Sunday, April 21, 2013

சென்னை -- திருவல்லிக்கேணி வட்டார ஜமாஅத்துல் உலமா பேரவை நடத்தும் மாபெரும் இரண்டு நாள் மாநாடு.




நவீன உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாமே 
தீர்வு ஜமாஅத்துல் உலமா மாநாடு.

இன்ஷா அல்லாஹ், நாள் ; ஏப்ரல் 27, 28 -2013 சனி, ஞாயிறு. இடம் ; குராசானி பீர் தர்ஹா மஸ்ஜித்,  L.B.ரோடு,அடையாறு,சென்னை --20.
முதல் அமர்வு ; 9.30 - 1.00  பல்துறை ஆலிம்களின் அனுபவங்களும்,வழிகாட்டுதல்களும்.
ஆலிம்களுக்கு மட்டும்.
தலைமை ; மௌலவீ,அல்ஹாஜ்
Dr.P.சையது மஸ்வூது ஜமாலி MA.,Ph.D
வரவேற்புரை ; மௌலவி,அல்ஹாஜ்,K.M.அபூதாஹிர் ஸிராஜீ
வழிகாட்டுரை வழங்குவோர் ;
மௌலவி அல்ஹாஜ், Y.அப்துல் கரீம் ஜமாலி
( Ex.தமிழக அரசு மாவட்ட வருவாய் அதிகாரி)
மௌலவி,அல்ஹாஜ், A.ஹஸன் அலி ஜமாலி
(ஜமாஅத் தலைவர் S.P.பட்டிணம்)
மௌலவி,அல்ஹாஜ், S.அப்துல் கபூர் ஜமாலி,Bsc.,
(தொழிலதிபர்,திண்டுக்கல்)
மௌலவி,அல்ஹாஜ் P.மக்தூம் ஷா ஜமாலி,M.Com
(துணைத் தலைவர் ;  அரசு பதிவுத்துறை,நெல்லை மாவட்டம்)
மௌலானா S.முகமது அபூதாஹிர் M.Com.,M.L.,
( மாவட்ட ஷெஸன்ஸ் நீதிபதி & கூடுதல் இயக்குநர்,தமிழ்நாடு நீதிபதிகள் பயிலரங்கம்,சென்னை.)
மௌலவி, அல்ஹாஜ், M.K.அலாவுதீன் பாகவி
( இமாம் ; மஸ்ஜித் ஜாவித், அண்ணாநகர் )
மௌலவி, Dr.M.ஜாஹிர் ஹுஸைன் பாகவி,M.A.,Ph.D.,
( பேராசிரியர் ; சென்னை பல்கலைக்கழகம் )
மௌலவி, K.M.முஹம்மது ரபி ஜமாலி,M.A.,M.Sc.,B.L.,
( யோகா பயிற்சி மையம், சென்னை )
இரண்டாம் அமர்வு ; மாலை 5.00 - 6.30
இளைய சமுதாயம் எழுச்சி பெற...
தலைமை ; மௌலவி,அல்ஹாஜ், O.S.M.இல்யாஸ் காஸிமீ
எழுச்சியுரை ; மௌலவி,அல்ஹாஜ், Dr.V.S.அன்வர் பாதுஷா உலவீ,M.A..,Ph.D.,
பொருள் ; இணையதளமும்,இளைய தலைமுறையும்.
மௌலவி,அல்ஹாஜ், A.இஸ்மாயீல் ஹஸனி
பொருள் ;  திசைமாறும் இளைய தலைமுறை
மூன்றாம் அமர்வு ; மாலை 6.45 - 9.00
பெருமானாரின் பன்முக ஆளூமை
தலைமை ; மௌலவி,அல்ஹாஜ், T.J.M.ஸலாஹுத்தீன் ரியாஜி
பங்கேற்பாளர்கள் ;
மௌலவி,அல்ஹாஜ், S.N.ஜஃபர் சாதிக் பாகவி
குதூகலமான குடும்பத் தலைவர்
மௌலவி,அல்ஹாஜ், J.ஜாஹிர் ஹுஸைன் மன்பயீ
மாநபியின் மக்கள் நலப்பணிகள்
மௌலவி,அல்ஹாஜ், A.U.அபூபக்கர் உஸ்மானி
அதிசயமான அரசியல் தலைவர்
மௌலவி,அல்ஹாஜ், S.பக்ருத்தீன் பாகவி
விமர்சனங்களை வென்ற தூயவர்
மௌலவி அல்ஹாஜ் H.அப்துர் ரஹ்மான் பாகவி
தலைமைத்துவ பண்பாளர்
இரண்டாம் நாள் ; முதல் அமர்வு 
காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு
வாழ்வியல் சிந்தனை
மௌலவி, அல்ஹாஜ் M.O.அப்துல் காதிர் தாவூதி
இன்று புதிதாய் பிறந்தேன்
இரண்டாம் அமர்வு ; காலை 9.00 - 100 
பிக்ஹு ஆய்வரங்கம்
தலைமை ; மௌலவி,அல்ஹாஜ்,O.M.அப்துல் காதிர் பாகவி,
ஆய்வாளர்கள்
மௌலவி,அல்ஹாஜ்,அஷ்ஷேக் முயீனுத்தீன் மன்பயீ
உலகம் முழுவதும் ஒரே பிறை?
மௌலானா,அல்ஹாஜ், M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி
டெஸ்டியூப்பேபீ,நவீன முறையில் பிராணிகளை அறுப்பது
மௌலவி,அல்ஹாஜ், கோவை A.அப்துல் அஜீஸ் பாகவி
ஜகாத்,பைத்துல்மால்
மௌலவி,அல்ஹாஜ் K.M.இல்யாஸ் ரியாஜீ
ஹஜ்,உம்ரா,சர்ச்சைகளும்,தீர்வுகளும்
மௌலவி,அல்ஹாஜ்,A.செய்யது முஸ்தபா பாகவி
உடல் உறுப்பு தானம் நவீன மஸாயில்
மௌலவி,அல்ஹாஜ்,S.A.காஜா நிஜாமுத்தீன் யூசுபீ
இஸ்லாமிய வங்கி,இன்சூரன்ஸ்,மியூச்சுவல் பண்டு,கல்வி கடன்
மூன்றாம் அமர்வு ; மாலை 3.00 - 5.00
பட்டிமன்றம்
தலைப்பு ;
இளைய தலைமுறையின் ஒழுக்கச் சீரழிவிற்கு பெரிதும் காரணம் 
வீட்டுச்சூழலா? வெளிச்சூழலா?
தலைமை ; மௌலவி,அல்ஹாஜ்,S.M.ஹனீஃப் பாகவி
நடுவர் ; மௌலவி,அல்ஹாஜ்,A.முஹம்மது கான் பாகவி
மௌலவி,அல்ஹாஜ்,S.யூசுப் ஸித்தீக் மிஸ்பாஹி
மௌலவி அல்ஹாஜ், K.S.M.ஷாஹுல் ஹமீது பாகவி
மௌலவி அல்ஹாஜ் A.M.அப்துல் கறீம் பாகவி
மௌலவி,அல்ஹாஜ்,A.அப்துல்  அலீம் மஸ்லஹீ
நான்காம் அமர்வு ; மாலை 5.00 -6.30
பள்ளிவாசல்களின் பங்களிப்பு
தலைமை ;மௌலவி,அல்ஹாஜ், S.M.முஹம்மது தாஹா மிஸ்பாஹீ
உரையாற்றுவோர் ;
மௌலவி,அல்ஹாஜ்,M.சதீதுத்தீன் பாகவி,M.A..,M.Phil
ஆலிம்கள் செய்ததும் செய்ய வேண்டியதும்
மௌலவி,அல்ஹாஜ் E.S.அபூபக்கர் உலவி
சமுதாய சீர்திருத்தத்தில் பள்ளி வாயில்களின் பங்கு 
ஐந்தாம் அமர்வு ; 6,45 - 9.00
மாநாடு நிறைவு விழா 
தலைமை & இறுதி பேருரை ; மௌலானா ,அல்ஹாஜ்,ஷைகுல் ஹதீஸ்
 A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்
முன்னிலை ; குராசானி பீர் தர்கா மஸ்ஜித் நிர்வாகிகள்,அடையாறு
சிறப்புரை ; மௌலவி அல்ஹாஜ்,S.S.அஹமது பாகவி,மலேசியா
தஸ்கியாவும்,தர்பியாவும் காலத்தின் தேவை
மௌலவி,அல்ஹாஜ், P.A.காஜா முயினுதீன் பாகவி
பல்துறைகளில் முஸ்லிம் முன்னோடி பெண்கள்.
நன்றியுரை ; மௌலவி, M.சையது மஸ்வூது ஜமாலி
விருது பெறுவோர் ;
மௌலானா,அல்ஹாஜ், T.J.M.ஸலாஹுத்தீன் ரியாஜி
மௌலானா,அல்ஹாஜ் M.S.உமர் பாரூக் தாவூதி
மௌலானா அல்ஹாஜ் O.M.அப்துல் காதிர் பாகவி
மௌலானா,அல்ஹாஜ்,M.முஹம்மது காஸிம் பாகவி
மௌலானா,அல்ஹாஜ்,அரசு தலைமை காஜி,
ஸலாஹுத்தீன் அய்யூப் அல் அஸ்ஹரி
மௌலானா,அல்ஹாஜ், A.K.அப்துல் காதர் மிஸ்பாஹி
மௌலானா,அல்ஹாஜ்,பேட்டை முஹம்மது முஹைதீன் ஜமாலி,பாகவி
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடு ;
ஜமாஅத்துல் உலமா பேரவை
சென்னை -- திருவல்லிக்கேணி வட்டாரம்.
செல் ; 9444119195 / 94444 94628
வெளியீடு ; மன்பயீ ஆலிம்.காம்.

Saturday, April 20, 2013

மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா



மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் நினைவு விழா,புத்ரா ஜெயா, மஸ்ஜிது மிஜான் ஜைனல் ஆபிதீனில், ஹிஜ்ரி 1434 ஜமாத்துல் அவ்வல் பிறை 4,மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.இந்நிகழ்ச்சி மாலை அஸர் தொழுகைக்குப்பின் துவங்கியது.4-45 மணிக்கு மார்க்க மேதைகளான பேச்சாளர்களும்,பொதுமக்களும்,விசேச அழைப்பாளர்களும்,ஒன்று கூடினார்கள்.5.00 மணிக்கு, பங்களா தேசைச் சேர்ந்த காரீ,ஷைஹ் அஹ்மது பின் யூசுஃப் அல் --அஜ்ஹரி அவர்கள் திருமறை ஓதி, ஆன்மீக மாநாட்டை துவக்கி வைத்தார்கள்.இந்த ஆன்மீக மாநாட்டினை,மலேசிய அரசாங்கமும், அமானா -- அல் வாரிஸீன் என்ற அமைப்பும், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். 


5-10 மணிக்கு அமானா  -- அல் வாரிஸீனின் தலைவர்,மரியாதைக்குரிய,ஷைஹ் மௌலானா அஃபீஃபுதீன் அல் ஜைலானி அவர்கள், துஆ ஓதி  ஆரம்பித்து வைத்தார்கள். 5-15 மணிக்கு யாயாஸான் அல் --ஜென்டேரமி,மலேசியாவின் ஆலோசகர்,மரியாதைக்குரிய,ஷைஹ் முஹம்மது ஹஃபீஜ் பின் ஹாஜி ஸலாமத் அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். 5-25 மணிக்கு, மஸ்ஜித் மைதீன் சிங்கப்பூரைச் சேர்ந்த மரியாதைக்குரிய, ஸுஃப்யான் பின் முஹம்மது யாதி அவர்கள்,கஸீதா பாடினார்கள். 5-35 மணிக்கு.ஆஸ்திரேலியாவின் பெரிய முஃப்தி,மரியாதைக்குரிய,பேராசிரியர்,டாக்டர்,இப்ராஹீம் ஸலீம் அவர்கள் ஆங்கில மொழியில் உரை நிகழ்த்த,மரியாதைக்குரிய,ஹபீப் அஹ்மது பின் யூனுஸ் அல் -- மஹ்தர் அவர்கள், மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள். 



6-00 மணிக்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த, மரியாதைக்குரிய,ஷைஹ் ஹபீப் முஹம்மது ரிஜீக் சிஹாப் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.6-10 மணிக்கு மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த,மரியாதைக்குரிய,காரீ ஷைஹ் ரில்வான் ஜுமா அல் --அஜ்ஹரி அவர்கள்,கஸீதா பாடினார்கள்.6-30 மணிக்கு,இராக் நாட்டின் பெரிய முஃப்தி,மரியாதைக்குரிய, ஷைஹ்,டாக்டர் ரஃபீ அல் -- அனி அவர்கள்,அரபியில் உரை நிகழ்த்த,மரியாதைக்குரிய,உஸ்தாத் நஜ்முதீன் அல் --கீரிட் அவர்கள்,.மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள்.
 7-00 மணிக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த,ஷைஹ் அஹ்மது திஜானி பின் உமர் அவர்கள், கஸீதா பாடினார்கள்.


7-15 மணிக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த,மரியாதைக்குரிய, உஸ்தாத் உஸாமா கேனான் அவர்கள்,சிறப்புரையாற்றினார்கள், 7-27 மணிக்கு மஃரிப் தொழுகை நடைபெற்றது.7-45 மணிக்கு,யுனைடெட் கிங்டோமைச் சேர்ந்த,மரியாதைக்குரிய, ஷைஹ் அப்துல் அஜீஸ் ஃப்ரிடெரிக்ஸ் அவர்கள்,சிறப்புரையாற்றினார்கள். 8-00 மணிக்கு,மஸ்ஜித் பா அலாவியின் பெரிய இமாம்,சிங்கப்பூரைச் சேர்ந்த,மரியாதைக்குரிய,ஹபீப் ஹஸன் பின் முஹம்மது  ஸலீம்  அல் -- அத்தாஸ் அவர்கள்,மௌலிது பைத்துகளைப் பாடினார்கள். 8-35 மணிக்கு இஷாத் தொழுகை நடைபெற்றது. 8-40 மணிக்கு,மக்காவைச் சேர்ந்த உலமா,மரியாதைக்குரிய,
ஷைஹ் உமர் பின் ஹாமிது அல் -- ஜைலானி அவர்கள்,அரபியில் உரை நிகழ்த்த,மரியாதைக்குரிய,உஸ்தாத் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன் அவர்கள், மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள். 


இந்த சிறப்பு வாய்ந்த ஆன்மீக மாநாட்டிற்கு,சிறப்பு அழைப்பாளர்கள்,உலக முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.இந்தியாவிலிருந்து,சிறப்பு அழைப்பாளராக,கேரள மாநிலம்,காந்தபுரம்,கமருல் உலமா,அல்லாமா A.P.அபூபக்கர் முஸ்லியார் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் கலந்துகொண்டார்கள். 9-10 மணிக்கு, அமானா  -- அல் வாரிஸீனின் தலைவர்,மரியாதைக்குரிய,ஷைஹ் மௌலானா அஃபீஃபுதீன் அல் ஜைலானி அவர்கள், நன்றியுரை மற்றும் துஆ ஓதி,சிறப்பு வாய்ந்த இந்த ஆன்மீக மாநாட்டினை 
நிறைவு செய்து வைத்தார்கள்.சிறப்பு வாய்ந்த இந்த 
ஆன்மீக மாநாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு,அல்லாஹ்வின்,அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,அடைந்து கொண்டார்கள்.வஸ்ஸலாம்.ஆமீன்....

வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, April 18, 2013

வாழ வழியா இல்லை பூமியில் !!!



அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 4 ; 97 )
வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் எதிர் நீச்சல் போடத்தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கில்லை.அதில் மேடு பள்ளமும்,சுழியும்,பாறைகளும் நிறைந்திருக்கும் வாழ்க்கைப் படகை ஓட்டிச்செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும், பாறையில் மோதிவிடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பை பயன்படுத்த வேண்டும்.அந்த துடுப்பு எது? அது தான் ஈமான் என்னும் நம்பிக்கை.இறைநம்பிக்கை என்பது இறையிருப்பை ஏகத்துவத்துவத்தை ஏற்பது மட்டுமல்ல.அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்,''  ( 9 ; 40 ) அவன் எப்பொழுதும் நம்மை கைவிடமாட்டான்.நமக்கு உதவி செய்வான்.நாம் வெற்றி இலக்கை அடைந்தே தீருவோம் '' என்ற உறுதியான விசுவாசமும் ஆகும். 

இந்த வகையில்,தன்நம்பிக்கை என்பதும் ஈமானில் ஒரு அங்கமே.வாழ்க்கை என்றால் வேதனைகளும்.சோதனைகளும்  சகஜம்.சங்கடங்கள் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்டவேண்டும்.முழு வெற்றி -- சக்சஸ் ஃபுல்,சாகஸம் செய்தாலே சாத்தியமாகும்.இது சரித்திரத்தில் சாதனைப் படைத்தவர்கள் எல்லோரும் சொல்லும் செய்தி.இறை தீர்க்க தரிசிகளான நபிமார்களும்,இறைநேசர்களான வழிமார்களும்,பெற்ற வெற்றியின் இரகசியமே தங்கடங்களை தடையாகக் கருதாமல் சகிப்புத்தன்மையுடன் மேற்கொண்ட அவர்களின்  தொடர் முயற்சிகள் தான். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்றால் ஏன் தோல்விக்ள் ஏற்படுகிற்து அவன் நம்முடன் இருப்பதால் தான் பாதுகாக்கப் படுகிறோம்.

நாம் தனித் தீவுகள் அல்ல.நாம் நினைத்ததெல்லாம் தாறுமாறாக நடப்பதற்கு.நம்முடன் அல்லாஹ் இருக்கிறான்.அவன் நம்மை வழி நடத்திச் செல்கிறான்.தோல்விகள் நமது தவறான முடிவுகள். அதற்குப்பிறகு ஏற்படும் இறுதி வெற்றி இறையிருப்பின் வெளிப்பாடு. இந்த வகையில்,ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கு தடையாக இருந்த காரணங்களைக் கண்டறிந்துச் சொல்லும் குருவாகும். இந்த  முட்டாலுக்கு எவ்வளவு சொன்னாலும் எதுவும் ஏறாது என்று பாட சாலையிலிருந்து வெளியேற்றப் பட்ட தோமஸ் ஆல்வா எடிசன் தான் பிற்காலத்தில் மின் குமுழை ( Electric Bulb ) கண்டுபிடித்தான்.ஆரம்பத்தில் அதைக் கண்டுபிடிப்பதில் ஆயிரம் முறை செயல்முறை பரிசோதனை செய்ததில் தோல்வியைத்தான் தழுவினான்.தளராத முயற்சியால் இறுதியில் மகத்தான வெற்றிபெற்றான்.ஆயிரம் முறை பரிசோதனை செய்து தோற்றுப்போனதில் உங்களின் காலநேரமும் சக்தியும் அதில் வீணாகிவிட்டதே! என்று அவரிடம் வினவப்பட்டபோது; '' யார் சொன்னார் நான் ஆயிரம் முறை தோற்றேன் என்று நான் ஆயிரம் முறை பரிசோதனை செய்ததில் ஒரு மின்குமிழ் எரியாமல் இருப்பதற்கான ஆயிரம் காரணங்களை கண்டறிந்தேன் '' என்றான் வெற்றிப் பெருமிதத்துடன். வெற்றி பெற்ற எல்லா சாதனையாளர்களைப்போல தடைக்கற்களை வெற்றிக்குரிய படிக்கற்களாக கண்டதால்,காணவேண்டியதை இறுதியில் கண்டுகொண்டு தனது இலக்கை அடைந்தான்.

'' ஒட்டகம் மேய்கக்கூட தகுதியில்லாதவன் நீ '' என்று தகப்பனாரால் திட்டு வாங்கிய உமர் ( ரலி) தான் தரனி போற்றும் தரமான நிர்வாகத்தைத் தந்து,பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவி சரித்திரத்தில் முன்மாதிரி ஆட்சியாளர் என்ற சிறப்பை பெற்றார். ஆயிரம் மைல் பயணம் ஒரு அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது. முயற்சி நம்கையில்.  பூர்த்தி பூரணசக்தியின் கையில்,யார் என்ன சொன்னாலும் பயணத்தை நிறுத்தாதே இலக்கை சென்றடையும் வரை ஓயாதே! ஓடி ஓடி வேலை செய். படைத்தவன் அதில் தான் வாழ்வை அமைத்திருக்கின்றான்.அலைகடல் தாண்டியும் வாழ்வாதாரம் தேடு! அலைக்கழிப்பு இருக்கலாம் அது உன்னை அனைத்துவிடுவதற்கு அல்ல அணைப்பதற்கு. '' திடமாக நாம் மனிதனை கஷ்டத்தில் உள்ளவனாக படைத்திருக்கின்றோம்.'' ( அல்குர்ஆன் 90 ; 4 ) ஆனால் கஷ்டம் உனக்கு நஷ்டமில்லை. அது தான் உனது இலாபத்திற்கான மூலதனம்.ஏனெனில் ; நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகறியம் இருக்கின்றது '' (அல் குர்ஆன்  94 ;56 )

இந்த வசனத்தில் கஷ்டம் (உஸ்ரு) என்னும் சொல்,குறிப்பு பெயர் சொல்லாக இரு முறை ஆளப்பட்டுள்ளது.ஆனால் இலேசு ( யுஸ்ரு) என்னும் சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இரண்டு முறை வந்துள்ளது.குறிப்பு பெயர்ச்சொல் ஒரு தொடரில் திரும்பத் திரும்ப இரு முறை வந்தால் இரண்டிற்கும் உததேசம் என்றுதான்.ஆனால் பொதுப் பெயர்ச்சொல் ஒரே தொடரில் மடங்கி மடங்கி,இருமுறை வந்தால் அது இரு பொருளைத் தரும் என்பது இலக்கணம்.இந்த விதிப்படி; ஆயத்தின் அர்த்தம் ;ஒரு கஷ்டத்திற்கு இரண்டு இலேசுகள் -- சௌகரியிங்கள் கிடைக்கும். '' ஒரு சஞ்லத்திற்குப் பிறகு இரு சந்தோஷங்கள் வந்தே தீரும் '' (நபிமொழி)

இந்த வசனம் நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு சந்தோஷ வார்த்தை சொன்னது போல வெற்றிக்கு மேல் வெற்றி வந்து அவர்களைச்சேர்ந்தது.ஆனால் அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்கவேண்டியதிருந்தது.ஆதரவும் பாதுகாப்பும் கொடுத்து வந்த அபூதாலிப் அவர்கள் மறைந்த பிறகு, குறைசி குலத்தின் பனூ ஹாஷிம் குழுவிற்கு தலைமை பொறுப்பை எற்ற அபூலஹப் நபியவர்களுக்கு இனி பாதுகாப்பு கொடுக்க மறுத்து விட்டான். இனக் குழுக்களின் ஆட்சி நடைபெற்ற அரபு தேசத்தில் ஏதாவது ஒரு குழுவின் பாதுகாப்பின்றி தனது அழைப்பு பணியை முன்னெடுத்திச் சென்று  ஜீவிக்க முடியாத நிலையில்,பாதுகாப்பு கேட்டு தாயிபுக்கு நபியவர்கள் பயணமானார்கள்.உடன் உற்ற தோழராக இருந்த பணியாளர் சைது ( ரலி) அவர்களை மட்டும் அழைத்துக் கொண்டார்கள்.

தாயிப் நகரம் மக்காவின் தென்கிழக்கே 65 மைல் தொலை தூரத்தில் அமைந்த ஒரு குழுமையான,பசுமையான கோடைகால வாஸஸ்தலம் அங்கே நபியவர்களுக்கு சில உறவினர்களும் இருந்தார்கள். அங்கே மூன்று முக்கிய தலைவர்கள் இருந்தார்கள்.அப்து யாலைல்,மஸ்வூது,ஹபீப் ஆகிய இம்மூவரிடம் சென்று தனக்கு பாதுகாப்பும்,ஆதரவும் அளிக்கும்படி நபியவர்கள் கோரினார்கள்.அதற்கு முற்றாக மறுத்துவிட்ட அம்மூவரும் கடுஞ்சொல்லை பயன்படுத்தினார்கள். ஒருவன் கூறினான் ;அல்லாஹ் உம்மை அவனது தூதராக அனுப்பி இருந்தால் ( இறைவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க) கஃபாவின் திரைத்துணியை கிழித்தெறிவேன். இன்னொருவன் சொன்னான் ;அல்லாஹ்வுக்கு தூதராக அனுப்ப உம்மை விடுத்து வேறு ஆள் கிடைக்கவில்லையா. மூன்றாமவன் எச்சரிக்கை உணர்வுடன் பேசினான் ;நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வின் தூதராக இருந்தால் நான் உங்களுக்கு பதிலுரைப்பது மிக ஆபத்தானது.நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய் சொல்வதாக இருந்தால்,நான் உங்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை எது எப்படி இருந்தாலும் அல்லாஹ் மேல் சத்தியம் நான் உங்களுடன் ஒரு பேச்சும் ( ஆதரவாகவும்,எதிராகவும்) பேசமாட்டேன்.( ஸீரத் இப்னு ஹிஷாம்
 2 ; 29 ) மிகுந்த கவலையுடன் நபியவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள்.ஆயினும் அம்மக்கள் அவர்களை சும்மா விடவில்லை ஊரிலுள்ள சிறுவர்கள்,அடிமைகளை ஏவிவிட்டு நபியவர்களை பின்தொடர்ந்துச் சென்று,ஏசவும்,பேசவும்,கல்மாரி பொழியவும் செய்தனர்.

நபிகளின் பணியாளர் சைது பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தனது போர்வையால் நபியவர்களை பாதுகாக்க முயன்றும் முடியவில்லை கல் நெஞ்சம் படைத்தவர்கள் கண்ணல் நபி (ஸல்) அவர்களை கல்லால் காயப்படுத்தி விட்டார்கள். ஒரு கவிஞர் கூறியது போல '' அது வரை கல்லின் மீது பூவை எரிந்தவர்கள் அன்று முதன் முதலாக ஒரு பூவின் மீது கல்லை எரிந்தார்கள் ''ஊருக்கு சற்று வெளியே உத்பா, ஷைபா என்ற இரு சகோதரர்களுக்குரிய முந்திரித் தோட்டம் ஒன்று இருந்தது.நபியவர்கள் அங்கு போய் சேர்ந்த போது மாலையாகிவிட்டது. அங்கே அந்ததோட்டத்தில் அடைக்கலம் தேடினார்கள். உடலில் கடுங்காயத்துடன் உள்ளத்தில் பெரும் வலியுடன் அல்லாஹ்விடம் இப்படி மன்றாடினார்கள் ; இறைவா! எனக்கு உதவி செய் என்னை தனியாக விட்டு விடாதே யா அல்லாஹ்!''    உத்பா,ஷைபா இருவரும் இணைவைப்பவர்கள்தாம். எனினும் அவர்கள் அந்த நேரத்தில் அஹ்மது நபியவர்களின் நிலை கண்டு இறங்கி  அவர்களுக்கு அங்கே இடமளித்தார்கள். தங்களது கிருத்துவ அடிமை அதாஸை அழைத்து ஒரு தட்டில் முந்திரிக்கொத்தை எடுத்து வைத்து அதோ இருக்கிறாறே அவரிடம் கொண்டு போய் கொடு என பணித்தார்கள்.அதையேற்று அவ்வாறே முந்திரிக்கொத்தை ஒரு தட்டில் கொண்டு போய் ஏந்தல் நபிக்கு முன்பு வைத்து உண்ணுமாறு வேண்டி நின்றார். 

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை கையில் எடுத்து பிஸ்மில்லா சொல்லி சாப்பிட்டார்கள்.இதை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அதாஸின் கண்கள் அகலமாக விரிந்தது '' அல்லாஹ் மேல் சத்தியம்.நீங்கள் இப்பொழுது சொன்னீர்களே அதை இந்த வட்டாரத்தில் யாரும் சொல்வதில்லை '' என வியப்பை வெளிபடுத்தியபோது உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன? என நபியவர்கள் திரும்பிக்கேட்டார்கள்.நான் கிருத்துவன் எனது ஊர் '' நீனுவா '' என அதாஸ் பதிலளித்தார்.அது நல்லவர் யூனுஸ் பின் மத்தாவின் ஊராயிற்றே '' என்று நபியவர்கள் தொடர்ந்து பேசியபோது,அதாஸின் ஆச்சரியம் இன்னும் அதிகமானது. '' என்ன யூனுஸ் பின் மத்தாபை உங்களுக்கு தெரியுமா? அவர் யார்? எனக்கேட்டார் '' அவர் எனது சகோதரர் நபியாக இருந்தார் நானும் நபிதான் '' என்று சுந்தர் நபி (ஸல்) அவர்கள் சொன்னது தான் தாமதம் உடனே அந்தக்கிருத்துவ அடிமை அல்லாஹ்வுடைய தூதருக்கு முன்பு பணிந்து சர்தார் நபியின் தலை,கை,காலை யெல்லாம் முத்தமிட ஆரம்பித்துவிட்டார்.இந்தக் காட்சியை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த உத்பாவும்,ஷைபாவும் இந்தச்செயலுக்காக அதாஸை கண்டித்தபோது; ''எனது எஜமானரே! இந்த பூமியில் இதை விட சிறந்த செயல் வேறெதுவும் இல்லை.இந்த மனிதர் நபியாக இருந்தால் ம்ட்டுமே தெரியக்கூடிய செய்திகளை என்னிடம் கூறினார் என்றார். ( இப்னு ஹிஷாம் 2 ; 30 )

இந்தப் பயணத்தில்; அல்லாஹ்வுடைய தூதருக்கு பலதரப்பட்ட மக்களைச் சந்தித்ததில், மூன்று தனித்தனி அனுபவம் கிடைத்தது.

-- ஒருவர் நபியின் மீது கல் எரிந்தார்.

-- இன்னொருவர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார்.

-- மூன்றாமவர் அவர்களின் நபித்துவத்தை ஒப்புக்கொண்டார்.

நாயகத்தின் இந்த நிகழ்வில் நானிலத்திற்கு பெரிய பாடம் இருக்கிறது.இந்த வையகத்தில் வழிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.இங்கே ஒரு பக்கம் வெட்ட வெளி மைதானம்,பொட்டல் காடு இருக்கிறது என்றால், மறுபுரம் நிழல் தரும் மரங்களைக்கொண்ட தோப்பும் இங்கே இருக்கத்தான் செய்கிறது.உலக வாழ்க்கையில்,சிலபேரிடமிருந்து கசப்பான அனுபவம் கிடைத்தால் அதற்காக மனிதன் நிராசை அடையவேண்டியதில்லை.அவன் சத்தியத்தின் மீது இருக்கும் பட்சத்தில் எதிர் மறையான உணர்விலிருந்து அவநம்பிகையிலிருந்து அவன் தன்னை தற்காத்துக்கொண்டால் அவனுக்கு இறை உதவி உறுதியாக கிடைக்கும்.அவனை ஏற்காதவர்கள் சிலர் இருந்தாலும்,நம்பிக்கையுடன் முயற்ச்சியைத் தொடர்ந்தால் ஏற்றுக்கொள்கிற பலர் வருவார்கள்.இந்த யாத்திரையிலிருந்து மக்காவுக்கு திரும்பிச்செல்லும்போது '' மக்காமே நக்லா '' என்னும் இடத்தில் இரவு தங்கினார்கள்.அங்கே இரவின் கடைசி பகுதியில் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபட்டார்கள்.அப்போது யமனிலுள்ள நஸிபைன் பகுதி ஜின்னுகளின் ஒரு கூட்டம் அவிடம் வந்து திரு நபி (ஸல்) அவர்களிடமிருந்து திருக்குர்ஆனை செவிமடுத்து,அவர்களை விசுவாசம் கொண்டு திரும்பியது.
( 46 ; 29,30,31,32, மற்றும் ஜின் அத்தியாயம் )

நீங்கள் ஓதும் வேதத்தை -- மனிதர்கள் கேட்கவில்லையா? '' ஜின்களை அனுப்புவோம் ( 46 ; 29 )
அவர்கள் கேட்பார்கள் '' ஆகவே சளைத்துவிடவேண்டாம்.தளர்ந்துவிடவேண்டாம்.மண்ணுலகம் என்ன விண்ணுலகமே உங்களை ஏற்கத் தயாராக இருக்கிறது என்பதைக்காட்ட விண்னேற்றப் பயணத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள காட்சிகள் வரவேற்புகள் கண்டு அசர வைத்தான்.எனவே சளைத்துவிடவேண்டாம்.

வெற்றியாளர் என்றும் சளைப்பதில்லை.

சளைப்பவர் என்றும் வெற்றி பெறுவதில்லை.

சடையாமல் முயற்சியைத் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.பேரறிஞர் பெர்னாட்சாவிடம் ஒருவர் வந்து '' நான் பத்து முயற்சி செய்தால் ஒன்று தான் கைகூடுகின்றது பத்தும் பலன் தரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் '' என்று கேட்டபோது ''நீ நூறு முயற்சிகள் செய்.பத்தும் பலன் தரும் '' என்றார் '' என்னைப்போல் அச்சுறுத்தப்பட்டவர் யாருமில்லை.என்னைப் போல் துன்புறுத்தப்பட்டவரும் யாருமில்லை.'' ( நபிமொழி)

நாயகம் ( ஸல்) அவர்களைப் போல வெற்றி பெற்றவர்களும் யாருமில்லை.என்ன காரணம் நம்பிக்கையோடு,முன்னெடுத்து வைத்த முழு முயற்சிகள். '' மனிதனின் முயற்சியின் அளவே அவனுக்குப் பிரதிபலன் கிட்டுகிறது '' ( அல்குர்ஆன் 53 ; 39 )

நெருப்புக்குன்றம் இப்றாஹீம் நபிக்கு பூஞ்சோலையாக மாறியது ''  ( 21 ; 69 ) அப்படியென்றால் பொசுக்கும் தீயிலும் இருக்கிறது பசுமையான பூஞ்சோலை.பாலைவனத்திலும் உண்டு சோலைவனம்.குளுமையான வாழ்க்கை வேண்டுமா தீயில் ( கடுந்துயரத்திலும் விடாப்படியான முயற்சியில் )இறங்கவேண்டும்.நெருப்பும் பூஞ்சோலைக்கான ஒரு வழியே.

'' அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா '' (அல்குர்ஆன் 4 ;97 )

                                                என்றும் தங்களன்புள்ள.



மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி.
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, April 17, 2013

நெருப்பில்லாமல் புகையாது !!!




இப்பிரபஞ்சம் இறைவனாம் அல்லாஹ்வுடைய ஆற்றலின் அருள் வெளிப்பாடு.அவனை அறிய உதவும் ஓர் அற்புதமான அறிவியல் வாய்ப்பாடு.வித்தில் ஆலமரம் மறைந்துள்ளது.அகிலத்தில் அவன் மறைந்துள்ளான்.அவனை அறிந்துகொள்ள இரண்டு வழிகள்.ஒன்று  ஞாலத்தை அறிந்து மூலத்தை அறிய முற்படுவது.இது விஞ்ஞான வழி.புகையைப்பார்த்து நெருப்பைப் புரிவது மூலத்தின் மூலமானவனை அறிந்துகொள்வது, விஞ்ஞான வழி மெஞ்ஞானம்.முடிவான விஞ்ஞானம்.

இரண்டாவது வழி, மூலத்தைப்பார்த்து ஞாலத்தை அறிவது.இது முதல் நிலை மெஞ்ஞானம்.அதாவது மெஞ்ஞான வழி  விஞ்ஞானம்.மூலத்தைக்கொண்டு மூலத்தை அறிவது இது இரண்டாம் நிலை.முடிவான மெஞ்ஞானம்.மகான் தின்னூன் மிஸ்ரியிடம் எதைக்கொண்டு உங்களிறைவனை அறிந்து கொண்டீர்கள்.எனக்கேடகப்பட்டபோது.'' எனதிறைவனைக்கொண்டு எனது இறைவனை அறிந்துகொண்டேன்.எனதிறைவன் மட்டும் இல்லையெனில் நான் எனது இறைவனை அறிந்திருக்கமாட்டேன்.'' என்றார்கள்.இது மெஞ்ஞான வழி மெஞ்ஞானம்.

மிஸ்ரியின் இந்தக் கூற்றுக்கு இருபொருள்கள்.சுருட்டி மடக்கினேன் சரகுக்காக. 
( சரகு என்றால் ஷரிஅத் என்றொரு அர்த்தம் இருப்பதைப் போன்று குரு என்றொரு பொருளுமுண்டு) 
நாம் இப்போது இங்கே பார்க்கப்போவது விஞ்ஞான வழி மெஞ்ஞானத்தை,நெருப்பில்லாமல் புகையாது.மின்சாரமில்லாமல் பல்பு எரியாது.கர்த்தா இல்லாமல் எந்தக்காரியமும் நடக்காது.என்றால்,படைத்தவனின்றி இப்பிரபஞ்சமும் பிறந்திருக்காது.இது பாலர் பாடம்.ஞானத்திற்கு புரிதல் நிறைந்த புறப்பார்வையும் ஆனந்தமான அகப்பார்வையும் அவசியம் எந்தப்பார்வையும் பயனுள்ளதாக,ஆக விழிப்புணர்வு தேவை.நாம் நிறைய பார்க்கிறோம் அலட்சியமாக.அதனால் காட்சிகள் நம்மை கடந்து சென்றுவிடுகிறதுகவனப்படுத்தப்படாமல்.

சிந்தனையை சற்றே ஆழப்பதித்தால் புதைந்திருக்கும் பல புதிய விசயம் இதய வானில் உதயமாகும்.

நியுட்டனுக்கு முன்பும் ஆப்பிள் கீழே விழுந்திருக்கிறது.ஆனால் யாருக்கும் தட்டாத பொறி நியுட்டனுக்கு மட்டும் தட்டி புவியீர்ப்பு விசை வெளிச்சத்திற்கு வந்தது. காட்சியை அவன் கவனப்படுத்தியதுதான் காரணம்.அன்றாடம் எல்லோர் வீட்டிலும் அடுப்பில் உலைச்சட்டியின் மூடி எகிறி எகிறி குதிக்கத்தான் செய்கிறது.ஆனால் சுரங்கத்தொழிலாளியான ஜார்ஜ் ஸ்டீவன்ஸன் மட்டும் அதைக் கவனித்துப் பார்த்திருக்காவிட்டால் '' நீராவிச்சக்தி '' நீராவியாக மறைந்து தெரியாமலேயே போயிருக்கும்.ஒரு அரேபிய கிராமவாசி பாலைவனத்தில் பயணம் செய்து ரொம்ப தூரம் சென்றுவிட்டார்.இவ்வளவு தூரம் பாலையில் வேறுயாரும் உள்ளேறி வந்திருக்கமாட்டார் என்று இறுமாப்பு கொண்டார்.கொஞ்ச தூரத்தில் அவருடைய காட்சியில் ஒட்டகப் புளுக்கையும், மனிதனின் காலடி தடமும் தென்பட்டது உடனே,தனக்கு முன்,இந்த இடத்தை ஒருவர் கடந்து சென்றுள்ளார் என்று அவருடைய முகம் மலர்ந்தது.

அவருடைய அகமோ,இதையும் தாண்டி,'' இந்தப்புழுக்கை ஒட்டகையின் மீதும் கால்தடம் மனித வருகையின் மீதும் அறிவிக்கும் போது,இந்த வின்மீன்கள் நிறைந்த நீலவானம் இந்த பரந்த பூமி,அலை அடிக்கும் கடல் எல்லாம் அகிலத்தை ஆக்கியோனாம் அல்லாஹ்வை அறிவிக்காதா?.என வெளிச்சமாகி வியப்படைந்தது.வழிப்போக்கன் விழிப்படைந்தான்.

 ''ஏக இறையின் எடுத்துக்காட்டாக எதைக்கூறுவீர்கள்? என இமாம் ஷாஃபியிடம் வினவப்பட்டதற்கு '' மல்பரி --
( Mulberry ) பழத்தின் இலை '' எனக்கூறினார். இதன் சுவை நிறம் மணம் குணம் எல்லாம் ஒன்று ஆனால் இதை ஆடு சாப்பிட்டால் புளுக்கைப் போடுகிறது.மான் சாப்பிட்டால் கஸ்தூரி வருகிறது.பட்டுப்பூச்சி புசித்தால் பட்டையும்.தேனி உறிஞ்சி தேனையும் தருகிறது என்றால் இதை இப்படி பலவாறு ஆக்கியவன் யார்? ஒரே தன்மையுடைய இந்த நிலையிலிருந்து வெவ்வேறான வஸ்துக்களைப் படைத்தவன் ஏகனாம் அல்லாஹ் இல்லையா? இலைகளின் இருப்பு நமக்குச் சேதாரமாகத் தெரிகிறது.இமாமுக்கு இறை இருப்பிற்கான ஆதாரமாக இருக்கிறது, 

'' அல்லாஹ்வின் உள்ளமையை உங்களுக்கு உணர்த்தியது எது? '' என இமாம் இப்னு ஹன்பலிடம் கேட்கப்பட்ட போது, '' பளபளப்பான ஒரு வெள்ளை மாளிகை.சிறு துவாரங்கூட இல்லாதளவு முழுமையாக மூடப்பட்டுள்ளது.அதனுள் மழு மழுவென ஒரு மஞ்சள் மாளிகை.இதன் சுவர் உடைந்து சிதறுகிறது.உள்ளேயிருந்து ஒரு உயிருள்ள ஜீவன் வெளிவருகிறது.அது பார்க்கிறது.கேட்கிறது. என்ன இன்னும் புரியவில்லையா? முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகிறது.இந்த அதிசயம் அல்லாஹ்வை அறிவிக்காதா? என விடையளித்தார். நமக்கு ஆம்லைட்டும்,ஆஃப்வாயிலும் தெரிகிறது ஆனால் இமாமுக்கு இறைவன் தெரிகிறான்.

சிருஷ்டிகளைச் சிந்திக்கவேண்டும் என்றால் பெரிய படைப்புகளைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை சின்னஞ் சிறிய கொசு.ஈ, முதலியவைகளைக்கூட நோக்கினால் போதும்.படைத்தவனைப் பார்த்துவிடலாம். 2.5 மில்லிகிராம் எடைகொண்ட் கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.ஆகச்சின்ன உருவைக்கொண்ட கொசுவில் ஆகப்பெரிய யானையை அல்லாஹ் அடக்கியிருக்கும் அதிசயத்தை என்றாவது பார்த்திருக்கின்றீர்களா? ஆம்!  உற்று நோக்கினால் யானையை கொசுவில் காணலாம்.யானையின் ஒவ்வொரு உறுப்பும் கொசுவினுள்ளும் உள்ளது.கூடுதலாக இரண்டு சிறகுகள் அதிகமாக உள்ளது.உருவிலும் பளுவிலும் பலவீன கொசு நாடாளும் ராஜாவையும் வீராதி வீரனையும் வீழ்த்திவிடுகிறது.பறந்து பறந்து வந்து பயமுறுத்துகிறது.

பயங்கரவாதி சொல்லி வச்சு தாக்குவதைப்போல ரீங்காரம் செய்து கொண்டே அதுவும் வினாடிக்கு 300 முதல் 600 வரை சிறகடித்து வந்து முகத்திற்கு நேராக நின்று ஆட்டம் போடுகிறது.துப்பாக்கியால் இதை சுடமுடியுமா? வாளெடுத்து வெட்டத்தான் முடியுமா ?மழைக்கொட்டும் போதும் உடல் நனையாமல், துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த இந்த ஒரே பூச்சினம் நம் கைகளுக்கும் அகப்படாமல் நமக்கு பூச்சாண்டிகாட்டுகிறது.பெரிசுகளால் இந்த பொடிசுகளை விட்டும் தங்களை தற்காத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

கைக்குள் அடக்கமாகும் சைஸில் இருக்கும் இந்தக் கொசுவின் தும்பிக்கையான,கொடுக்கு எவ்வளவு சிறியது.வளைந்து விடுமளவுக்கு ஒல்லியானது.ஆனால் தடித்த தோலுடைய யானை,எருமையைக் கூட துளைபோட்டு உறிஞ்சுமளவிற்கு விரைப்பானதாக இருப்பது இன்னும் வியப்பைத் தரவில்லையா? '' ஈ க்களின் ஆயுள் 40 நாட்களாகும்.ஈக்களெல்லாம் நரகில்.தேனியைத்தவிர.'' ( நபிமொழி பத்ஹுல் பாரி ஷரஹுல் புகாரி ; 308/10 ) அதாவது ஈக்களைக்கொண்டு நரகவாசிகள் வேதனை செய்யப்படுபவர்.இதை இந்த உலகிலேயே கண்கூடாகக் காணலாம்.சில வாரம் மட்டுமே ஆயுள் கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்றுக் குவிக்கின்றன.சிக்குன் குனியா,மலேரியா போன்ற காய்ச்சல் கொசுக்களின் கொடையாகும்.டெங்கு காய்ச்சலை ஏடிஸ் வகை கொசுதான் பரப்புகிறது.டெங்குவிற்கு மருந்தில்லை.இதில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.இப்படி கொசுக்களின் நரகத்தொல்லை இங்கேயே தொடங்கிவிடுகிறது. '' ஈ '' யை ஏன் அல்லாஹ் படைத்தான்? என ஒரு கலிபா கேட்ட போது.; பெருமைக்கார மன்னனை மட்டம் தட்டுவதற்கு '' என்று சட்டென பதிலளித்தார் இமாம் ஷாஃபி.ஏனெனில் அரசனையும் அசர வைக்கிறது.

'' ஈ '' யின் ஆச்சரியமான ஒரு விஷயம் என்ன வென்றால் அதன் கழிவு,கருப்பு உடையில் வெள்ளையாகவும்,வெள்ளாடையில் கருப்பாகவும் விழுவதாகும்.இவ்வாறு தனது கழிவை வெளியிடுவதிலும் தனது இருப்பை வெளிப்படுத்துகிறது.

இன்னொரு விநோதம் சொல்லவா!,சிங்கம் சக்தி வாய்ந்தது ஆனால் கோழைத்தனமானது. அதனால்தான் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளில் ஒளிந்து வாழ்கிறது.ஈயும் கொசுவும் ஆகப்பலவீனமானது.ஆனால் தைரியமானது.மக்களின் மேல பாய்ந்து வந்து கடிக்கிறது.அல்லாஹ்வின் கிருபை,பலமானதில் பலவீனத்தையும்,பலவீனமானதில் பாயும் தைரியத்தையும் வைத்தான்.இதை மாத்தி கொசுவின் தைரியத்தை சிங்கத்தில் வைத்திருந்தால் நம் கதி என்னவாகும்? அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்!!!...

                                                என்றும் தங்களன்புள்ள.



மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா 
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி.
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Monday, April 8, 2013

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 11 -04-2013 வியாழக்கிழமை ( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1434 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மௌலிது ஷரீஃப்  -21-4-2013 (ஜமாதுல் ஆகிர் பிறை 10-1434 ) ஞாயிற்றுக் கிழமையோடு நிறைவு பெறும்.ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.
அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,முஹம்மது இஸ்ஹாக் பிலாலி,பைஜி,ஹஜ்ரத் ஆகியோரது சீரிய தலைமையில் நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்


வெளியீடு

மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, April 7, 2013

யாஸய்யிதீ ஷைகீ பைத்து






                                             யாஸய்யிதீ ஷைகீ பைத்து


இது  நமது நாயகம் நாகூர் குத்துபு  ஷாஹுல் ஹமீது  வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து

  1. என்தலைவரே! என்குருநாதரே! தலைவர்களுக்கெல்லாம்  தலைவரே! கல்விகளின் புதையலே!அற்புத ஞானக் கலையின் சின்னமே!
  2. சர்வ வல்லமையும், சிறப்பும் வாய்ந்த இறைவனின் திருப்திக்குள்ளானவரே! தலைவர்களுக் கெல்லாம் தலைவரே! அப்துல் காதிரே!
  3. கைசேதப்படுபவர்களுக்கும்,கலங்கிய உள்ளம் உடையவர்களுக்கும்,பாதுகாப்பளிக்கும் அடைக்கலமே! தங்களை நாடி வருபவர்களின் நாட்டத்திற்குப் பிணையேற்று,உடலாலும்,பொருளாலும்,பலஹீன மடைந்தவர்களுக்கு ஒதுங்கும் பீடமே!!
  4. சமுத்திரத்தில் வழி தவறிச் சென்றவர்களுக்கு உதவி புரியும் ரட்சகரே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அப்துல் காதிரே!
  5. தங்களிடமிருந்து எத்தனையோ அற்புதங்கள் பார்ப்பவர்களுக்குத் தென்பட்டன.தங்கள் சமூகத்தில் நடைமுறைக்கு நேரடியாக வழமைக்கு மாற்றமான புதுமைகள் எத்தனையோ வெளிப்பட்டன.
  6. செழிப்பான முகத்தில் சம்பூரண இன்பங்கள் எல்லாம் தங்களுக்கென்றே நிறைவாய் அமைந்துள்ளன என் தலைவரே! குருநாதரே! அப்துல் காதிரே!
  7. சர்வ சக்திகளுமுடைய இறைவனின் திருத் தூதர் (ஸல்) அவர்களின் சந்ததியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் வழித் தோன்றலில் உதித்தவர்கள்.
  8. குருநாதர்களுக் கெல்லாம் உதவி புரிபவர்,பரிபூரணச் சந்திரனின்  ஜோதி, தூய்மை நிறைந்தவரே! அப்துல் காதிரே!
  9. பரிசுத்த உள்ளத்தோடும் தூயசிந்தை கொண்டும் அனைத்தையும் படைத்து அருளுதவி புரியும் இறைவன் பாதையில் தண்டித்தீர்கள்.
  10. மேலும் சிறந்த அமல்களைக் கைக்கொண்டும்,வடித்த கண்ணீர் துளிகளைக் கொண்டும் தண்டித்தீர்கள்.ஒ! இறைநெருக்கத்தைத் தரும் வணக்கங்களைத் தேர்ந்தெடுத்தவரே! அப்துல் காதிரே!
  11. இன்னும் திருமணம் செய்யாமலும் இறையச்சத்தாலும் உலகாசையை இதயத்தால் வெறுக்கும் பற்றற்ற தன்மையாலும் (இறைவழியில் தண்டித்தீர்கள்)
  12. இன்னும் அதிக ஆவலுடன் இறைவனை நேசித்தீர்கள்,உயர்ந்த அந்தஸ்துகளை அடையப் பெற்ற அப்துல் காதிரே!
  13.  தங்களின் சந்நிதானத்தில் எத்தனையோ கண்ணியமிகுந்த மார்க்கஅறிஞர்கள், சிறப்புக்குரியவர்கள்,பெரியோர்கள்,வர்த்தகர்கள் யாவரும் வந்து தரிசிக்கின்றனர்.
  14. கிறிஸ்துவர்கள் இன்னும் நஷ்டமடைந்த பிராமணர்கள் உள்பட ( எத்தனையோ பேர்கள் வருகின்றனர் ) நோய்கள் கஷ்டங்களை நீக்கக்கூடிய அப்துல் காதிரே!
  15. நாகூர் வாழும் எஜமானே! தாங்கள் என் பார்வை தெளிவடையவும்,என் உறுப்புகள்,காதுகள் விஷயத்தில் எனக்கு உதவியாக இருங்கள்.
  16. இன்னும் என் வாழ்வு குறைவின்றி நீடித்த ஆயுளுக்கும், ( உதவியாக இருங்கள் ) பெரும் நன்மையான காரியங்களை ஒன்று திரட்டிய அப்துல் காதிரே!
  17. இம்மை மறுமையின் நெருக்கடிகள் என்னைத் தாக்காமல் பெருமையாளனின்,( அல்லாஹ்வின் ) பெருமித நாளில் ( மஹ்ஷரில் ) எனக்கு ஒதுங்கும் தலமாக ஆகுங்கள்.
  18. உயர்ந்த அந்தஸ்துகளைப் பெற்ற நீங்கள் எனக்கு மறுமைநாளில் தங்கரிய சொத்தாக ஆகிவிடுங்கள் அப்துல் காதிரே!
  19. தங்கரியம் செய்ய நினைப்பவருக்கு எவர்களை நினைவுகூர்வது சொத்தாக அமையுமோ அப்படிப்பட்ட பரிசுத்த நபியின் மீதும்,அவர்களது குடும்பத்தார் மீதும் அளவற்ற அருளாளனான அல்லாஹ் ஸலவாத் எனும் கருணையைப் பொழிந்தருள் வானாக!
  20. இன்னும் அன்னாரின் தோழர்கள் மீதும் மதிப்பிற்குரிய அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும்,மஹானே!அப்துல் காதிரே! நாயகமே! தங்கள் மீதும் இறைவன் கருணைபுரிவானாக! ஆமீன்!

வெளியீடு

மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, April 3, 2013

சந்தோஷம் வெளியே இல்லை!!!





ஆங்கிலேய அறிஞர் ஒருவர் இப்படிக் கூறுவார்; '' நீ, சிறைச்சாலையில் இரும்புக் கம்பிகளுக்கு அப்பாலும் வான்வெளியைப் பார்க்க முடியும்.உனது பாக்கெட்டிலிருந்து பூவை எடுத்து நுகர்ந்து உன்னால் புன்னகைக்க முடியும். உனது வசந்த மாளிகையில் ப்ட்டாடை உடுத்தி பஞ்சுமெத்தையில் புரண்டு ஆத்திரப்பட்வும் ஆவேசம் கொள்ளவும் முடியும்.

உனது வீட்டின் மீது குடும்பத்தின் மீது செல்வத்தின் மீது எரிச்சல் பட்டு எரிந்து எரிந்து விழவும் பொரிந்து தள்ளவும் உன்னால் முடியும்.'' அப்படியென்றால் சந்தோஷம் என்பது காலத்திலோ இடத்திலோ இல்லை. அது உனது அசைக்க முடியாத நம்பிக்கையில் -- இதயத்தில் இருக்கிறது. இதயம் இறைவனின் நோட்டம் விழுமிடம்.உறுதியான ந்ம்பிக்கை அதில் உனக்கு உறைந்து விட்டால் சந்தோஷம் பொங்கிவிடும்.

அது உனது உயிரின் மீதும் ஆத்மாவின் மீதும் நிரம்பி வழிந்து அகிலத்தாரின் மீதும் பிரவாகம் எடுக்கும்.இமாம் இப்னு ஹன்பல் (ரஹ்) பல சோதனைகளுக்கு ம்த்தியிலும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார்.அவரது ஆடை வென்மையாக ஒட்டுப்போடப்பட்டதாக இருந்தது.தனது கையால் அதை தைத்துக்கொள்வார்.அவரிடம் மூன்று களிமண் அறைகள் இருந்தன.அதில் தான் அவர் தங்குவார்.அவரிடம் உணவாக சில காய்ந்த ரொட்டித்துண்டுகளும்,அதை முக்கித் திண்ண ஜைத்தூன் -- ஆலிவ் -- ஆயிலையும் தவிர வேறொன்றும் இருக்கவில்லை.

இமாமின் வரலாற்றை வரைந்தவர்கள் எழுதுவது போல,'' பதினேழு வருடமாக அவர்கள் கிழிந்த தனது ஆடைகளைத்தானே தைத்து,ஒட்டுப்போட்டு,மாதத்தில் ஒரு நாள் இறைச்சி உண்டு, மற்ற பெரும்பாலான நாட்கள் நோன்பு நோற்று,தனது வாழ் நாளெல்லாம் நபிமொழி சேகரிப்பில் உலகின் பல் பாகங்களுக்கு செல்வதும்,வருவதுமாகவே இருந்தார்.ஆனால் அத்தோடு வாழ்வின் வாசத்தை சுவாசிப்பவராக,அன்பாகவும்,அமைதியாகவும்,காலத்தை கழிப்பவராக இருந்து வந்தார்.'' 

ஏனெனில்; கொண்ட கொள்கையில் உறுதியானவராகவும்,இலக்கைக் குறித்து நல்ல தெளிவை பெற்றவராகவும்,இறைவனுக்காக வேலை செய்பவராகவும் அவர் இருந்தது தான் காரணம்.ஆனால் அந்தக்காலத்தில் ம்ட்டுமல்ல இந்தக்காலத்திலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆட்சியாளர்களிடம்,மாட மாளிகைகளும்,கோட கோபுரங்களும்,தங்கமும் வெள்ளி வைடூரியங்களும்,பாதுகாப்பு படைகளும்,ஆயூதங்களும்,கோட்டை கொத்தளங்களும் நில புலன்களும் ஏராளமாக,அவர்கள் ஆசைப்பட்டதெல்லாம் தாராளமாக அவர்களுடன் இருந்தும் அவர்கள் துயரத்தில் தான் வாழ்ந்தார்கள். காரணம் இருப்பதை விட்டு விட்டு இல்லாததை நினைத்து உருகினார்.அதன் கவலையில் கருகினர்.

ஒரு பொருளின் அருமை அது கைக்கு வருவதற்கு முன்பு அல்லது கையை விட்டும் போன பின்பு தான் நமக்கு தெரிகிறது.இருக்கும் போது தெரிவதில்லை.அதனால் சந்தோஷம் நமது கையை விட்டும் நழுவி விடுகிறது.ஒரு அரசன் வாய்வுத்தொல்லையால் அவதிப்பட்டான்.எல்லாவித சிகிச்சைகள் செய்து பார்த்தும் வாய்வு வெளியேறாமல் சிரமப்பட்டான்.நிலைமை முற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில்,'' யார் எனக்கு சிகிச்சை அளித்து இந்த வியாதியைக் குணப்படுத்துவாரே அவருக்கு இந்த நாட்டையே பரிசாகக் கொடுக்கிறேன் '' என அறிவிக்கச்சொன்னான்.அன்றாடம் சுகமாய் பிரியும் வாய்வைப்பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை.அது பிரியாமல் அவதிப்படும் போதுதான் அதன் அருமை புரிகிறது.அதன் மதிப்பு ஒரு நாட்டையே விலை பேசப்படும் அளவுக்கு எகிறும்போது தான் ஆரோக்கியத்தின் பெருமை அதனால கிடைத்து வந்த சந்தோஷம் உணரப்படுகிறது.

அரசரின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு ஒரு இறைநேசர் அங்கு வந்து சேர்ந்தார் அரசரின் வயிற்றில் கை வைத்து ஓதிப்பார்த்தார்.அப்போது அவனிலிருந்து நாத்தக்காத்து வெளியேறியது.அந்த நிமிடமே அரசன் சுகம் பெற்றான்.இந்த சுகம் இந்த நோய் வருவதற்கு முன்பும் அவனுக்கு இருந்தது.ஆனால் அவன் உணராமல் இருந்தான்.நிழலின் அருமை வெயிலில்தானே தெரியும்.அரசன் சொன்னபடி தனது நாட்டை அவருக்கு பரிசாக கொடுக்க முன்வந்தான்.ஆனால் அதை அந்த மகான் ஏற்க மறுத்துவிட்டார்.இந்த நாடு -- இதன் விலை நாத்தக்காத்து -- எனக்குத் தேவையில்லை.எனினும் நீ ஆணவம் கொண்ட ஆட்சியின் அதிகபட்ச விலை இதுதான் என உபதேசித்தார்.அல்லாஹ் நமக்கு இது மாதிரி கணக்கில் அடங்காத சுகத்தை தந்திருக்கின்றான்.அதில் ஒரு சுகத்தின் விலை ஒட்டுமொத்த நாடே என்றால் அவனது மற்ற பாக்கியங்களுக்கு என்ன விலையாக இருக்கும்.இப்படி எண்ணில் அடங்கா -- சுகங்கள் சந்தோஷங்கள் நம்மில் கொட்டிக்கிடக்கின்றன.நாம் அவைகளை கவனிப்பதே இல்லை.

உலகத்தையே செலவு செய்தாலும் அவன் நாடவில்லையெனில் அவன் கொடுத்த ஒரு சுகத்தையும் திரும்ப பெறமுடியாது.மோதிரத்தை தொலைத்த இடத்தில் தேடாமல் வெளிச்சமிருக்கும் இடத்தில் தேடுவது முல்லாவின் கதையல்ல.நம்முடைய கதையும்தான்.இதில் விழித்துக் கொண்டவர்கள் பிழைத்துக்கொண்டார்கள்.இதில் பல்கு நாட்டுப் பேரரசர் இப்ராஹீம் பின் அத்ஹமும் ஒருவர்.ஒருநாள் தனது மாளிகையின் தாழ்வாரத்தில் ஒரு பகிர் -- சாது அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.அப்போது அவர் கண்ட காட்சி அவரது வாழ்வைப் புரட்டிப் போடப்படுகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.அந்த பகிரின் கையில் ஒரு காய்ந்த ரொட்டி.அதைத் தண்ணீரில் நனைத்து உப்பைத்தொட்டு உண்ணுகிறார்.பின்னர் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு இறைவனைப் புகழ்ந்து துதித்துவிட்டு கீழே தரையில் தலையை வைத்து உறங்கிப்போனார்.

ஒரு வசதியும் இல்லாத இந்த சாது சாதாரண உணவை சந்தோஷமாக சாப்பிட்டு,நிம்மதியாக தூங்குவது,அரசரின் உள்ளுணர்வைத்தட்டி எழுப்பியிருக்க வேண்டும்.தனது சொகுசு வாழ்க்கையில் கிடைக்காத,இந்த சந்தோஷம் அவருக்கு ஒரு வகை பொறாமையுணர்ச்சியைத் தூண்டியிருக்கவேண்டும்.'' அந்த ஆள் எழுந்ததும் உடன் என்னிடம் அழைத்து வாருங்கள்.'' என உத்தரவிட்டார்.அவ்விதம் அந்த சாது அவர்முன் கொண்டுவரப் பட்டபோது,பசியுடன் இருந்த உனக்கு ஒரு ரொட்டியைச்சாப்பிட்டதும் வயிறு நிரம்பிவிட்டதா.?'' எனவினவினார்.அதற்கு அவர்,''ஆம் அரசே'' என்றார்.தண்ணீர் குடித்தாய் தாகம் தீர்ந்ததா? ஆம்! எந்த கவலையும்,துக்கமுமின்றி சந்தோஷமாக படுத்தாய்.சுகமாக தூங்கினாயா? ஆம் அரசே! வினா விடை முடிந்தது.அரசராக இருந்தும் பெறமுடியாத இந்த சுகத்தை இந்த சாதுவால் மட்டும் எப்படி பெறமுடிந்தது?.அப்படியென்றால் சந்தோஷம் எனக்கு வெளியே --இந்த ஆடம்பர அரச வாழ்வில் இல்லைதானே என சிந்தித்தார்.முடிவில் அரசவையைத் துறந்து நாட்டை விட்டும் வெளியேறினார்.

இறைஞானமுதைப் பருகி பரவசமடைந்த போது இப்படிக்கூறினாராம்;'' நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரின்ப வாழ்க்கையை அரசர்கள் மட்டும் அறிந்து கொண்டால் வாட்களைக் கொண்டு எங்களிடம் யுத்தம் செய்ய வருவர்.'' மனது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு ரணத்தை அதிகப்படுத்திக்கொள்கிறது.இப்படி புன்னாகும் மனதுக்கு மருந்தாக,மாநபி (ஸல்) மொழிந்த மணிமொழிகள்; ''உங்களில் ஒருவர் தன்னை விட கீழுள்ளவரைப் பார்க்கட்டும்.மேலுள்ளவரைப் பார்க்கவேண்டாம்.இல்லையெனில் தன்னிடமுள்ள பாக்கியத்தை துர்பாக்கியமாக கருத நேரும்.'' (புகாரி ;6490) இந்த நபிமொழி சந்தோஷத்திற்கான சூத்திரத்தைச் சொல்லித் தருகிறது.மேலே பார்த்துப் போனால் விபத்து சம்பவிக்கும் கீழே பார்த்துப் போனால் தான் பயணம் சுகமாகும்.அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!!

                                            என்றும் தங்களன்புள்ள.



மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.