Saturday, December 7, 2013

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் எம்.ஓ . அப்துல் காதர் ஹள்ரத் மறைவு !!!


                                                                            


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும், ஈரோடு தாவூதிய்யா அரபுக் கல்லூரி பேராசிரியருமான, ஈரோடு பழக்காரத்தெரு ஜன்னத்துல் பாகியாத் மஸ்ஜித் தலைமை இமாம்,மவ்லானா மவ்லவீ அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் எம்.ஓ. அப்துல் காதிர் தாவூதி ஹழ்ரத் அவர்கள், (06.12.2013) வெள்ளிக்கிழ்மை காலை ஈரோட்டில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை ,இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஈரோடு , பெரிய அக்ரஹாரம் , தாவூதிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெறுகிறது .
நாடறிந்த மார்க்க மாமேதையாகவும்,அற்புதமான சொல்லாற்றல் மிக்க அறிஞராகவும்,மார்க்கப் பணிகளில் மிகப்பெரும் சேவையாற்றியவராகவும் திகழ்ந்த இந்த உலமாப் பெருந்தகையின் சொந்த ஊர் மேலப்பாளையம்.இவர்கள் 12 வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து ஹிப்ழு பட்டம் பெற்றவர்கள்.
ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரியில் ஓதி பட்டம் பெற்று,அக்கல்லூரியிலேயே 35 ஆண்டுகாலம் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர்கள். மேலும் அல் -- அரஃபா ஹஜ் சர்வீஸ் சேவையின்  ஹஜ் பயண தலைமை வழிகாட்டியாக பணிபுரிந்தவர்கள்.ஹஜ்ரத் அவர்களுக்கு  4 பெண்மக்களும்,1 ஆண்மகனும் உள்ளனர்.தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக அரும் பணியாற்றி வந்த இந்த மாமேதை அச்சபைக்கு மதுரையில் மபெரும் கட்டிடம் எழுப்ப பெரும் சேவையாற்றியவர்கள்.ஹஜ்ரத் அவர்களின் நல்லடக்கத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஷைகுல் ஹதீஸ் மௌலானா மௌலவி ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் உள்ளிட்ட நிர்வாகிகள், ஏராளமான தமிழக உலமாப் பெருமக்கள் கலந்து கொண்டு துஆச்செய்ய இருக்கிறார்கள்.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் எம்.ஓ. அப்துல் காதிர் தாவூதி ஹழ்ரத் அவர்களுக்காக இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு மாலை அஸருக்குப் பின் மலேசியத் தலை நகர் மஸ்ஜித் இந்தியாவில் குர்ஆன் ஷரீஃப் ஓதி துஆச் செய்யப்பட உள்ளது.இது போன்று மலேசியாவின் பல்வேறு இடங்களிலும் திலாவத், துஆ மஜ்லிஸும் நடைபெற உள்ளது.வரும் வெள்ளிக்கிழமை மலேசியத் தலை நகர் மஸ்ஜித் இந்தியாவில் '' ஙாயிபு ஜனாஸா ''  தொழுகை யும் நடைபெற இருக்கின்றது 


சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான தாவூதி ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.



அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.



எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!



உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment