Thursday, February 28, 2013

அவசரம் ஆபத்தானது !!




அவசரம் என்பது ஒரு பொருளை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பு தேடுவதும் அதைப்பெற முயற்சிப்பதுமாகும். விளங்காமல் பேசுவது புரியாமல் பதிலளிப்பது அனுபவப்படுவதற்கு முன்பு ஒரு ஆளைப் புகழ்வது புகழ்ந்தபின் பழிப்பது. இதுவெல்லாம் அவசரத்தால் விளையும்  அபத்தங்களாகும்.

"நிதானம் அல்லாஹ்வினால் வருவது. அவசரம் ஷைத்தானால் விளைவது(நபி மொழி- முஸ்னது அபீயஃலா. 4256)
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு. அதனால் தான்  "நீதிபதி கோபத்தில் இருக்கும் போது தீர்ப்ப‍ளிக்க வேண்டாம்" எனக்கூறினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) (புகாரி7158 - முஸ்லிம்1717)

பதறாத காரியம் சிதறாது. எனவே பதறினால் எந்தக் காரியமும் சிதறிவிடும்''கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்''எனவே எதைப் பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசவோ வெடுக் வெடுக் என அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதோ கூடாது.
'' நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால், (அதன் உன்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரனை செய்து கொள்ளுங்கள் (இல்லையெனில் அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கும் நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர்,நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும்'' (அல்குர் ஆன் . 49;06)

அவசரப்பட்டு மனிதன் பல காரியங்களை செய்து விடுகிறான் செய்து முடித்தபின் அடடா காரியத்தை கெடுத்துவிட்டோமேஎன கைபிசைந்து நிற்கிறான் ஆபத்தான அவசரத்தின் பொல்லாத விசயம் சாபமிடுவதாகும். கோபத்தில் தன் மனைவி மக்கள் மற்றும் உடமைகள் மீதும் கேடான துஆவை செய்து விடுகிறான்.
'' மனிதன் நன்மையைக் கோரி பிராத்திப்பது போலவே தீமையைக் கோரியும் பிராத்திக்கிறான் ஏனெனில் மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்'' (17 ; 11)
'' உங்களுக்கு எதிராகஉங்கள் பிள்ளைகள்பொருட்களுக்கு எதிராக சாபமிட்டு விடாதீர்கள். அல்லாஹ் துஆவை ஏற்றுக்கொள்ளும் சமயமாக அது இருந்துவிட்டால் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட்டுவிடும்'' (நபிமொழி. முஸ்லிம்;3009) நாம் பார்க்கிறோம் அதிகமான வேதனைகள் வியாதிகள்பிள்ளைகளின் சீரழிவும் நமது கெட்ட துஆவினால்தான் சம்பவிக்கின்றன. ஆனால் இதை அதிகமாக நாம் விளங்கிக் கொள்வதில்லை. விழித்துக் கொள்வோர் உண்டா?

அவ்வாறே நாம் செய்த பிரார்த்தனைகள் உடனடியாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அவசரப்படுகிறோம்இதுவே அந்த பிரார்த்தனை அங்கிகரிக்கப்படாமல் போவதற்கு காரணமாகி விடுகிறது.
''உங்கள் பிரார்த்தனை அவசரப்படாதவரை - நானும் எனது இறைவனிடம் (பலமுறை) கேட்டுவிட்டேன் ஆனால் அவன் அதை ஏற்காமலே இருக்கிறான் என்று சொல்லாதவரை- உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்'' (நபிமொழி. முஸ்லிம்; 2735)

அவசரப்பட்டால் நம்முடைய பிரார்த்தனைகளை அல்லாஹ் நிராகரித்து விடுகிறான்  என்பது இந்த நபிமொழி சொல்லும் செய்தியாகும்.

இந்தக் காலத்தில் நிதானம் காட்டவேண்டிய பல விசயத்தில் அவசரம் காட்டியதன் விளைவு நிரந்தரமாக வேதனைப்படும்படி ஆகிவிடுகிறது. சமாதானமும் சுபிட்சமும் சுரக்கவேண்டிய இல்லத்தில் சண்டை சச்சரவுகள் முளைத்துவிடுகின்றன. முடிவில் அற்ப காரணங்களுக்காக தலாக் - விவாகரத்து சொல்லி விடுகிறோம்.இதனால் குடும்ப அமைப்பு சிதறி சிதைகிறது. அமைதி குலைகிறது. பிள்ளைகள் பாழாகி விடுகிறார்கள். கவலைகளும் துக்கமும் சுழ்ந்து கொள்கிறது. இதுவெல்லாம் அவசரத்தால் விளைந்த தீவினையல்லவாநல்லுணர்ச்சி பெருபவர்கள் உண்டா?
''அனுமதிக்கப்பட்டதில் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமானது தலாக் ஆகும்'' (நபிமொழி. அபூதாவூத்2178)

இன்றைய அவசர உலகில் சாலை விபத்துக்கள் தினசரி செய்திகளாகி விட்டது. 'வாகனத்தை மெதுவாக ஓட்டிச்செல். வீட்டில் மனைவி மக்கள் உனக்காக காத்திருக்கிறார்கள் '' என்பன போன்ற வேகத்தடுப்பு வாசகங்கள் வற்புறுத்தும் சாலை விதிகளைமதிக்காததால் சாவு விதிகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த மிக வேகவிபத்துகளால் வாகனமும் நொருங்கிஉடல் நசுங்கிஏராளமான உயிர் பலிகளும்மோசமான காயங்களும்நிலைபட்ட ஊனங்களும்ஏராளமான பொருள் நஷ்டங்களும்ஏற்பட்டு விடுகின்றது. இது அவசரத்தால் ஏற்பட்ட அவதி அல்லவா.

குறுக்கு வழியில் பணக்காரனாகிவிட வேண்டும் என்பதற்காக எந்த வழியிலாவது செல்வம் சேர்க்க வேண்டும் என்று அவசரப்படும் இந்தக் காலகட்டத்தில் ஹராமான - அநீதியான முறைகளையும் பொருட்படுத்தாமல் பொருளீட்ட முனைந்துள்ளனர்.
இதனால் மார்க்க உணர்வு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் மனித நேயமில்லாத,மார்க்க விரோத காரியங்கள்கொஞ்சம்கூட கூச்சமின்றி சமூகஅரங்கில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

"மக்களே! அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் (வாழ்வாதாரத்தை) அழகாக முறையாக தேடுங்கள். வாழ்வாதாரம் தாமதமனாலும் அதை முழுமையாகப் பெறாமல் எந்த ஒரு ஆத்மாவும் நிச்சயமாக மரணமாகாது. (செல்வத்தை) தேடுவதில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் ஹலாலை (நியாயமானதை) எடுத்துக்கொண்டு ஹராமான (அநியாயமான)தை விட்டு விடுங்கள்". (நபிமொழிஇப்னுமாஜா)

நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!!

என்றும் தங்களன்புள்ள.




மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி. 
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment