Friday, January 25, 2013

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்ற மகத்தான வெற்றி!


இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை.இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.)HISTORICALLY IT IS GUITE DOOB FULL WHETHER CHRIST EVER EXISTED AT ALL.(B.RUSSELL) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.

 நபி (ஸல்) அவர்களின் இருப்பு,சரித்திரத்தைக் கவனித்து, எந்தளவுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி என்றால்,அவர்கள் விஷயத்தில்,ஒரு ஆய்வாளர் இப்படி எழுதவேண்டியது தான் வந்தது.
MOHAMMAD WAS BORN WITH IN THE FULL LIGHT OF HISTORY (HITTI)  '' முஹம்மது '' வரலாற்றின் முழு ஒளியில் பிறந்தார் (ஹிட்டி) அந்த நபியின் உயிரோட்டத்திற்கான மிக முக்கியமான ஒரு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையான, உயிருள்ள முஃஜிஸாவான அல் குர்ஆனாகும். இது இன்னும் கூட திருத்தப்படாத சரித்திர சான்றாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

ஆதம் நபி முதல் ஈஸா நபி வரை இலட்சத்திற்கும் அதிகமான தீர்க்கதரிசிகள் மக்களுக்கு இறை உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி,அல்லாஹ்வை பயந்து,வாழ்க்கையை துய்மையாக நடத்துமாறு  வலியுறுத்தினார்கள்.ஆனால் மிகவும் சொற்பமான நபர்களே அவர்களுக்குப்பின் அணி திரண்டனர்.நபி யஹ்யா (அலை) அவர்களுக்கு,கூட செல்ல ஒருவர் கூட கிடைக்கவில்லை என்பதுடன் இறுதியில் அவர்கள் கொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள்,நபி லூத் (அலை) அவர்களை அவர்களின் இரு மகளை தவிர வேறு யாரும் ஏற்கவில்லை.நபி நூஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன்,கப்பலில் பயணித்தவர்கள் தவ்ராத் -- (தோரா) தரும் தகவலின்ப்டி வெறும் எட்டு நபரேயாகும்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தங்களது தாயகமான இராக்கை விட்டு வெளியேறிய போது அவர்களுடன்,அவர்களின் இரு மனைவிமார்களான ஹாஜரா,ஸாரா,அம்மையார்களைத் தவிர அவர்களின் சகோதரர் லூத் (அலை) அவர்களும் இருந்தார்கள். அதற்குப்பிறகு அவர்களின் குழுவில் அவர்களது இரு பிள்ளைகளான நபி இஸ்மாயீல் (அலை) நபி இஸ்ஹாக் (அலை) ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள்.நபி ஈஸா அலை) அவர்களுக்கு முழு முயற்சி செய்த பிறகும் கிடைத்தவர்கள் 12.நபர்கள்.இவர்களும் கடைசி நேரத்தில் அவர்களை கொலை வெறியூதர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர். (மத்தாயு.56,26)

பெரும்பாலான நபிமார்களின் நிலை இவ்வாறு தான் இருந்தது.சில நபிமார்கள் தாங்கள் மட்டுமே இருந்தனர்,சிலருக்கு கூட செல்ல சிலர் கிட்டினர்.மனிதர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் முக்கியமானவர்களாகவும்,மேன்மை மிக்கவர்களாகவும் இருந்தவர்கள் நபிமார்கள்.ஆனால் ஆச்சரியம் என்னவெனில்!எல்லா வரலாற்றிலும் இவர்களே மிகவும் வேண்டாதவர்களாக நடத்தப்பட்டார்கள்.நாட்டை ஆண்ட அரசர்கள்,படை நடத்திச் சென்ற சிப்பாய்களின் சரித்திர சம்பவங்களை, வரலாறுகள் முழுமையாக குறித்து வைத்திருக்கின்றன.ஆனால் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல்,நபி ஈஸா (அலை) அவர்கள் வரை,எந்த நபிக்கும் முறைப்படி தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களில்,இடம் கிடைக்கவில்லை

அரிஸ்டாட்டில் (கி.மு,384 -- 322) நபி மூஸா அலை அவர்களுக்கு,ஆயிர வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர்.ஆனால் நபி மூஸா (அலை) அவர்களின் பெயரைக் கூட அந்த அறிஞர் தெரிந்து வைத்திருக்கவில்லை.இதற்கு காரணம் அதிகமான நபிமார்களை அவர்களின் சமூக மக்களே நிராகரித்துவிட்டார்கள்.அவர்களின்,வீடுகளையும்,சுவடுகளையும்,தொடைத்தெறிந்து சமூகத்தில் மதிப்பில்லாமல் ஆக்கினர்.

அவர்களைக்குறித்து,பதிவு செய்து வைக்கும்,அளவுக்கு அவர்களை முக்கியமானவர்களாக கருதவில்லை.நபிமார்களுடன் அவர்கள் இப்படி ஏன் நடந்துகொண்டார்கள் இதற்கு ஒரே காரணம்தான் இருந்தது.அவர்கள் தங்களுடைய கூட்டத்தார்களை விமர்ச்சித்தார்கள்.மனிதனுக்கு அதிகம் பிடித்தது,அவனைப் புகழ்வது.மனிதனுக்கு அறவேபிடிக்காதது,அவனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது.

நபிமார்கள் எது சரி,எது தவறு என்று தெளிவாக்க வந்தவர்கள்.அதனால் அவர்கள் தங்கள் சமூகத்தாருடன் சமரசம் செய்துகொள்ளாமல் அவர்களின் தவறான கொள்கைகளையும்,தவறான செயல்பாடுகளையும்,சாடுவதற்கு சற்றும் தயங்கியதே இல்லை.இதனால் அவர்களின் கூட்டத்தினர் அவர்களுக்கு எதிரிகளாயினர்.இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு என்னவெனில், அந்த நபிமார்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட வேதங்கள்.ஆகமங்கள் மற்றும் இறக்கியருளப்பட்ட இறைச்செய்திகள் எதுவும் பாதுகாக்கப்படாமல் போயின.ஏனெனில் நபிமார்களுக்குப் பிறகு அவைகளை பாதுகாப்பது,அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள்தான்.ஆனால் துரதிஸ்டவசமாக அவர்களைப் பின்பற்றுவோர் யாரும் இல்லாமல் போயினர்.அல்லது அதைப் பாதுகாக்குமளவுக்கு பெரிதாக இல்லாமல் போயினர்.

மனிதர்களின் இந்த நிலை குறித்து ஆதியிலேயே அறிந்திருந்த அல்லாஹ்,ஆதியும்,அந்தமும் இல்லா அந்த காலமில்லா அஸலியத்தான அமைப்பில் அவனது விதிப்படி தீர்க்கமான ஒரு முடிவு செய்திருந்தான் நபிமார்களின் வரிசையில் கடைசி கால கட்டத்தில் தனது பிரத்யேகமான ஒரு வழிகாட்டியை அனுப்புவது என்றும்,அந்த நபியின் மார்க்கம் தழைத்து வளரும்.அவருக்கு தனது பலமான பேருதவி கொண்டு அவர்கள்,ஒவ்வொரு கட்டத்திலும் தங்களது முன்னிலையாளர்களை,மிகைத்து,அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தை அவர்களை ஏற்க்க செய்யும் வரை அவர்களை அல்லாஹ் தன் பக்கம் கைப்பற்றுவதில்லை என்றும்,இறைவனின் படை எப்போதும் அவர்களுடன் இருந்து அவர்களை -- நிராகரிப்பவர்களை நிர்மூலமாக்கி இறை மார்க்கத்தை எப்போதும் உறுதியான தளத்தில் கொண்டு வந்து நிறுத்துவது என்றும்,அப்போது இறைவேதத்தை பாதுகாக்க தனி அமைப்பு உருவாகி விடும்,என்றெல்லாம் அவனது இந்த முடிவான முடிவு மண்ணுலகில் மன்னர் நபி(ஸல்) அவர்களின் வருகையால் வாகை சூடியது.''

'' எப்படி கடல்,நீரால் நிரம்பிஉள்ளதோ அது போல பூமி,இறைவனின் மகத்துவமிக்க ஆன்மீக அறிவால் நிறையும்.'' என்ற பைபிளின் வார்த்தை வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வருகையால் நடந்தேறியது.ஆயிரமாயிரம்,ஆண்டுக்கு முன்னரே வேதமறைகளின் மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்ட அந்த நபி,அரேபியாவின் பாலைவன பூகோள அமைப்பிலிருந்து தோன்றுவார்.இஸ்ரவேலர்களின் இன்னொரு வீட்டிலிருந்து தோன்றுவார் -- அதாவது அவர்களது சகோதரர்களான பனூ இஸ்மாயீல் சந்ததியினரின் பிள்ளைகளிலிருந்து தோன்றுவார் -- அது ஏசுவின் வருகைக்குப் பிறகு ஆகியிருக்கும். அவர்களுடைய தோழர்கள்.'' இறைவனால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள்'' எனப்படுவர். அவர்களை எதிர்க்கும் சமுதாயம் நாசத்தை சந்திக்கும்.ஆதி மலை (போன்ற) பாரசிகமும்,ரோமபுரியும்,அவருக்கு முன் மண்டியிடும்.அவர்களின் ஆட்சி தரையிலும்,கடலிலும்,வியாபித்திருக்கும்.என்பன போன்ற, இறுதி நபியை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது -- இன்னும் பல விளக்கத்தொகுப்புகள் பல அழித்தல் திருத்தல்களுக்கு மத்தியிலும்  மாறாமல் மறுதலிக்க  முடியாமல் இன்னும் பைபிளில் காணப்படுவது கண்டிப்பாக ஒரு அதிசயமே!

குறிப்பாக ஏசு நாதர் நபி (ஈஸா) அவர்கள்,இவ்வுலகிற்கு வருகை தந்ததே உலகிற்கு குறிப்பாக யூதர்களுக்கு இறுதி நபியின் வருகை குறித்து,விழிப்பூட்டுவதற்காகத்தான்.எந்த புதிய ஏற்பாட்டைக்குறித்து நன்மாராயங்கூறினார்களோஅது யதார்தத்தில் இஸ்லாமாகும்.இது யூதர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பனு இஸ்மாயீல் மூலமாக நிலை நிறுத்தப்படவிருந்த சத்திய மார்க்கமாகும்.இந்த வகையில் ; இஞ்ஞில் என்பது புதிய ஏற்பாடல்ல.புதிய ஏற்பாடான இஸ்லாம் குறித்த நன்மாராயமேயாகும்.

ஹழறத் நபி ஈஸா (அலை) அவர்கள்,இறுதி நபிக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு வருகை புரிந்தார்கள்.திருக்குர்ஆனில் ( 61; 06) வருகிறது.நபி ஈஸா அலை அவர்கள்,பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களிடம் கூறினார்கள்.அல்லாஹ் என்னை அடுத்து வரக்கூடிய நபியைக் குறித்து நற்செய்தி சொல்வதற்காக அனுப்பினான்.அவர்கள் எனக்குப்பிறகு வருவார்கள்,''அவர்களின் பெயர் அஹ்மது'' என்பதாகும்.

அஹ்மது -- முஹம்மது,இந்த இரண்டும் ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள்.இதன் பொருள் ''புகழப்பட்டவர்''இஞ்ஜில் பர்னாபாஸில் ''முஹம்மது'' என்று தெளிவாகவே அவர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

யூஹன்னாவின் பைபிளில் -- இஞ்ஜீலில்) முன்னறிவிப்பு செய்யப்பட்ட,வரப்போகும் இறைதூதரின் பெயர் முன்ஹமன்னா'' இதற்கு கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட போது '' பாரகலீது'' என்று ஆகிவிட்டது.இதுதான் இப்போது பிரபல்யம்.

இப்படி நற்செய்தி சொல்லப்பட்ட சுந்தர் நபி (ஸல்) அவர்கள்.கி.பி 670 ஏப்ரல்.20 திங்கட்கிழமை அரபு நாட்டில் திருமக்கா நகரில் பிறந்தார்கள்.63 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி 633 ஜூன்.08 திங்கட்கிழமை திரு மதினாவில் மறைந்தார்கள்.

நபித்துவப் பிரகடனம் செய்து மொத்தம் 23 ஆண்டுகளே அழைப்புப் பணி செய்தார்கள். ஆகக்குறைந்த இந்த கால கட்டத்தில் அரபு இனக்குழுக்களுக்கு மத்தியில் அவர்கள் ஏற்படுத்திய எழுச்சி,இஸ்லாமிய சகோதரத்துவ ஏகத்துவப்புரட்சி,வரலாற்றில் ஈடு இணையற்றது.இந்த இஸ்லாமியப்புரட்சி நூறு ஆண்டுக்கும் குறைவானதொரு கால கட்டத்தில் உலகின் மிகப்பெரிய வல்லரசான பாரசிக சாசானி சாம்ராஜ்யத்தையும்,ரோமாபுரியின் பாஸநதினி பேரரசையும் கைப்பற்றியது

ஒரு பக்கம் இராக் ஈரானிலிருந்து ரஷியாவின் புகாரா வரை.மறுபக்கம் சிரியா, பாலஸ்தீனத்திலிருந்து எகிப்து மற்றும் வட ஆப்ரிக்கா முழுவதையும் வெற்றி கொண்டது.பின்னர் இந்த வெற்றி முகாம் மேற்கு பக்கம் திரும்பியது.கி.பி.711-ல் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக்கடந்து ஸ்பெயின் மற்றும் புர்துகாலில் பிரவேசித்தது.

மேற்கு ஐரோப்பாவில் கி.பி 732--ல் அடியெடுத்து வைத்த இஸ்லாமியப்படை பிரான்ஸ் மன்னர் ஜார்லஸ் கார்ட்லால் 'தூர்''என்னுமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.இது மட்டும் நிகழாமல் இருந்தால் ஜவஹர் லால் நேரு எழுதுவது போல் இன்று ஐரோப்பாவின் மதம் இஸ்லாமாக இருந்திருக்கும்.இடையில் இரண்டு நூற்றாண்டுகள் சிலுவை யுத்தம்.அதற்குப்பின் மங்கோலியப்படையினரால் இரத்தவெறி தாக்குதல்கள்.எல்லாம் இருந்தும் 15 ஆம் நூற்றாண்டு வரை பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.எனினும் உள் மோதலால் ஸ்பெயினை மட்டும் இழக்கவேண்டியது வந்தது.அதற்குப்பிறகு உள் வெளி ஆற்றல் துர்க்கியர்களையும்,முகலாயர்களையும் தூக்கி நிலை நிறுத்தியது துர்க்கியர் 1453 --ல் காஸ்டான்டி நோபிலை வெற்றி பெற்றனர்.கிழக்கு ஐரோப்பாவில் யுகோஸ்லாவியா வரை சென்றனர்.

வியன்னாவுக்கு முன்னர் 1683 வரை துருக்கிப்படை இருந்தது.16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள்,இந்தியா,ஆப்கானிஸ்தானில்,இஸ்லாமியர் ஆட்சியை நிறுவினர்.ஆக 13 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு இஸ்லாம் எந்த அளவு விரிவடைந்தது என்றால் இன்று உலகில் அனேகமாக எல்லா பகுதியிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

உலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்.ஐம்பது நாடுகளில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் உள்ளனர்.இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு மூலதனம்,அந்த் 23 ஆண்டு கால அழைப்பு பணி.ஹிஜ்ரத்துக்குப்பிறகு ஆறு வருடம் கழித்து உம்ராவுக்கு வந்தபோது 1400.பேர் இருந்த ஸஹாபாக்கள்.இன்னும் இரண்டு வருடம் கழித்து மக்கா வெற்றிக்கு வந்த போது 10.000 பேர் இருந்தனர்.இது மதீனாவிலிருந்து மட்டும் வந்த முஸ்லிம்கள் தான்.மற்ற ஊரிலிருந்து வந்தவர்களையும் சேர்த்தால் 12,000.முஸ்லிம்கள்.அடுத்து  இரண்டு வருடம் கழித்து, இறுதி ஹஜ்ஜுக்கு வந்த முஸ்லிம்கள்,பெருமானாருடன் மதீனாவிலிருந்து புறப்பட்டவர்கள் மட்டும் 90,000.மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் சேர்த்தால் இன்னும் அதிகம்.ஒரு அறிவிப்பின் படி 1,24,000.பேர் இருந்தார்கள்.

இவர்கள் மூலம் உலகெங்கும் இஸ்லாம் பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.5.PILLIAN. (200 கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.இவ்வளவு பெரிய குறியீட்டை எட்ட உதவியது  நபிகள் நாயகத்தின் 23 ஆண்டுகால சரித்திரமே! அல்ஹம்துலில்லாஹ்...



என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ். அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, January 16, 2013

' மூச்சடங்கிய கம்பீரம்'






மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா மறைவு.


SSK என்ற மூன்று எழுத்துகளில் பிரபலமாக அறியப்பட்ட முதுபெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், ஸஃபர் பிறை 5 (20.12.2012) வியாழன் அன்று மறைந்தார். ஓரிரு வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும்,இயலாமைக்கு ஆளாகிய இறுதி நிமிடம் வரை இஸ்லாமிய மார்க்க மேடைகளில் சங்கநாதம் செய்து கொண்டிருந்த, கம்பீரக் குரலுக்கும்,தோற்றத்திற்கும்,வாழ்விற்கும் சொந்தக்காரரான அவர்,பன்முக ஆற்றல் கொண்டவர்.

தஞ்சை மாவட்டம்,கிளியனூரில் பழமையான ' ரஹ்மானிய்யா ' அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய சமயக் கல்வியில் மௌலவி -- ரஹ்மானி' பட்டம் பெற்ற அவர்,கடையநல்லூர் அருகிலுள்ள 'பாம்புக் கோவில் சந்தை' என்ற கிராமத்தில் இமாமாக தன்னுடைய மார்க்க சேவையைத் தொடங்கினார்.

பின்னர் இரண்டு வருடம் நெல்லை பேட்டையில் உள்ள 'ரியாழுல் ஜினான்' அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு,1970 இல் காயல் பட்டினத்திலுள்ள புகழ் பெற்ற 'மஹ்ழரா'  அரபுக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். தனது வாழ்வின் இறுதி நிமிடம் வரை அங்கேயே அவர் பணியாற்றினார்.சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,இயலாத நிலையிலேயே விமானத்தில் சென்று கடந்த ஆண்டு மஹ்ழராவில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாகும்.

தமிழகம் கண்ட மேடைப் பேச்சாளர்களில் செம்மொழி  உரையாளர் அவர் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது அதற்கு அப்துல் கலாம் அழைக்கப்படவில்லையே' என தமிழகம் வருத்தப்பட்டது.SSK  அழைக்கவில்லையே என்று நான் வருந்தினேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் பேசும் உலகமெங்கும் தேனினிய சொற்களில் தேக்கு நிகர் கருத்துகளைப் பேசி, தமிழ் மொழியைச் செம்மைப் படுத்திக் கொண்டிருந்த குரலுக்குச் சொந்தக்காரர் அவர்.பரந்து விரிந்த செம்மொழி மாநாட்டின் மேடையில் SSK  வின் குரல் ஒலித்தால் எப்படி இருக்கும்?அந்தக் கூட்டம் மகரந்தத்தில் விழுந்த தேனீ போல எப்படி மயங்கிக் கிடக்கும் என்று,நூறடி தூரத்தில் உட்கார்ந்து நான் கற்பனை செய்தது,இப்போதும் என் நினைவுக்கு வருகிறது.

'காதிரிய்யா' ஆன்மீக வழியில் தொடர்பு கொண்டிருந்த அவர்,பெரும்பாலும் மார்க்க -- ஆன்மீகம் சார்ந்த உரைகளையே நிகழ்த்தினார்.இது சார்ந்த கருத்துகளைக் கையாள்வதில் அவரது உறுதியும்,பாணியும் அலாதியானது.அதேநேரத்தில்,எந்த தலைப்பையும் எடுத்தாள்வதில் வல்லவர்; அதில் தனக்கென ஒரு முத்திரையைப் பதிய வைப்பவர்.

பத்து அல்லது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு,அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமாவின் மாநாட்டில்,இரவு சுமார் 1 மணிக்கு 'குர்ஆனும்,அறிவியலும்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை,இன்று வரை என்னால் மறக்க முடியாதது.பன்மொழிப் புலமையும்,நினைவாற்றலும்,ஆழ்ந்த ஈடுபாடும் அவரது உரைகளுக்குப் பெரிதும் மெருகூட்டின.

'அவர் ஷாஃபி' மத்ஹபின் சட்ட நுணுக்கங்களில் விற்பன்னர்.ஹஜ்ஜின் போது, அந்நியப் பெண்கள் மீது கை கால்,பட்டுவிட்டால் 'ஒளு' முறியாது என்பதுதான் ஷாஃபி மத்ஹபின் சட்டம்' என தனக்குத் தெளிவுபடுத்தியது SSK ஹஜ்ரத் தான் என மேலப்பாளையம் காஜா முஈனுத்தீன் பாக்கவி கூறினார்.

அரசியல் ரீதியாக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து பணியாற்றி,மாநில துணைத் தலைவர் வரை பொறுப்பு வகித்தார்.

'கொடுத்துதவுவதில்' அவருக்கு நிகர் அவர்தான் அன்னாரைக் குளிப்பாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர்,'' எங்க உஸ்தாது எனக்கு துன்யாவையும் தந்தார்; ஆகிரத்தையும் தந்தார் ''  என்று புலம்பியதைக்கேட்டு பலரும் கண்கலங்கினர் '' என கோவை அப்துல் ஜலீல் இம்தாதி கூறினார்.

இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,புருனை,வளைகுடா நாடுகள் என... தமிழ் பேசும் மக்கள் வாழும் தேசமெங்கும் தீன் முழக்கம் செய்த அவர்,தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களிடம் இஸ்லாமிய மிதவாத கோட்பாடான' சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துக்களை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.துருக்கி,பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ள அவர்,பைத்துல் முகத்தஸிற்கு பல முறை சென்றுள்ளார்.

1983 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இடையில் ஒரு வருடம் தவிர்த்து,மற்ற அனைத்து வருடங்களிலும் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு அவர் பெற்றிருந்தார்.பெரும்பாலான பயணங்களில் ' ஸியாரா ' என்ற புனித தலங்களைத் தரிசிக்கும் வகையில் அமைத்துக்கொள்வது அவரது இயல்பு.

தென்காசி,கடையநல்லூரின் சிலம லெப்பை குடும்பத்தைச் சேர்ந்த சுலைமான் சாஹிபின் புதல்வரான SSK  ஹஜ்ரத் அவர்களுக்கு,ஹாஜிரா பேகம் என்ற மனைவியும்,அப்துல்லாஹ்,நூருத்தீன் என்ற இரு மகன்களும்,ராபியத்துல் பஸரியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.ஹஜ்ரத்தின் இன்னொரு மகளான மர்யம் என்பவர்,மதீனாவில் மரண மெய்து ஜன்னதுல் பகீஃ ' பூந்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 21, வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கடையநல்லூர் நைனார் முஹம்மது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற அவருடைய ' ஜனாஸா ' நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் நல்லடியார்கள் மீதும் மாறாத நேசம் கொண்ட அவரது வாழ்வும்,வார்த்தைகளும் தமிழ் முஸ்லிம் உலகத்தை நீண்டகாலம் ஆட்கொண்டிருந்தது என்பது, SSK ஹஜ்ரத்தின் வாழ்நாள் சாதனையாகும்.

அந்த நேசத்தையே அவரது மறு உலக வாழ்விற்கான ஆதாரமாக அல்லாஹ் ஆக்கிவைக்கட்டும்.

நன்றி ;-- கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத் (சமநிலைச் சமுதாயம்)

வெளியீடு ;--  மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, January 12, 2013

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் 1487 வது மீலாது விழா




முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!! முஸல்லியன்!!!!வமுஸல்லிமா!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான 
மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம்.

மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு தினங்களும் பயான் செய்யப்படும்,

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினான ஆண்கள்.பெண்கள் அனைவர்களும்,தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் 1487 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூறி,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்

Friday, January 11, 2013

தவறு செய்யனுமா? தாராளமாக! ஆனால்....?




பல்கு நாட்டுப் பேரரசராக இருந்து முடி துறந்த இறை ஞானி இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வழிகெட்ட ஒரு இளைஞன் வந்து,நான் வரம்பு மீறி நடந்துவிட்டேன்.பல பாவச் செயல்கள் புரிந்து விட்டேன் அதற்காக இப்போது மனம் வருந்துகிறேன். ஆனால் பாவத்தை விட்டும் விலகி வாழ வழி தெரியாமல் வகையற்று உங்கள் முன் வந்து நிற்கிறேன்.நான் திருந்தி வாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார்.

அதற்கு ஞானி மகான் அருளிய உபதேசம் இதோ.நீ ஐந்து காரியம் செய்ய சக்தி பெற்றிருந்தால்,தாராளமாக நீ தவறு செய்யலாம்.முதலாவது '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்க் -- உணவு எதையும் சாப்பிடாதே!'' இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவ்வாலிபன், '' அது எப்படி முடியும்? எது சாப்பிட்டாலும் அது அவனுடைய ரிஸ்க் -- உணவுதானே! அப்படியானால் அவனுடைய உணவையும் உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா? உண்ட வீட்டுக்கு இது இரண்டகமல்லவா? '' 

ஆம்!  நியாயமில்லைதான்.இரண்டாவது உபதேசத்தைக் கூறுங்கள்''. '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் -- இடத்திலும் தங்காதே! அவனுடைய நாட்டை -- இடத்தை விட்டும் முதலில் வெளியேறிவிடு.'' முன்பை விட இப்போது அதிர்ச்சி அடைந்த அவ்வாலிபன்,எங்கு இருந்தாலும்,சென்றாலும்,எல்லாம் அவனுடைய நாடாக -- இடமாக இருக்க,இது எப்படி சாத்தியமாகும்.என்னப்பா! அப்படியென்றால் அவனுடைய நாட்டில் - இடத்தில் இருந்து கொண்டே அவனுக்கு எதிராக பாவம் செய்யப் போகிறாயா? '' 

இல்லை.இல்லை செய்யமாட்டேன் செய்யவும் கூடாது,'' சரி சரி மூன்றாவது உபதேசம் சொல்லுங்கள்.நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்குத் தெரியாமல்,அவன் பார்க்காத இடமாகப் பார்த்து அங்கு போய் பாவம் செய்! ''  '' இது எப்படி முடியும் அவன் பார்வை படாத இடமே இவ்வுலகில் இல்லையே! அவன் அந்தரங்கங்களை அறிந்தவனாயிற்றே.'' நிச்சயமாக அவன் ரகசியத்தையும், அதை விட மறைவாக (மனதில்) இருப்பதையும் அறிகிறான்.'' (அல்குர்ஆன் 20 ; 7)

கும்மிருட்டில்,கறுப்புப் பாறையில் ஒரு கறுப்பு எறும்பு ஊர்ந்து போவதையும்,அவன் பார்ப்பவனாயிற்றே! '' அப்படியானால் அவன் பார்க்கிறான் என்று தெரியவே நீ அவனுக்கு மாறு செய்யலாமா நீ தனியறையில் யாருக்கும் தெரியாமல் தவறாக நடக்க முற்படும் போது, அந்த அறையினுள்ள ஒரு துவாரத்தின் வழியாக யாரோ ஒரு ஆள் உன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தால்,உன்னால் அங்கு தவறு செய்ய முடியுமா ? உனது உடம்பில் டெம்பரேச்சர் அப்படியே இறங்கிவிடாது! ஆம்! நீ வியர்த்து விறு விறுத்துப் போவாய்.உன்னால் அப்போது எந்த தவறும் செய்ய முடியாது.அப்படியானால் உன்னைப் போல ஒரு மனிதன் பார்க்கவே, தவறு செய்ய வெட்கப்படுபவன்,உன்னைப் படைத்த இரட்சகனாம் அல்லாஹ் பார்க்கின்றான் எனத் தெரிந்தும் வெட்க மில்லாமல் அவனுக்கு முன்னால் பாவம் செய்யலாமா ? இது தகுமா ?
கூடவே கூடாது! நான்காவதைக்கூறுங்கள்'' உனது உயிரைக் கைப்பற்ற மலக்குல் மவ்த் -- மரண தூதன் உன்னிடம் வந்தால் அவரிடம் கெஞ்சித் கூத்தாடி கொஞ்சம் டைம் -- தவனை கேள்! தௌபா -- பாவ மன்னிப்புக் கேட்டு மீட்சி பெறுவதற்கு ''

'' அது நடக்கவே நடக்காதே '' அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் '' (அல்குர்ஆன் 7 ; 34) 
என்று அல்லாஹ் கூறுகின்றானே.

'' மரணத்தை தள்ளி வைக்க முடியாது என்று தெரிந்திருக்கும் நீ, பாவத்தில் மூழ்கியிருக்கும் போது உனது மரண நேரம் வந்து விட்டால் உனது கதி என்னவாகும்''? '' விபச்சாரம் செய்பவன் அவன் விபச்சாரம் செய்யும் போது அவன் முஃமினாக -- இறை விசுவாசியாக இருக்கமாட்டான்.திருடன் திருடும்போது அவன் முஃமினாக இருக்க மாட்டான்.குடிகாரன் குடிக்கும்போது முஃமினாக இருக்கமாட்டான் '' (புகாரி ; 2475, முஸ்லிம் ; 57) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.ஈமானின் -- இறை நம்பிக்கையின் -- பிரகாசம் உன்னை விட்டும் விலகி இருக்கும் போது உனக்கு மரணம் வந்தால் உன் நிலை என்னவாகும்?

'' ஆகா! ரொம்ப ஆபத்தாகும்.ஐந்தாவது காரியத்தையும் கூறிவிடுங்கள்.''
நரகத்தின் காவலர்களான சபானிய -- மலக்குமார்கள்,வானவர்கள் உன்னை நரகத்திற்கு இழுத்துச் செல்ல உன்னிடம் வந்தால் நீ அவர்களுடன் போகாதே!''

இதுவெல்லாம் நடக்கக்கூடியதா? ஒருக்காலும் நடக்கமுடியாத காரியம்,எனக்கூறி அழ ஆரபித்த அவ்வாலிபர் முடிவில் போதும் போதும் ..... மகான் அவர்களே! நான்  இஸ்திஃக்பார் -- பாவ மன்னிப்பு அல்லாஹ்விடம் கேட்டு,அவனிடமே தௌபா -- மீட்சி பெறுகிறேன்.எனக்கூறி விடைபெற்றார்.

அதற்குப் பிறகு அவர் திருந்தி வாழ்ந்து இறை வணக்கத்திலே முழுமையாக ஈடுபட்டு இறை நேசரானார்.உண்மையான கடவுள் நம்பிக்கையாளன் ஒரு போதும் பாவம் செய்யவே மாட்டார்.அவனது கடவுள் மெய்யாகவும்,அவனது நம்பிக்கை உண்மையாகவும் இல்லாத போதுதான் அவன் பாவம் செய்ய முற்படுகின்றான்.

மெய்யான கடவுளின் வரைவிலக்கணம் அவன் அகிலங்களின் அதிபதி.அவனே படைத்தவன்.உணவளிப்பவன்.எங்கும் நிறைந்த அவனது ஞானம்,பார்வை படாத இடமே இல்லை.அவனுக்கு எங்கும் எதுவும் மறைவானது இல்லை.அவன் ஏகன் இணை துணையற்றவன்.அத்தகய அல்லாஹ்வின் பேரருள் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக! ஆமீன்!!! வஸ்ஸலாம்..

என்றும் தங்களன்புள்ள





மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

Tuesday, January 1, 2013

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்!



நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:


 (إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும் 
அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று'' (புஹாரி. முஸ்லிம்)

அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்?
அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான்.
إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا)) [رواه البخاري ح100، ومسلم 2673].

''நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  (புஹாரி. முஸ்லிம்)


இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறுவது:

قال ابن مسعود: عليكم بالعلم قبل أن يرفع، ورفعه هلاك العلماء، والذي نفسي بيده ليودن رجال قتلوا في سبيل الله أن يبعثهم الله علماء لما يرون من كرامتهم. [مفتاح دار السعادة 1/121].
يقول ابن مسعود: أتدرون كيف ينقص الإسلام؟ يكون في القبيلة عالمان، فيموت أحدهما فيذهب نصف العلم، ويموت الآخر فيذهب علمهم كله.
وعنه رضي الله عنه أنه قال: (أتدرون كيف ينقص الإسلام ؟ قالوا: كما ينقص الثوب، وكما ينقص سمن الدابة، وكما ينقص الدرهم. قال: إن ذلك لمنه. وأكبر من ذلك موت العلماء) [رواه الطبراني، وقال الهيثمي: رجاله موثوقون. مجمع الزوائد 1/202]

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதற்குமுன் அறிவை அவசியாமாக்கிக் கொள்ளுங்கள். அறிஞர்கள் மறைவதுதான் அறிவு உயர்த்தப்படுவதாகும்.
அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான தியாகிகள் கூட மறுமையில் ஆலிம்களாக எழுப்பப்படவேண்டுமென்று மிகவும் விரும்புவார்கள் ஏனெனில் மறுமையில் ஆலிம்களுக்கு அவ்வளவு மரியாதையும் சங்கையும் செய்யப்படும் என்பதை அறிந்துகொண்டதால்.
ஆலிம்கள் மறைவதன் மூலம் இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவிடும்.

ஆலிம்களின் மறைவு அகிலத்தின் முடிவு:

{أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا} [سورة الرعد الآية (41)] قال سيّدنا عبدالله بن عباس رضي الله عنه:نقصانها خرابها، وخرابها بموت علمائها وفقهائها وأهل الخير منها.
''பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?''
என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு குர்ஆன் விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்:
பூமியிலுள்ள ஆலிம்களும் சட்டக்கலை நிபுணர்களும் நல்லவர்களும் குறைந்துகொண்டே வருவதுதான் இங்கு குறிப்படப்பட்டுள்ளது.
எனவே،
 ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்:
((وموت العالم مصيبة لا تجبر، وثلمة لا تسد، ونجم طمس، وموت قبيلة أيسر من موت عالم)) [روى الطبراني في الكبير
நபி ஸல் கூறினார்கள்:
''ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு; நிரப்பமுடியாத பள்ளம்; ஒளியிழந்த விண்மீன். ஒரு கூட்டம் இறப்பது ஒரு ஆலிமின் இறப்பைவிட லேசானது.''     (தப்ரானி)

 قال رسول الله صلى الله عليه وسلم (فقيه أشد على الشيطان من ألف عابد) رواه الترمذي وابن ماجه وغيرهما. 
''ஆயிரம் வணக்கசாலிகளைவிட ஒரு மார்க்கசட்ட நிபுணர் ஷைத்தானுக்கு மிகக் கடுமையானவர்.'' (திர்மிதி, இப்னுமாஜா)

இந்த நபிமொழிக்கு விளக்கம் தந்த விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறுகிறார்கள்:


 إنّ الشياطين قالوا لإبليس: يا سيدنا مالنا نراك تفرح بموت العالم ما لا تفرح بموت العابد؟ والعالم لا نصيب منه والعابد نصيب منه؟ قال: انطلقوا، فانطلقوا إلى عابد فأتوه في عبادته، فقالوا: إنا نريد أن نسألك فانصرف، فقال إبليس: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ فقال: لا أدري، فقال: أترونه كفر في ساعة، ثم جاؤوا إلى عالم في حلقته يضحك أصحابه ويحدثهم فقالوا: إنا نريد أن نسألك، فقال: سل، فقال: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ قال: نعم، قالوا: كيف؟ قال: يقول كن فيكون. فقال: أترون ذلك لا يعدو نفسه، وهذا يفسد عليّ عالماً كثيراً، وفي رواية أخرى قال: فقال: أترون ذلك أترون؟ هذا يهدم في ساعة ما أبنيه في سنين (مفتاح دار السعادة لابن القيّم (2/69)

ஒருமுறை மற்ற ஷைத்தான்களெல்லாம் தலைவன் இப்லீசிடம் வினவினார்களாம்: ''ஒரு ஆபித் இறந்தால் மகிழ்ச்சியடையாத நீ ஒரு ஆலிம் இறந்தால் ஆனந்தத்தில் துள்ளுகிறாயே?''

''அதற்கு காரணம் இருக்கிறது. ஆபிதை (சுலபமாக வழிகெடுத்து ) நாம் நிறைய பலன் பெறமுடிகிறது. ஆனால் ஆலிமிடம் அவ்வாறு முடிவதில்லை. (வாருங்கள் இதைக் கண்கூடாகக் காட்டுகிறேன்)''
முதலில் ஒரு ஆபிதிடம் சென்றார்கள். அவரிடம் வினவினார்கள்:
''அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''எனக்குத் தெரியாது'' என்றார்.
''பார்த்தீர்களா? கண நேரத்தில் அவர் காஃபிராகிவிட்டதை (குஃப்ருடைய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை)!

அடுத்து ஒரு ஆலிமிடம் சென்றார்கள். அவர் தன் சகாக்களிடம் நகைச்சுவையாக உரையாடிக்கொண்டிருந்தார்.
இப்லீஸ் கேட்டான்: ''உம்மிடம் ஒரு கேள்வி. அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''நிச்சயமாக முடியும்''
''எப்படி?'' ''
''ஆகு! என்பான் அது ஆகிவிடும்''
''பார்த்தீர்களா? இவர் (எந்த நிலையிலும்) நிலை தவறாமல் இருப்பதை!'' இப்படித்தான் அதிகமான ஆலிம்கள் என்னை நிலைகுலைய வைத்துவிடுகின்றனர். நான் ஆண்டாண்டு காலம் சிரமப்பட்டு அமைத்ததை சிறிது நேரத்தில் தகர்த்துவிடுகின்றனர்'' என்றான் இப்லீஸ்.

அதுமட்டுமல்ல.. அண்ணல் நபி ஸல் அவர்களுக்கும் இப்லீஸுக்கும் நடந்த ஒரு நீண்ட உரையாடலில் ''உன் கோபத்திற்குரிய பிரதான எதிரிகள் யார் யார்? ''என்ற நபிகளாரின் கேள்விக்கு அவன் கூறிய பதிலில் முதலாவது இடம் நாயகம் ஸல் அவர்கள். இரண்டாவது அல்லாஹ்விற்காக தன்னை அற்பணித்த இளைஞன். மூன்றாவது பேணுதலுள்ள ஒரு ஆலிம். அதற்குப் பிறகு அவனது எதிரிகள் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான். அவ்வாறெனில் ஒரு இறையச்சமுள்ள ஆலிம் அல்லாஹ்விற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
நன்றி ;--மௌலானா சதக் மஸ்லஹி

வெளியீடு;--  மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.