Sunday, December 23, 2012

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!




பிஸ்மிஹி தஆலா

''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்''
''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்''

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும்.

எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும்.புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும்கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ,விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது.

மீலாது விழாக்களில்  அனாச்சாரம்,  ஆடம்பரம்,கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது.மனித சமுதாயத்தின் உயர்வுக்கும்,அன்புபண்புபாசம்நேசம் மனிதாபிமானம் வளர்வதற்கும், தேவையான மிக அவசியமான வழிகாட்டல் மட்டும் மீலாது விழாக்களில் இருந்து கொண்டிருக்கும்

பெண்கள் சன்மார்க்க விழிப்புணர்வு பெற்று இறை அச்சத்துடன் வாழவும்மனித நேயம் வளரவும் காரணமாக இருந்த மீலாது விழாக்கள் சமீபகாலமாக குறைந்து விட்டதால் நமது மக்களும்,சமுதாயமும் பல சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது

நபி (ஸல்அவர்கள் பிறந்தநாள் பெருவிழாக்கள் மூலமாக நாட்டிற்கும்,மனித சமுதாயத்திற்கும் நல்ல பல செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்ததுடன், நமது  சமுதாய இளைஞர்களிடம் தீனுல் இஸ்லாத்தின் உணர்வுகள் மேலோங்கி எல்லா வகையிலும் எழுச்சியுடன் செயல்பட மீலாது விழாக்கள் காரணமாக இருந்தன

எனவே மனிதநேயம்மனிதாபிமானம் வளர்ந்திடவும்அமைதியும்,கண்ணியமும் நிறைந்த வாழ்வு அமைந்திடவும்ஒற்றுமை ஓங்கவும்,சமுதாய சாபக்கேடுகள் சாகவும்அல்லாஹ்வின் அருளும்அண்ணல் நபி (ஸல்அவர்களின் ஆசியும்,அன்பும்கிடைக்கவும்நமது வாழ்வு பரக்கத்தான வாழ்வாக அமைந்திடவும்எல்லா ஊர்களிலும்மஹல்லாக்களிலும் மீலாது விழாக்கள் நடத்தப்பட வேண்டும்

சங்கைக்குரிய ஆலிம்களும்,மஸ்ஜிதுகளின் இமாம்களும்பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும்சமுதாய ஆர்வமும்,துடிப்பும்நிறைந்த இளைஞர்களும்எல்லா பகுதியிலும் மீலாது விழாக்கள் நடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று,மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்அருளாளன் அல்லாஹ் எல்லா நலன்களையும்,பரக்கத்தான வாழ்வையும்,நபி (ஸல்அவர்களின் பொருட்டால் தந்தருல் புரிவானாகஆமீன்வஸஸலாம்.

வெளியீடு;- T-J-M- பாசறை திருநெல்வேலி-4

தொகுத்து வழங்கியவர்கள்-

மன்பயீ ஆலிம்.காம்
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Friday, December 21, 2012

தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு




மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்து இன்று (20-12-2012) அதிகாலை 2-30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவ மனையில் மரண முற்றார் என்னும் செய்தி நெஞ்சைப் பிழிந்தது.

அவரின் ஜனாஸா நல்லடக்கம் கடையநல்லூரில் 21-12-2012 காலை 9 மணிக்கு நடைபெற விருக் கிறது என்னும் தகவலும் வந்திருக்கிறது. ஹஜ்ரத் அவர்களின் மகன்களும் மருமகன்களும் உடனிருந்து பலவிதமான நல்ல சிகிச்சைகளையும் செய்து வந்தனர். அல்லாஹ்வின் நாட்டம் ஆலிம் அவர்களின் மறைவு இன்றைக்கு ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம்கள் உணருகிறோம். 

மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்கள் உலமாகளில் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்; குர்ஆன் ஹதீஸ் ஷரீஅத் சட்ட விளக்கங்களில் ஒளிச்சுடராக விளங்கியவர்; தஸவ்வுஃ என்னும் ஆன்மீக ஞானக்கலையில் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். அவரின் பெயரில் அவரின் தந்தையின் பெயரின் முதல் எழுத்து மூலம்-சையது சுலைமான் கலீபா சாஹிப் என்பதன் மூலம் அவரின் தந்தையவர்களும் ஆன்மீக வழிவாறில் ஆழ்ந்திருந்தவர் என்பதை அறியலாம். அதோடு, 'மஸ்தான்' என்பதும் 'கலந்தர்' என்பதும் சூபிஸக் கொள்கையில் ஊறிப்போனவர்களுடன் தொடர்புடையவை என்பதையும் தெரியலாம். தனது பெயரில் உள்ள சொற்களுக்கு மிகவும் பொருத்தமான வாழ்வு முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்த ஹஜ்ரத் அவர்கள் நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்.

காயல்பட்டணம் மஹ்ழரதுல் காதிரியா அரபிக் கல்லூரி முதல்வராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி, பன்னூற்றுக் கணக்கான 'மஹ்ழரி'களை உருவாக்கி, நாட்டிலும் அயல்நாடுகளிலும் இஸ்லாமிய சன்மார்க்கப் பிரச்சார பீரங்கிகளாக உலாவரச் செய்துள்ளார்.அண்மையில் அவரது மகனார் இல்லம் (சென்னை வேளச்சேரியில் உள்ளது) சென்று அவரின் உடல் நலம் விசாரித்து வந்தோம். எம்.எஸ்.எஃப். பட்டாணி, காயல் இப்ராஹிம் மக்கீ, எஸ்.டி.யு. நிஜாமுத்தீன் மற்றும் பலரும் சென்றிருந்து ஹஜ்ரத் அவரின் நலன் பற்றி உசாவினோம். உடல் மெலிந்திருந்தது; ஆனால், அவரின் உள்ளம் என்றும் சுறுசுறுப்பாகவே இருந்தது என்பதற்கு அப்பொழுதும் மார்க்க விளக்கம் பற்றியே பேசினார்கள். அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் கேரளாவில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் யாவரும் பேட்டா கட்டிய உலமாகளாக மட்டுமல்லாமல், காதிரியா தரீகாவிலும் சங்கைமிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுகு ரஹ்மானி ஹஜ்ரத் 'ஷேய்கு' என்னும் அந்தஸ்து உடையவராகப் போற்றப்பட்டுள்ளதை அன்றைக்கு நாங்கள் கண்டோம்.

கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களைத் தமிழ்கூறும் முஸ்லிம் உலகம் எஸ்எஸ்கே ஹஜ்ரத் என்று பெருமையாக அழைத்தது. அவர் உரையாற்றாத ஊர் தமிழகத்தில் எதுவும் இருக்காது எனலாம். மீலாது விழாக்களிலும், திருக்குர் ஆன் மாநாடுகளிலும், ஷரீஅத் சட்ட கூட்டங்களிலும், மதரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் ஹஜ்ரத் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவரின் கொஞ்சும் தமிழில் பொதிகையில் பூத்த சங்கத் தமிழ் மலரின் மணம் வீசும்; மஸ்தான் பாடல், சீறாப்புராணச் செய்யுள் என்று விரவிவரும். குர்ஆன் வசனங்களுக்கு புதியதும் பொருந்தியதும் நவீன விஞ்ஞான உலகம் வியக்குமாறும் விரிவுரை செய்வார்கள்; ஹதீஸ் கலையில், இமாம் கஸ்ஸாலி போன்ற மேதைகளின் வழியில் நின்று விளக்கவுரை தருவதில் வல்லவராகத் திகழ்ந்தார்கள். கடையநல்லூர் சிராஜ் இதழ் ஆசிரியர் அப்துல்ஹை அவர்களின் அத்தியந்த தோழராக இருந்த மௌலானா அவர்கள், அமைதியின் உருவாகவும், அடக்கத்தின் வடிவமாகவும், ஆழமான ஞானக் கடலாகவும் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களோடு உரையாடுவது மூலம், இஸ்லாமிய வரலாற்றையே நினைவுக்குக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும். அந்த நல்லவர், சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது மறைந்துவிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் மற்றும் எல்லாத் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்து இயக்கத்திற்கு தூண்டுகோலாகவும் பெருந்துணையாகவும் இருந்தார்கள். சோதனை மிகுந்த காலங்களில் சோர்வைத் துடைப்பதற்கு துணைநின்ற உலமாகளில் ஹஜ்ரத் அவர்கள் மிக முக்கியமானவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பை ஏற்றார்; பின்னர், மாநில துணைத் தலைவராகப் போற்றப்பட்டார். முஸ்லிம் லீக் மாநாடுகளில் மார்க்க ஒளியில் அரசியல் விளக்கம் தந்த அந்த வரலாற்று நிகழ்வுகள் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. முஸ்லிம் லீக் வரலாற்றில் கடையநல்லூர், அன்சாரிகளைப் போன்றவர்கள் என்று காயிதெ மில்லத் சொன்னார்கள். அதன் ஒட்டுமொத்த உருவமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உழைத்துச் சிறந்தவர். கிளியனூர் மதரஸத்துல் ரஹ்மானியா - நமது டாக்டர் ஹாஜா கே.மஜீது-இன்றைய வக்ஃபு வாரிய உறுப்பினர்-அவர்களின் தந்தை நிறுவியதாகும். இப்பொழுது டாக்டர்தான் அந்த கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இந்த மதரஸாவில் ஓதியவர்-பட்டம் பெற்றவர் ஹஜ்ரத்-அதனால்தான் அவருக்கு 'ரஹ்மானி' சேர்ந்திருக்கிறது. இன்றைய மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ஒன்றைச் சொன்னார்கள்: ரஹ்மானியா மதரஸாவில் கலந்தர் மஸ்தான் இறுதி வகுப்பில் இருந்தார்; அப்பொழுது முதல் வகுப்பில் நான் இருந்தேன். வாரந்தோறும் நடக்கும் பேச்சுப் பயிற்சி வகுப்பில் கலந்தர் மஸ்தான் அவர்களின் பேச்சுத்தான் எல்லோராலும் பாராட்டப்பெறும்; உஸ்தாதுகளே மிக உயர்வாக அவரின் சொற்பொழிவை மதிப்பார்கள் என்று சொன்னார். அத்தகைய மெத்தகு மேதை இன்று நம்மிடம் இல்லை.

தமிழக உலமாகளுக்கு கடல் கடந்த நாடுகளில் பேரும் புகழும் நிறைய உள்ளது. அதில் முதல் தரத்தைப் பெற்றிருந்தவர் மௌலானா கலந்தர் மஸ்தான் அவர்கள்.

35 முறை ஹஜ் செய்துள்ளவர்; ஹஜ்ஜின் போதும் இஸ்லாமிய விரிவுரை ஆற்றியவர். அகில இந்திய உலமாகள் சபையின் துணைத் தலைவராக இருந்தார்; கடையநல்லூர் தங்ஙள் கட்சி என்னும் தரீகாவுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இறுதிவரை மஹ்ழரத்துல் காதிரியாவின் முதல்வர் பொறுப்பிலே இருந்து, இன்று எல்லாரையும் பிரிந்து அல்லாஹ்வின் சந்நிதானம் நோக்கிப் பயணம் மேற்கொண்டுவிட்டார்.

""""மௌத்துல் ஆலிம் மௌத்துல் ஆலம்-அறிஞரின் மரணம், அகிலத்தின் மரணம்'' என்பது அரபி பழமொழி. ஆம். மனிதர்களின் மனங்களுக்கு ஞான ஒளியை வழங்கி வருபவர்கள் ஆலிம்கள்-அறிஞர்கள். அவர்களின் மறைவு அதிகரிக்கு மானால், ஞானமற்றவரின் கூட்டம் ஞாலத்தில் அதிகரித்துவிடும்-ஞானமற்றவர் பெருகும்போது ஞாய மற்றவர்கள் பெருகுவர்; அதனால் ஞாலம்-உலகம் ஞான சூன்யத்துக்கு ஆட்பட்டுவிடும் எனில், அழிவும் மரணமும் ஏற்படும் என்பது இயற்கை விதியேயாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களுக்கு உயர்ந்த உன்னத இடத்தை அளித்து சுவர்க்கப் பூங்காவில் சுகித்திருக்கச் செய்வானாக.

மௌலானா போன்ற மௌலானாகள் தமிழ் மண்ணில் பெருகிட அவன் அருள் புரிவானாக.

ஹஜ்ரத் அவர்களின் மறைவால் வாடியுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரின் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் நமது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்போமாக. ஆமீன்.வஸ்ஸலாம்.

நன்றி ;;- மணிச்சுடர்

வெளியீடு ;--மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Monday, December 17, 2012

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு




எந்த ஒரு தத்துவத்தையும் அறிவுப்பூர்வமாக விவாதிப்பது,அதை இழிவுபடுத்துவதாகாது.மாறாக,ஆதாரத்தின் அடிப்படையில்,ஒரு கொள்கை ஆராயப்படுவது ஆரோக்கியமான ஒன்றேயாகும்.ஆனால் மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை அவமதித்து,இழிவுபடுத்துவது,ஒரு சமூகத்தால் கடவுளாக கொண்டாடப்படுபவற்றை வசவுபாடி இழிவுபடுத்துவது ஏற்புடையதன்று.


'' ( நம்பிக்கையாளர்களே! ) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என)அழைக்கின்றார்களோ,அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.அதனால் அவர்கள்,அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள்.'' அல் குர்ஆன் ;-- ( 6 ;108 )

'' பெற்றோரை திட்டுவது பெரும்பாவங்களில் ஒன்று '' என பெருமானார் நபி (ஸல்) அவர்கள் நவின்றபோது, ஒரு மனிதன் தனது பெற்றோரையுமா திட்டுவான்? '' என நபித்தோழர்கள் வியப்போடு வினவினார்கள்.'' அடுத்த மனிதரின் பெற்றோரை திட்டும்பொழுது அவன் பதிலுக்கு இவனுடைய பெற்றோரை திட்டுவானல்லவா?'' என நாயகம் (ஸல்) பதிலளித்தார்கள். ( புகாரி ; 5973, முஸ்லிம் ; 90 )

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு அதன் சாதக, பாதகங்களைப் பற்றி சிந்திக்கவேண்டும்.நம்முடைய சொல்லால்,செயலால் தீய விளைவுகள் ஏற்படும் என்று பயந்தால் அதை கைவிடவேண்டும்.எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிக்கவேண்டும்.யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக்கூடாது.

ஒரு முறை ஒரு முஸ்லிமுக்கும், ஒரு யூதருக்கும் ஏதோ ஒரு வாக்குவாதம்.அப்போது அந்த முஸ்லிம் ( தனது வாதத்தை வலுவூட்டுவதற்காக) ''  அகிலத்தாரை விட முஹம்மதை தேர்ந்தெடுத்த இறைவனின் மீது ஆணையாக '' என்று கூறினார்.அதற்கு அந்த யூதர்,'' அகிலத்தாரை விட மூஸாவை தேர்ந்தெடுத்த இறைவனின் மீது ஆணையாக. '' என்று கூறினார். 

அதனால் கோபமடைந்த முஸ்லிம், அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவுமா?'' எனக்கேட்டவராக தனது கையை ஓங்கி யூதனை தாக்கினார்.உடனே அந்த யூதர்,முஹம்மது நபி (ஸல்)  அவர்களிடம் வந்து,தன்னை தாக்கிய அந்த முஸ்லிமைப்பற்றி புகார் செய்தார்.அப்போது அந்த முஸ்லிமை அழைத்து,அங்கு நடந்த விபரத்தை கேட்டறிந்த நபி (ஸல்) அவர்கள்,மற்ற நபிமாரை விட உன்னை உயர்த்தி பேசவேண்டாம்.மக்களெல்லாம் மறுமையில்,மயக்கத்தில் இருப்பார்கள். 

மயக்கம் தெளியும் முதல் நபராக நானே இருப்பேன்.அங்கே மூஸா,அர்ஷின் நிலைப்படியைப் பிடித்தவராக நிற்பார்,அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து விட்டாரா? அல்லது சினாய் மலையில் அவர் அடைந்த மயக்கத்திற்கு பகரமாக இங்கே அவருக்கு மயக்கம் ஏற்படவில்லையா? என நானறியேன்.'' எனக்கூறினார்கள். (புகாரி -- 2412 ) 

காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு.ஒவ்வொரு இனத்திற்கும் அவர்களின் தலைவரே சிறந்தவர்.இந்த வகையில், யூதர் தன்னுடைய தலைவரை முன்னிலைப்படுத்தியது தவறன்று.எனவே முஸ்லிம் அவரை அடித்தது சரியன்று.நமது தலைவர்  உலகத்தலைவர்களை விட சிறந்தவர் என்று நாம் நம்புகின்றோம் என்பதற்காக அதை மற்றவர்களையும் ஏற்கச்செய்ய வன்முறை சரியான அனுகுமுரையன்று.

அறிவின் ஒளியில்,ஆதாரத்தின் அடிப்படையில்,ஆராயவேண்டிய தலைப்பை ஆத்திரத்தின் ஆக்கிரமிப்பில் அடித்து நொறுக்கி விடக்கூடாது.இந்த வகையில்தான், நம்பாதவர்களிடம் பொத்தாம் பொதுவில் என்னைஅவரை (மூஸாவை) விட சிறந்தவராக்கி பிரச்சனையாக்காதீர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

இது மத சகிப்புத்தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.உண்மை உரைக்கப்படவேண்டிய இடத்தில் தாம் உரைக்கவேண்டும்.உதாசீனப்படுத்தப்படும் இடத்தில் -- சமையத்தில் அதை உரைத்து ஊனப்படுத்திவிடக்கூடாது.

இரண்டாம் கலீபா ஹளரத் உமர் (ரலி) அவர்களின் நீதிமிக்க பொற்கால ஆட்சியில்,எகிப்தின் ஆளுனராக ஹளரத் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.அப்போது அங்கே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்துவிட்டது.யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபரால் ஏசுநாதரின் உருவச்சிலையில் மூக்குப்பகுதி உடைக்கப்பட்டுவிடுகின்றது. இதனால் அங்கு மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகின்றது.

குற்றவாளியைக்கண்டு பிடிக்கமுடியவில்லை.பதிலுக்கு நாங்களும் முஹம்மது நபிக்கு சிலை வடித்து அதில் அவரது மூக்கை உடைத்து சேதப்படுத்துவோம்,என போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டார்கள்.பதறிப்போன ஆளுனர், '' அப்படி ஒன்றும் செய்துவிடவேண்டாம்.வேண்டுமானால் எனது மூக்கை வெட்டி எறிந்து விடுங்கள்.

முஹம்மது நபியின் கற்ப்பனை உருவத்துக்கூட சேதம் விலைவிக்க நான் மட்டும் அல்ல உலகில் எந்த முஸ்லிமும் மனம் ஒப்பமாட்டான். '' என்று தனது மூக்கை அறுக்க நாளும்,நேரமும் அறிவித்துவிட்டார்.குறிப்பிட்ட தேதியில்,மிகப்பெரும் மக்கள் திரளில் வைத்து,ஆளுனரின் மூக்கைப் பதம் பார்க்க இருந்த தருணத்தில்,எங்கிருந்தோ வந்த சப்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினார்.''

தன்னால் ஒரு நிரபராதி,நீதிமிக்க ஆளுனரின் மூக்கு தாக்கப்படக்கூடாது.நான் தான் அந்தக்குற்றவாளி என்னை தண்டியுங்கள்.'' என்று சொல்லிக்கொண்டு தானாக முன்வந்து தனது மூக்கை நீட்டினான் குற்றவாளி இந்த சமத்துவ ஆட்சி கண்டு அகிலமே அசந்துபோனது.அன்று அசைக்க முடியாத மிகப்பெரிய வல்லரசாக இருந்த இஸ்லாமியக்குடியரசு,நினைத்து இருந்தால் போராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியிருக்கலாம்.

அல்லது இந்த நாட்டில் தனிமனித சுதந்தரத்தில் நாங்கள் தலையிடமுடியாது.எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை.என்று கருத்தாடியிருக்கலாம்.ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல்,தங்களது சகோதரத்துவ கிறிஸ்தவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆளுனரே அதற்கான தண்டனையை ஏற்க முன்வந்த இஸ்லாத்தின் உயர் பண்பை பாராட்டிய பாரதியார், ''

'' உருவப்படத்தை உடைப்பதும்,உயிருள்ளவரின் மூக்கை உடைப்பதும் இரண்டுமே குற்றமே '' எனக்கூறி தனது கையிலிருந்த வாளை உறையிலிட்டார்.இது தான் ஒரு வல்லரசுக்கு அழகும்,அறிவும்.இப்படி மக்களின் மன, மத உணர்வுகளை மதித்து,ஆட்சியாளர்கள் செயல்பட்டால் உலகில் வன்முறைக்கு இடமேது.ஸலாம் சத்து மலேசியா (SALAM SATU MALAYSIYA)அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்!! வஸ்ஸலாம்!!!..



என்றும் தங்களன்புள்ள

மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ்  எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர், மலேசியா)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.