வாழ்வைப் போல மரணமும் கொண்டாட்டமே....இந்த உண்மையை புரிந்து கொள்ள நீங்கள் மரணத்தைப் பற்றியும் மரணத்திற்குப் பின் மனிதன் எங்கே செல்கிறான் என்பதைப் பற்றியும் தெரிய வேண்டும்
يايتها النفس المطمئنة. ارجعى الى ربك راضية مرضية.
فادخلي فى عبادي وادخلي جنتى
நல்லடியார்கள் இந்த உலகத்தை விட்டு விடைபெறும் போது இந்த நற்செய்தி கூறப்படும்.
இந்த வசனத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால்
நாம் நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், நாம் எப்படி இந்த உலகில் வாழ்ந்தால் இந்த நற்செய்தி நமக்கு சொல்லப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
முதலாவதாக يايتها النفس المطمئنة "அமைதி பெற்றஆத்மாவே" என அல்லாஹ் அழைக்கிறான். இது ஒரு சந்தோஷமான, கண்ணியமான அழைப்பு. "அமைதி பெற்ற ஆத்மாவே" என அழைத்து
ارجعى الى ربك "உன் இறைவன் பக்கம் திரும்பி வா" எனக் கூறுகிறான்.
"திரும்பி வா" என்ற வார்த்தை எதை உணர்த்துகிறது? என்பதை சிந்திக்க வேண்டும். மலேசிய நாட்டின் பிரதமர் ஹஜ்ஜுக்குச் செல்கிறார் என்றால், அதைப்பற்றி செய்தியில் கூறும் போது, "பிரதமர் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச்சென்றார்" எனக் கூறுவார்கள். அதே பிரதமர் திரும்பி வரும் போது "பிரதமர் தாயகம் திரும்பினார் ” எனக்கூறுவார்கள். “ திரும்பி விட்டார் "என்பது எதை குறிக்கிறது என்றால்,எங்கிருந்து அவர் சென்றாரோ அங்கேயே திரும்பி விட்டார் என்பதாகும்.
"போனார்" என்ற வார்த்தை புதிதாக ஓர் இடத்திற்குச் செல்வதைக் குறிக்கும்."மலேசிய பிரதமர் மக்கா திரும்பி விட்டார்"என்று சொல்ல முடியாது. அதேபோல் "மலேசியாபிரதமர் மலேசியாவிற்கு வருகை தந்தார்" என்றும் சொல்ல முடியாது. காரணம் மலேசியா விற்கு அவர் புதிதாக வர வில்லை. எனவே ஒருவர் எங்கிருந்து புறப்பட்டாரோ அங்கேயே திரும்பி வருவதற்குத் தான் "திரும்பினார்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தப்படும்.
அல்லாஹ் ஆத்மாவை நோக்கி கூறும் போது"அமைதி பெற்ற ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் திரும்பி வா" எனக் கூறுகிறான் என்றால்,நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதை அல்லாஹ் இந்த வசனத்தின் வழியே நமக்கு உணர்த்துகிறான்.
அதனால் தான் மரணச் செய்தி கூறப்பட்டால், انا لله وانا اليه راجعون "நாம் எல்லோரும் அல்லாஹ்வுக்குச் சொந்தம். நாம் அனைவருமே அவனின் பக்கம் திரும்பி செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம்" எனக் கூற வேண்டும். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பிச் செல்லக்கூடியவர்கள் என்று பொருள்.
அப்படியென்றால் நம்முடைய தாயகம் எது என்பதை தெரிந்து கொண்டோம். நாம் எங்கிருந்து வந்தோமோ அது தான் நமது பூர்வீகம். சொந்த நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கு வந்தாலும் நமது தாயகத்தை மறந்து விடக்கூடாது. ஆனால் நமது நிலைமை எப்படி இருக்கிறது?
மலேசியா வந்த நிறைய இந்திய வம்சா வளியினர் சொந்த நாட்டின் தொடர்பே இல்லாமல் இருக்கிற காரணத்தினால் அவர்களுக்கு சொந்த தாயகம் எது என்றே தெரியாமல் போனது. உங்களுக்கு எந்த நாடு? என்று கேட்டால் எங்கள் நாடு மலேசியா என்று கூறுகிறார்கள்.
தொடர்பு இல்லாத காரணத்தினால் சொந்த தாயகத்தை மறந்து விட்டார்கள். மறந்து விட்டாலும் அது தாயகம் இல்லை என்று ஆகி விடாது. அது போல் நாம் உலகத்தினுடைய தொடர்பிலேயே மூழ்கிய காரணத்தினால் நாம் எங்கிருந்து இந்த உலகிற்கு வந்தோமோ அதை மறந்து விட்டோம். அதனால் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வது மற்ற ஊருக்குச் செல்வதைப் போல அந்நியமாகி விட்டது.
சொந்த ஊருக்குச் செல்வதாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்குமா? அல்லது கவலையாக இருக்குமா? மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.[இருக்க வேண்டும்] இந்த வகையில் மரணம் என்பது நம்முடைய சொந்த ஊருக்குச் செல்வதற்கான ஒரு புறப்பாடு. எனவே மகிழ்ச்சியாக செல்ல வேண்டும்.
நாம் இந்த உலகத்தில் பிறந்த போது எல்லோரும் சிரித்தார்கள். நாம் அழுது கொண்டே வந்தோம்.இதற்கு மாற்றமாக நாம் இறக்கும் போது எல்லோரும் அழுவார்கள்.நாம் சிரித்துக் கொண்டு செல்ல வேண்டும்.
ரிப்யிய்யி பின் கராஸ் {ரஹ்} அவர்கள் மிகவும் மகத்துவமிக்க ஒரு தாபிஃ. வாழ்நாளில் பொய் சொன்னதே இல்லை மரணத்திற்கு பிறகு தன் நிலமை என்னவென்று தெரிந்த பிறகு தான் நான் சிரிப்பேன் என்று சத்தியம் செய்திருந்தார் இதன்படி இவர் மரணிக்கும் வரை சிரிக்கவே இல்லை. இவர் மரணமானபோது சிரித்த நிலையில் காணப்பட்டார்.
இவ்வாறே இவருடைய சகோதரர் ரபீவு பின் கராஸ் {ரஹ்} அவர்களும் நான் சொர்க்கவாசியா..... அல்லது நரகவாசியா என்பதை தெரிந்து கொள்ளும் வரை சிரிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார் இவரும் மரணிக்கும் வரை சிரிக்கவே இல்லை இவர் மரணமாகி இவருடைய ஜனாஸாவை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது சிரித்துக் கொண்டே இருந்தாராம். (இப்பொழுது யாரும் இவ்வாறு சிரித்தால் ஜனாஸாவை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்து விடுவார்கள் ) இந்த இருவரின் சகோதரர் மஸ்வூத் பின் கராஸ். இவர் மரணத்திற்கு பிறகு பேசவே செய்தாராம்.
ربعى بن خراش رض تابعى جليل القدر ولم يكذب فى حياته قط وحلف بأن لا اضحك حتى اعلم مقامى فى الاخرة وكذلك لم يضحك حتى يموت ثم رؤى انه يضحك حين توفى واخوه ربيع بن خراش قسم بأن لا اضحك حتى اعلم انى جنتى او جهنمى وكد لك لم يضحك حتى توفى وكان يضحك حين يغسل جنازة واخوهما مسعود بن خراش تكلم بعد وفاته كدا فى حلية الاولياء
எனவே மரணத்தை அல்ல. மரணத்தின் முந்திய நிலையான முதுமையைப் பற்றிச் சொன்னாலே சங்கடமாகவும், அச்சமாகவும் இருக்கிறது.
கதை ஒன்று சொல்வார்கள்; 75 வயதான முதியவரும் 50 வயதான பெரியவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் இடையில் உனக்கு எத்தனை வயது? என்று 75 வயதுள்ள மனிதரிடம் கேட்ட பொழுது அவர் 25 வயதைக் குறைத்து எனக்கு 50 வயசு என்றார். பின்பு 50 வயதான மனிதரிடம் உனக்கு எத்தனை வயது என இவர் திருப்பிக் கேட்ட பொழுது அவரும் 25 வயதைக் குறைத்து தனக்கு 25 வயது என்றார். வீட்டின் உள்ளே அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த 25 வயது வாலிபர் இதை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த அறையிலிருந்து திடீரென்று கீழே விழும் சப்தம் வந்தது. அங்கே என்ன சப்தம்? என இருவரும் கேட்ட பொழுது, நான் தான். இப்போது தான் பிறந்தேன். கீழே விழுந்து விட்டேன்,அந்த சப்தம் தான் என்றாராம்.
மரணம் நெருங்க நெருங்க முதுமை என்பதே பயம் நிறைந்ததாகி விடுகிறது.
அதே சமயத்தில் மரணத்தை ஆசைப்படவும் கூடாது.
عن أنس
لا يتمنين أحدكم الموت
ஏனென்றால் அங்கு நம் நிலை என்னவாகும் என்பது நமக்குத் தெரியாது. மேலும் நல்லவர்களாக இருந்தால் இன்னும் இவ்வுலகில் அதிகமாக நன்மை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.தீயவர்களாக இருந்தால் திருந்தி மரணத்திற்கு முன்பு தவ்பா செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும்.
பொதுவாக மனிதன் தனக்கு ஒரு கஷ்டம், வேதனை, துன்பம், வந்து தாங்க முடியாது போனால் அந்த நேரத்தில் இந்த கஷ்டத்தை விட இறப்பது எவ்வளவோ மேல் என்று கூறி மரணத்தை விரும்புகிறான். ஆனால் அங்கே இதை விட மோசமாகக் கூட இருக்கலாம் அல்லவா என்று அவன் நினைத்துப் பார்ப்பதில்லை.
ஆகவே இந்த உலகில் ஏற்படும் துன்பத்தின் வேதனையைத் தாங்கி கொள்ளாமல், பொறுமையிழந்து மரணத்தை ஆசைப்படக் கூடாது. لا يتمنين احدكم الموت بضر نزل به ஆனால் மரணத்தின் மூலம் இறைவனின் பால் திரும்புகிறோம். இறைத்தூதரையும், இறையன்பர்களையும் சந்திக்கப் போகிறோம் என்ற வகையில் மரணம் என்பது கொண்டாட்டமாக ஆகலாம்.
அல்லாஹ்வின் நேசர்கள், அன்பர்களின் அடையாளத்தைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது;
قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس
فتمنوا الموت إن كنتم صادقين
யூதர்களே! மற்ற மனிதர்களை விட நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்று எண்ணினால் மேலும் [ அவ்வெண்ணத்தில் ] உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் மரணத்தை விரும்புங்கள் [62; 6] என்று கூறுகிறான்.
இந்த வசனத்திலிருந்து தெரிய வரும் உண்மை என்னவென்றால், நாம் அல்லாஹ்வின் நேசர்களாக இருந்தால் நமக்கு மரணத்தின் மீது ஆசை வரும். வர வேண்டும்.
மூன்றாம் கலீபா சய்யிதினா உஸ்மான் பின் அஃப்ஃபான் {ரலி} அவர்கள் கடைசி காலத்தில் முற்றுகையிடப்பட்ட நேரத்தில், உத்தரவிடுங்கள்,கலகக்காரர்களை அடக்கி ஒடுக்கி விடுகிறோம் என்று சொல்லப்பட்ட போது, ஏற்க மறுத்த உஸ்மான் அவர்கள், நேற்றிரவு கனவு கண்டேன்.அதில் நபி {ஸல்} அவர்களும், அபூபக்கர் {ரலி} உமர் {ரலி} அவர்களும் வந்து, பொறுமையாக இருக்கும்படியும் நோன்பு திறக்க நாளை தங்களிடம் வருமாறும் அழைத்து விட்டுச் சென்றார்கள்.ஆகவே நான் போவதற்குத் தயாராகி விட்டேன் என்று கூறி, தான் வாங்கி வைத்து இதுவரைக்கும் அணியாமல் இருந்த பைஜாமாவை அணிந்து கொண்டு,குர்ஆனை கையில் எடுத்து ஓத ஆரம்பித்து விட்டார்கள்.அந்த நிலையில் ஷஹீதாக்கபட்டார்கள்.
ان عثمان اعتق عشرين مملوكا ودعا بسراويل فشدها ولم يلبسها في جاهلية ولا اسلام وقال اني رايت رسول الله في المنام وابابكروعمر وانهم قالو لي اصبر تفطر عند القابلة ثم دعا بمصحف فنشره بين يديه فقتل وهوبين يديه.
محمدا واصحابه غدا نلقي என் நேசர் ரசூல்[ஸல்] அவர்களையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப் போகிறேன் என்று ஆசை பொங்கக் கூறினார்கள். {ஆதாரம் ; வஸாயா ரசூல்}
முஆத் பின் ஜபல் {ரலி} அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது, இதோ என் {போர்க்களத்தில் வீர மரணமடைந்த} மகன் வந்து விட்டான்,அவன் அல்லாஹ் அனுக்கிரகம் செய்த நல்லோர் களுடன் சேர்ந்து விட்டதாக கூறினான்.இதோ அல்லாஹ்வுடைய தூதர் ஒரு இலட்சம் நபிமார்கள் புடைசூழ வருகை தந்துள்ளார்கள். மேலும் சித்தீக்கீன்களான சத்தியவான்கள், வீர மரணமடைந்த ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்களான இறைநேசர்கள்,இறை நெருக்கத்தைப் பெற்ற முகர்ரபான ஒரு இலட்சம் வானவர்கள் எனது ரூஹை வரவேற்க,எனக்குப் பிரார்த்தனை செய்ய, நல்லடக்கத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்கள் என்று கூறிய முஆத் பின் ஜபல் அவர்கள், யாருடனோ ஸலாம் சொல்லி முஸாபஹா {கைலாகு} செய்யத் தொடங்கினார்கள்.அப்படியே அவர்களது உயிர் பிரிந்தது. அவர்கள் மரணித்த போது கனவில் நல்ல உயர் ரக குதிரையில் காட்சி அளித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மினாவுடைய நெருக்கடியைப் போல பெரும் நெருக்கடியான ஒரு கூட்டம். அவர்கள் அனைவரும் பச்சை ஆடை உடுத்தி,உயர் ரக குதிரை மீது வாகனிக்கும் வெள்ளை மனிதர்கள். அப்போது முஆத் அவர்கள்,
يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ
என்ற வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள். {ஆதாரம் ; வஸாயா ரசூல்}
فلما اشتد النزع به قال : وعزتك انك لتعلم ان قلبي يحبك. ثم افاق, وكان له ولد قتل شهيدا. فقال : اتي ولدي فاخبرني انه لحق بالذين انعم الله عليهم, وان رسول الله قد جاءني في مائة الف من النبيين والصديقين والشهداء والصالحين, ومائة الف من الملائكة المقربين يتلقون روحي,ويصلون علي,ويشيعوني الي قبري,ثم يصافح قوما لم نرهم,ويسلم عليهم حتي طلعت روحه. فلما مات رئي في المنام علي فرس ابلق وخلفه زحام كزحام مني,ورجال بيض عليهم ثياب خضر علي خيل بلق وهو يقول: يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ كذا في وصايا الرسول.
நபித்தோழர்கள் காலத்தில் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தால் அவர்களை சந்திக்க வருபவர்கள், வெளியூருக்குப் புறப்பட இருக்கும் ஒருவரிடம், அங்கே தன் உறவினரைப் பார்த்தால் கேட்டதாகச் சொல்லுங்கள் எனக் கூறுவதைப் போல, மரணப்படுக்கையில் இருப்பவரிடம் தங்கள் குடும்பத்தில் முன் சென்ற இறந்தவர்களின் பெயரைச்சொல்லி அவர்களை நான் கேட்டதாகச் சொல்லுங்கள் எனது ஸலாம் சொல்லுங்கள் எனக் கூறுவார்கள்.
ஹள்ரத் கஃப் {ரலி} அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது உம்மு பிஷ்ர் {ரலி} என்ற பெண்மனி அவர்களிடம் வந்து {மரணமான ஒருவரைக் குறிப்பிட்டு} இந்த ஆளை நீங்கள் சந்தித்தால் அவருக்கு எனது ஸலாமைச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். {இப்னு மாஜா,பைஹகீ}
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : لَمَّا حَضَرَتْ كَعْبًا الْوَفَاةُ , أَتَتْهُ أُمُّ بِشْرٍ بِنْتُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ ، فَقَالَتْ : يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ , إِنْ لَقِيتَ فُلاَنًا ، فَاقْرَأْ عَلَيْهِ مِنِّي السَّلاَمَ ، قَالَ : غَفَرَ اللَّهُ لَكِ يَا أُمَّ بِشْرٍ , نَحْنُ أَشْغَلُ مِنْ ذَلِكَ ، قَالَتْ : يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ , أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يَقُولُ : إِنَّ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فِي طَيْرٍ خُضْرٍ ، تَعْلُقُ بِشَجَرِ الْجَنَّةِ ؟ قَالَ : بَلَى ، قَالَتْ : فَهُوَ ذَاكَ.
இந்த ஹதீஸைக் கேட்டது முதல், பனுஸலமா கோத்திரத்தில் யார் மரண வேளையில் இருந்தாலும் அவர்களிடம் உம்முல் பிஷ்ர் {ரலி} அவர்கள் வருகை தந்து தனது ஸலாம் சொல்லி என் மகன் பிஷ்ருக்கு என்ஸலாமைச் சொல்லுங்கள் என்று சொல்பவர்களாக இருந்தார்கள்.
لما مات بشربن البراء وجدت امه وجدا شديدا فقالت يا رسول الله لايزال الهالك يهلك من بنى سلمة فهل تتعارف الموتى فأرسل الى بشر بالسلام قال نعم والدى نفسى بيده انهم يتعارفون كما يتعارف الطير فى رؤس الاشجار وكان لا يهلك هالك من بنى سلمة الا جاءته ام بشر فقالت يا فلان عليك السلام فيقول وعليك فتقول اقراء على بشر منى السلام. اخرجه بن ابى الدنيا كدا فى المرقات
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ، قَالَ : دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يَمُوت فَقُلْتُ :
اقْرَأْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ السَّلاَمَ.
இப்படி, மரணத்தை தாயகம் திரும்பும் சந்தோசப்பயணமாக அவர்கள் கருதினார்கள்இந்த முறையில் நாயகம் ஸல் அவர்கள் தங்களது தோழர்களை பக்குவப் படுத்தி இருந்தார்கள்.
இந்த வகையில் நபி [ஸல்] அவர்கள் அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த பொழுது அவர்களைப் பார்க்க வந்த பாத்திமா {ரலி} அவர்கள்,தந்தையின் நிலை கண்டு அழுகிறார்கள். தன் மகளின் கண்ணீரைக் கண்ட நபி [ஸல்] அவர்கள் தன் மகளை அருகில் அழைத்து மகளே! நான் கஷ்டப்படுவதைக் கண்டு நீ அழுகிறாய். ஆனால் இந்தக் கஷ்ட மெல்லாம் முடியப்போகிறது. நான் இந்த உலகை விட்டும் பிரியப் போகிறேன் என்று சொன்னார்கள். இதைக்கேட்ட பாத்திமா {ரலி} அவர்கள் இன்னும் அதிகமாக கண்கலங்கினார்கள். இதைப் பார்த்த நபி [ஸல்] அவர்கள் தன் மகளை அருகில் அழைத்து காதில் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்ட பிறகு அவர்கள் சிரித்தார்கள்.
இதைக் கண்ட அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள், பாத்திமா {ரலி} அவர்கள் வெளியே வந்த போது, மகளே! பெருமானார் [ஸல்] அவர்களைப் பார்த்த பொழுது அழுதீர்கள். பிறகு நபி [ஸல்] அவர்கள் ஏதோ ரகசியத்தைக் கூறினார்கள் அதைக் கேட்டவுடன் சிரித்தீர்களே அது என்ன ரகசியம்?எனக் கேட்டார்கள். தாயே! நீங்களே அதை ரகசியம் எனக் கூறி விட்டீர்கள். பிறகு நான் எப்படி அதைக் கூற முடியும்? என்றார்கள். இதைக்கேட்டு ஆயிஷா {ரலி} அவர்கள் மௌனமாகி விட்டார்கள்.
அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவின் மீது, மார்க்கத்தை [இஸ்லாத்தை] அறிந்து கொள்வதின் மீது அதிகத் தேட்ட முடையவர்கள். அதனால் தான் நபித்தோழர்களிலேயே 5373 நபிமொழிகளை அறிவித்து அறிவிப்பாளர்களில் முதன்மையாகத் திகழும் அபூஹுரைரா {ரலி} அவர்களுக்குப் பிறகு 2000 க்கும் அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர்கள் அன்னை ஆயிஷா {ரலி}அவர்கள் தான். இந்தத் தேட்டமும், ஆர்வமும் நமக்கு வர வேண்டும்.
அந்தத் தேட்டத்தின் வெளிப்பாடாகத்தான் நபி [ஸல்] அவர்களின் மரணத்திற்குப் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் ஆயிஷா {ரலி}அவர்கள்,நபி [ஸல்] அவர்கள் தான் இறந்து விட்டார்களே! இப்போது அது ரகசியம் இல்லையே! எனவே அந்த ரகசியத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். அப்போது அன்னை பாத்திமா {ரலி} கூறினார்கள்; என் தந்தையின் நிலை கண்டு நான் அழுத பொழுது என்னை அழைத்து மகளே! நான் போகிறேன் என்றார்கள். இதைக்கேட்டு நான் இன்னும் அதிகமாக அழுதேன். உடனே என்னை மீண்டும்அழைத்து; மகளே கவலைப்படாதே! ! நமது குடும்பத்தில் என்னை முதலில் சந்திக்கப்போவது நீ தான் எனக் கூறினார்கள். அதைக்கேட்டு நான் சிரித்தேன் என ஃபாத்திமா{ரலி} அவர்கள் கூறினார்கள்.
இன்று நம்மில் ஒருவர் மரண வேளையில் இருக்கிறார். அவரின் பிரியத்திற்குரிய மகள் அவரை சந்திக்க வந்திருக்கிறாள். தந்தையின் மரண வேளையைக் கண்டு கண் கலங்குகிறாள். அழுகின்ற மகளை அழைத்து மகளே! அழாதே!நான் இறந்த பிறகு என்னை முதன் முதலில் நீ தான் சந்திப்பாய் என்று சொன்னால் என்னநடக்கும்? இவர் போறது மட்டுமில்லாம மகளையும் சேர்த்து கூப்பிடுகிறாரே என்று சொல்வோம் .
"ஆனால் கவலைப்படாதே! என்னை சீக்கிரம் நீ சந்திப்பாய்" என்று நபி [ஸல்] அவர்கள் கூறிய போது அதைக்கேட்டு பாத்திமா {ரலி} அவர்கள் சிரித்தார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு பக்குவப்பட்டு இருப்பார்கள் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த பக்குவம் நம்மிடம் இல்லையே! ஏன்? நாம் அல்லாஹ்வை விட்டும் வெகு தூரத்தில் விலகி இருக்கிறோம். அதனால் மரணம் நமக்கு கசப்பாக அச்சம் நிறைந்ததாக இருக்கிறது நாம் மரணத்தை விரும்ப வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அப்படி மரணம் வந்தால் அதை வரவேற்கிற நிலையிலாவது இருக்க வேண்டாமா?
மரணம் என்பது ஒரு பிரிவு. அந்தப் பிரிவுதுயரமானதா? சந்தோஷ மானதா? சில பிரிவு துயரத்தையும், சில பிரிவு சந்தோஷத்தையும் நமக்குத் தருகிறது. நாம் நமது சொந்த நாட்டை விட்டு மனைவி மக்களைப் பிரிகிற போது அது நமக்குத் துயரத்தைதைத் தருகிறது. தாயகத்திற்குத் திரும்புவதற்காக அந்நிய நாட்டை விட்டுப் புரிகிற போது அந்தப் பிரிவு சந்தோஷமாக இருக்கிறது.
நமது தாய் நாட்டை விட நாம் இருக்கும் அந்நிய நாடு செழிப்பான நாடாக, வசதிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும் அதை விட்டும் பிரிகிற பொழுது நமக்கு சந்தோஷம் தான் வருகிறது. காரணம் இரண்டு.
1, அது அந்நிய நாடு. அந்நிய நாட்டிலிருந்து பிரிவது துயரம் தராது.
2, அந்நிய நாடு எவ்வளவு அழகாக இருந்தாலும் நம் இதயத்தில் அதற்கு இடமில்லை. எனவே நமக்குத் துயரமில்லை. இதயத்தில் இடம் பெற்ற நமக்கு சொந்தமான ஒன்றை பிரியும் பொழுது தான் துயரம் வரும்.
சொந்த நாட்டை விட்டும் தாய், தந்தை மற்றும் மனைவி, மக்களை விட்டும் பிரிகிற பொழுது வேதனையாக இருக்கிறது. காரணம், தாய் நாட்டின் மீது, தாய், தந்தை மனைவி, மக்களின் மீது அளவு கடந்த பற்று வைத்திருக்கிறோம். நம் மனது அங்கே இருக்கிறது. பற்றுள்ளதை விட்டும் பிரிகிற பொழுது வேதனையும் வலியும் இருக்கத்தான் செய்யும்.
எனவே நாம் இந்த உலகில் மனதைப் பறிகொடுத்து விடக்கூடாது. மனதில் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் இடம் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தவிர வேறு யாரையும், எதையும் அதிகம் நேசிக்க கூடாது. பணம் {சட்டைப்} பையிலே இருக்கலாம் அதை கடந்து உள்ளத்து உள்ளே புகுந்து விடக்கூடாது. கப்பலுக்கு தண்ணீர் அவசியம். ஆனால் வெளியே இருக்க வேண்டும், உள்ளே புகுந்து விட்டால் கப்பல் மூழ்கி விடும்.
ஆன்மீக ஞானிகள் கூறுவார்கள் ; கடலில் வாழும் மீனைப்போல் இந்த உலகில் வாழ வேண்டும். மீன் உப்புக்கடலில் வாழ்ந்தாலும், அதை நாம் அருமைத்து சமைக்கும் போது அதில் உப்புப்போட வேண்டும்.காரணம், மீன் உப்புக்கடலில் வாழ்ந்தாலும் அந்த உப்பை உள் வாங்குவதில்லை. அதைப்போல இந்த உலகில் நாம் வாழ்ந்தாலும் மனதில் இந்த உலகம் ஒட்டக்கூடாது, உலகத்திற்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது.
இந்த வரையரையோடு உலகில் நாம் வாழ்ந்தால் மரணமாகும் பொழுது இந்த உலகத்தை விட்டுப் போகிறோமே என்ற வேதனை,கவலை,ஏக்கம் எதுவும் வராது. மேலும் இந்த உலகை விட்டுப் பிரிந்த பின் நாம் முதன் முதலில் சந்திக்கப்போவது அல்லாஹ்வுடைய தூதரைத் தான். இது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கும் கிடைப்பதற்கரிய பாக்கியமல்லவா....?
மண்ணரையில் மனிதனை வைத்த பின் முன்கர்,நகீர் என்ற மலக்குகள், மனிதனிடம் முதலாவது من ربك உனது இறைவன் யார்.. ?எனக்கேட்பார்கள். அடுத்து ماذا تقول في هذا الرجل இந்த மனிதர் விஷயத்தில் நீ என்னக் கூறுகிறாய் எனக்கேட்பார்கள்.இந்த இடத்தில் இந்த மனிதர் என்பது, நபி ஸல் அவர்களைக் குறிக்கும்
هذا என்பது அருகில் காட்சியில் இருக்கும் ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு பெயர்ச்சொல். ذالك என்பது தூரமாக இருக்கும் ஒரு பொருளை சுட்டுதற்குப் பயன்படுத்தும் பெயர்ச்சொல்.
எனவே புகாரியில் பதிவான மேற்படி நபிமொழியின் படி "இந்த மனிதர் விஷயத்தில் நீ என்னக் கூறுகிறாய்" என வானவர்கள் வள்ளல் நபியைச் சுட்டிக்காட்டிக் கேட்பார்கள் என்றால், நாம் இறந்த பிறகு முதன் முதலில் நபி [ ஸல் ] அவர்களைத் தான் சந்திக்கப்போகிறோம்.
ஒரு முறை அக்பர் ராஜா, தான் இறந்த பின் மண்ணறையில் இருளில் தனியாக யாருமின்றி இருக்க வேண்டுமே ! என தன் மரணத்தை நினைத்துக் கவலைப்பட்டார். [ ராஜாவாக இருப்பதினால் அங்கேயும் படை பட்டாளத்தோடு செல்ல முடியுமா ? ] அப்போது அவரின் மந்திரி ஆறுதலாக மன்னரே ! கவலைப்படாதீர்கள். நீங்கள் மண்ணறைக்குச் சென்றால் அங்கு அருமை நபி [ ஸல் ] அவர்களைச் சந்திப்பீர்கள். எனவே தனிமையை நினைத்துக் கவலைப் பட்டாதீர்கள் எனக் கூறினார்.
இந்த உலகில் நாம் வாழும் போது அல்லாஹ்வின் மீதும், நபியின் மீதும் தேட்டமும்,நாட்டமும்,ஆசையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மண்ணறையில் பெருமானார் { ஸல் }அவர்களைப் பார்த்தவுடன் ' இது இறைத்தூதர் [ஸல் ] அவர்கள் தான் ” என்று அடையாளம் காண வேண்டும். நாம் முன்பே பார்த்திருந்தால் தான் எளிதில் அங்கே அடையாளம் காண முடியும். நம் மனதில் நபியின் மீது தேட்டமும் , நாட்டமும் இருந்தால் இன்ஷா அல்லாஹ் நாம் இந்த உலகிலேயே நபியைக் காணலாம். நம் வாழ்க்கையும் வெற்றி கரமானதாகி விடும்.
இந்த உலகத்தின் மோகம்,ஆசை,ஆடம்பரத்திற்கு நம் மனதைப் பறிகொடுக்காமல், அல்லாஹ்,ரசூலின் விஷயத்தில் நமது மனதைப் பறி கொடுத்தால், நமது வாழ்க்கை சந்தோஷமானதாகவும், சோபனம் நிறைந்ததாகவும் மாறி விடும்.அப்பொழுது தான் நம் ஆத்மா சாந்தியடையும்.
அப்போது அந்த உயிரைக் கைப்பற்றும் போது அல்லாஹ் ; يايتها النفس المطمئنة
“ அமைதி பெற்ற ஆத்மாவே ” என அழைப்பான்.
நமது மனது அமைதி பெற்று இருக்கிறதா ?இல்லை அலை பாய்கிறதா ?
“ நிறை குடம் தழும்பாது, குறைகுடம் கூத்தாடும்.” என்று கூறுவார்கள்.
நாம் நம் மனதில் அல்லாஹ்வையும்,ரசூலையும் வைத்தால் தான் அது நிறையும்.இல்லையென்றால் அது குறை குடமாகத்தான் இருக்கும்.
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَزِيدٍ
ஹதிஸே குத்ஸியில் வருகிறது ;
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ
أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزَالُ جَهَنَّمُ تَقُولُ هَلْ مِن مَزِيدٍ
يَضَعَ فِيهَا رَبُّ الْعِزَّةِ تَبَارَكَ وَتَعَالَى قَدَمَهُ فَتَقُولُ قَطْ قَطْ
மனிதனின் மனம் ஒரு வித நரகம். இந்த மனதிற்கு எவ்வளவு கிடைத்தாலும் நிரம்பாது. இந்த உலகின் ஆசைக்கு ஒரு முடிவே கிடையாது. பணம், வீடு,வாகனம், என எவ்வளவு கிடைத்தாலும் மனது மட்டும் நிறையவே நிறையாது. அதை விட அதிகமானதைத் தான் எதிர் பார்க்கும். அதனால் தான் எம்பெருமான் நபி [ ஸல் ] அவர்கள் ; ஆதமுடைய மகனுக்கு இரண்டு பள்ளதாக்கு நிறைய தங்கம் இருந்தாலும், இன்னும் இருக்கிறதா ? எனக் கேட்பான் என்று கூறினார்கள்.
எவ்வளவு கோடீஸ்வரனாக இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று தான் நினைக்கிறான்.ஆசைக்கு அளவே இல்லை.
ஆக மனிதனின் மனது நரகத்தைப் போன்றது. ஆசை என்பது நெருப்பின் குணம் உடையது. இப்படிப்பட்ட மனதில் போதுமென்ற தன்மையை ஏற்படுத்த வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் ?
நம் மனதில் அல்லாஹ் வர வேண்டும். வந்து விட்டால், மனது போதுமென்று, நிரம்பியதாக ஆகி விடும். இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று நரகம் கூறும்.அல்லாஹ் தன் பாதத்தை வைத்தவுடன் அது போதும் என்று கூறும் என்று வரும் ஹதீஸ் இதைத்தான் உணர்த்துகிறது.
“ போதுமென்ற மனதை விட சிறந்த செல்வம் கிடையாது ” என்பார்கள் நபி [ ஸல் ] அவர்கள்.
போதுமென்ற மனது இருந்தால் தான் அது அமைதிபெற்ற ஆத்மாவாக ஆகும். அப்படி ஆனால் தான் . ارجعى الى ربك அது இறைவன் பக்கம் திரும்பிச்செல்ல முடியும். அப்படி போதுமென்ற மனம் இல்லையென்றால் நம் மனது அமைதி பெறாது. அமைதி பெற வில்லையென்றால் அது இறைவனின் பக்கம் செல்லாது. நம் மனது ஆசையினால் அடங்க வில்லை யென்றால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.
நரகம் என்றால் என்ன ? அல்லாஹ் அல்லாத எல்லாமே நரகம் தான்.மாட மாளிகையில் அல்லாஹ்வின் நினைவின்றி வாழ்ந்தால் அது நமக்கு நரகம். குடிசையிலும் அல்லாஹ்வின் நினைவுடன் வாழ்ந்தால் அது நமக்கு சொர்க்கம்.
அமைதி பெற்ற ஆத்மா என்றால், அதில் எந்த ஆட்டமோ,துள்ளலோ வரக்கூடாது.
கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ({ரஹ்}) அவர்கள் மிகப் பெரிய வியாபாரி. மகான் என்றாலோ,இமாம் என்றாலோ அவர் ஏழையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.இமாம் அபூஹனீஃபா {ரஹ்} அவர்கள் கூட மிகப்பெரிய செல்வந்தர் தான்.
ஒரு நாள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் {ரஹ்} அவர்கள் மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த பொழுது, அவர்களின் வியாபாரக் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விட்டது என்று செய்தி சொல்லப்பட்டது. இதைக்கேட்ட அவர்கள் சிறிது நேரம் அமைதியாக தலை குனிந்துமௌனமாக இருந்து விட்டு, பிறகு அல்ஹம்து லில்லாஹ்[அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்] என்றார்கள்.
சில நாட்கள் கழித்து கவிழ்ந்த கப்பல் நம்முடையதல்ல. நம் கப்பல் நல்ல படியாக திரும்பி வருகிறது என்று சொல்லப்பட்டது. அப்போதும் அவர்கள் சிறிது நேரம் அமைதியாக தலை குனிந்து இருந்தார்கள். பிறகு அல்ஹம்து லில்லாஹ் என்றார்கள். அருகில் இருந்த சீடர்கள் கேட்டார்கள் ; மாண்பு மிகு மகான் அவர்களே! முதலில் சோகமான செய்தி சொல்லப்பட்டது. அப்போது அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினீர்கள். பிறகு சந்தோசமான செய்தி சொல்லப்பட்டது. அப்போதும் அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறுகிறீர்கள். இதன் விளக்கம் என்ன? என்று கேட்டார்கள்.
முதலில் எனக்கு சோகமான செய்தி [சாதாரண ஒரு சோகம் இல்லை. கப்பல் கடலில் கவிழ்ந்த சோகம்.பொதுவாக கவலையில் இருக்கிறவர்களைப் பார்த்து ஏன் கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்கிறீர்கள் என்று கேட்போம்.அந்தளவு மிகப்பெரிய கவலை] வந்த பொழுது நான் என் மனதைப் பார்த்தேன். என் மனம் இச்செய்தியைக் கேட்டு அல்லாஹ்வை மறந்து அதிருப்தி அடைந்து துடிதுடித்துப் போகிறதா? இறை நம்பிக்கையில் ஆட்டம் காணுகிறதா? எனப் பார்த்தேன். ஆனால் என் மனது அமைதியாக இருந்தது. இந்நிலையைக் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறினேன். பிறகு சந்தோஷமான செய்தி சொல்லப்பட்டது, அப்போதும் என் மனது சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறதா? எனப்பார்தேன். அப்போதும் என் மனது தன் இறைவனைக்கொண்டு அமைதியாக இருந்தது. எனவே இந்நிலையைக் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் எனக்கூறினேன் என்றார்கள்.
இது தான் அமைதி பெற்ற ஆத்மாவின் வெளிப்பாடு. ஆன்மா அமைதி பெற்று விட்டது என்றால், மனதில் துள்ளாட்டம் இருக்காது. வாழ்க்கை எப்படி அமைந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனம் தான் அமைதி பெற்ற ஆத்மா.எது நிகழ்ந்தாலும் பரபரப்போ,பதை பதைப்போ இல்லாமல் நிற்சலனமாக அது இருக்கும். இதைத்தான் அமைதி பெற்ற ஆத்மா என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இன்பத்தின் அருமையை புரியாமல், இருக்கும்வசதியான நிலையை உணராமல் மேலும் மேலும் ஆடம்பர சுகத்தை எதிர்பார்த்து மனது நிம்மதி குலைகிற போது அதைப் பக்குவப் படுத்த படைத்தவன்,அதைப் பாடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இந்த வகையில் நம்மில் ஒரு சிலருக்கு வாழ்க்கை சிறப்பாக இருந்தால், வியாபாரம் நன்றாக இருந்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வராது.ஏதாவது கஷ்டம் வந்தால் தான் அல்லாஹ்வின் ஞாபகம் வரும்.தன்னுடைய ஞாபகம் வர வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் அவர்களுக்கு சிறிய சில சோதனைகளைக் கொடுக்கிறான்.
وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
பெரிய வேதனை வராமல் இருப்பதற்குத்தான் இந்த சிறிய வேதனை.இது அல்லாஹ்விற்கு நம்மின் மீது இரக்கம் இருக்கிறது என்பதன் அடையாளம். அதனால் தான் சின்னச் சின்ன சோதனைகளைத் தருகிறான்.சோதனைகள் வர வில்லை யென்றால் தான் ஆபத்து.
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நோயினால் பாவங்கள் சுத்தமாகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே ..... நோய் என்றால் என்ன அல்லாஹ்வின் மீது சத்தியம் நான் இதுவரை நோயாளியாக ஆனதே இல்லை எனக்கூறினார் அப்பொழுது அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நீர் நம்மை விட்டும் எழுந்து விடும் ஏனெனில் நீர் நம்மை சார்ந்தவரல்ல. என கூறினார்கள்.
قال صل ان المؤمن اد اصابه السقم ثم عافاه الله عزوجل منه كان كفارة لما مضى من دننوبه وموعظة له فيما يستقبل .......فقال رجل يارسول الله وماالاسقام والله مامرضت قط فقال قم عنا فلست منا . رواه ابو داود كد فى المشكوة
قال رسول الله صلى الله عليه وصلم من يردالله به خيرا يصب منه.
رواه مالك والبخاري كدا فى الترغيب
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
"ஒருவன் காணாமல் போன ஒரு பொருளைத் தேடுவதும் அவன் பாவத்திற்குப் பரிகாரமாகும்" {நபிமொழி}
அழுக்கைப் போக்குவதற்கு நாம் சோப்பை பயன் படுத்துகிறோம். பலவகையான அழுக்குகள் இருக்கிறது.அதே போன்று சோப்புகளும் பல வகையாக இருக்கிறது. துணி துவைக்க ஒரு சோப்பு.உடலை சுத்தம் செய்வதற்கு ஒரு சோப்பு.பாத்திரத்தைக் கழுவுவதற்கு ஒரு சோப்பு.
அதுபோல நம் பாவங்கள் பல வகையாக இருக்கிற காரணத்தினால் அதை நீக்குவதற்கும் அல்லாஹ் பல வகையான சோதனைகளைத் தருகிறான்.
"சில பாவங்களை நீக்குவதற்கு அல்லாஹ் குடும்பக் கவலைகளைக் கொடுப்பான்.குடும்பக் கவலைகள் தான் அந்தப் பாவங்களை நீக்க முடியும்" {நபிமொழி}
துருவை நீக்குவதற்காக இரும்பை நாம் நெருப்பில் போடுகிறோம். அதேபோன்று நமது பாவங்களை நீக்குவதற்காக சில சோதனை எனும் நெருப்பிலே அல்லாஹ் இடுகிறான்.
தவறு செய்யும் மாணவனை ஆசிரியர் கண்டிப்பதும் அவனை கோபம் கொண்டல்ல.மாறாக அவனைத் திருத்துவதற்காக.பெற்றோர்கள் பிள்ளைகளை தண்டிப்பது அவர்களைத் திருத்துவதற்காகத் தான். அப்படி தண்டிக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களுக்கு பிள்ளைகளின் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம்.அதுபோன்று நம்மின் மீது அல்லாஹ்வுக்கு இரக்கம் இருப்பதினால் தான் நமக்கு சோதனைகளைத் தருகிறான். எனவே சோதனைகள் என்பது அல்லாஹ்வின் கோபத்திற்கு அடையாளம் அல்ல. அவனது கருணைக்கு ஆதாரம்.
அதுவும் சின்ன சோதனைகளைத்தான் தருகிறான்.தாங்க முடியாத சோதனைகளை அல்ல.
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
எந்த ஆத்மாவுக்கும் அதன் சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமம் கொடுப்படுவதில்லை. [அல்குர்ஆன் : 2 ; 286]
எனவே சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். சோதனைகள் வருகின்ற போது புலம்புவதோ அவநம்பிக்கையான வார்த்தைகளைக் கூறுவதோ கூடாது.அதை பொருந்திக் கொள்ள வேண்டும். எல்லாம் நாம் செய்த தவறினால் ஏற்பட்டது என்று எண்ணி அதிகமாக பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.
ஹஸன் பஸரி {ரஹ்} அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற போது பாவ மன்னிப்புத் தேடு என்றார்கள். அடுத்து எனக்கு வியாபாரத்தில் லாபம் இல்லை,விவசாயத்தில் விளைச்சல் இல்லை,மழையில்லை என்று பலரும் பல கஷ்டங்களை முறையிட்ட போதும் எல்லோரிடமும் பாவ மன்னிப்புத் தேடும்படி கூறினார்கள்.
அருகில் இருந்தவர்கள் காரணம் கேட்டார்கள்.அப்போது ஹஸன் பஸரி {ரஹ்} அவர்கள் ; இதை நான் சொல்ல வில்லை.அல்லாஹ் குர்ஆனில் [71 ; 10,11,12] கூறுகிறான்.
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
நாம் அல்லாஹ்வைப் பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம்மை பொருந்திக் கொள்வான். நாம் அவனை முழுமையாக பொருந்திக்கொண்டால் அல்லாஹ்வின் பக்கம் திரும்பிச்செல்லலாம், நம் மனதும் அமைதி பெறுகிறது.நாம் அல்லாஹ்வை திருப்தி கொள்ளாததினால் தான் நம் மனது அமைதி பெறவில்லை.
ஆன்மீக ஞானி புஹ்லூல்தானா {ரஹ்} அவர்களிடம், ஒருவர் வந்து நலம் விசாரித்து எப்படி இருக்கிறீர்கள்?எனக்கேட்ட பொழுது, அவர் கூறினார் ; யாருடைய நாட்டப்படி ஈருலகம் நடந்து கொண்டிருக் கிறதோ அவரிடம் என்ன சுகம் விசாரிப்பு? இதைக் கேட்டதும், ஓஹோ....! அவ்வளவு பெரிய ஆளா நீங்கள்? எனக்கேட்டார்.? நீ தவறாக விளங்கிக் கொண்டாய். நான் கடவுளாகி விட்டேன் என்ற கருத்தில் கூற வில்லை.நான் பெரிய ஆள் என்ற பொருளிலும் இதைக் கூற வில்லை."நான்", "எனது" என்பது என்னிடம் இல்லை என்பதினால் இதைக் கூறினேன்.இந்த உலகில் அனைத்துமே அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது. எது நடந்தாலும் அது அல்லாஹ்வின் நாட்டம் என்பதால் அதை நான் பொருந்திக்கொண்டேன். என்னைப் பொருத்தவரை அதிருப்தி என்பதே கிடையாது. எது நடந்தாலும் எனக்கு ok தான். அல்லாஹ்வின் நாட்டம் தான் எனது நாட்டம். எனக்கென்று சுயமான நாட்டம் ஏதும் இல்லை. நான் ஒரு அடிமை. அடிமைக்கு என்ன விருப்பு வெறுப்பு இருக்கிறது? இதனடிப்படையில் தான் அப்படிக் கூறினேன் என விளக்கம் கூறினார்கள்.
சுல்தான் மஹ்மூத் கஸ்னவி {ரஹ்} அவர்களிடம் இயாஸ் என்ற ஒரு அடிமை இருந்தார். சுல்தான் அவர்கள் அந்த அடிமை மீது அதிக பிரியம் வைத்திருந்தார்கள். இது மற்றவர்களுக்கு பிடிக்க வில்லை பொறாமைப்பட்டார்கள். ஒருநாள் சுல்தான் அதன் காரணத்தைப் புரியவைக்க அவையில் இருந்த அனைவரிடமும் விலையுயர்ந்த வைரக்கல்லைக் கொடுத்தார்கள். அடிமை இயாஸிடமும் கொடுக்கப்பட்டது. இப்போது சுல்தான் அந்த வைரத்தை கீழே போட்டு உடைக்கும்படி எல்லோருக்கும் உத்தரவிட்டார். அனைவரும் வைரத்தின் ஜொலிப்பையும்,விலைமதிப்பையும் கண்டு தயங்கி நின்றபொழுது சற்றும் தயங்காமல் இயாஸ் அவர்கள் போட்டு உடைத்தார்.
எல்லோரும் அவரிடம், இப்படி விலையுயர்ந்த வைரத்தைப் போட்டு உடைத்து விட்டாயே! என பழித்த பொழுது, அவர் கூறினார் ; நானாவது கல்லைத்தான் போட்டு உடைத்தேன். ஆனால் நீங்களோ விலை மதிக்க முடியாத அரசரின் சொல்லை அல்லவா உடைத்து விட்டீர்கள்! எனக்கு இந்த கல் பெரிதல்ல. அரசரின் சொல் தான் பெரிது என்று பெரிய போடு போட்டார்.
இதைக் கண்ட சுல்தான் அகமகிழ்ந்து, இயாஸ்! உனக்கு என்ன வேண்டும்? நீ எதை விரும்பி சாப்பிடுவாய்? எனக் கேட்டார். அரசர் எதைத் தருகிறீர்களோ அதை சாப்பிடுவேன் என பதிலளித்தார். உனக்கு பிடித்த ஆடை எது? எஜமான் எதை அணிவிப்பீர்களோ அதை அணிந்து கொள்வேன். உனக்கு வேறு என்ன வேண்டும்? எஜமான் எதை தருகிறீர்களோ அதை வாங்கிக் கொள்கிறேன் எனகூறினார்.
இதைக்கேட்ட அரசர், இது என்ன பதில்? உனக்கென்று தனியான விருப்பு வெறுப்பு இல்லையா எனக் கேட்டார். எஜமான் அவர்களே எனக்கென்று சுயமான விருப்பு வெறுப்பு இருந்தால் நான் ஏன் அடிமையாக இருக்க வேண்டும். அப்போது நான் எஜமானனாக ஆகி விடுவேனே! எஜமான் எதை விரும்புகிறாரோ அதை விரும்ப வேண்டும். எஜமான் எதை வெறுக்கிறாரோ அதைவெறுக்க வேண்டும். அடிமைக்கு என்ன விருப்பு வெறுப்பு இருக்கிறது என்றார்கள்.
எனவே அல்லாஹ்வின் அடிமைகளாக நாம் இருக்கிறோம் என்பது உண்மையாக இருந்தால் நமக்கென்று விருப்பு,வெறுப்பு இருக்கக்கூடாது. சுய விருப்பு,வெறுப்பு அற்ற ஆத்மா தான் அமைதி பெறுகிறது.அந்த ஆத்மாவை நோக்கித் தான் அல்லாஹ், “அமைதி பெற்ற ஆத்மாவே!” என அழைக்கிறான்.
عَنْ أَبِي أُمَامَةَ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ أَحَبَّ لِلَّهِ وَأَبْغَضَ لِلَّهِ
وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ فَقَدْ اسْتَكْمَلَ الْإِيمَانَ
"எவர் அல்லாஹ்வுக்காக நேசித்து,அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து,அல்லாஹ்வுக்காகத் தடுத்தாரோ அவர் ஈமானில் (இறைநம்பிக்கையில்) பரிபூரணம் பெற்று விட்டார்"
[ நபிமொழி,அபூதாவூது]
மேலே கூறப்பட்ட வசனத்தில் உன் “இறைவன் பக்கம் திரும்பி வா” என்று கூறும் அல்லாஹ், அடுத்து“சொர்க்கத்தில் நுழைந்து கொள்” என்று கூறவில்லை. மாறாக “நல்லடியார்களோடு சேர்ந்து, அதன் பிறகு சொர்க்கத்தில் நுழைந்து கொள்” என்று தான் கூறுகிறான்.அப்படியென்றால் நல்லடியார்களோடு சேராமல் தனியாக சொர்க்கம் போக முடியாது.
இன்று ஒரு சிலர் எங்களுக்கு இமாம்கள்,முன்னோர்களான நாதாக்கள் யாரும் வேண்டாம்.நேராக நாங்கள் அல்லாஹ்வின் பக்கம் சென்று தனியாக சொர்க்கம் சென்று விடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இது சாத்தியப்படாது என்று அல்லாஹ் கூறுகிறான். தனியாக போக வேண்டும் என்றால் நரகத்திற்குத் தான் போக முடியும்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் சொர்க்கத்தையும், நரகத்தையும் பல இடங்களில் குறிப்பிடுகிறான். அந்த இரண்டையும் “நிரந்தரமானது” என்று வர்ணிக்கிறான். இதில் பெரிய வித்தியாசம் என்ன வென்றால், நரகத்தைப்பற்றி அல்லாஹ் கூறும் போது ஒருமையில் கூறுகிறான்.
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து,அவனது வரம்புகளை மீறுகிறானோ அவனை அல்லாஹ் நரகில் நுழைவிப்பான்.அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு. [4 ; 14]
சொர்க்கத்தைப் பற்றிக் கூறும் போது பன்மையாகக் கூறுகிறான்.
أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا
நரகத்தில் தனியாகத்தான் கிடக்க வேண்டும். நமது சோதனையில், வேதனையில் பலர் கூட்டானால் நமக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இல்லையென்றால் கஷ்டத்திலும் பெரிய கஷ்டமாக மாறிவிடும்.
தேர்வில் தோற்றவன் கொஞ்சம் ஆறுதல் அடைவதற்காக தன்னைப் போன்று வேறு யார் தோற்றிருக்கிறார் என்று பார்க்கிறான்.இல்லை யென்றால் மிகவும் கவலைப் படுகிறான். தோற்றுப்போனதில் நம்மோடு சில தோழர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் கொஞ்சம் அதைக் கொண்டு தன்னைத் தேற்றிக் கொள்கிறான்.எனவே தனிமை என்பது ரொம்ப கொடுமையானது. அதனால் தான் தனிமைச் சிறை பெரும் குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கபடுகிறது நரகம் என்பதே பெரும் வேதனை.அதிலும் தனியாகக் கிடப்பது மிகப்பெரும் வேதனை.நரகில் உள்ளோர் அவர்களுக்குத் தெரிந்தவர்களும் கிடப்பதைக் கண்டால் ஓ!! இவர்களும் என்னோடு இங்கே தான் இருக்கிறார்கள் என்று வேதனையிலும் கூட சற்று ஆறுதல் அடைவார்கள். கூட்டாளிகளில் யாரையும் நரகில் காணாத பொழுது அவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று தெரிய வில்லையே! ஒரு வேளை சுவனம் சென்றிருப்பார்களோ என்ற நினைப்பே நரகவாதிகளுக்கு மிகப்பெரும் வலியாக மாறிவிடும்.
ஆக சொர்க்கம் போக நல்லோர்களோடு சேர்ந்திருக்க வேண்டும்.எனவேநாம் இந்த உலகில் அவர்களின் சகவாசத்தில் நாம் இருந்தாக வேண்டும்.இந்த உலகில் யார் நல்லோர்களோடு சேர்ந்து வாழுகிறார்களோ அவர்கள் சொர்க்கம் செல்லக் கூடியவர்கள் என்பதன் அடையாளமாக அது அமையும்.இங்கே சேர்ந்திருப்பதைப் போல் நாளை மறுமையிலும் அவர்களோடு அல்லாஹ் சேர்ப்பான்.
குர்ஆனில் அல்லாஹ் குகைவாசிகளின் வரலாற்றைக் கூறும் போது அவர்களோடு இருந்த நாயைப் பற்றியும் கூறுகிறான். நாளை மறுமையில் சொர்க்கம் செல்லும் பாக்கியத்தை அந்த நாய்க்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான். இந்த சிறப்பு கிடைக்கக் காரணம், அது இறைநேசர்களோடு [குகைவாசிகளோடு] சேர்ந்திருந்த தினால் தான்.
நாய்க்கு இந்த சிறப்பு என்றால் நமக்கு கிடைக்காதா......? எனஅருமை நபி தோழர்களும் நாதாக்களும் நம்பிக்கையோடு இருந்தார்கள்.
وَالَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ
ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களை நாம் நல்லவர்களில் சேர்ப்போம் என்று அல்லாஹ் கூறுகிறான் [29 ;9]
நல்லோர்களோடு சேர்ந்திருக்கும் பாக்கியத்தை எல்லா நபிமார்களும் கேட்டிருக்கிறார்கள்.
وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
இறைவா! உன் அருளால் உனது நல்லடியார்களில் என்னை சேர்த்து வை என்று சுலைமான் [அலை] அவர்கள் கேட்டார்கள். [27 ; 19]
توفني مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
இறைவா! என்னை முஸ்லிமாக மரணிக்கச் செய்.என்னை நல்லோர்களோடு சேர்த்து வை என்று நபி யூசுப்[அலை] அவர்கள் துஆ செய்தார்கள். [12 ; 101]
ஆக நாம் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்ல வேண்டுமானால் அவனைப் பொருந்திக் கொண்டு நமது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.அப்பொழுது தான் அவனும் நம்மைப் பொருந்திக் கொள்வான்.இந்த உயர்ந்த நிலையை நாம் அடைய வேண்டுமெனில் அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்களோடு சேர்ந்து அவர்களின் சகவாசத்தில் இருந்து சுவாசிக்க வேண்டும். சந்தோஷமாக இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் சுகமான சொர்க்க வாழ்வு வாழ இதுவே சிறந்த மார்க்கம்.
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா)