Wednesday, January 16, 2013

' மூச்சடங்கிய கம்பீரம்'






மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா மறைவு.


SSK என்ற மூன்று எழுத்துகளில் பிரபலமாக அறியப்பட்ட முதுபெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், ஸஃபர் பிறை 5 (20.12.2012) வியாழன் அன்று மறைந்தார். ஓரிரு வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும்,இயலாமைக்கு ஆளாகிய இறுதி நிமிடம் வரை இஸ்லாமிய மார்க்க மேடைகளில் சங்கநாதம் செய்து கொண்டிருந்த, கம்பீரக் குரலுக்கும்,தோற்றத்திற்கும்,வாழ்விற்கும் சொந்தக்காரரான அவர்,பன்முக ஆற்றல் கொண்டவர்.

தஞ்சை மாவட்டம்,கிளியனூரில் பழமையான ' ரஹ்மானிய்யா ' அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய சமயக் கல்வியில் மௌலவி -- ரஹ்மானி' பட்டம் பெற்ற அவர்,கடையநல்லூர் அருகிலுள்ள 'பாம்புக் கோவில் சந்தை' என்ற கிராமத்தில் இமாமாக தன்னுடைய மார்க்க சேவையைத் தொடங்கினார்.

பின்னர் இரண்டு வருடம் நெல்லை பேட்டையில் உள்ள 'ரியாழுல் ஜினான்' அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு,1970 இல் காயல் பட்டினத்திலுள்ள புகழ் பெற்ற 'மஹ்ழரா'  அரபுக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். தனது வாழ்வின் இறுதி நிமிடம் வரை அங்கேயே அவர் பணியாற்றினார்.சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,இயலாத நிலையிலேயே விமானத்தில் சென்று கடந்த ஆண்டு மஹ்ழராவில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாகும்.

தமிழகம் கண்ட மேடைப் பேச்சாளர்களில் செம்மொழி  உரையாளர் அவர் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது அதற்கு அப்துல் கலாம் அழைக்கப்படவில்லையே' என தமிழகம் வருத்தப்பட்டது.SSK  அழைக்கவில்லையே என்று நான் வருந்தினேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் பேசும் உலகமெங்கும் தேனினிய சொற்களில் தேக்கு நிகர் கருத்துகளைப் பேசி, தமிழ் மொழியைச் செம்மைப் படுத்திக் கொண்டிருந்த குரலுக்குச் சொந்தக்காரர் அவர்.பரந்து விரிந்த செம்மொழி மாநாட்டின் மேடையில் SSK  வின் குரல் ஒலித்தால் எப்படி இருக்கும்?அந்தக் கூட்டம் மகரந்தத்தில் விழுந்த தேனீ போல எப்படி மயங்கிக் கிடக்கும் என்று,நூறடி தூரத்தில் உட்கார்ந்து நான் கற்பனை செய்தது,இப்போதும் என் நினைவுக்கு வருகிறது.

'காதிரிய்யா' ஆன்மீக வழியில் தொடர்பு கொண்டிருந்த அவர்,பெரும்பாலும் மார்க்க -- ஆன்மீகம் சார்ந்த உரைகளையே நிகழ்த்தினார்.இது சார்ந்த கருத்துகளைக் கையாள்வதில் அவரது உறுதியும்,பாணியும் அலாதியானது.அதேநேரத்தில்,எந்த தலைப்பையும் எடுத்தாள்வதில் வல்லவர்; அதில் தனக்கென ஒரு முத்திரையைப் பதிய வைப்பவர்.

பத்து அல்லது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு,அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமாவின் மாநாட்டில்,இரவு சுமார் 1 மணிக்கு 'குர்ஆனும்,அறிவியலும்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை,இன்று வரை என்னால் மறக்க முடியாதது.பன்மொழிப் புலமையும்,நினைவாற்றலும்,ஆழ்ந்த ஈடுபாடும் அவரது உரைகளுக்குப் பெரிதும் மெருகூட்டின.

'அவர் ஷாஃபி' மத்ஹபின் சட்ட நுணுக்கங்களில் விற்பன்னர்.ஹஜ்ஜின் போது, அந்நியப் பெண்கள் மீது கை கால்,பட்டுவிட்டால் 'ஒளு' முறியாது என்பதுதான் ஷாஃபி மத்ஹபின் சட்டம்' என தனக்குத் தெளிவுபடுத்தியது SSK ஹஜ்ரத் தான் என மேலப்பாளையம் காஜா முஈனுத்தீன் பாக்கவி கூறினார்.

அரசியல் ரீதியாக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து பணியாற்றி,மாநில துணைத் தலைவர் வரை பொறுப்பு வகித்தார்.

'கொடுத்துதவுவதில்' அவருக்கு நிகர் அவர்தான் அன்னாரைக் குளிப்பாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர்,'' எங்க உஸ்தாது எனக்கு துன்யாவையும் தந்தார்; ஆகிரத்தையும் தந்தார் ''  என்று புலம்பியதைக்கேட்டு பலரும் கண்கலங்கினர் '' என கோவை அப்துல் ஜலீல் இம்தாதி கூறினார்.

இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,புருனை,வளைகுடா நாடுகள் என... தமிழ் பேசும் மக்கள் வாழும் தேசமெங்கும் தீன் முழக்கம் செய்த அவர்,தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களிடம் இஸ்லாமிய மிதவாத கோட்பாடான' சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துக்களை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.துருக்கி,பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ள அவர்,பைத்துல் முகத்தஸிற்கு பல முறை சென்றுள்ளார்.

1983 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இடையில் ஒரு வருடம் தவிர்த்து,மற்ற அனைத்து வருடங்களிலும் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு அவர் பெற்றிருந்தார்.பெரும்பாலான பயணங்களில் ' ஸியாரா ' என்ற புனித தலங்களைத் தரிசிக்கும் வகையில் அமைத்துக்கொள்வது அவரது இயல்பு.

தென்காசி,கடையநல்லூரின் சிலம லெப்பை குடும்பத்தைச் சேர்ந்த சுலைமான் சாஹிபின் புதல்வரான SSK  ஹஜ்ரத் அவர்களுக்கு,ஹாஜிரா பேகம் என்ற மனைவியும்,அப்துல்லாஹ்,நூருத்தீன் என்ற இரு மகன்களும்,ராபியத்துல் பஸரியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.ஹஜ்ரத்தின் இன்னொரு மகளான மர்யம் என்பவர்,மதீனாவில் மரண மெய்து ஜன்னதுல் பகீஃ ' பூந்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 21, வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கடையநல்லூர் நைனார் முஹம்மது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற அவருடைய ' ஜனாஸா ' நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் நல்லடியார்கள் மீதும் மாறாத நேசம் கொண்ட அவரது வாழ்வும்,வார்த்தைகளும் தமிழ் முஸ்லிம் உலகத்தை நீண்டகாலம் ஆட்கொண்டிருந்தது என்பது, SSK ஹஜ்ரத்தின் வாழ்நாள் சாதனையாகும்.

அந்த நேசத்தையே அவரது மறு உலக வாழ்விற்கான ஆதாரமாக அல்லாஹ் ஆக்கிவைக்கட்டும்.

நன்றி ;-- கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத் (சமநிலைச் சமுதாயம்)

வெளியீடு ;--  மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment