Saturday, December 20, 2014

மௌலித் என்பது பித்அத்தாகுமா? அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகுமா?



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இல்லாத அல்லது செய்யாத கந்தூரிகளை, கத்தமுல் குர்ஆன் எனும் ஈஸால் ஸவாப் மற்றும் ஸியாரதுல் குபூர் மற்றும் ஏராளமாக உள்ள தரீக்கா வழிமுறைகளை எவ்வாறு நாம் செய்யலாம்? அது பித்அத்தான செயல்பாடுகள்தானே, பித்அத்கள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்வதாக நபிமொழி கூறுகிறதே? நபி ﷺ செய்யாத நல்ல விடயங்களை செய்யலாமா? 

ஆம், இருள் நிறைந்த பாதையில் செல்லவேண்டுமெனில் அங்கு வெளிச்சம் தேவைப்படும். அவ்வாறு வெளிச்சம் இன்றேல் அவன் பாதையில் வழி தவற நேரிடும். இது போலவே மார்க்கச்சட்ட விளக்கங்களைப் பெறும்போது சரியாக அறிந்தவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களை பெறவேண்டும். இமாம்களை புறக்கணித்து சுயபுத்தியைக் கொண்டு குர்ஆன், ஹதீஸை ஆராய்வது தடியெடுத்தவன் வேட்டைக்காரன் என்பதற்கு ஒப்பானதொன்றாக காணப்படுகிறது. பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன போன்ற விடயங்களுக்கு எமது இமாம்கள் கூறிய விளக்கங்களையும், பித்அத்தை வாதமாக கொண்டு ஸுன்னத்தான வழிமுறைகளையும், ஸஹாபாக்கள் முதல் நல்லடியார்கள் வரை மார்க்கத்தின் பெயரால் தோற்றுவித்த நற்செயல் முறைகள், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட நல்ல வழிமுறைகளை எதிர்த்து நிற்கும் சகோதரர்களின் வாதங்களுக்கான தெளிவை அறிந்து வைப்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அந்த வகையில் பித்அத் எனும் நூதன வழிமுறை பற்றிய விளக்கத்தை கீழே காணலாம். 

பித்அத்தை (புதிதாக உருவாக்கப்பட்டது) இரண்டு வகையாக பிரிக்கலாம். 

* பித்அதுல் ஹஸனிய்யா (அழகான நூதனம்) 
* பித்அதுல் ஸய்யிஆ (கெட்ட நூதனம்) 

1. பித்அதுல் ஹஸனிய்யா (அழகான நூதனம்)

எல்லா பித்அத்தும் வழிகேடு என்ற விளக்கம் எந்தவொரு இமாமாலும் கூறப்படவில்லை. இமாம்களின் விளக்கப்படி பித்அத்தை இரண்டு வகையாக பிரித்து அதில் பித்அதுல் ஹஸனிய்யா என்ற அழகிய வழிமுறைகளை செய்வது ஆகும். என்றும் அதற்கு நன்மையுண்டு. எனவும் இமாம்கள் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளார்கள். மௌலித் என்பதும், கத்முல் குர்ஆன், தரீக்கா வழிமுறைகள் அனைத்தும் இந்த பகுதியில்தான் உள்ளடக்கப்படும், இவைகள் ஏன் உருவாக்கப்பட்டன, எதற்காக உருவாக்கப்பட்டன, அதில் நடக்கின்ற விடயங்கள்தான் என்ன என்று பார்த்த பின்புதான் எதிர்க்க முற்படவேண்டும். வெறுமனே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்களா இல்லையா என்ற விடயத்தை மட்டும் பார்த்தோமானால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஏனெனில் அவ்வாறு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் செய்தால் அல்லது சொன்னால் மாத்திரம் செய்ய வேண்டுமெனில் இன்று காணப்படும் தர்ஜுமதுல் குர்ஆனையோ, ஸஹீஹுல் புஹாரியையோ பின்பற்ற முடியாமல் போய்விடும். சரியான செய்தியை அறிய புஹாரியைத்தான் பார்க்க வேண்டும் என்றோ ஹதீஸ்களின் ஸஹீஹ், லஹீப் தரம் பற்றியோ எதுவும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டார்களா? இல்லை. அவ்வாறாயின் இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸுன்னாவிற்கு வரைவிலக்கணத்தை சரியாக புரியாததனால் வந்த கோளாராகவே கருத முடியும். ஸுன்னா என்றால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சொல், அன்னவர்களின் செயல், அன்னவர்கள் மார்க்க விடயமாயினும், ஏனைய விடயங்களாயினும் ஸஹாபாக்கள் நடந்து கொண்ட முறைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், என்றால் எப்படி ஸஹாபாக்களின் நடைமுறை பிழையாக முடியும்? கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை பற்றி நாயகத்தோழர்கள் ஓதிய மவ்லிதுகளை சற்று பாருங்கள். 

ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைபோன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள். இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப்பிரார்த்தித்தார்கள். 
அறிவிப்பவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)  நூல் - புகாரி எண் 453, முஸ்லிம் 4545. மிஷ்காத் 

இதே ஸஹாபியின் மற்றொரு சம்பவத்தில், இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும் 
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)  நூல்: முஸ்லிம் எண்: 4545 கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிய மவ்லித் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது பார்க்கவும். (நூல்: ஹாகிம் எண்: 6558) 

மதீனாவுக்கு செல்லும்போது சிறுவர், சிறுமிகளால் தலஅல் பத்ரு கஸீதா படித்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வரவேற்கப்பட்டார்கள். இது போன்று இன்னும் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றதை அன்னவர்களின் வரலாற்றிலே காணலாம். இவைகளுக்கு இந்த வழிகேடர்கள் என்ன பெயர்கொண்டு அழைக்கப் போகிறார்கள். இது பற்றி என்ன தீர்ப்பு கூறப்போகிறார்கள். 

எனவே அன்பின் வாலிபர்களே! நிகழ்வுகளின் வடிவங்கள் வேண்டுமானால் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அடிப்படை எல்லாம் ஒன்றென்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன்னை புகழ்ந்து பாடுவதற்காக மேடை போட்டு கொடுத்தார்கள். ஆனால் இன்று அது புகழ்மாலைகளாக கோர்வை செய்யப்பட்டும், அவர்களின் சரிதைகள் தொகுக்கப்பட்டும் மௌலித் என்ற பெயரில் இன்று அது நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது? ஒரு வகையில்இது ஒரு ஸுன்னத்தான வழிமுறையாக இருக்கும் போது ஏன் இவைகளை பிரச்சினையான ஒரு விடயமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது தான் புரியாமல் இருக்கின்றது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் ஏன் அப்படி கந்தூரி ஓதவில்லை, அவர்களின் சிறப்புகளை புத்தகங்களில் எழுதி ஏன் வாசிக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள். என்றால் அது அவர்களின் அறிவீனத்தை உலகுக்கு காட்சிப்படுத்தும் விடயமாகவே கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கதாநாயகன் நேரடியாகவே மக்களோடு வாழும் போது கதாநாயகனின் சிறப்புகளை புத்தகம் எழுதித்தான் வாசிக்கவேண்டும். என்ற அவசியம் கிடையாது, கதாநாயகன் வாழும் போது சிறப்புகளை பாக்களாக இயற்றி, மெட்டுக்களை போட்டுத்தான் பாடவேண்டும். என்ற அவசியமும் கிடையாது. ஏனெனில் ஸஹாபாக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் நினைவுபடுத்துவார்கள். அன்னவர்களை புகழ்ந்து படிப்பார்கள். அதற்கு நன்மையுண்டு உண்டு. இது போன்ற கவிகளை ஸஹாபாக்கள் படித்தும் இருக்கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களின் வாயிலாக அறிகின்றோம். அப்படியானால் இது போன்ற விடயங்களுக்கு அங்கீகாரம் உண்டா இல்லையா என்று பார்க்கவே கூடாது என்ற முடிவுக்கு வரமுடியும். மேலே குறிப்பிட்ட ஸஹாபாக்கள் மூலம் இவைபோன்ற விடயங்களை அனுமதித்திருக்கும் பொழுது எதற்காகத்தான் இந்த வஹாபிகள் அடம்பிடிக்கிரார்கள் என்பதுதான் திகைப்பாக இருக்கிறது. 

2. பித்அதுல் ஸய்யிஆ (கெட்ட நூதனம்) 

இரண்டாம் வகை பித்அத் என்பதுதான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்த கெட்ட வழிமுறையாகும். இந்த பித்அத்துதான் நரகில் கொண்டுபோய்ச்சேர்க்கும். உதாரணம் ஓர் மதுபானசாலையை உருவாக்குதல், போதை தரக்கூடிய பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தல், வட்டி கலந்த நிறுவனங்களை அமைத்தல், மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு பிரித்தல், இதன் மூலம் ஏப்பம் விடும் ஸியோனிஸ்ட்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தல், இப்னு தைமியாவினால் உருவாக்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபினால் வார்த்தெடுக்கப்பட்ட வஹ்ஹாபிக்கொள்கை போன்ற ஏராளமான பாவம் கிட்டக்கூடிய அம்சங்களே இவ்வகை பித்அத்தை சாரும். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் பெரும்பாவங்கள் எனக்கூறப்பட்ட வட்டி, மதுபானம், சூது, கொலை போன்ற பாவப்பட்டியல்களில் கூட மௌலித், மற்றும் மேலே கூறப்பட்ட எவ்வழிமுறையும் இல்லை. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் கூறப்பட்ட இறுதிநாள் அடையாளங்கள் ஏராளம் இருக்க அதில் எங்கேயும், அஹ்லுஸ்ஸுன்னா வழிமுறைகளான கத்தமுள் குர்ஆன், மௌலித் வைபவங்கள் போன்றவைகளை குறித்துக்காட்டி இவ்வழிமுறைகளிலிருந்து சமூகத்தை எச்சரிக்கைப்படுத்தப்படவுமில்லை. இல்லை நாம் ‘ஷிர்க் வைக்கிறோம் என்று கூறும் வஹ்ஹாபிகளின் பிரதான குற்றச்சாட்டை எடுத்து நோக்கினால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எனது உம்மத் ‘ஷிர்க் வைப்பார்கள்’ என்பதை நான் பயப்படவில்லை. நான் பயப்படுவதேல்லாம் ரியா என்ற முகஸ்துதியும், அல்குர்ஆனுக்கு சொந்தக்கருத்து கூறுவதையும் தான் என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனுக்கு சொந்த கருத்து கூறுபவர்களும் இதே வஹ்ஹாபிகள்தான் இதனை வேறு தலைப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையானால் இது பற்றிய மேலதிக விபரங்களை அப்துல் பாரி ஆலிம் அவர்களின் (இஸ்லாத்தை அழிக்கும் வஹ்ஹாபிகள், அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வஹ்ஹாபிகள் என்ற தலைப்புகளில் பேசிய பயான்களை) www abdulbary.tk என்ற இணையத்தளத்தில் போய்ப்பார்க்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். மேலும் வஹ்ஹாபிகள் குல்லு பித்அதின் ழலாளா என்பதற்கு எல்லாம் என்று தான் பொருள் கொடுக்கவேண்டும் என்றுகூட வைத்துக்கொண்டாலும் விளைவு விபரீதத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும். 

* முதலாம் கலீபா அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலே அல்குர்ஆனை ஒன்று திரட்டி நூலுருப்படுத்தினார்கள். 

* உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் காலத்தில் ஜமாஅத்தாக செய்யாத தராவிஹ் தொழுகையை முதன் முதலில் அறிமுகம்செய்து ஆரம்பித்து வைத்தார்கள். 

* உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் ஜும்மாவுக்கு முன் சிறு அதான் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

அன்பின் வாலிபர்களே! மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் செய்யாத அல்லது சொல்லாத விடயங்களை மூன்று முக்கிய ஸஹாபாக்கள் புதிதாக ஏற்படுத்தி இஸ்லாமிய நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அத்தோடு இந்த ஸஹாபாக்கள் மேற்படி விடயங்களை ஏற்படுத்தியதன் காரணத்தால் இம்மார்க்கம் பூர்த்தியாக்கப்பட்டது என்ற நாயகத்தின் வாக்கும், அல்குர்ஆனின் அறிவிப்புக்கும் மாற்றமாக அமையாது அப்படி மாற்றமாக இருக்குமானால் ஸஹாபாக்கள் செய்யவும் மாட்டார்கள். அத்துடன் குல்லு பித்அதின் ழலாளா என்ற ஹதீஸ் வாசகத்திற்கு எல்லா பித்அத்துகளும் என்று வியாக்கியானம் சொல்வதானால் இதனை விட ஆபத்தான ஒரு முடிவை எடுக்கவும் நிர்பந்திக்கப்பட வேண்டியிருக்கும்.

நிச்சயமாக அல்லாஹ் எல்லா வஸ்துவின் மீதும் சக்தி படைத்தவன்’ அப்படியானால் இந்த இடத்தில் குல்லு என்ற சொல்லுக்கு எல்லாம் என்ற பொருளைத்தான் எடுக்க வேண்டுமெனில் அல்லாஹ் அவனின் ஸாத்திலும் (ஸிபத்து அல்லது அவனின் பண்புகள்) சக்தி படைத்தவனாக முடியுமா? உதாரணமாக அல்லாஹ்வுக்கு அடக்கியாளும் வல்லமையுடையவன் என்ற தன்மை காணப்படுகிறது. இங்கே அல்லாஹ்வுக்கு அல்லாஹ்வை அடக்கியாள முடியுமா? இது போலவே எல்லா வஸ்துவின் மீதும் சக்தி படைத்தவன் என்றால் அல்லாஹ்வின் சக்தியிலும் அல்லாஹ் சக்திபடைத்தவனாக முடியுமா? முடியாது இந்த இடத்தில் இதற்கான விளக்கம் மனித சக்திக்கும், கற்பனைக்கும், அறிவிற்கும் உட்பட்ட வஸ்து படைப்பினங்களில் அவனின் வஸ்துவைத் தவிரவுள்ள கற்பனை அறிவுகளுக்கு உட்படாத வஸ்து என்பதுதான் இதற்கான பொருளாகும். 

அல்குர்ஆனின் மேலும் ஒரு வசனத்தில் ‘குல்லு நப்ஸின் தாஇகதுல் மௌத்’ எல்லா ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் என குறிப்பிடுகின்றது. மற்றுமொரு இடத்தில் சூரா மாஇதா 116 வது வசனம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் கேட்கிறார்கள் ‘இறைவனே! நீ என்னுடைய நப்ஸில் (உள்ளத்தில்) உள்ளவற்றை எல்லாம் அறிகின்றாய். ஆனால் எனக்கோ உன் நப்சில் இருக்கும் விடயத்தை அறிய முடியாதவனாய் இருக்கிறேன். மேலும் மறைவான விடயங்கள் அனைத்தையும் நீதான் அறிந்தவன்.’ என கூறினார்கள். எனவே இங்கே இறைவனுக்கும் நப்ஸ் ஒன்று உண்டு என பார்க்கிறோம். அவ்வாறெனில் மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கு குல்லு நப்ஸ் எல்லா நப்ஸும்தான் என்று கருத்தெடுத்தால் இறைவனின் நப்ஸ் (ஆத்மாவும்) மரணிக்கும் என்ற ஆபத்தான முடிவை எடுக்க நேரிடும் என்பதை வஹ்ஹாபிகளால் ஏன் இன்னும் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை. தௌஹீத் என்று வெறுமனே பெயரை வைத்துக்கொண்டு பித்அத் என்ற வாதத்தில் இறைவனுக்கே மரணம் உண்டு என்பதை கூறும் தனது கொள்கையின் குப்ரியத்தான அல்லது இறைவனுக்கே இணைவைக்கும் இந்த விபரீதங்களை ஏன் இன்னும் அக்கொள்கையிலுள்ள சகோதரர்கள் அறியாமல் இருக்கிறார்கள்? 


சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! 

மேலே பித்அத் பற்றிய போதிய விளக்கத்தையும் அது தொடர்பான ஆதாரங்களையெல்லாம் மேலே குறிப்பிட்டேன். அத்தோடு மௌலித் கந்தூரி வைபவங்களில் நடைபெறுவதென்ன எனப்பார்த்தால் அங்கே அல்குர்ஆன் வசனங்கள் ஓதப்படுகின்றன, நபிமார்கள், வலிமார்களின் சரிதைகள் வாசிக்கப்படுகின்றன. அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் செய்த சேவைகள் போற்றப்படுகின்றன. அவர்களை பாக்கலாகவும், கவிதைகளாகவும் பாராட்டி பாடப்படுகின்றன. அவர்கள் மூலம் வஸீலா தேடப்படுகின்றன. ஸலவாத், திக்ர்கள் செய்யப்படுகின்றன. உணவு பரிமாற்றம் செய்கின்றனர். இவைகள்போன்ற நல்ல விடயங்களை கூட்டாக உருவாக்கி செய்வது எப்படி தவறாக முடியும்? இவைகளுக்கு இஸ்லாத்தில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளனர். 

கதீஜா நாயகியவர்கள் தனக்கு ஹிரா மலைக்கு உணவு கொண்டு வந்து கொடுத்த நிகழ்வு மற்றும் வஹி இறக்கப்பட்டு முதன் முதலில் கதீஜா நாயகியவர்களிடம் ஓடோடிப்போய் என்னைப் “போர்த்துங்கள் என்னைப் போர்த்துங்கள்” என்று உதவிகேட்டதையும் அவர்களின் நற்குணங்களையும் இஸ்லாத்திற்கு செய்த சேவைகளையும் அடிக்கடி சொல்வார்கள். சில சந்தர்ப்பங்களில் கதீஜா நாயகியவர்களை ஞாபகம் செய்துவிட்டு அன்னாரின் பெயரால் ஆடுகளை வாங்கி அறுத்து அதன் மாமிசங்களை கதீஜா நாயகியின் தோழியர்களுக்கு அனுப்பியும் வைப்பார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. நூல்: புஹாரி) என்ற ஹதீஸ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே கதீஜா நாயகியவர்களுக்கு மௌலித் ஓதி சாப்பாடு பரிமாரியிருக்கிரார்கள். என்பதைப் பார்க்கிறோம். எனவே மேலே கூறப்பட்ட மௌலித் மற்றும் கந்தூரி மஜ்லிஸ்களில் பாவம் விளைகிறதா? நன்மை விளைகிறதா? எனப்பாருங்கள் இல்லை இல்லை கந்தூரி ஓதுவதைவிட குர்ஆன் ஓதினால் நன்மைதானே மௌலித் ஓதுவதற்கு நன்மை கிடையாதே எனக்கூறுவோர் அல்குர்ஆனின் இந்த வசனத்திற்கு என்ன கூறப்போகின்றார்கள்? ‘யார் ஓர் அணுவளவு நன்மை செய்கின்றாரோ அவர் அதற்கான கூலியையும் கண்டு கொள்வார், யார் அணுவளவு பாவம் செய்கின்றாரோ அவர் அதற்கான கூலியும் கண்டுகொள்வார்’ (அல்குர்ஆன்) 

எனவே இறைவன்தான் யாவற்றுக்கும் கூலிவழங்குபவனாவான், எனவே இறைவன் நாடியவர்களுக்கு நன்மையை வழங்குவான். இதைத்தீர்மானிக்க எந்த ஒரு அடியானாலும் முடியாது. இறைவனின் தீர்ப்புகளிலும் இறைவன் அடியார்களுக்கு வழங்கும் அருட்கொடைகளில் எந்தவொரு அடியானும் இறைவனோடு கூட்டுச்சேர்ந்து வரையறை போடவும் முடியாது. இவற்றுக்கு நன்மையுண்டு என்பதை ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சம்பவம் (முஸ்லிம் எண் 4545) என்ற ஹதீஸ் மூலம் நிரூபனமாவதால் இதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது. 

அது மாத்திரமல்ல இஸ்லாத்தில் ஜினாயத் என்ற குற்றப்பரிகார தண்டனைகளை எடுத்து நோக்கினால் மதுபானம் அருந்தியவனுக்கு இத்தனை கசையடி என்றும் விபச்சாரம் புரிந்தவனுக்கு இத்தனை கசையடிகள் என்றும் கொலைக்கு இன்ன தண்டனை என்றெல்லாம் குறிப்பிட்ட இஸ்லாம் ஏன் மௌலித்கள் கந்தூரிகளுக்கு குறிப்பிடவில்லை. அப்படியாயின் நன்மை தீமைகளை பதியும் மலக்குமார்கள் இதன் கூலியை எங்கு பதிவர்கள் வலப்பக்கமா? இடப்பக்கமா? எனவே இணைவைத்தலுக்கோ, பித்அத்துக்கோ தெளிவான ஆதாரமோ விளக்கமோ இல்லாத போது தௌஹீத் என்று பெயரை மாத்திரம் வைப்பதனால் அவன் உண்மையான ஏகத்துவ வாதியாக முடியுமா? விதண்டாவாதங்களை விடுத்து பித்அத்வாதங்களை முடித்து ஸுன்னத்தை எடுத்து நடந்து ஈருலகிலும் ஜெயம்பெற்ற அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்திலே வாழ்ந்து மரணிப்பதற்கு எல்லாம் வல்ல ரைவன் நல்லருள்பாலிப்பானாக ஆமீன். 

இறுதியாக பின்வரும் கூற்றுக்களை வாசித்து வஹ்ஹாபிகளால் இக்கேள்விக்கு என்ன பதில் தரப்போகின்றார்கள் என்பதை அன்பின் வாலிபர்களே உங்களின் போலித்தௌஹீத் நண்பர்களிடமும் கேட்டு ஒரு முடிவுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

* பித்அத் என்ற மார்க்கத்தில் புதியன ஏற்படுத்தல் என்பதில் இரண்டு விடயங்கள் இருக்கலாமா? அல்லது குல்லு என்ற வசனத்திற்கு எல்லா பித்அத்தும் என்றுதான் பொருள் எடுக்க வேண்டுமா? 

* நல்ல புதியவழிமுறைகள் பல்வேறுபட்ட துறைகளிலும் ஆரம்பிக்கலாம் எனில் அதே நல்ல நூதன வழிமுறைகளில் மௌலித் போன்றவைகளில் சேர்க்காமலிருப்பதன் காரணமென்ன? 

* கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் செய்த நபி மீது புகழ்பாடுதல், அவர்களின் சிறப்புக்கள் கூறும் மஜ்லிஸுகள் கதீஜா நாயகி மீது நடத்திய நினைவு மஜ்லிஸுகள் போன்றவற்றை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்? அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? 

* கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், வலிமார்கள் போன்றோரின் சரிதைகளை வாசிக்க கூடாது என்பதற்கு பித்அத் என்பதைத் தவிரவுள்ள ஆதாரங்கள் யாவை? 

* உண்மையில் பித்அத் என்ற வாதத்தைத்தான் முன்வைக்கின்றீர்கள் என்றால் மேலே பித்அத்துக்கள் பல செய்த ஸஹாபாக்கள் நரகவாதிகள் என குறிப்பிடுவீர்களா? 

* மேலும் எல்லா நூதனமும் என்ற பொருளைத்தான் எடுக்க வேண்டுமென்றால் இறைவனின் விடயத்தில் வரும் குல்லு என்ற சொல்லுக்கும் அப்படித்தான் பொருள் எடுக்க வேண்டுமா? அப்படி அதற்கு முடியாது என்றால் ஏன் இந்த விடயத்திலும் அவ்விதி பொருந்தாமல் இருப்பது? 

* இது போன்ற மௌலிதுகள், கந்தூரிகள் மற்றுமுள்ள தரீக்கா வழிமுறைகளை செய்வதனால் இஸ்லாமிய தண்டனை முறையில் கிடைக்கும் தண்டனை யாது? 

* அல்குர்ஆனோ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களோ தெளிவாக குறிப்பிடாத இணைவைத்தல், கெட்ட பித்அத் போன்ற மிகப்பெரிய பாவங்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளில் எவ்வாறு மௌலித், கந்தூரிகளை குறிப்பிட்டு தீர்ப்பு சொல்வது? இதற்கான அடிப்படை எங்கிருந்து பெறப்பட்டது? 

* உலகில் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் பிரபலமான இமாம்கள், வலிமார்கள் ஹதீஸ்களை அறிஞர்கள் குறிப்பாக புர்தாவை இயற்றிய இமாம் பூஸரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் போன்றவர்களின் நிலை என்ன? வஹ்ஹாபிகளின் பார்வையில் இவர்கள் பித்அத்து செய்தார்கள் என்றால் இவர்களும் நரகம்தான் செல்வார்களா? 

* கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கதீஜா நாயகியின் பெயரால் ஆட்டை அறுத்து மாமிசத்தை தர்மம் செய்தது போல் முஸ்லிம்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பெயரிலும், ஸஹாபாக்கள், வலிமார்கள் பெயரிலும் பிராணிகளை அறுத்து உணவளிக்கும் முறையிலும் ஏதும் வேறுபாடுகள் காணப்படுகின்றதா? 


SUKRAN - - MAILOF ISLAM

0 comments:

Post a Comment