இப்பிரபஞ்சம் இறைவனாம் அல்லாஹ்வுடைய ஆற்றலின் அருள் வெளிப்பாடு.அவனை அறிய உதவும் ஓர் அற்புதமான அறிவியல் வாய்ப்பாடு.வித்தில் ஆலமரம் மறைந்துள்ளது.அகிலத்தில் அவன் மறைந்துள்ளான்.அவனை அறிந்துகொள்ள இரண்டு வழிகள்.ஒன்று ஞாலத்தை அறிந்து மூலத்தை அறிய முற்படுவது.இது விஞ்ஞான வழி.புகையைப்பார்த்து நெருப்பைப் புரிவது மூலத்தின் மூலமானவனை அறிந்துகொள்வது, விஞ்ஞான வழி மெஞ்ஞானம்.முடிவான விஞ்ஞானம்.
இரண்டாவது வழி, மூலத்தைப்பார்த்து ஞாலத்தை அறிவது.இது முதல் நிலை மெஞ்ஞானம்.அதாவது மெஞ்ஞான வழி விஞ்ஞானம்.மூலத்தைக்கொண்டு மூலத்தை அறிவது இது இரண்டாம் நிலை.முடிவான மெஞ்ஞானம்.மகான் தின்னூன் மிஸ்ரியிடம் எதைக்கொண்டு உங்களிறைவனை அறிந்து கொண்டீர்கள்.எனக்கேடகப்பட்டபோது.'' எனதிறைவனைக்கொண்டு எனது இறைவனை அறிந்துகொண்டேன்.எனதிறைவன் மட்டும் இல்லையெனில் நான் எனது இறைவனை அறிந்திருக்கமாட்டேன்.'' என்றார்கள்.இது மெஞ்ஞான வழி மெஞ்ஞானம்.
மிஸ்ரியின் இந்தக் கூற்றுக்கு இருபொருள்கள்.சுருட்டி மடக்கினேன் சரகுக்காக.
( சரகு என்றால் ஷரிஅத் என்றொரு அர்த்தம் இருப்பதைப் போன்று குரு என்றொரு பொருளுமுண்டு)
நாம் இப்போது இங்கே பார்க்கப்போவது விஞ்ஞான வழி மெஞ்ஞானத்தை,நெருப்பில்லாமல் புகையாது.மின்சாரமில்லாமல் பல்பு எரியாது.கர்த்தா இல்லாமல் எந்தக்காரியமும் நடக்காது.என்றால்,படைத்தவனின்றி இப்பிரபஞ்சமும் பிறந்திருக்காது.இது பாலர் பாடம்.ஞானத்திற்கு புரிதல் நிறைந்த புறப்பார்வையும் ஆனந்தமான அகப்பார்வையும் அவசியம் எந்தப்பார்வையும் பயனுள்ளதாக,ஆக விழிப்புணர்வு தேவை.நாம் நிறைய பார்க்கிறோம் அலட்சியமாக.அதனால் காட்சிகள் நம்மை கடந்து சென்றுவிடுகிறதுகவனப்படுத்தப்படாமல்.
சிந்தனையை சற்றே ஆழப்பதித்தால் புதைந்திருக்கும் பல புதிய விசயம் இதய வானில் உதயமாகும்.
நியுட்டனுக்கு முன்பும் ஆப்பிள் கீழே விழுந்திருக்கிறது.ஆனால் யாருக்கும் தட்டாத பொறி நியுட்டனுக்கு மட்டும் தட்டி புவியீர்ப்பு விசை வெளிச்சத்திற்கு வந்தது. காட்சியை அவன் கவனப்படுத்தியதுதான் காரணம்.அன்றாடம் எல்லோர் வீட்டிலும் அடுப்பில் உலைச்சட்டியின் மூடி எகிறி எகிறி குதிக்கத்தான் செய்கிறது.ஆனால் சுரங்கத்தொழிலாளியான ஜார்ஜ் ஸ்டீவன்ஸன் மட்டும் அதைக் கவனித்துப் பார்த்திருக்காவிட்டால் '' நீராவிச்சக்தி '' நீராவியாக மறைந்து தெரியாமலேயே போயிருக்கும்.ஒரு அரேபிய கிராமவாசி பாலைவனத்தில் பயணம் செய்து ரொம்ப தூரம் சென்றுவிட்டார்.இவ்வளவு தூரம் பாலையில் வேறுயாரும் உள்ளேறி வந்திருக்கமாட்டார் என்று இறுமாப்பு கொண்டார்.கொஞ்ச தூரத்தில் அவருடைய காட்சியில் ஒட்டகப் புளுக்கையும், மனிதனின் காலடி தடமும் தென்பட்டது உடனே,தனக்கு முன்,இந்த இடத்தை ஒருவர் கடந்து சென்றுள்ளார் என்று அவருடைய முகம் மலர்ந்தது.
அவருடைய அகமோ,இதையும் தாண்டி,'' இந்தப்புழுக்கை ஒட்டகையின் மீதும் கால்தடம் மனித வருகையின் மீதும் அறிவிக்கும் போது,இந்த வின்மீன்கள் நிறைந்த நீலவானம் இந்த பரந்த பூமி,அலை அடிக்கும் கடல் எல்லாம் அகிலத்தை ஆக்கியோனாம் அல்லாஹ்வை அறிவிக்காதா?.என வெளிச்சமாகி வியப்படைந்தது.வழிப்போக்கன் விழிப்படைந்தான்.
''ஏக இறையின் எடுத்துக்காட்டாக எதைக்கூறுவீர்கள்? என இமாம் ஷாஃபியிடம் வினவப்பட்டதற்கு '' மல்பரி --
( Mulberry ) பழத்தின் இலை '' எனக்கூறினார். இதன் சுவை நிறம் மணம் குணம் எல்லாம் ஒன்று ஆனால் இதை ஆடு சாப்பிட்டால் புளுக்கைப் போடுகிறது.மான் சாப்பிட்டால் கஸ்தூரி வருகிறது.பட்டுப்பூச்சி புசித்தால் பட்டையும்.தேனி உறிஞ்சி தேனையும் தருகிறது என்றால் இதை இப்படி பலவாறு ஆக்கியவன் யார்? ஒரே தன்மையுடைய இந்த நிலையிலிருந்து வெவ்வேறான வஸ்துக்களைப் படைத்தவன் ஏகனாம் அல்லாஹ் இல்லையா? இலைகளின் இருப்பு நமக்குச் சேதாரமாகத் தெரிகிறது.இமாமுக்கு இறை இருப்பிற்கான ஆதாரமாக இருக்கிறது,
'' அல்லாஹ்வின் உள்ளமையை உங்களுக்கு உணர்த்தியது எது? '' என இமாம் இப்னு ஹன்பலிடம் கேட்கப்பட்ட போது, '' பளபளப்பான ஒரு வெள்ளை மாளிகை.சிறு துவாரங்கூட இல்லாதளவு முழுமையாக மூடப்பட்டுள்ளது.அதனுள் மழு மழுவென ஒரு மஞ்சள் மாளிகை.இதன் சுவர் உடைந்து சிதறுகிறது.உள்ளேயிருந்து ஒரு உயிருள்ள ஜீவன் வெளிவருகிறது.அது பார்க்கிறது.கேட்கிறது. என்ன இன்னும் புரியவில்லையா? முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருகிறது.இந்த அதிசயம் அல்லாஹ்வை அறிவிக்காதா? என விடையளித்தார். நமக்கு ஆம்லைட்டும்,ஆஃப்வாயிலும் தெரிகிறது ஆனால் இமாமுக்கு இறைவன் தெரிகிறான்.
சிருஷ்டிகளைச் சிந்திக்கவேண்டும் என்றால் பெரிய படைப்புகளைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை சின்னஞ் சிறிய கொசு.ஈ, முதலியவைகளைக்கூட நோக்கினால் போதும்.படைத்தவனைப் பார்த்துவிடலாம். 2.5 மில்லிகிராம் எடைகொண்ட் கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.ஆகச்சின்ன உருவைக்கொண்ட கொசுவில் ஆகப்பெரிய யானையை அல்லாஹ் அடக்கியிருக்கும் அதிசயத்தை என்றாவது பார்த்திருக்கின்றீர்களா? ஆம்! உற்று நோக்கினால் யானையை கொசுவில் காணலாம்.யானையின் ஒவ்வொரு உறுப்பும் கொசுவினுள்ளும் உள்ளது.கூடுதலாக இரண்டு சிறகுகள் அதிகமாக உள்ளது.உருவிலும் பளுவிலும் பலவீன கொசு நாடாளும் ராஜாவையும் வீராதி வீரனையும் வீழ்த்திவிடுகிறது.பறந்து பறந்து வந்து பயமுறுத்துகிறது.
பயங்கரவாதி சொல்லி வச்சு தாக்குவதைப்போல ரீங்காரம் செய்து கொண்டே அதுவும் வினாடிக்கு 300 முதல் 600 வரை சிறகடித்து வந்து முகத்திற்கு நேராக நின்று ஆட்டம் போடுகிறது.துப்பாக்கியால் இதை சுடமுடியுமா? வாளெடுத்து வெட்டத்தான் முடியுமா ?மழைக்கொட்டும் போதும் உடல் நனையாமல், துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த இந்த ஒரே பூச்சினம் நம் கைகளுக்கும் அகப்படாமல் நமக்கு பூச்சாண்டிகாட்டுகிறது.பெரிசுகளால் இந்த பொடிசுகளை விட்டும் தங்களை தற்காத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
கைக்குள் அடக்கமாகும் சைஸில் இருக்கும் இந்தக் கொசுவின் தும்பிக்கையான,கொடுக்கு எவ்வளவு சிறியது.வளைந்து விடுமளவுக்கு ஒல்லியானது.ஆனால் தடித்த தோலுடைய யானை,எருமையைக் கூட துளைபோட்டு உறிஞ்சுமளவிற்கு விரைப்பானதாக இருப்பது இன்னும் வியப்பைத் தரவில்லையா? '' ஈ க்களின் ஆயுள் 40 நாட்களாகும்.ஈக்களெல்லாம் நரகில்.தேனியைத்தவிர.'' ( நபிமொழி பத்ஹுல் பாரி ஷரஹுல் புகாரி ; 308/10 ) அதாவது ஈக்களைக்கொண்டு நரகவாசிகள் வேதனை செய்யப்படுபவர்.இதை இந்த உலகிலேயே கண்கூடாகக் காணலாம்.சில வாரம் மட்டுமே ஆயுள் கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்றுக் குவிக்கின்றன.சிக்குன் குனியா,மலேரியா போன்ற காய்ச்சல் கொசுக்களின் கொடையாகும்.டெங்கு காய்ச்சலை ஏடிஸ் வகை கொசுதான் பரப்புகிறது.டெங்குவிற்கு மருந்தில்லை.இதில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.இப்படி கொசுக்களின் நரகத்தொல்லை இங்கேயே தொடங்கிவிடுகிறது. '' ஈ '' யை ஏன் அல்லாஹ் படைத்தான்? என ஒரு கலிபா கேட்ட போது.; பெருமைக்கார மன்னனை மட்டம் தட்டுவதற்கு '' என்று சட்டென பதிலளித்தார் இமாம் ஷாஃபி.ஏனெனில் அரசனையும் அசர வைக்கிறது.
'' ஈ '' யின் ஆச்சரியமான ஒரு விஷயம் என்ன வென்றால் அதன் கழிவு,கருப்பு உடையில் வெள்ளையாகவும்,வெள்ளாடையில் கருப்பாகவும் விழுவதாகும்.இவ்வாறு தனது கழிவை வெளியிடுவதிலும் தனது இருப்பை வெளிப்படுத்துகிறது.
இன்னொரு விநோதம் சொல்லவா!,சிங்கம் சக்தி வாய்ந்தது ஆனால் கோழைத்தனமானது. அதனால்தான் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளில் ஒளிந்து வாழ்கிறது.ஈயும் கொசுவும் ஆகப்பலவீனமானது.ஆனால் தைரியமானது.மக்களின் மேல பாய்ந்து வந்து கடிக்கிறது.அல்லாஹ்வின் கிருபை,பலமானதில் பலவீனத்தையும்,பலவீனமானதில் பாயும் தைரியத்தையும் வைத்தான்.இதை மாத்தி கொசுவின் தைரியத்தை சிங்கத்தில் வைத்திருந்தால் நம் கதி என்னவாகும்? அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்!!!...
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி.
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா)
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment