سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ ۥ مِنۡ ءَايَـٰتِنَآۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் -17-1 )
மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள். இதனால் மிஃராஜ் பற்றி சொல்ல வந்த அல்லாஹ் ஆச்சரியமானதைக்குறிக்கும் சுப்ஹானவைக் கொண்டு தொடங்குகின்றான்.
நாம் வாழும் இப்பூ பாகத்திலிருந்து சூரியன் 9 கோடியே 30 லட்சம் மைல் தொலைவில் உள்ளது.அங்கிருந்து நமது பூமிக்கு சூரிய ஒளி 8 நிமிடத்தில் வந்து சேருகிறது.ஒளியின் வேகம் ஒரு செகண்டுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 282 மைல் தூரமாகும்.இந்த ஒளி வேகத்தில் நமக்கு அருகிலிருக்கும் நட்சத்திரத்தின் ஒளி பூமிக்கு வர 4 1/2 (நாளரை) வருடமாகிறது.மணிக்கு பத்தாயிரம் மைல் வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கெட் அருகிலிருக்கும் அந்த நட்சத்திரம் வரை போய் சேர எழுபதாயிரம் வருடம் வரை ஆகும். இந்த நட்சத்திரத்தை மட்டுமல்ல தூரமாக இருக்கும் எல்லா நட்சத்திரங்களையும்,ஏழு வானங்களையும் கடந்து சித்ரத்துல் முன்தஹாவை அடைந்து அங்கிருந்து மேலும் முன்னேறி அல்லாஹ்வை அடைந்து கண்டு அலவலாவி வந்த நமது நாயகம் (ஸல்) அவர்களின் இந்த விண்ணேற்றப் பயணம் ஒரு அதிசயம் இல்லாமல் வேறு என்ன? இவ்வளவு தூரத்தில் சென்று இவ்வளவு உயரத்தில் உயர்ந்து நரகம் கண்டு,சொர்க்கம் சுற்றிப் பார்த்து முன்னதாக,பைத்துல் முகத்தஸிலும்,வானத்திலும்,நபிமார்களை,மலக்குமார்களை கண்டு,அவர்களுடன் உரையாடி,அவர்களுக்கு இமாமத் செய்து தொழ வைத்து,நிறைவாக இறை தரிசனம் பெற்று திரும்பிய இந்த சம்பவம் நீண்ட நெடிய நேரமோ,மாதக்கணக்கில,வருடக்கணக்கிலோ நடந்த நிகழ்வல்ல.ஒரு இரவின் கொஞ்ச நேரத்தில் நடந்ததாக '' லைலன் '' என்ற பதப்பிரயோகம் மூலம் குர்ஆன் தெளிவு படுத்துகிறது. '' லைலன் '' நக்கிரவாகும். ( பொதுப் பெயர்ச் சொல்லாகும் ) இது இரவின் சொற்ப சமையம் என்னும் பொருளை இங்கே தருகிறது.
படுத்த படுக்கையின் சூடு கூட ஆறவில்லை.ஒழுச்செய்த தண்ணீரின் சலனம் கூட அடங்கவில்லை.கதவின் தாழ்பாலின் அசைவுகள் கூட நிற்கவில்லை.அவ்வளவு சீக்கிரம் நடந்து முடிந்த சம்பவம் என்று ஹதீஸ் விவரிக்கிறது. '' ஒளியின் வேகத்தில் பயணிக்கிறவர்களுக்கு காலம் என்பது இயங்குவதில்லை '' என்று 19- ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னான்.உதாரணத்திற்கு -- ஒரு நண்பருக்கு 35 வயது.அவருடைய மனைவிக்கு 30 வயது.அவர் மட்டும் தனியே ஒளிவேகத்தில் பயணிக்கும் ஊர்தியில் கிளம்பிப் போகிறார்.ஒரே ஒரு நாள் மட்டும் ஒளியின் வேகத்தில்,விண்வெளியில் பயணிக்கிறார்.மறு நாள் ஊர் திரும்புகிறார் நண்பர்.அப்போது அவரை வரவேற்க வந்த மனைவிக்கு வயது 90.ஆனால் நண்பருக்கோ 35 வயதிலிருந்து ஒரே ஒரு நாள் மட்டும் கூடியிருக்கிறது.ஒளியின் வேகத்தில் பயணிக்கிறவர்களுக்கு இது மாதிரியான வினோதங்கள் சகஜம்.
ஹளரத் உம்மு ஹானி (ரலி) அவர்களின் வீட்டுக்கூரையைப் பிய்த்துக்கொண்டு இறங்கிய ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கே படுத்திருந்த பெருமானாரை எழுப்பி அழைத்துக்கொண்டு கஃபாவிற்கு வருகிறார்கள்.அங்கே நபி (ஸல்) அவர்களின் நெஞ்சை பிளந்து இதயத்தை தனியாக எடுத்து சொர்க்கத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த தங்க கிண்ணத்தில் வைத்து ஸம் ஸம் நீரால் கழுவினார்கள்.இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு இந்த ஹதீஸ் நல்ல முன்னுதாரணம்.சொர்க்கத்து நீரான மாவுல் கவ்ஸரையோ,தஸ்னிம் ஓடைத் தண்ணீரையோ ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்து கழுவாமல் ஸம் ஸம் நீரால் கழுவியது ஸம் ஸமின் சிறப்பை பறைசாட்ட போதுமான சான்று.கழுவிய நீரை ஸம் ஸம் கிணற்றில் ஊற்றப்பட்டதால் ஸம் ஸம் கிணறும் வற்றாமல் வளம் குறையாமல் குடிக்கும்போது நாடிய நாட்டத்தை நிறைவேற்றும் அற்புத ஜலமாக நோயைக்குணப்படுத்தும் புனித தீர்த்தமாக இருக்கிறது.இதன் மூலம் ஸம் ஸம் தன்னைக் கழுவி சுத்தப்படுத்திக்கொண்டது.
மிஃராஜ் பயணத்திற்கு முன்பு பெருமானார் (ஸல்) அவர்களின் இதயம் ஏன் கழுவப்பட்டது ? விண்வெளி வீரர்களைப் பார்த்தால் அவர்கள் தங்களது விண்வெளி பயணத்திற்கென பிரத்யேக விஷேச ஆடை அணிந்திருப்பார்கள். அதன் எடை மட்டும் 200 பவுண்ட் இருக்கும்.சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தன்னுடன் சேர்த்து பொறுத்தியிருப்பர்.காற்று மண்டலத்தை தாண்டி நெருப்பு மண்டலத்தை கடந்து சென்ற நாயகம் ( ஸல் ) அவர்கள் இது மாதிரியான எந்த ஒரு ஆடையையும்,சுவாசிப்பதற்கு தேவையான எந்த ஆக்ஸிஜன் சிலிண்டரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளவில்லை.விண்வெளி ஓடத்தில் வீரர்களுக்கு என்று விஷேசமான இருக்கைகள் இருக்கும்.வெளியில் ஏற்படும் எந்த குலுக்கத்திற்கும் அவர்கள் குலுங்கமாட்டார்கள்.கலத்தை உந்திச் செலுத்தும் ராக்கெட் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சென்ற பிறகு அதன் ஒரு பகுதி கழற்றி விடப்படும்.அப்போது ஏற்படும் சப்தம் சாதாரணமாக யாரும் கேட்டால் இறந்து விடுவர்.இதுமாதிரியான எந்தப் பாதிப்பும்,விண்வெளிவீரருக்கு வராத விதத்தில் கலத்தின் உள்வடிவம் கவர் செய்யப்பட்டிருக்கும். ஆனால் நபியவர்கள் சென்ற புராக் வாகனம் வெளியே கவர் செய்யப்படாத ஒரு வெளிப்புற வாகனம்.இவ்வளவு வேகத்தில் காற்றோடு உரசிக்கொண்டு சென்றபோதும்,நெருப்பு மண்டலத்தை தாண்டிச் சென்ற போதும் நெருப்பு பிடிக்கவில்லை.காற்றழுதத் தாழ்வு மண்டலத்தை தாண்டி சென்ற சர்தார் நபி (ஸல்) மூச்சு விடுவதில் எந்த சிரமமும் படவில்லை.
ஏனென்றால்,நபியின் இதயம் கழுவப்பட்டது.அதாவது இதயம் எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும்,எல்லா சமையத்திலும் இயங்குவதற்கு தோதுவாக இதயமே மாற்றப்பட்டது.ஆக்ஸிஜன் இல்லாமலும் சுவாசிப்பதற்கு தோதுவாக,வசதியாக அவர்களின் இதயம் ஸம் ஸமில் கழுவி மாற்றப்பட்டது.நம்மைப்போல மூச்சுவிடுவதற்கு அவர்களுக்கு ஆக்ஸிஜன் அவசியம் இல்லை.அது இருந்தாலும் இல்லாவிட்டாலும்,அவர்களால் சுவாசிக்கமுடியும்.நெருப்பைக் கடந்து போனாலும் நெருப்பு அவர்களைத் தீண்டாது.நபி இப்ராஹீம் (அலை) அவர்களை தீயில் போட்டபோது அது குளிர்ந்த பூஞ்சோலையாக மாற்றப்பட்டது.என்று குர்ஆன் ( 21 ; 69 ) கூறுகிறது.ஆனால் நமது நாயகம் (ஸல்) அவர்களுக்கு நெருப்பு பூஞ்சோலையாக மாறவில்லை மாறவேண்டிய அவசியமும் இல்லை.நெருப்பு நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தாலும்,அதிலும் அவர்களின் இதயம் இயங்கும்.சுகமாக சுவாசிப்பார்கள்.அவர்கள் உடல் எரிந்து போகாது ஈமானாலும்,ஞானத்தாலும் நிரப்பப்பட்டு அந்த இதயம் திரும்ப நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் வைத்து தைக்கப்பட்டது.'' என்று புஹாரி ஷரிபு உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்கள் விவரிக்கிறது.சக்தி வாய்ந்த ஈமான் ஞானத்தால் நிரப்பப்பட்ட நெஞ்சம் அமைந்த அந்த புனிதமான உடலை நெருப்பு தொடாது என்பது மட்டுமல்ல அவர்களின் உடல் பட்ட எந்த வஸ்துவையும் கூட தீ தீண்டாது.தீண்டியதும் இல்லை.
பத்து வருடம் பணிவிடை செய்த நபித்தோழர் ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்களிடம் ஒரு சுப்ரா --
(உணவு விரிப்பு )ஒன்று இருக்கிறது.அது அழுக்கானால் தண்ணீரால் கழுவாமல் அதை தீயில் எடுத்துப் போட்டு விடுவார்கள். தீ அந்த சுப்ராவைச் சுடாமல் சுத்தப்படுத்தி பளபளப்பாக்கும் என்ற ஹதீஸை மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) தனது மஸ்னவி ஷரீஃபில் பாடுவார்கள்.சுப்ராவை ஏன் நெருப்புச் சுடவில்லை? என்றால் அது அண்ணலார் (ஸல்)அவர்கள் பயன்படுத்தியது அவர்களின் புனித கரம் அதில் பட்டிருப்பதால் தீயின் ஜூவாலை அதை எரிக்கவில்லை என்று மௌலானா ரூமி தமது மஷ்னவி ஷரீஃபின் பாடலை முடிப்பார்கள்.ஒரு முறை அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் தனது கையால் மாவு பிசைந்து அதைத் தட்டி பரத்தி ரொட்டிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.தனது அன்பு மகளுக்கு உதவலாம் என்று தானும் தனது கரத்தால் மாவைத் தட்டி நபியவர்கள் கொடுக்க அதை வாங்கி அடுப்பில் வைத்தார்கள் பாத்திமா (ரலி) அவர்கள்.ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் மாவு வேகாமல் இருந்தது.அதை திரும்ப திரும்ப திருப்பி திருப்பி அடுப்பில் வைத்தும் அது வேகவே இல்லை.தான் தட்டிய மாவு வெந்து ரொட்டியானது ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டிய மாவு வேகவில்லையே என கவலையுடன்.கண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கனிவாக கூறியபோது மகளே! கவலை வேண்டாம்.எனது கரம் பட்டது பற்றி எரியாது என்பது உனக்குத் தெரியாதா? நான் தட்டி கொடுத்த மாவை நெருப்பு சுட்டால்தானே ரொட்டி வேகும்.நெருப்பே சுடவில்லையெனில் எப்படி வேகும் எனக்கேட்டார்கள்.நாயகம் (ஸல்)அவர்கள் இந்த விண்வெளிப் பயணத்தில் காற்று மண்டலத்தைத் தாண்டி வெட்ட வெளிக்குச் செல்கிறபோதும், அவ்வாறே திரும்பும் போதும், வெட்ட வெளியிலிருந்து காற்று மண்டலத்தில் பிரவேசிக்கும் போதும் ஏற்படும் உராய்வினால், உஸ்னம் அதிகமாகி நெருப்புப்பிடிக்கும். ஆனால் நாயகத் திருமேனியை நெருப்புத் தொடவில்லை.என்பதால்தான் இந்த மிஃராஜ் பயணம் இந்த வகையிலும் அதிசயமாக இருக்கிறது.
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment