قال : «أفضلُ الأيام يومُ عرفة

நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும். (நபிமொழி ஸஹிஹ் இப்னு ஹிப்பான் )
இது இவ்வாண்டு இங்கு (மலேசியாவில்) 14.10.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது இன்று நோன்பு பிடிப்பது மிகச் சிறந்ததாகும்.
سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , فَقَالَ : يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ
« صوم يوم عرفة كفارة سنتين : سنة هذه وسنة مستقبلة »
அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும். நபிமொழி முஸ்லிம்: 1162, அபூதாவூது 2425)

அரஃபா நாள் நோன்பு இருப்பது ஆயிரம் நாள் நோன்பு இருப்பதைப் போல (நபிமொழி-பைஹகீ 3765)
அனஸ் பின் மாலிக் ரலி அறிவிப்பு செய்துள்ள ஒரு செய்தியில், ''துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாளுக்கு நிகரானது அரஃபா தினம்-சிறப்பில்- பத்தாயிரம் நாளாகும் (பைஹகீ:3766)
இஸ்லாமிய மார்க்கம் சம்பூரனமாது அரபா தினத்தில்தான். இன்றைய நாளில்தான் அல்லாஹ் இஸ்லாத்தை முழுமைப் படுத்தி அவனது அருட்கொடையை சம்பூரணப் படுத்தினான்.
عن عُمَر بن الخطَّابِ رضي الله عنه أنَّ رَجُلاً من اليهودِ قال له : يا أميرَ المؤمِنينَ آيةٌ في كتابكم تقرؤونها ، لو علينا مَعْشَرَ يَهُودٍ نَزَلَتْ لاتَّخَذْنَا ذلِكَ اليومَ عِيداً ، قال : أيُّ آيةٍ ؟ قال : ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الأِسْلاَمَ دِيناً ( قال عُمَرُ : قَدْ عرفْنَا ذلك اليوم والمكانَ الذي أنْزِلَتْ فيه على النبي ( صلى الله عليه وسلم ) وهو قائِمٌ بِعَرَفَةَ يوم جمعة
ஒரு யூதன் கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதை நீங்கள் ஓதவும் செய்கிறீர்கள். அது மட்டும் எங்கள் யூத சமூகத்திற்கு இறங்கி இருந்தால் அந்த நாளைப் பெருநாளாகக் கொண்டாடி இருப்போம்'' என்று கூறினார். அது எந்த வசனம் என்று கலீபா கேட்க, அதற்கு அவர், ''இன்றையதினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து எனது அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டோம் உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாக்கி திருப்தியடைந்தோம். (அல்குர்ஆன் 5:3) என்ற வசனத்தை எடுத்துக் கூறினார்.
அப்போது கலீபா உமர் ரலி அவர்கள் அந்த வசனம் இறங்கிய நாளும் வேளையும் இடமும் கூட எங்களுக்குத் தெரியுமே. வெள்ளிக்கிழமை அரபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் அவ்வசனம் இறங்கியது.'' அதாவது அது இறங்கிய தினத்தைப் பெருநாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அது இறங்கியதே பெருநாள் தினத்தில்தான் என பதிலளித்தார்கள். (புஹாரி:45)
அரபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு அதுதான் பெருநாள்.
عن عقبة بن عامر الجهني أن رسول الله - صلى الله عليه وسلم - قال إن يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام فهي أيام أكل وشرب
'' அரஃபா நாள், குர்பானி தினம், தஷ்ரீக் உடைய நாட்களான துல்ஹஜ் 11,12,13 ஆகிய தினங்கள் இஸ்லாமியர்களுக்கு பெருநாள் தினங்களாகும் அவை உண்ணும் பருகும் நாளாகும்'' (நபிமொழி-ஸஹிஹ் நஸயீ)
அரஃபா நாள் ஃபஜ்ரிலிருந்து-விடியற்காலை தொழுகையிலிருந்து தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அதாவது பிறை 13 அஸர் வரை கடமையான தொழுகையை நிறைவேற்றிய பிறகு தக்பீர்-இறைவனின் வல்லமையைக் கூறும் உச்சாடனங்களை- சொல்லவேண்டும்
அரபா தினம் அதைக்கொண்டு அல்லாஹ் அவனது மறையில் சத்தியம் செய்து சிறப்பித்த நாளாகும்
வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!'' (அல்குர்ஆன் 82: 2,3)
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ ، وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ وَالْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ ».
இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரபா நாளாகும். (நபிமொழி- ஸஹிஹ் திர்மிதி)
அல்லாஹ் ஆதமுடைய சந்ததியினரிடம் வாக்குறுதி வாங்கிய நாள் அரபா தினமாகும்.
عن بن عباس عن النبي - صلى الله عليه وسلم - قال أخذ الله تبارك وتعالى الميثاق من ظهر آدم بنعمان يعني عرفة فأخرج من صلبه كل ذرية ذرأها فنثرهم بين يديه كالذر ثم كلمهم فتلا قال : ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين.. إلى آخر الآية .

''அல்லாஹ் ஆதமுடைய முதுகந்தண்டிலிருந்து அவன் படைக்கப் போகிற எல்லா சந்ததிகளை வெளியாக்கி அணுக்களைப் போன்று அவர்களை தனக்கு முன் பரப்பி அவர்களிடம் வாக்குறுதி வாங்கியது அரபாவில் தான் அப்போது அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து அவர்களை நோக்கி உரையாடினான் நான் உங்கள் இறைவனாக இல்லையா? என்று அவன் கேட்டதற்கு ஏன் இல்லை.. நீதான் எங்கள் இறைவன் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் நபியே நீங்கள் அவர்களுக்கு இதை ஞாபகமூட்டுங்கள் ஏனென்றால் இதனை மறந்துவிட்டு பாராமுகமாகி இருந்தோம் என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், அல்லது பொய்யான தெய்வங்களை இனையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள்.ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக எங்களை நீ அழித்துவிடலாமா? என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே நீங்கள் கூறுங்கள் (அல்குர்ஆன் 7:172) விளக்கவுரை: நபிமொழி-அஹ்மது:2455, நஸயி: 11127)
பாவங்களை மன்னித்து நரக விடுதலை அளிக்கும் நாள் அரஃபாவில் தங்கியிருப்பவர்களைக் கொண்டு அல்லாஹ் பெருமைப் படும் நாள்.
عن عائشة أن رسول الله - صلى الله عليه وسلم - قال ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة ويقول ما أراد هؤلاء 
''அரஃபா நாளைவிட அல்லாஹ் நரகவிடுதலை அளிக்கும் நாள் வேறு இல்லை.  மேலும் அவன் நெருங்கி பிரசன்னமாகிறான். பின்னர் அவர்களைக் கொண்டு வானவர்களிடம் பெருமைப்படுகிறான்.இவர்கள் என்ன வேண்டுகிறார்கள் என்று கேட்கிறான். (சந்தோஷமாக.) நபிமொழி- முஸ்லிம் 1348

எல்லாவற்றுக்கும் மேலாக ''ஹஜ்ஜே அரஃபாவில் தங்குவதுதான்''
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

                                                      என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, October 3, 2013

தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!

  

இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம்
وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3)
1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3)
இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி)
படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும்

ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام
2. குறிப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் நினைவு கூறுவதற்காக''... (22:28)

இந்த இறைவசனத்தில் வரும் குறிப்பட்ட நாட்கள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும் என விளக்கமளித்துள்ளார்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ( புஹாரி)
அப்படியானால் அல்லாஹ்வை திக்ரு தியானம் செய்வதற்குரிய இந்த பத்து நாட்களின் சிறப்பு மகத்தானதல்லவா?
( ما من أيام العمل الصالح فيهن أحبُّ إلى الله منه في هذه الأيام العشر(
3. நற்செயல்கள் செய்வதற்கு இந்த பத்து நாட்களை விட அல்லாஹ்விற்கு  மிகவும் உகந்த நாட்கள் வேறில்லை. (நபிமொழி புஹாரி 969, திர்மிதி 757, அபூதாவூத் 2438)
« مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ سُبْحَانَهُ وَلَا أَحَبُّ إلَيْهِ مِنْ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ »
4. அல்லாஹ்விடத்தில் மிகவும் புனிதமான நாட்கள் நற்செயல் புரிவதற்கு அல்லாஹ்விற்கு  மிகவும் உகப்பான நாட்கள் அந்த பத்து நாட்களை விட வேறில்லை. எனவே இதில் அதிகமாக இறைவனைத் துதித்து மகத்துவப் படுத்தி அவனைப் புகழ்ந்து அவனது உண்மை ஏகத்துவத்தை உறுதிப்படுத்தும் உச்சாடனங்களை சொல்லுங்கள் (தபரானி)
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر
5. அல்லாஹ்விடத்தில் இறைவழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த  துல்ஹஜ்ஜு மாதத்தின் முதல் பத்து நாட்களில் நோற்கப்படும் ஒவ்வொரு நோன்பும் ஒரு வருட நோன்புக்குச் சமம். அதில் ஒவ்வொரு இரவிலும் நின்று வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குவதற்கு நிகராகும் (நபிமொழி திர்மிதி 758, இப்னு மாஜா 1728)
6. ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அந்த பத்து நாட்கள் மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் கூடுதலாக கொடுத்த பத்து நாட்களாகும். அதாவது மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் தன்னோடு உரையாடுவதற்கு  முன்பு முப்பது நாட்கள் நோன்பு இருக்கச் சொன்னான். 
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً

மூசாவிற்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம் பின்னர் அத்துடன் பத்து இரவுகளைச் சேர்த்தோம் ஆகவே அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. அல்குர்ஆன் 7:142)
இப்படி மூஸா நபிக்கு கூடுதலாக அதிகப் படுத்திக் கொடுத்த பத்து நாட்கள் என்பது துல்ஹஜ்ஜு மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களாகும். இதன்படி இந்த பத்து நாட்கள் நோன்பு இருந்தால் மூஸா நபி அலை அவர்களுக்கு உண்டான இறை நெருக்கம் நமக்கும் கிடைக்கும் அல்லவா?
7. மார்க்க மேதைகள் கூறுவார்கள்: இந்த பத்து நாட்கள் ரமளானின் பத்து நாட்களை விட மேலானது ஏனெனில் நாட்களில் மிகச் சிறந்த அரபா தினம் (நபிமொழி: ஸஹிஹ் இப்னு ஹிப்பான்) இதில் வருகிறது ஆனால் இரவுகளைக் கவனித்து ரமலானே சிறந்தது காரணம் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரு இரவு ராமலானில்தான் வருகிறது
8. இந்த பத்து நாட்களின் தனித்தனமைக்கு என்ன காரணம்?
قال الحافظ ابن حجر: «والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة، لمكان اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره»
நபிமொழி ஆய்வாளர் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுவார்கள்: தொழுகை நோன்பு சதகா தர்மம் ஹஜ்ஜு ஆகிய பிரதானமான எல்லா இறைவழிபாடுகளும் இதில்தான் சங்கமிக்கின்றன கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பு வேறு நாட்களுக்கு இல்லை. எனவேதான் இது சிறந்தது.
இவ்வாறு சிறப்புமிக்க இந்த நாட்களில் செய்யப்ப்டவேண்டிய சிறப்பு அமல்கள்- நற்காரியங்களைப் பற்றி இனி பார்ப்போம்
1. பொதுவாக தொழுகை தர்மம் குர்ஆன் ஓதுதல் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது போன்ற நற்காரியங்கள் (புகாரி 969)
2. குறிப்பாக ஹஜ்ஜு உம்ரா நிறைவேற்றுவது.
«العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة» رواه البخاري ومسلم.

உம்ரா பாவங்களுக்கு பிரயாச்சித்தமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜு இதற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை. (புகாரி 1773)
«تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب، كما ينفي الكير خبث الحديد والذهب والفضة

ஹஜ்ஜு உம்ரா இவ்விரண்டும் தொடர்ந்து நிறைவேற்றுவது, நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் பாவத்தையும் வறுமையும் போக்கி ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும். (திர்மிதி 81, பைஹகீ 4095)
3. இந்த நாட்களில் முழுவதும் அல்லது முடிந்த அளவு நோன்பு பிடிப்பது (திர்மிதி 758)
4. அதிகமாக இறைவனை திக்ரு செய்வது. ஸலவாத் ஓதுவது, தஸ்பீஹ் சொல்வது ( தபரானி, ஸஹிஹ் இப்னு ஹிப்பான்)
5. இஸ்திஃபார் அதிகம் செய்வது. பாவமன்னிப்புக் கோருவது. இதற்கு மூன்று நிபந்தனைகள்: செய்த பாவத்தை நினைத்து வருந்துவது
அந்த பாவத்தை விட்டு விலகி விடுவது மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் திரும்ப மாட்டேன் என உறுதி கொள்வது
அல்லாஹ் ரோஷப்படுபவன்  அவன் தடுத்து ஹராமாக்கிய பாவ காரியங்களை மனிதன் செய்கிறபோது அல்லாஹ் ரோஷப்படுவான் (புஹாரி)
அல்லாஹ்வின் கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க அவனிடமே சரணடைந்து விடுவது பாவமன்னிப்புக் கூறுவதே சிறந்த வழியாகும்
6. பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குத்பா சொற்பொழிவை செவிமடுப்பது
7. ஜகாத் கடமையானவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுப்பது. இவாறு குர்பானி கொடுக்க நினைப்பவர் துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையைப் பார்த்துவிட்டால் நகம் முடி களையாமல் இருக்கவேண்டும் (முஸ்லிம் 1977)
« إذا دخل العشر ، فإن أراد أحدكم أن يضحي فلا يمس من شعره ، ولا بشره شيئا 
பயணத்தில் இருப்பவர் குர்பானி கொடுக்கவேண்டியதில்லை
அல்லாஹ்விற்காக குர்பானி-தியாகம் செய்வோம். அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!!

                                            என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.