Saturday, October 26, 2013

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற இமாம் மௌலானா பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன்விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது..!

manbai
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற மௌலானா இமாம் பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன் விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது……….!!
அது ஒரு வித்தியாசமான செய்தியாகவும்,விழாவாகவும் இருந்தது.
ஓர் ஊரில், ஒரு பள்ளிவாசலில்,தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் இமாமாகப் பணியாற்றுவது, இன்றைய சூழ்நிலையில் ஒரு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்கள் மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
ஆம்..! கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில்அவர்கள் சேவையாற்றத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய இந்தச் சாதனையைப் பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகமும் உள்ளூர் மக்களும் இணைந்து பொன்விழாவையே கொண்டாடிவிட்டார்கள்.


விழாவில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு.

இமாம்களைப் பாராட்டுபவர்கள் பலரும்அவருடைய மார்க்க அறிவு, பேச்சாற்றல், உழைப்பு,தியாகம், அர்பணிப்பு ஆகியவற்றை வாயளவில் பாராட்டிவிட்டுச்சென்றுவிடுவார்கள்.
"உங்கள் சேவைக்கு மறுமையில் நற்கூலி கிடைக்கும் ஹஜ்ரத்,துஆச் செய்கிறோம்" என்று சொல்லி மெல்ல நழுவிவிடுவார்கள்.
ஆனால் கோட்டாறு இளங்கடை ஜமாஅத்தினர் வாயளவில் பாராட்டியதோடு நின்றுவிடாமல்,இமாம் அவர்களின் ஐம்பதாண்டு சேவையைக் கண்ணியப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கியும் வாழ்த்தியுள்ளனர்.
பொற்கிழி என்றால் ஏதோ ஒரு பத்தாயிரம் இருக்கும் அல்லது அதிகபட்சம் 25,000 ரூபாய் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் மூன்றரை இலட்சம் (3,50,000) ரூபாயைப் பொற்கிழியாக அளித்து அசத்தியுள்ளார்கள். இளங்கடை ஜமாஅத்தினர்.
மௌலானா அவர்களின் இணையற்ற இறைப்பணிக்கு எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஈடாகாது என்றாலும் சமுதாயத்தினரால் ஒரு மார்க்க அறிஞர் கண்ணியப்படுத்தப்படுகிறார் என்பதை நினைக்கும்போது நெஞ்சம்நெகிழ்ந்து, கண்கள்கசிந்தன.
ஆலிம் பெருமக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத்  அவர்கள் திகழ்கிறார்கள் எனில்,பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இளங்கடைப் பகுதி மக்கள் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
எல்லா ஊர்களும் இளங்கடைகளாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…!
நன்றி:-லால்பேட் எக்ஸ்பிரஸ்.

ஹஜ் யாத்திரை-சில சிந்தனைகள் !!!


''சமநிலை சமுதாயம்' அக்டோபர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை.

ஹஜ் என்றால் "நாடுதல்",உம்ரா என்றால் "தரிசித்தல்"என்று பொருள்.அதாவது இறைவனை நாடிச்சென்று,ஆரம்பமாக அவனது ஆலயத்தை தரிசிப்பது.முடிவில் அவனையே தரிசிப்பது என்பது அதன் உள்ளார்ந்த தத்துவம்.
நாநிலத்தின் நடுநாயகமாக அமைந்த புனித மக்காவின் ஆதி இறை இல்லம்,உலகின் முதல் இறையில்லம் கஅபாவை நாடி பயணப்படுவதற்குப் பெயர்தான் ஹஜ் யாத்திரை."மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் முதன்மையானது,நிச்சயமாக பக்காவில் இருப்பதுதான்.அது மிகுந்த பாக்கியமுள்ளதாகவும்,உலக மக்களுக்கு நேரான வழி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது"என்கிறது திருக்குர்ஆன்.1

மக்கா என்பது ஊர் பெயர். பக்கா என்பது மஸ்ஜிதுல் ஹராம் எனும் புனித கஅபா ஆலயம் அமைந்த இடம்.{தப்ஸீர் தப்ரீ}கண்ணியமிக்க கஅபா ஆலயம் இறைவன் கூறுவது போல் பரக்கத்தும்,அருள்வளமும் நிறைந்த புனித இடம்.பரக்கத்-அபிவிருத்தி என்றால்,பொருள் நிறைவாக இருப்பது மட்டுமன்று; குறைந்ததில் நிறைந்த பலன் இருப்பதுமாகும்.இவ்விதம் இறைவனால் பரக்கத் செய்யப்பட்ட மக்கா, ஒரு நீரற்ற பாலைவனப் பிரதேசமாகும்.அது விளைச்சல் பூமியோ,பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழில் நகரமோ அல்ல.
அங்கு புனித கஅபா ஆலயத்தை தரிசிப்பதற்காக உலகின் எல்லா திக்கு திசைகளிலிருந்தும் தினமும் இலட்சக்கணக்கில் மக்கள் வந்து கூடுவர்.ஹஜ் காலங்களில் 40 இலட்சம் வரை பக்தர்கள் கூடுகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பண்டங்களும் அங்கு தாராளமாக கிடைக்கின்றன.

அன்று முதல் இன்று வரை உள்ளூர்வாசிகளுக்கும்,வெளியூர்வாசிகளுக்கும் உணவுப் பற்றாகுறையோ,பஞ்சமோ ஏற்பட்டதே இல்லை.அத்தியாவசியப் பண்டங்கள் தீர்ந்து விட்டது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.அது வேளாண்மை நிலமன்று ;ஆனால்,உலகில் விளையும் அத்தனை காய்கனிகளும் அங்கு கிடைக்கும்.அது தொழிற்சாலைகள் நிறைந்த நகரமல்ல ; ஆனால்,புதிதாக கண்டு பிடிக்கப்படும் நவீன சாதனங்கள்,கருவிகள் அனைத்தும் அங்குள்ள சந்தையில் கிடைக்கும்.இதுதான் பரக்கத் எனும் அபிவிருத்தியின் வெளிப்பாடு.நம்மிடமிருந்து அவர்களுக்கு ஆகாரமாக ஒவ்வொரு வகையான கனி வர்க்கமும் {உற்பத்தி சாதனங்களும்} கொண்டு வந்து அங்கு குவிக்கப்படுகிறது என்கிறது குர்ஆன்.8

அங்கு வருவோர் ஒவ்வொருவரும் குறைந்தது ஓர் ஆடு,வசதி உள்ள ஒவ்வொருவரும் நூறு ஆடு வரை- இலட்சக்கணக்கானோர் குர்பானி கொடுக்கிறார்கள்.இதற்கு தேவையான இலட்சக்கணக்கான ஆடுகள் அங்கு கிடைக்கிறது.வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.இந்த இரகசியம் பரக்கத்தின் அதிசயம். இதல்லாமல் ஆன்மீக அபிவிருத்தியை ஈட்டித்தரும் பரக்கத்திற்கு அங்கு பஞ்சமே இல்லை.பெரும் பாக்கியங்களும்,அபரிமிதமான நற்கூலியையும் பெற்றுத்தரும் ஹஜ்,உம்ரா அங்கு மட்டுமே செய்யப்படுகிற இறைவழிபாடாகும். உலகில் வேறு எங்கும் இதை நிறைவேற்ற இயலாது.

 மற்ற இடங்களில் நிறைவேற்றப்படும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளை புனிதமிகு கஅபாவில் நிறைவேற்றும்போது அதற்குப்பகரமாக இலட்சக்கணக்கில் நன்மைகள் கிடைக்கிறது.ஒருவன் தனது வீட்டில் தொழுதால் ஒரு நன்மையும்,தனது மஹல்லா மஸ்ஜிதில் தொழுதால் 25 நன்மைகளும், ஜும்ஆ நடைபெறும் மஸ்ஜித் ஜாமியில் 500 நன்மைகளும்,பைத்துல் முகத்தஸில் 1000 நன்மைகளும்,என்னுடைய மதீனாப்பள்ளியில் {மஸ்ஜிதுன் நபவியில்}50,000 நன்மைகளும்,மஸ்ஜிதுல் ஹராம் –கஅபாவில் தொழுதால் ஒரு இலட்சம் நன்மைகளும் கிடைக்கும் என்பது நபிமொழி.  {நூல் ;  இப்னு மாஜா} 2

 இறையில்லமாம் கஅபா ஓர் அதிசயக் களஞ்சியம் ;அதில் தெளிவான பல அத்தாட்சிகள் புதைந்து கிடக்கின்றன.
  1] மகாமு இப்ராஹீம் எனப்படும் இறைத்தூதர் நபி அவர்கள் நின்ற இடம். அது ஒரு பாறை.இதில் ஏறி நின்றுதான் கஅபாவை அவர்கள் கட்டி யெழுப்பினார்கள். இது ஒரு அதிசயக்கல்.கட்டிடம் உயர உயர....இந்தக்கல்லும் உயரும் ;அவர்கள் கீழே இறங்கும்போது அதுவும் தாழ்ந்து விடும். அது அவர்களுக்கு சாரமாக பயன்பட்டது.அதில் இப்ராஹீம் நபியின் பாதம் பதிந்திருக்கிறது.அது இறுகிப்போன உறுதிமிக்க ஒரு கல்.எனினும் மெழுகுபோல அவர்களது பாதத்திற்கு இளகி அதில் அவர்களின் கால்தடம் பதிந்திருப்பதும், இன்று வரை அந்தத் தடம் அழியாமல் இருப்பதும்,பல அக்கிரமக்காரர்கள் இருந்து வந்த அந்த காலம் முதல் இன்று வரை இந்தக் கல் பத்திரமாக பாதுகாக்கப் பட்டிருப்பதும் மிகப்பெரிய அதிசயமல்லவா?

 2] புனித கஅபாவிற்கு மேலே பறவைகள் பறப்பதில்லை. சீக்குப் பிடித்த பறவைகள் தங்களது நோய் நிவாரணம் பெற அதன்மேலே பறக்கலாம். "இதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன.இப்ராஹீம் நபி நின்ற இடமும் இருக்கிறது.எவர் இதில் நுழைகிறாரோ,அவர் {பாதுகாப்பு பெற்று} அச்சமற்றவராகிவின்றார்" {3 ; 97} 3

 3] ஹரம் ஷரீபின் எல்லைக்குள் பிரவேசித்த மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும் அங்கு அச்சமற்றுவிடுகின்றன.வேட்டைப் பிராணிகள் இங்கு தைரியமாக நடமாடும் : அவை யாரையும், எதையும் கண்டு பயப்படுவதில்லை. இங்கு நாம் வேட்டையாடப்பட மாட்டோம்,துன்புறுத்தப்பட மாட்டோம் என்று அவைகளுக்கும் நன்கு தெரியும்.அதனால் தான் மானும்,நாயும் இங்கு பயமின்றி ஒன்றாக திரிகின்றன.

 மக்காவாசிகள் தாங்கள் தாக்கப்படுவோமோ, கொள்ளையடிக்கப் படுவோமோ என்ற பயம் சிறிதுமின்றி நிம்மதியாக வாழ்ந்தனர்.இப்போதும் வாழ்கிறார்கள்.இனியும் ஹரம் அச்சமற்றதாகவே இருக்கும் இது இப்றாஹீம் நபியின் பிரார்த்தனையின் பலன்.
 வளைகுடா பகுதியில்,தங்களைச் சுற்றியுள்ளவர்கள் தாக்கப்பட்டு,உயிர் பறிக்கப்பட்டு,பொருள் சூறையாடப்பட்டு,சிறைபிடிக்கப் படும்போது,மக்காவாசிகள் மட்டும் எவ்வித அச்சமுமின்றி வாழ்வது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருளும்,அவனியோருக்கு அவன் அறிவித்த அத்தாட்சியுமல்லவா ?

எந்த அநியாயக்காரனும்,ஆட்சியாளனும் எந்த சமயத்திலும் கஅபாவை இடித்து தரைமட்டமாக்கி,மக்காவை தாக்கி முழுமையாக சேதப்படுத்தியதாக வரலாற்றின் எந்த பக்கத்திலும் எந்த பதிவும் இல்லை.ஆனால் பைத்துல் முகத்தஸை புக்து நஸ்ர் என்ற மன்னர் முழுமையாக இடித்துத் தள்ளினான் என்ற செய்தி தப்ஸீர் கபீர் போன்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் காணக் கிடைக்கிறது.4

     4] எமன் நாட்டு ஆப்ரஹா மன்னன் கஅபாவை இடித்துத் தள்ள யானைப்படையோடு மக்காவை தாக்க வந்தபோது,குறைஷிகள் அவர்களை எதிர் கொள்ளத் துணிவின்றி மக்காவைப் பாதுகாக்க கஅபாவையே களமிறக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. அல்லாஹ் அந்த யானைப் படையினர் மீது பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.அவை {இறுகிய} சுடப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன. அதனால் {கால் நடைகளால்} தின்னப்பட்ட வைக்கோல்களைப்போல் அவர்களை அவன் ஆக்கி {அழித்து} விட்டான் என்ற வரலாற்றை திருக்குர்ஆன் பேசுகிறது. {யானை அத்தியாயம்} 5 மிகப்பெரிய மன்னனும்,அவனது வலுவான படையினரும் சின்னஞ்சிரிய கற்கள் வீசி அழித்தொழிக்கப்பட்டனர்.இது கஅபாவின் சிறப்புக்கு கிடைத்த மிகப்பெரிய சான்று.இது மாதிரி எந்த இறையில்லத்திற்கும் பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட்டிருக்க வில்லை.

  5] ஹஜ் காலங்களில் ஹாஜிகளால் மினாவில் எறியப்படும் கற்கள் காணாமல் போகும் அதிசயம் உங்களுக்குத் தெரியுமா ? ஹாஜிகள் ஒவ்வொருவரும் ஏழு ஏழாக மூன்று ஷைத்தான்களுக்கு மூன்று தினம் கல் எறிய வேண்டும்.முதல் நாள் ஒரு ஷைத்தானுக்கு மட்டும் ஏழு கல் எறிய வேண்டும்.அடுத்த இரண்டு நாட்கள் மூன்று ஷைத்தான்களுக்கும் ஏழு கல் வீதம் எறிய வேண்டும்.ஆக மொத்தம் 7+21+21=49 கல் எறிய வேண்டும்.13-வது நாளும் மினாவில் தங்கினால் மொத்தம் 21+49=70 கல் எறிய வேண்டும்.

 இவ்வாறு இலட்சக்கணக்கான ஹாஜிகள் கற்களை எறியும்போது அந்த இடமே கற்குவியல் நிரம்பிய அம்பாரமாக,மலைபோல் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கற்கள் தான் அங்கு சிதறிக்கிடக்கின்றன.அப்படியானால் இன்றளவும் கோடிக்கணக்கான மக்களால் எறியப்பட்ட அந்த கற்கள் எல்லாம் எங்கே போயின?

 இதுபற்றி நபித்தோழர் அபூ சயீத் குத்ரீ {ரலி} அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் பதிலளிக்கும்போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஹாஜி எறியும் கற்களை வானவர்கள் எடுத்துவிடுகிறார்கள். மற்றபடி அங்கே கிடப்பவை ஹஜ் ஒப்புக் கொள்ளப்படாதவர் எறிந்த கற்களேயாகும் என்றார்கள்.எனவே தான் எறியப்பட்ட அந்த இடத்தில் கிடக்கும் கற்களைஎடுத்து மீண்டும் யாரும் எறியக்கூடாது. முஸ்தலிஃபாவில், அல்லது மினாவின் மற்ற பகுதியில் இருந்து கல் எடுத்து வரவேண்டும் என்று ஃபிக்ஹ் சட்ட நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.   
                
இந்த அதிசயம் 1400 வருடங்களாக நடந்து வருகிறது.இனியும் உலக முடிவு நாள் வரை தொடரும்.பேரறிஞர் இமாம் சுயூத்தி அவர்கள் : தமது அல் கஸாயிஸுல் குப்ரா என்ற நூலில் "நபிகள் நாயகம் {ஸல்} அவர்களின் நிலைத்த மறுமை நாள் வரை தொடரும் முஃஜிஸா {அற்புதம்} இரண்டு. ஒன்று ; ஹாஜிகளால் எறியப்படும் கற்கள் காணாமல் போகும் அதிசயம். மற்றொன்று ; திருக்குர்ஆன்; காலத்தால் அழியாத அற்புத மறை அது.அதைப்போல் முழுமையாக முடியாவிட்டாலும் ''அதிலுள்ள சின்னஞ்சிறிய ஒரு அத்தியாயத்தைப் போல சிறிதாகக்கூட உங்களால் கொண்டு வர முடியாது'' என்ற திருக்குர்ஆனின் சவால் இன்று வரை முறியடிக்கப் படாமல் தான் உள்ளது.இனி உலக முடிவு நாள் வரை கொண்டு வர முடியாது" என்கிறார்கள்.


 6] இறை இல்லம் கஅபாவின் எந்தப் பக்கம் மழை பொழிகிறதோ அந்தப் பகுதியிலுள்ள நாடுகளுக்கு அதிகம் மழை பொழியும்.இது பொதுவாக பரிசோதித்து கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும். {மஆரிபுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விரிவுரை நூல்}

 7] எல்லாவற்றுக்கும் மேலாக,அல்லாஹ் தனது ஆதி இல்லமாம் கஅபாவை விவசாயமற்ற,விளைச்சல் இல்லாத,பசுமையும்,குளுமையும் அற்ற சூடு மிகுந்த ஒரு பாலைவனப் பள்ளத்தாக்கில் கொண்டுபோய் ஏன் அமைத்தான் எனில்,அப்போது தான் நாடு பிடிக்கும் எந்த ஆதிக்க சக்தியினர் பார்வையும் இந்நகரத்தின் மீது விழாது.அவர்களின் கவனம் இந்தப் பக்கம் வரவும் கூடாது.பொதுவாக வளம்கொழிக்கும் பகுதியைத்தான் அவர்கள் கைப்பற்ற ஆசைப்படுவார்கள்.செழிப்பான,பசுமை நிறைந்த குளுகுளு பூமியில் தங்குவதற்குத்தான் சொகுசு வாழ்க்கை வாழ விரும்புவோர் பிரியப்படுவார்கள். இவ்விதம் அற்ப ஆசையுள்ள லோகாய வாதிகளின் வசிப்பை விட்டும் இறைவன் இந்தப் புனிதமான மக்கா நகரத்தைப் பாதுகாத்தான்.

 மேலும் இங்கு யாரும் வர்த்தக நோக்கில் வந்து போகக் கூடாது.வணங்கி வழிபடவே இங்கு வர வேண்டும் என்பது விதி.அதனால் தான் மக்காவுக்குள் பிரவேசிக்கும் வெளியூர் வாசிகள் இஹ்ராம் உடை அணியாமல் உம்ரா செய்வதற்கு அல்லாமல் வேறு நோக்கில் நுழையக்கூடாது என்கிறது இஸ்லாம். இந்த இடத்தின் எழில் வளத்திற்காக யாரும் இங்கு வசிக்கவும்,வாழவும் கூடாது.சுற்றுலா பயணிகளைப் போல் வந்து போகவும் கூடாது.இறைவழிபாடு, தரிசனத்திற்காக மட்டுமே இங்கு வந்து போகவும்,தங்கவும் வேண்டும்.            
 இது அல்லாமல் வெளியிலிருந்து இறைவன் அவர்களுக்கு வழங்கும் வாழ்வாதாரம் தவிர, வேறு எந்த வசதியும்,வளமும் அங்கு இல்லை.இங்கு வாசம் செய்யும் ஹரம்-மக்காவாசிகள்,ஆலய நிர்வாகிகள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும்,எதையும் எதிர் பார்க்கக் கூடாது.அப்போது தான் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் நம்ப மாட்டார்கள்.

 "எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளை,மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக,விவசாயமற்ற பள்ளத்தாக்கில் வசித்திருக்கச் செய்து விட்டேன்.எங்கள் இறைவா! அவர்கள் {உன்னைத்}தொழுது கொண்டிருப் பதற்காக {அங்கு வசிக்கச் செய்தேன்}மனிதர்களில் ஒரு தொகுதியினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி செய்வாயாக! {பற்பல} கனிவர்க்கங் களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! {அதற்கு} அவர்கள் {உனக்கு} நன்றி செலுத்துவார்கள்"என்கிறது திருக்குர்ஆன். {14 : 37} 6

 உலக வளங்கள்,வாழ்வாதாரங்களை விட்டும் காலியான பிரதேசமான மக்காவில் நான் கஅபாவைக் கட்டியது போலத்தான் இறைஞானம்,தரிசனம் எனும் கஅபாவை இவ்வுலக ஆசைகளை விட்டும் காலியான உள்ளத்தில் {கல்பில்} கட்டி எழுப்புவேன் என்று அல்லாஹ் சொல்வதுபோல் உள்ளது.அந்த கஅபாவை காணக் கண் கோடி வேண்டும். "உலகத்தில் மூன்று விஷயங்களை பார்த்தாலே நன்மைகள் கிடைக்கும். 1} தாயின் திருமுகம். 2} திருக்குர்ஆன். 3} கஅபா" என்பது மற்றொரு நபிமொழியாகும்.   
       
"கஅபாவைக் கண்டவுடன் கேட்கப்படும் முதல் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்!"என்கிறது ஒரு நபிமொழி. கஅபாவைக் காணும் பேரு பெற்றவர்களில் அந்தக் கட்டிடத்தைக் காணுபவர்களும் உண்டு.அதன் அதிபதியாம் அல்லாஹ்வை அறிந்துணர்ந்து உள்வாங்கியவர்களும் உள்ளனர்.

ஏழு முறை கஅபாவை வலம் வருவது, {தவாஃப்} ஸஃபா,மர்வா மலைகளுக்கிடையே ஓட்டமும்,நடையுமாக துள்ளளும்,துடிப்புமாக சயீ செய்வது தான் உம்ரா என்றால் ஹஜ் என்பது இன்னும் கூடுதலான கிரியைகள் நிறைந்ததாகும்.

 துல்ஹஜ் பிறை 8-ல் மினா சென்று ஒரு நாள் தங்கி,ஐவேளை தொழுது ஆசுவாசப்படுத்திக் கொள்வது,பிறை 9-ல் அரஃபா பெருவெளியில் மாலை வரை தங்கி நின்று மன்றாடுவது,பொழுது சாய்ந்ததும் முஸ்தலிஃபா எனுமிடம் சென்று இரவு தங்குவது,மறுநாள் பிறை 10-ல் மீண்டும் மினா சென்று சாத்தானுக்கு-அவனது குறியீட்டுக்குக் கல்லெறிவது,குர்பானி கொடுப்பது,தலை முடி களைவது அல்லது கத்தரிப்பது,பிறகு மீண்டும் கஅபா ஆலயம் சென்று தவாஃப் செய்வது,சஈ செய்வது பிறை 11 இரவில் மினாவுக்கு திரும்பி அங்கு இரவு தங்கி, அன்றும் மறுநாள் பிறை 12-லும் மினாவிலேயே தங்கியிருந்து இறைவனை திக்ர்-தியானம் செய்வது,மூன்று ஷைத்தான்களுக்கும் கல்லெறிவது இதுதான் ஹஜ்,உம்ரா வணக்க வழிமுறையாகும். 

முன்னதாக இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.அதாவது தைக்கப்படாத இரண்டு வெள்ளை ஆடைகளில் ஒன்றை வேட்டியாகவும்,மற்றொன்றை மேல் துண்டாகவும் போர்த்திக் கொள்ள வேண்டும்.ஹஜ்,உம்ரா இரண்டையும் அல்லது ஏதாவது ஒன்றை செய்ய நினைத்து {நிய்யத் வைத்து} அதை இலேசாக்கி ஏற்றுக்கொள் இறைவா! என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து "லப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் ....உன்னிடம் சரணடைந்து விட்டேன்.இறைவா! இதோ உனது அழைப்பை ஏற்று உன்னிடம் வந்து விட்டேன் உனக்கு இணை இல்லை,நிச்சயமாக புகழும்,பாக்கியமும் உனக்கே உரியது.அதிகாரமும் கூட {உனக்கே} உனக்கு இணையேதுமில்லை" என்று தல்பியா முழக்கத்தைக் கொண்டு ஹஜ்,உம்ரா கிரியை ஆரம்பமாகிறது.

இது 7000 ஆண்டுகளுக்கு முன் நபி இப்ராஹீம் {அலை} அவர்கள் கஅபாவைப் புனர் நிர்மாணம் செய்த பின் இவ்விறையாலயத்திற்கு ஹஜ்-உம்ரா செய்ய வருமாறு விடுத்த இறை அழைப்பிற்குக் கொடுக்கும் பதிலாகும்.மூஸா நபியவர்கள் இறைவனின் சப்தத்தை செவியுற்று பதில் கூறுயதுபோல் ஒவ்வொரு ஹாஜியும் இறை அழைப்பைக் கேட்டு, களிப்புற்று லப்பைக்க என்று பதில் கூறுவது தான் தல்பியாவின் தாத்பரியம்.இஹ்ராம் உடை உடுத்தி நிய்யத் செய்து கொண்டபிறகு நகம்,முடிகளைக் களைவது,நறுமணம் பூசுவது, மனைவியுடன் கூடுவது,தைய்யலாடை அணிவது போன்ற காரியங்களுக்குத் தடைவிதிக்கப்படும்.

 இஹ்ராம் என்றாலே ஹராம் ஆக்குதல்-தடுத்துக் கொள்ளுதல் என்று பொருள்.இஹ்ராமின் மூலம் தடுக்கப்பட்ட காரியங்களை விலக்கிக் கொள்ளுதல் என்பது இதன் வெளிப்படையான பொருள்.இருப்பினும் அல்லாஹ்வும்,அவனது தூதரும் தடுத்த-ஹராமான அனைத்து காரியங்களையும் நான் இனி என் வாழ்நாளில் தவிர்த்துக் கொள்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்வதுதான் இதன் அந்தரங்கமான அகமிய கருத்தாகும்.ஆன்மீக-தெய்வீக இன்பங்களை தவிர்த்து மற்ற இன்பங்களையெல்லாம் நான் இனி ஒதுக்கித் தள்ளிவிடுவேன். என்று உறுதிமொழி ஏற்பது உச்சத்தின் உச்சமான உன்னதமான உணர்வு நிலையாகும்.

அடுத்தது அரஃபாவில் சங்கமித்தல்.அரஃபா என்றால் {பரஸ்பரம்} அறிதல் என்பது பொருள். அரஃபா மக்காவிற்கு கிழக்கே 12 மைல் தொலைவிலுள்ள மலைக்கும் அதைச்சுற்றியுள்ள எட்டு மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் உள்ள திறந்தவெளிக்குப் பெயர். அரஃபா என்ற பதம் ஒருவரை ஒருவர் இலக்கு கண்டு கொள்ளுதல் என்று பொருள்படும் தஆருஃப் என்னும் மூலச் சொல்லில் இருந்து வந்தது.அரஃபா மைதானத்தில்-வெட்டவெளியில் நிற்பது தான் ஹஜ்ஜின் உச்சகட்டம்.ஹஜ் என்றாலே அரஃபாதான் என்பது நபிமொழி.

மக்கா வரை வந்த ஒருவர் இங்கு வராமல் போனால் அவரது ஹஜ் நிறைவேறாது.அக-ஒளி பெற்றவர்தானே பரவெளியில் நிற்க முடியும்."வெளியே நில்" என்பது ஒரு ஞானியின் வீட்டு முகப்பில் காணப்பட்ட வரவேற்பு வாசகம். இது வந்தாரை விரட்டும் வறட்சியான அறிவிப்பு அல்ல.வளமான, விஷேசமான வெட்டவெளி இரகசியத்தை சூல் கொண்டிருக்கும் ஓர் கருப்பொருள் வாசகம். வெளியே சூன்யமாக இருக்கும் சுடரொளி,உனது அகத்தில் பிரகாசிக்கும் போது நீ மனம் அற்றுப்போவாய்.கல்பில் காமம்,கோபம் கரைகிறபோது ஏற்படும் வெறுமையில் வெட்ட வெளிக்கு நீ கொண்டு செல்லப்படுகிறாய்.இதுவே அரஃபாவில் அடையும் ஓர் அடவு நிலையாகும்.

 இப்போது நீ ஆசைகளற்ற ஜடமாக,கோபமற்ற முண்டமாக மாறிவிடுவாய் என்பது இதன் பொருள் அல்ல.இச்சைகளை இல்லாமல் ஆக்குவது மனித இயல்புக்கு முரணான காரியம்.நடைமுறைக்கு சாத்தியமில்லாத,இயற்கைக்கு முரணான இதுமாதிரியான எந்த ஒரு அபத்தமும் இஸ்லாமிய ஆன்மீகத்தில் இல்லவே இல்லை.இதுவே இணையில்லா இஸ்லாத்தின் இமாலயச்சிறப்பு. பிசகியவர்கள் வழுக்கி விழுந்த இந்த இடத்தில் தான்,இஸ்லாம் உறுதியாக தனது தடம்பதித்தது.சந்தி சிரித்த இந்த சமாச்சாரத்தில் தான் இஸ்லாம் சரித்திர சாதனை படைத்தது.

எனவே,இங்கே எல்லாம் எப்போதும் இருக்கும்,அத்தனைக்கும் ஆசைப்படலாம்,ஆனால் அனுமதிக்கப்பட்ட வழியில்.எந்த உணர்ச்சியையும் இங்கே செயலிழக்கச் செய்ய வேண்டியதில்லை.எல்லா செயல்களும் இங்கு இருக்கும் ;அன்பும்,வெறுப்பும்,கொடுப்பதும்,மறுப்பதும் எல்லாம் நடக்கும்.ஆனால், அவைகளை இயக்கிவிடும் மூலவிசை மாறியிருக்கும்.இப்போது அவை மனோ இச்சைக்கு அடிமையாகி,பிரசவிக்கும் பிறப்புகள் அல்ல.மனோ இச்சைதான் இங்கே இறந்து போயிருக்கும்.எல்லாம் இறைவனுக்காக இயல்பாகவும், இயற்கையாகவும் பொழிந்து கொண்டிருக்கும்." அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து,அல்லாஹ்வுக்காக கொடுத்து,அல்லாஹ்வுக்காக மறுத்தவன் தனது ஈமான் எனும் இறைநம்பிக்கையை சம்பூரணமாக்கி விட்டான்" {புகாரி} 7

 ஆகவே அரஃபா பெருவெளியில் நீ நிற்கும் போது ஆகாய கங்கையில் உனது ஆன்மா நீந்திச் சென்றால்,உன்னால் கரையை அடைய முடியாவிட்டாலும் உன்னை விட்டும் நீ கடந்து சென்று விடுவாய்!

 பா யஸீத் பிஸ்தாமி என்ற ஓர் இறைநேசர், இறைவா! உன்னை அடைவது எப்படி என்று கேட்டார்,உன்னை விட்டு விட்டு வா என்று பதில் வந்தது.பாரசீக பெருங்கவிஞர் நாஸிர் குஸ்ரு ;"அரஃபா  பெருவெளியில் மஅரிஃபா எனும் {மெஞ்ஞானத்} தென்றல் உம்மீது வீசி உன்னை ஒரு ஆரிஃபாக {மெஞ்ஞானியாக} வும்,உம்மையே உனக்கு அந்நியனாகவும் மாற்றிவிடும்" என்கிறார்.


அடுத்தது முஸ்தலிஃபா ; இது அரஃபாவுக்கும்,மினாவுக்கும் இடையிலுள்ள இடம்."நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் மஷ்அருல் ஹராம் என்ற இடத்தில் அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள்"என்று திருக்குர்ஆன் கூறுவது முஸ்தலிஃபாவைக் குறித்தாகும்.சொர்க்கத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பாவா ஆதமும்,ஹவ்வா அம்மாவும் மீண்டும் சந்தித்த இடம் அரஃபா.அவர்களிருவரும் முதல் இரவு தங்கிய இடம் முஸ்தலிஃபா. அவர்கள் தங்களைத் தங்களில் கண்டு கொண்ட இடம் அரஃபா.அல்லாஹ்வை அறிந்து கொண்ட நாள் அரஃபா தினம்.

 முஸ்தலிஃபா என்றாலே கூடிய,முடுகிய இடம்,இல்லம் என்பது பொருளாகும்.கணவன்,மனைவி இணையும் இல்லறம் இறைவனை அறிந்து அனுபவித்து அடைவதற்கான மெய்வழிச்சாலை."எவர் பரிசுத்தமானவராக, பரிசுத்தமாக்கட்டவராக இறைவனை சந்திக்க  நாடுகிறாரோ அவர் {பத்தினிகளான} சுதந்திர புருஷிகளை திருமணம் செய்து கொள்ளவும்"என்பது நபிமொழியாகும். {நூல் : இப்னுமாஜா ;1862.மற்றும் மிஷ்காத் ; 3092} 9

இரு மனங்கள் இணைவது மட்டும் திருமனம் அல்ல. தமிழில் "திரு" என்றால் கடவுள் என்றும் பொருள் உண்டு.அப்படியானால் கடவுளின் மணம் பெறுவதும் திருமணம் தான்.எனவே தான் இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்க வில்லை.இல்லறம் இறைவனை அடைவதற்கு தடைக்கல் அல்ல; அவனை அடைவதற்கு அது ஒரு படிக்கல் என்கிறது.சிற்றின்பத்தின் வழியாக பேரின்பத்தை நோக்கிய பயணம் திருமணம்.

ஹஜ்ஜில் ஆன்மீகத் திருவிழா காணும் அரஃபா பெருவெளி : அடியான் அல்லாஹ்வோடு நெருக்கம் பெற்று உருகும் மாலை வேளையென்றால், முஸ்தலிஃபா: அடியான் தனது அடையாளத்தை மறந்து கரையும் ஈடுஇணையற்ற முதலிரவாகும்.இந்த இரவு ரமழான் 27-லைலத்துல் கத்ர் இரவை விட சிறந்தது. ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு: குர்ஆன் இறங்கிய இரவு. முஸ்தலிஃபா இரவு; அந்தக் குர்ஆன் கூறும் கனவை {உறக்கத்தில் வரும் கனவல்ல;கலாம் வலியுறுத்தும் விழிப்பில் காண வேண்டிய இலட்சியக்கனவு} இறையானந்த கனவை நனவாக்கிடும் ராத்தரி.மெய் நிலை காணும் மெஞ்ஞான ரசத்தை ருசித்துப் பருகும் பாக்கியமான இரவு; முஸ்தலிஃபா இரவு.எனவே இந்த இரவில் கடுந்தவத்திலும்,தியானத்திலும் திளைத்திருக்க வேண்டும்.இதுவே ஹஜ்ஜின் விண் வெளிப்பயணமாகும்.

அடுத்தது மினா; மக்காவிற்கு 5 மைல் கிழக்கே அரஃபா செல்லும் பாதையில் ஹிரா குகைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த ஊர்.இங்கே ஷைத்தானுக்கு கல் எறிந்து,அறியாமையைத் தூக்கி எறிந்து,தீய பழக்க வழக்கங்கள்,துர்குணங்கள்,தீயசெயல்கள் அனைத்தையும் உதறித்தள்ளி தூய்மை பெறும் இடமாகும்.இங்கே மினாவில் ஆடு,ஒட்டகம் அறுத்து குர்பானி கொடுப்பது, ஏழை-எளிய மக்கள்,அநாதைகள்,ஆதரவற்றவர்களின் பசிப்பிணியைப் போக்குதற்கு மட்டுமல்ல; "நான்","எனது"என்ற அகம்பாவ அகத்தை அறுத்துப் பலியிடுவதே இதன் இலக்காகும்.

இறுதியாக தலைமுடி களைதல் ;தலைக்கனத்தை இறக்குவதும், ஆசைகளை அகற்றுவதுமாகும்.மினா என்றால் ஆசை,விருப்பம் என்று பொருள்.இங்கு வைத்துத்தான் ஆதம் நபி அவர்கள் இவ்வுலகிலிருந்து தனது சொந்த ஊர்-சுவனம் மீள விரும்பியதால் நாமும் அப்படி விரும்ப வேண்டும் என்று இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 "இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட –மப்ரூரான ஹஜ்ஜுக்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை" என்றார்கள் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள்.{புகாரி} 10 மப்ரூரான ஹஜ்ஜின் அடையாளம் என்ன?

அழிந்துபோகும் இவ்வுலக ஆசை அவரை விட்டும் விலகி,நிலையான, நிரந்தரமான சுவனம் மீள விரும்புவதாகும்.புறம் உதறி,சுயம் மீள மினாவில் விருப்பம் வந்ததும் மக்காவிற்கு ஓடி வந்து,கஅபாவைச் சுற்றி வலம் வருகிறார்கள்.இதற்கு தவாஃப் இஃபாழா என்று பெயர்.இஃபாழா என்றால் திரும்புதல் என்று பொருள்.இறைவிருப்பம் வந்து இறையில்லம் திரும்பிச் செய்யும் தவாஃப் என்பதால் இதற்கு இந்தப் பெயர்.தவாஃப் ஸியாரத் என்றும் கூறுவர்.விருப்பம் வந்து,ஸியாரத் செய்ய சந்திக்க வந்த தவாஃப். யாரை சந்திக்க? யாரின் மீது காதல் வந்ததோ,அவனை சந்திக்கத்தான்.

அவனைச்சந்திக்க சுவனம் செல்லாமல் கஅபாவிற்கு ஏன் வந்தார் என்றால்,அதுதான் பூலோக சொர்க்கம்.அதை வலம் வந்து,பித்துப்பிடித்தவராக... ஸஃபாவுக்கும்,மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடுகிறார்.ஸஃபாவில் தெளிந்து,மர்வாவில் ஒதுங்கி;ஒடுங்கி தேனுண்ட வண்டாய் வசியமாகி, இறைநேசரான வலியுல்லாவாகிறார் ஒரு ஹாஜி. 


1-إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ (96

2-وصلاة في المسجد الحرام أفضل من مائة ألف صلاة فيما سواه ) ابن ماجه

3- فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا

4-حدثنا موسى، قال: ثنا عمرو، قال: ثنا أسباط، عن السدي فيالحديث الذي ذكرنا إسناده قبل أن رجلا من بني إسرائيل رأى في النوم أن خراب بيت المقدس وهلاك بني إسرائيل على يدي غلام يتيم ابن أرملة من أهل بابل، يدعى بختنصر،وكانوا يصدقون فتصدق رؤياهم،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔وخرب بيت المقدس، وأمربه أن تطرح فيه الجيف،

5-أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1) أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2) وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3) تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ (4) فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ (5)
6-رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

7-« من أحب لله وأبغض لله ، وأعطى لله ومنع لله ، فقد استكمل الإيمان »

8-أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ28:57)
9-من أراد أن يلقى الله طاهرا مطهرا فليتزوج الحرائر
10-« الحج المبرور  ليس له جزاء إلا الجنة »

                                                    என்றும் தங்களன்புள்ள.



மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Monday, October 14, 2013

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!




குர்பானி கொடுப்பதால்

இறைக் கடமை நிறை வேறுகிறது.

மன நிம்மதி நிறைகிறது.

உறவுகள் ஒன்று கூடுகிறது.

ஏழைகள் பசியாறுகிறார்கள்.


பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது.

இறையருல் இறங்குகிறது.

தியாக உணர்வு உயர்கிறது.

ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது.

கூட்டுறவு மேம்படுகிறது.

வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.

அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.

முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.



ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் 
அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ்
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

www.chittarkottai sunnathjamath blogspot.com.

அறுத்தெரிந்திடு தோழா......... அகந்தையை !!!!



அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஜகாத்,ஸதக்கா,கொடுப்பதற்குத் தகுதியானவர்களுக்கு,
அல்லாஹ் கடமையாக்கியுள்ள இன்னொரு அமல் குர்பான்.குர்பான்,குர்ஆன் இந்த இரண்டுக்கும் 
ஒரு எழுத்து வித்யாசப்படும்.குர்பான் என்றாலும்,குர்ஆன் என்றாலும்,நெருங்குதல், 
அடுத்துச்செல்லல் என்பதே பொருளாகும்.

இறைமறை தன்னை இதயத்தில் சுமந்து,இறை அன்புக் கட்டளைகளை,நமக்கருளிய,இறைத்தூதர் 
பெருமானார் ( ஸல் ) அவர்களின் உன்னதமான அமல்களில் குர்பானியும் ஒன்றுதான்.குர்பானி கொடுக்கும் மனிதன்,
குர்பானி பிராணியை அறுக்கும் போதே தனது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அகந்தையை,தற்பெருமையை,
ஆனவத்தை அறுத்து எறிவதோடு,நான்,நான்தான்,என்ற அகம்பாவத்தை அறுத்தெரிய வேண்டும்.

அப்படி அறுத்தெரிந்தால்தான் குர்பான் என்ற சொல்லின்,நெருங்குதல் என்ற பொருள் உணர்ந்து,இறை நெருக்கம் பெற ஏதுவாகும்.
யா அல்லாஹ் உன்னை நெருங்கும் உன்னத அமலையும் எங்களுக்கு கொடுத்து,உன் திருப்பொருத்தம் பெற்றிடும் 
குர்பானியையும் தந்து அருள்புரிவாயாக மேலும்,. அனைவர்களுக்கும் எனது தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
ஆமீன்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.வஸ்ஸலாம்...

என்றும் தங்களன்புள்ள.




கே.எஸ்.முஹம்மது ஆரிஃப்கான் நூரி,நிஜாமி.
இமாம், அல் - மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆ பள்ளிவாசல் -- வாழூர்.

Thursday, October 10, 2013

ஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது !!!



ஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது.

எனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல் போன ஹாஜி , அடுத்து வரும் இரவில் அங்கு தங்கினாலும் போதும். அவரது ஹஜ்ஜு நிறைவேறிவிடும் என்று ஃபிக்ஹு சட்டம் கூறுகிறது. அதாவது ஹஜ்ஜுடைய (ஃபர்ளு) கடமைகளில் அரஃபாவில் தங்குவதுதான் பிரதானதும் மிக மிக முக்கியமானதுமாகும். மக்காவுக்கு வந்து எல்லா வழிபாடுகள் திருக்கஃபாவில் வைத்து செய்தாலும் மினா,முஸ்தலிபா முதலிய திருத்தலங்களில் வந்து தங்கினாலும் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்கவில்லையானால் ஹஜ்ஜு நிறைவேறாது. எனவே அரஃபாவில் தங்காதவர் ஹாஜியாக முடியாது. ஏனெனில் "ஹஜ்ஜு என்றாலே அரஃபா(வில் தங்குவது)தான்"1  என ஏந்தல் நபி ஸல் கூறியுள்ளார்கள். எனவே எல்லா ஹாஜியும் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடியே ஆகவேண்டும் துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாள் சூரியன் நாடு உச்சியை விட்டும் சாய்ந்த பிறகுள்ள பகலில் அரஃபாவில் தங்குவதுதான் அதற்குரிய அவசியமான (வாஜிபான) நேரம். ஒருவேளை இந்த பகல் நேரத்தில் இங்கு வந்து தங்கும் வாய்ப்பு பெறாதவர்கள் இதைத் தொடர்ந்து வரும் இரவில் தங்கினாலும் ஹஜ்ஜு நிறைவேறிவிடும்.

இதற்கு காரணம் துல்ஹஜ்ஜு பத்தாம் நாள் இரவு முழுதும் ஸுபுஹ் சாதிக்- மெய் விடியற்காலை- வரை ஷரிஅத் முறைப்படி அது ஒன்பதாம் நாளின் பகலுடன் சேர்வதேயாகும் என்று சட்டமேதைகளான ஃபுகஹாக்கள் கூறுவார்கள். இதன்படி அரஃபாவுடைய ஒன்பதாம் நாளுக்கு இரண்டு இரவுகள். ஒன்று எப்போதும்போல அதற்கு முந்திய இரவு. இரண்டாவது அதன் பகலைத் தொடர்ந்து வரும் இரவு. எனவே பத்தாம் நாளுக்கு இரவே இல்லை. ஆகவே பத்தாம் நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினம் நாட்களில் இரவே இல்லாத பகல் என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆதலால்தான் அன்றைய விடியற்காலைப் பொழுதின் மீது சத்தியமாக!-(வல்ஃபஜ்ரி) என்று அல்லாஹ் குர்ஆனில் அதைப் பிரத்தியேகப் படுத்திக் கூறுகிறான். (தஃப்சீர் குர்துபி, மஆரிஃபுல் குர்ஆன்)
  -1(الحج عرفة)
أخرجه أبو داود (1949) والنسائي (2 / 45 - 46 ، 48) والترمذي (1/ 168) والدارمي (2 / 59) وابن ماجه (3015) والطحاوي (1 / 408)وابن الجارود (468) وابن حبان (1009) والدارقطني (264) / 464 ، 2 / 278) والبيهقي (5 / 116 ، 173) والطيالسي (1309) وأحمد(4 / 309 ، 309 - 310 ، 335)

                                                       என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

அறியவேண்டிய அரஃபா நாள் !!!




عن طلحة بن عبيد الله بن كريز : أن رسولَ الله صلى الله عليه وسلم قال : «أفضلُ الأيام يومُ عرفة

நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும். (நபிமொழி ஸஹிஹ் இப்னு ஹிப்பான் )
இது இவ்வாண்டு இங்கு (மலேசியாவில்) 14.10.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது இன்று நோன்பு பிடிப்பது மிகச் சிறந்ததாகும்.
سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , فَقَالَ : يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ
« صوم يوم عرفة كفارة سنتين : سنة هذه وسنة مستقبلة »
அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும். நபிமொழி முஸ்லிம்: 1162, அபூதாவூது 2425)

அரஃபா நாள் நோன்பு இருப்பது ஆயிரம் நாள் நோன்பு இருப்பதைப் போல (நபிமொழி-பைஹகீ 3765)
அனஸ் பின் மாலிக் ரலி அறிவிப்பு செய்துள்ள ஒரு செய்தியில், ''துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாளுக்கு நிகரானது அரஃபா தினம்-சிறப்பில்- பத்தாயிரம் நாளாகும் (பைஹகீ:3766)
இஸ்லாமிய மார்க்கம் சம்பூரனமாது அரபா தினத்தில்தான். இன்றைய நாளில்தான் அல்லாஹ் இஸ்லாத்தை முழுமைப் படுத்தி அவனது அருட்கொடையை சம்பூரணப் படுத்தினான்.
عن عُمَر بن الخطَّابِ رضي الله عنه أنَّ رَجُلاً من اليهودِ قال له : يا أميرَ المؤمِنينَ آيةٌ في كتابكم تقرؤونها ، لو علينا مَعْشَرَ يَهُودٍ نَزَلَتْ لاتَّخَذْنَا ذلِكَ اليومَ عِيداً ، قال : أيُّ آيةٍ ؟ قال : ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الأِسْلاَمَ دِيناً ( قال عُمَرُ : قَدْ عرفْنَا ذلك اليوم والمكانَ الذي أنْزِلَتْ فيه على النبي ( صلى الله عليه وسلم ) وهو قائِمٌ بِعَرَفَةَ يوم جمعة
ஒரு யூதன் கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதை நீங்கள் ஓதவும் செய்கிறீர்கள். அது மட்டும் எங்கள் யூத சமூகத்திற்கு இறங்கி இருந்தால் அந்த நாளைப் பெருநாளாகக் கொண்டாடி இருப்போம்'' என்று கூறினார். அது எந்த வசனம் என்று கலீபா கேட்க, அதற்கு அவர், ''இன்றையதினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து எனது அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டோம் உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாக்கி திருப்தியடைந்தோம். (அல்குர்ஆன் 5:3) என்ற வசனத்தை எடுத்துக் கூறினார்.
அப்போது கலீபா உமர் ரலி அவர்கள் அந்த வசனம் இறங்கிய நாளும் வேளையும் இடமும் கூட எங்களுக்குத் தெரியுமே. வெள்ளிக்கிழமை அரபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் அவ்வசனம் இறங்கியது.'' அதாவது அது இறங்கிய தினத்தைப் பெருநாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அது இறங்கியதே பெருநாள் தினத்தில்தான் என பதிலளித்தார்கள். (புஹாரி:45)
அரபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு அதுதான் பெருநாள்.
عن عقبة بن عامر الجهني أن رسول الله - صلى الله عليه وسلم - قال إن يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام فهي أيام أكل وشرب
'' அரஃபா நாள், குர்பானி தினம், தஷ்ரீக் உடைய நாட்களான துல்ஹஜ் 11,12,13 ஆகிய தினங்கள் இஸ்லாமியர்களுக்கு பெருநாள் தினங்களாகும் அவை உண்ணும் பருகும் நாளாகும்'' (நபிமொழி-ஸஹிஹ் நஸயீ)
அரஃபா நாள் ஃபஜ்ரிலிருந்து-விடியற்காலை தொழுகையிலிருந்து தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அதாவது பிறை 13 அஸர் வரை கடமையான தொழுகையை நிறைவேற்றிய பிறகு தக்பீர்-இறைவனின் வல்லமையைக் கூறும் உச்சாடனங்களை- சொல்லவேண்டும்
அரபா தினம் அதைக்கொண்டு அல்லாஹ் அவனது மறையில் சத்தியம் செய்து சிறப்பித்த நாளாகும்
வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!'' (அல்குர்ஆன் 82: 2,3)
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ ، وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ وَالْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ ».
இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரபா நாளாகும். (நபிமொழி- ஸஹிஹ் திர்மிதி)
அல்லாஹ் ஆதமுடைய சந்ததியினரிடம் வாக்குறுதி வாங்கிய நாள் அரபா தினமாகும்.
عن بن عباس عن النبي - صلى الله عليه وسلم - قال أخذ الله تبارك وتعالى الميثاق من ظهر آدم بنعمان يعني عرفة فأخرج من صلبه كل ذرية ذرأها فنثرهم بين يديه كالذر ثم كلمهم فتلا قال : ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين.. إلى آخر الآية .

''அல்லாஹ் ஆதமுடைய முதுகந்தண்டிலிருந்து அவன் படைக்கப் போகிற எல்லா சந்ததிகளை வெளியாக்கி அணுக்களைப் போன்று அவர்களை தனக்கு முன் பரப்பி அவர்களிடம் வாக்குறுதி வாங்கியது அரபாவில் தான் அப்போது அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து அவர்களை நோக்கி உரையாடினான் நான் உங்கள் இறைவனாக இல்லையா? என்று அவன் கேட்டதற்கு ஏன் இல்லை.. நீதான் எங்கள் இறைவன் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் நபியே நீங்கள் அவர்களுக்கு இதை ஞாபகமூட்டுங்கள் ஏனென்றால் இதனை மறந்துவிட்டு பாராமுகமாகி இருந்தோம் என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், அல்லது பொய்யான தெய்வங்களை இனையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள்.ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக எங்களை நீ அழித்துவிடலாமா? என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே நீங்கள் கூறுங்கள் (அல்குர்ஆன் 7:172) விளக்கவுரை: நபிமொழி-அஹ்மது:2455, நஸயி: 11127)
பாவங்களை மன்னித்து நரக விடுதலை அளிக்கும் நாள் அரஃபாவில் தங்கியிருப்பவர்களைக் கொண்டு அல்லாஹ் பெருமைப் படும் நாள்.
عن عائشة أن رسول الله - صلى الله عليه وسلم - قال ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة ويقول ما أراد هؤلاء 
''அரஃபா நாளைவிட அல்லாஹ் நரகவிடுதலை அளிக்கும் நாள் வேறு இல்லை.  மேலும் அவன் நெருங்கி பிரசன்னமாகிறான். பின்னர் அவர்களைக் கொண்டு வானவர்களிடம் பெருமைப்படுகிறான்.இவர்கள் என்ன வேண்டுகிறார்கள் என்று கேட்கிறான். (சந்தோஷமாக.) நபிமொழி- முஸ்லிம் 1348

எல்லாவற்றுக்கும் மேலாக ''ஹஜ்ஜே அரஃபாவில் தங்குவதுதான்''
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

                                                      என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, October 3, 2013

தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!

  

இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம்
وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3)
1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3)
இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி)
படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும்

ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام
2. குறிப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் நினைவு கூறுவதற்காக''... (22:28)

இந்த இறைவசனத்தில் வரும் குறிப்பட்ட நாட்கள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும் என விளக்கமளித்துள்ளார்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ( புஹாரி)
அப்படியானால் அல்லாஹ்வை திக்ரு தியானம் செய்வதற்குரிய இந்த பத்து நாட்களின் சிறப்பு மகத்தானதல்லவா?
( ما من أيام العمل الصالح فيهن أحبُّ إلى الله منه في هذه الأيام العشر(
3. நற்செயல்கள் செய்வதற்கு இந்த பத்து நாட்களை விட அல்லாஹ்விற்கு  மிகவும் உகந்த நாட்கள் வேறில்லை. (நபிமொழி புஹாரி 969, திர்மிதி 757, அபூதாவூத் 2438)
« مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ سُبْحَانَهُ وَلَا أَحَبُّ إلَيْهِ مِنْ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ »
4. அல்லாஹ்விடத்தில் மிகவும் புனிதமான நாட்கள் நற்செயல் புரிவதற்கு அல்லாஹ்விற்கு  மிகவும் உகப்பான நாட்கள் அந்த பத்து நாட்களை விட வேறில்லை. எனவே இதில் அதிகமாக இறைவனைத் துதித்து மகத்துவப் படுத்தி அவனைப் புகழ்ந்து அவனது உண்மை ஏகத்துவத்தை உறுதிப்படுத்தும் உச்சாடனங்களை சொல்லுங்கள் (தபரானி)
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر
5. அல்லாஹ்விடத்தில் இறைவழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த  துல்ஹஜ்ஜு மாதத்தின் முதல் பத்து நாட்களில் நோற்கப்படும் ஒவ்வொரு நோன்பும் ஒரு வருட நோன்புக்குச் சமம். அதில் ஒவ்வொரு இரவிலும் நின்று வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குவதற்கு நிகராகும் (நபிமொழி திர்மிதி 758, இப்னு மாஜா 1728)
6. ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அந்த பத்து நாட்கள் மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் கூடுதலாக கொடுத்த பத்து நாட்களாகும். அதாவது மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் தன்னோடு உரையாடுவதற்கு  முன்பு முப்பது நாட்கள் நோன்பு இருக்கச் சொன்னான். 
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً

மூசாவிற்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம் பின்னர் அத்துடன் பத்து இரவுகளைச் சேர்த்தோம் ஆகவே அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. அல்குர்ஆன் 7:142)
இப்படி மூஸா நபிக்கு கூடுதலாக அதிகப் படுத்திக் கொடுத்த பத்து நாட்கள் என்பது துல்ஹஜ்ஜு மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களாகும். இதன்படி இந்த பத்து நாட்கள் நோன்பு இருந்தால் மூஸா நபி அலை அவர்களுக்கு உண்டான இறை நெருக்கம் நமக்கும் கிடைக்கும் அல்லவா?
7. மார்க்க மேதைகள் கூறுவார்கள்: இந்த பத்து நாட்கள் ரமளானின் பத்து நாட்களை விட மேலானது ஏனெனில் நாட்களில் மிகச் சிறந்த அரபா தினம் (நபிமொழி: ஸஹிஹ் இப்னு ஹிப்பான்) இதில் வருகிறது ஆனால் இரவுகளைக் கவனித்து ரமலானே சிறந்தது காரணம் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரு இரவு ராமலானில்தான் வருகிறது
8. இந்த பத்து நாட்களின் தனித்தனமைக்கு என்ன காரணம்?
قال الحافظ ابن حجر: «والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة، لمكان اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره»
நபிமொழி ஆய்வாளர் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுவார்கள்: தொழுகை நோன்பு சதகா தர்மம் ஹஜ்ஜு ஆகிய பிரதானமான எல்லா இறைவழிபாடுகளும் இதில்தான் சங்கமிக்கின்றன கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பு வேறு நாட்களுக்கு இல்லை. எனவேதான் இது சிறந்தது.
இவ்வாறு சிறப்புமிக்க இந்த நாட்களில் செய்யப்ப்டவேண்டிய சிறப்பு அமல்கள்- நற்காரியங்களைப் பற்றி இனி பார்ப்போம்
1. பொதுவாக தொழுகை தர்மம் குர்ஆன் ஓதுதல் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது போன்ற நற்காரியங்கள் (புகாரி 969)
2. குறிப்பாக ஹஜ்ஜு உம்ரா நிறைவேற்றுவது.
«العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة» رواه البخاري ومسلم.

உம்ரா பாவங்களுக்கு பிரயாச்சித்தமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜு இதற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை. (புகாரி 1773)
«تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب، كما ينفي الكير خبث الحديد والذهب والفضة

ஹஜ்ஜு உம்ரா இவ்விரண்டும் தொடர்ந்து நிறைவேற்றுவது, நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் பாவத்தையும் வறுமையும் போக்கி ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும். (திர்மிதி 81, பைஹகீ 4095)
3. இந்த நாட்களில் முழுவதும் அல்லது முடிந்த அளவு நோன்பு பிடிப்பது (திர்மிதி 758)
4. அதிகமாக இறைவனை திக்ரு செய்வது. ஸலவாத் ஓதுவது, தஸ்பீஹ் சொல்வது ( தபரானி, ஸஹிஹ் இப்னு ஹிப்பான்)
5. இஸ்திஃபார் அதிகம் செய்வது. பாவமன்னிப்புக் கோருவது. இதற்கு மூன்று நிபந்தனைகள்: செய்த பாவத்தை நினைத்து வருந்துவது
அந்த பாவத்தை விட்டு விலகி விடுவது மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் திரும்ப மாட்டேன் என உறுதி கொள்வது
அல்லாஹ் ரோஷப்படுபவன்  அவன் தடுத்து ஹராமாக்கிய பாவ காரியங்களை மனிதன் செய்கிறபோது அல்லாஹ் ரோஷப்படுவான் (புஹாரி)
அல்லாஹ்வின் கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க அவனிடமே சரணடைந்து விடுவது பாவமன்னிப்புக் கூறுவதே சிறந்த வழியாகும்
6. பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குத்பா சொற்பொழிவை செவிமடுப்பது
7. ஜகாத் கடமையானவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுப்பது. இவாறு குர்பானி கொடுக்க நினைப்பவர் துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையைப் பார்த்துவிட்டால் நகம் முடி களையாமல் இருக்கவேண்டும் (முஸ்லிம் 1977)
« إذا دخل العشر ، فإن أراد أحدكم أن يضحي فلا يمس من شعره ، ولا بشره شيئا 
பயணத்தில் இருப்பவர் குர்பானி கொடுக்கவேண்டியதில்லை
அல்லாஹ்விற்காக குர்பானி-தியாகம் செய்வோம். அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!!

                                            என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.