Tuesday, September 23, 2014

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!


'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.

தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் 
சென்று மார்க்க கல்வி பயின்றார்கள்.





பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்
 '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன் ஒரு கல்விக்கூடத்தை நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர்.


'' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''  '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் திருப் பெயர்களை அடிக்கடி கூறி வந்த இவர்கள், '' தவகல்து அலல்லாஹ் என்பதை அடிக்கடி மொழிந்து வருமாறு நோயாளர்களிடம் பணிப்பதோடு,நோய் வராமல் தடுக்க அதுவே சிறந்த மருந்து என்று ஏனையோரிடமும் கூறுவர்.இவர்கள் தம் ஊரில் பல சீர்திருத்தங்களை செய்தனர்.திருமணத்தை வெள்ளியன்று ஜூம்ஆவிற்குப்பின் பள்ளியில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறிய சுருக்கமான வாசகம் '' பள்ளி,வெள்ளி,பகல் '' என்பதாக இருந்தது.


இல்லை என்பார்க்கு இல்லை என்னாது வழங்கி வந்த இவர்களின் வரவு,செலவு புத்தகத்தில் '' அல்லாஹ்விற்காக அழகிய கடன்கள் '' என்ற தலைப்பில் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள்,ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகவும்,பயணம் செல்பவரின் கப்பல் கூலிக்காகவும்,ஏழைகளின் பசிப்பிணி நீக்குவதற்காகவும் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஏழை,எளியவர்கள் தலையில் சுமந்து விற்கும் பொருள்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து ம்கிழ்வார்கள்.


மக்களிடையே நீதிபதி போன்றிருந்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள் இவர்கள். ஷாதலியா தரீக்காவைப் பின்பற்றி வந்த இவர்கள்.அந்தத் தரீக்காவின்  திக்ரு முறைகளை நியமமாகப் பின்பற்றி வரும் வழக்கத்தையும் சித்தார் கோட்டையில் ஏற்படுத்தினார்கள்.


இவர்கள் 1967 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வைகறையில் காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட ஷைகு நாயகம் அவர்கள். '' நான் என் கண்ணால் கண்ட இரு வலிமார்கள்,பல்லாக்கு வலியுல்லாஹ்வும்,அஹ்மது இப்ராஹீம் வலியுல்லாஹ்வும் ஆவர் '' என்று கூறினார்கள். இவர்களின் புனித அடக்கஸ்தலம் சித்தார் கோட்டை சின்னப் பள்ளியின் வடபுறத்தில் இருக்கிறது.வஸ்ஸலாம்...

நூல் ஆதாரம் ; இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், 
நான்காம் பாகம்,பக்கம் -185.

வெளியீடு  ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment