குராசானைச் சேர்ந்த ஸீஸ்தானில் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை பதினான்கில் அதாவது கி.பி. 28-04-1116 இல் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் காஜா ஸையிது கியாஸுத்தீன் ஹஸன், தாயாரின் பெயர் ஸையிதா மாஹினூர் என்பதாகும்.
ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை போலவே இவர்களும் தந்தை வழியில் ஹஸனி என்றும், தாயார் வழியில் ஹுஸைனி என்றும் சொல்லப்படுகிறது.
உள்ளூர் மதரஸாவில் திருக்குர்ஆன், ஹதீஸ் பாடங்களை சிறுவயதிலேயே கற்ற அவர்கள் தம் ஒன்பதாம் வயதிலேயே திருக் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாபிள் ஆகிவிட்டார்கள்.
ஹிஜ்ரி 550 வரை புகாரா, சமர்கந்தில் தங்கிய ஹழ்ரத் அவர்கள் மௌலானா ஹுஸாமுத்தீன்
ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுல் இஸ்லாம் ரலியல்லாஹு அன்ஹு
போன்ற பெரியார்களிடம் திருக்குர்ஆன் வியாக்கினம், ஹதீஸ், பிக்ஹு ஆகிய மார்க்க ஞானக் கலைகளை
கற்றார்கள்.
இதன் பின் கிவா, தூஸ் போன்ற நாகரிகமிக்க பட்டணங்களுக்கும் சென்று பெரியார்களை சந்தித்து விட்டு பக்தாதை
நோக்கி பயணமானார்கள். பக்தாதை விட்டு நீங்கிய ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள், நிஷாப்பூரை ஒட்டியிருந்த ஹாரூன் என்ற ஊருக்கு போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஷெய்கு உதுமான் ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரியார் பேரும், புகழும் பெற்ற மகானாய் விளங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சமூகத்தில் சென்ற காஜா அவர்கள், “அடியேனைத் தங்கள் சீடர்களின் ஒருவனாய் ஏற்றருள வேண்டும்.” என்று பணிவுடன் வேண்டி நின்றார்கள். ஹழ்ரத் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காஜாவை எதிர்ப்பார்த்தவர்கள் போலத் தழுவித் தம்மால் இயன்ற ஆத்மஞான போதனையை அருள்வதாக வாக்களித்து அவர்களை ஆசிர்வதித்தார்கள். இறுதியில் ஹிஜ்ரி 582 இல் ஹழ்ரத் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு விலாயத் ஸனத்தையும், தம் கலீபா என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
ஹிஜ்ரி 583 இல் மீண்டும் ஹஜ் செய்வதற்காக ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்கா சென்றார்கள். ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மதீனா வந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரௌலா ஷரீப் அருகில் நாற்பது நாட்கள் தங்கியிருந்து ஆத்ம அனுஷ்டானங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது ஒருநாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கனவில் தோன்றி, “முயீனுத்தீன்! நீங்கள் உலகில் இஸ்லாமிய சன்மார்க்க நெறியைப் போதித்துப் பரப்ப வேண்டும். இப்போது இந்தியா சென்று அஜ்மீர் எனும் இடத்தில் தங்கிக் கொண்டு இஸ்லாத்தைப் போதியுங்கள்” என்று ஆணையிட்டார்கள். விழிப்படைந்த ஹழ்ரத் காஜா இத்தகைய உத்தரவு கண்டு உளமகிழ்ச்சியடைந்தார்கள்.
ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நம் அன்புக்கும், மதிப்புக்கும் முக்கிய பாத்தியமாகப் காரணம் அவர்கள் தீனுல் இஸ்லாத்துக்காகச் செய்த மகத்தான சேவைதானன்றே! அவர்கள்தாம் இந்தியாவில் இஸ்லாத்தை பெரிய அளவில் பரப்பி ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்ற முஸ்லிம் ஆட்சிக்கும் காரண புருஷராய் விளங்கியுள்ளார்கள். ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புன்னியத்தொண்டை அதற்குரிய பின்னணியில் நாம் உணராமலிருக்க முடியாது.
ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அஜ்மீரில் தங்கியிருந்த காலத்தில் மட்டும் ஏழரை இலட்சம் ஹிந்துக்களை இஸ்லாத்திலாக்கினார்கள் என்று காரி அப்துர் ரஹ்மான் ஈராக்கி என்ற பெரியார் எழுதுகிறார்கள். உலகம் முழுவதிலும் இஸ்லாம் பரவிய விதத்தைச் சரித்திர ஆதாரங்களுடன் விளக்கி ‘இஸ்லாமியப் பிரச்சாரம்’ என்ற நூல் எழுதியுள்ள அறிஞர் டி. டப்ளியூ. ஆர்னில்ட், தொண்ணூறு இலட்சமே பேர்களை அதாவது ஒரு கோடிக்குப் பத்து இலட்சமே குறைவானவர்களை ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்திலாக்கியுள்ளதாக எழுதியுள்ளார். இது இந்தியாவின் பல்வேரிடங்களிலும் அவர்களால் இஸ்லாத்தைத் தழுவியவர்களுடைய தொகையாக இருக்கலாம். ஆனால், இத்தகவல் சரித்திரப் பூர்வமானது. இஸ்லாமிய சரித்திரத்திலேயே இத்தனை பெரிய அளவில் இஸ்லாத்தைப் பரப்பிய ஒரு பெரியாரைக் காண்பது அரிது.
இத்தனைக்கும் அவர்கள் பின்பற்றிய முறை யாது? பட்டாளங்கள், படைகள், ஆயுதங்கள், ஆதரவாளர்கள், இப்படி ஏதேனும் இருந்ததா? நான்கே நான்கு சீடர்களுடன் முற்றும் துறந்த முனிவராகவே வந்தார்கள். எவர் தயவையும் அவர்கள் நாடவுமில்லை. வந்த நாட்டிலோ யாரையும் அவர்களுக்குப் பரிச்சயமுமில்லை. அவர்கள் போதித்ததற்கு முற்றும் முரணான கொள்கையுடைய ஜாதி பேத உணர்ச்சி மிக்க மக்களிடையில் அவர்கள் பணியாற்ற வேண்டியதிருந்தது. பிருதிவிராஜனைப் போன்ற அரசர்களின் வெறுப்புக்கு இடையில் அவர்கள் கடமையாற்ற வேண்டியதிருந்தது. அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் தொலைக்கும் எண்ணங் கொண்ட ஒரு சிறு கூட்டத்திடையே அவர்கள் இருக்க வேண்டியதாயிற்று. இத்தனைக்கும் அவர்கள் தாய் மொழியோ பாரசீக மொழி, பழக்கத்தால் அரபியும் பேசுவார்கள். ஆனால், அச்சமயம் இந்தியாவிலுள்ள மக்களுக்கு இவற்றில் பிரசாரம் செய்தால் விளங்கிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையில் அவர்கள் தொண்ணூறு இலட்சம் பேர்களை இஸ்லாத்திலாக்கினார்களென்றால், அவர்களுடைய சேவையின் மகத்துவத்தை நாம் உணர முடிகிறதன்றோ?
ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சேவையோ முற்றும் வேறு விதமானது. முஸ்லிம்களே இல்லாத ஓரிடத்திலே, இஸ்லாத்தைப் பற்றியே அறிந்திராத மக்களிடையே, முஸ்லிம் படையெடுப்புகளால், கொள்ளையடிப்புகளால், கோயில் இடிப்புகளால் இஸ்லாத்தைப் பற்றி தவறாக எண்ணிக் கொண்டிருந்தவர்களிடையே அவர்கள் வேலை பார்க்க வேண்டியதிருந்தது. அவர்களைச் சன்மார்க்கத்தின் பக்கம் அழைப்பதே அவர்களுடைய முக்கியமான வேலையாய் இருந்தது. அதிலும் அவர்கள் மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் எத்தகையவர்கள்? இந்தியாவில் மிலேச்சர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களோ, விவசாயிகளோ, பணியாக்களோ அல்லர்: வீர மரபினர்: போர் என்றாலே குதித்தெழுபவர்கள்: வெற்றி அல்லது மரணம் என்று போரிடுபவர்கள். மானம் பெரிது என்று தங்கள் பெண்டிரை நெருப்பிடைப் புகச் செய்யும் இராஜபுத்திரர்கள் தாம் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களினால் பெருத்த அளவில் இஸ்லாத்தைப் பலப்படுத்தி முயீனுத்தீன் இஸ்லாத்தைப் பலப்படுத்தியவர் என்ற தங்கள் பெயரின் உண்மையை நிரூபித்தார்கள்.
ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு ஏராளமான நூற்களை எழுதியுள்ளார்கள். ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய 97 ஆம் வயதில் ஹிஜ்ரி 627 ரஜப் மாதம் 6 ஆம் தேதி திங்கட்கிழமை கி.பி 21. 05. 1229 அன்று வபாத்தானார்கள்.
நன்றி -- mail of islam.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
0 comments:
Post a Comment