மனிதன் சிறந்தவன்
நான் சிறந்த மனிதன்
இப்படி எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் நீங்கள் எப்பொழுது சிறந்த மனிதனாகி சந்தஷோப்பட்டுக் கொள்ள முடியும்?
ஆதமுடைய மக்களை நாம் கண்ணியப்படுத்தினோம் என்று அல்லாஹ் {17 ;70} கூறுகிறான்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ
இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரங் களைத் தேடுவதிலே தேவையான அறிவையும், ஆற்றலையும் அவன் பெற்றிருக் கிறான்.அதனால் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியுமா? என்றால், இது மாதிரியான ஆற்றலையும், அறிவையும் உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களுக்கும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.
قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى
உலகத்தில் வாழுகின்ற எல்லா உயிரினங்களுக்கும், தாங்கள் எப்படி வாழ வேண்டும், தங்கள் உணவுகளை எப்படித் தேட வேண்டும் என்ற அறிவையும் அதற்குத் தேவையான ஆற்றலையும், அல்லாஹ் கொடுத்து வைத்திருக்கிறான். எனவே நாம் இந்த வகையில் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது.
தேளுக்கும்,தேரைக்கும் உணவளித்த அல்லாஹ் அவைகளை எங்கே எப்படித் தேட வேண்டும் என்பதையும் அறிவித்துக் கொடுத்தான்
தேளுக்குறிய உணவுகளில் மிகவும் பிடித்த உணவு {நமக்கு பிரியாணியைப் போல} அதற்கு கரப்பான் பூச்சி.அதைப் பார்த்து விட்டால் அதற்குக் கொண்டாட்டம் தான். உடனே அதனை கபளிகரம் செய்து விடும்.
கரப்பான் பூச்சி நடக்கும், ஒடும். தேவைப்பட்டால் பறக்கும். ஆனால் தேள் மெதுவாக ஊர்ந்து செல்லும்.பறக்கவோ,வேகமாக ஓடவோ முடியாது. அது எப்படி கரப்பான் பூச்சியை வேட்டையாட முடியும்? என்றால், அல்லாஹ் தேளுக்கு வசீகரம் செய்யும் ஒரு யுக்தியை அதற்கு கொடுத்திருக்கிறான். கரப்பான் பூச்சியைக் கண்டவுடன் கொடுக்கை மேலே தூக்கி அது நடனமாட ஆரம்பித்து விடும். அந்த நடனத்தைப் பார்த்து கரப்பான் பூச்சி அதன் அழகிலே மயங்கி,சொக்கிப் போய் அப்படியே நின்று விடும். அழகுக்கும், நடனத்திற்கும் மயங்காதோர் இந்தப் பாரில் உண்டோ! இந்த ஆட்டத்தைப் பார்த்து மயங்கிய அந்த கரப்பான் பூச்சியை தனது கொடுக்கால் ஒரு போடு போட்டு மயக்க நிலையில் வைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து சுவைத்து உண்ணும்.
உலகில் மனிதன் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எறும்புகள் வாழ்ந்துள்ளன.அவை எட்டாயிரத்திற்கும் அதிகமான இனங்களாக உள்ளன.எறும்புகள் தன் எடையை விட ஐம்பது மடங்கு அதிகமான பளுவான பொருட்களையும் நகர்த்த முடியும்.எறும்புகளுக்கு ஆறு கால்களுண்டு.அந்தக் கால்களால் பூமியைத் தோண்டி புற்றுகள் அமைத்துக் கொள்ளும். உலகில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் பிராணிகள் நான்கு ; மனிதன்,எலி,ஹுத்ஹுத் பறவை,எறும்பு.
எறும்பு குளிர் காலத்திற்குத் தேவையான தன்னுடைய உணவை கோடை காலத்திலேயே சேமித்து வைத்துக் கொள்ளும். ஏனெனில் மழை காலத்தில் இரை தேட முடியாத காரணத்தினால் அது வெளியே வருவதில்லை. மண்ணுக்கடியில் சேமித்து வைக்கப்படும் விதை முளைத்து விடக்கூடாது என்பதற்காக அதை இரு துண்டாக உடைத்து விடும். அப்போது தான் அது முளைக்காது. மழை பெய்து முடிந்து விட்டால் ஈரமாகி விட்ட அந்த உணவுப் பொருட்களை மேலே எடுத்து வந்து பரப்பி காய வைக்கும்.காய்ந்த பின் மீண்டும் பொந்தில் எடுத்து வைத்துக் கொள்ளும். ஆக எறும்புக்கும் தேளுக்கும் கூட இரை தேடக்கூடிய அறிவும் அதை பாதுகாக்கக் கூடிய அறிவும் இருக்கிறது.
பாம்பு பாலை வனத்தில் இரை கிடைக்க வில்லையெனில் தன்னை மரக்கட்டை மாதிரி ஆக்கி அப்படியே கிடக்குமாம். அப்போது அதன் மீது வந்து அமரும் பறவைகளை அடித்துத் திண்ணும்.
முதலைக்கு பல் வலி வரும். அதன் பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் இறைச்சி தான் காரணம்.இப்போது முதலைக்கு பல் குத்த வேண்டும்.யார் குத்தி விடுவது? அது தானாக குத்த முடியாது. அதற்கு கை இல்லை.வேறு யாரும் குத்த வந்தால் அது சும்மா விடுமா?அதற்காக அதை படைத்தவன் பல்வலியோடு அதை சும்மா விட்டு வைப்பானா...? அதனால் பல் வலி அதிகமாகும் போது அது கரைக்கு ஒதுங்கி தனது அகன்ற வாயை திறந்து வைத்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் அப்படியே கிடக்கும். அப்போது குக்கூ என்ற ஒரு பறவை அதன் வாயில் அமர்ந்து அதன் பற்களுக்கு இடையே இருக்கும் இறைச்சியை தனது அலகால் கொத்திக் கொத்தித் திண்ணும்.முதலைக்கு இப்போது சுகமாக இருக்கிறது. பறவைக்கு அது உணவாக இருக்கிறது.இடுக்கிலுள்ள இறைச்சியை பறவை எடுத்து திண்ணதும் பல் வலியிருந்து சுகம் பெற்ற நன்றி கெட்ட முதலை தனக்குப் பல் மருத்துவம் பார்த்த அந்தப் பறவையை சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்டு வாயை மூடப் போகும். அப்போது அந்தப் பறவையின் தலைக்கு மேலே கூர்மையான ஒரு எலும்பு தள்ளிக்கொண்டிருக்கும். அது முதலையின் வாயில் குத்த ஆ..... என்று அது திரும்ப வாயைப் பிளக்க பறவை தப்பிக்க பறந்து விடும்.
இப்படி முதலைக்கு பல் குத்துவதற்கு வகை செய்த அல்லாஹ்,அந்த பறவைக்கு முதலையின் பல் இடுக்கில் உணவு கொடுத்த அல்லாஹ்,அதன் தலையில் தற்காப்புக்காக ஊசி எலும்பை வைத்த அல்லாஹ் எல்லாப் படைப்புகளுக்கும் வாழ வழிவகை செய்திருக்கிறான். எனவே மனிதன் வாழ்வாதாரம் தேடி தன்னைத் அவன் தற்காத்துக் கொள்கிறான் என்பதினால் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியாது அல்லவா......!
மனிதனுக்கு அறிவு இருக்கிறது என்ற காரணத்தினால் அவன் சிறந்தவனா?மனிதனுக்குத் தெரியாத அடிப்படையான சில விஷயங்கள் கூட மற்ற உயிரினங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதிலிருந்து மனிதன் பாடம் பெற்றிருக்கிறான்.
உலகத்தின் முதல் மனித வரலாறு இதற்கு சான்று. ஆதம் (அலை) அவர்களின் இரண்டு மகன்களில் காபில் என்பவர் ஹாபிலைக் கொலை செய்து விடுகிறார். கொலை செய்து விட்டு அந்தப் பிரேதத்தை என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரிய வில்லை. பிரேதத்தை தோளிலே போட்டுக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சுமந்து திரிகிறார்.அப்போது அல்லாஹ் ஒரு காகத்தின் வழியே அவருக்குக் கற்றுக் கொடுத்தான்.
فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْأَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْأَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِين
َ
தன் சகோதரனின் பிரேதத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காட்டுவதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்.அது பூமியைத் தோண்டியது.{அதைப் பார்த்த} அவர்அந்தோ! நான் இந்தக் காகத்தைப் போன்று ஆகுவதற்குக் கூட இயலாது போகி விட்டேனே!அப்படியிருந்தால் என் சகோதரனின் பிரேதத்தை மறைத்திருப்பேனே! என்று கைசேதப்படுபவராக ஆகிவிட்டார். அல்குர்ஆன். {5 ; 31}மனிதனுக்கு பிரேதத்தைப் புதைக்கும் அறிவை காகம் கற்றுக் கொடுத்தது. இந்த வகையில் காகம் தான் மனிதனுக்கு முதல் ஆசிரியன்.
நபி மூஸா (அலை) அவர்கள் ஞானத்தைத் தேடி கிழ்ர் (அலை) அவர்களிடம் சென்றார்கள். கப்பலிலே அந்த ஆன்மீகப் பயணம் தொடங்குகிறது, அந்தப் பயணத்தில் சிட்டுக்குருவி ஒன்று கப்பலின் விளிம்பில் வந்து அமர்ந்து, அந்த கடலில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை கொத்தியது. அப்போது பாடம் ஆரம்பித்து விட்டது, அங்கே புத்தகம் இல்லை. அங்கு பாடப் புத்தகமே அந்தச் சிட்டுக்குருவி தான். கிழ்ர்{அலை} அவர்கள் மூஸா (அலை) அவர்களிடத்தில் சொன்னார்கள் ; கல்வி என்பது இந்தக் கடல் அளவு என்றால் நாம் பெற்றிருக்கும் கல்வி என்பது இந்தக் சிட்டுக்குருவியின் அலகில் ஒட்டியிருக்கும் தண்ணீர் சொட்டின் அளவு தான். இங்கே சிட்டுக் குருவியின் மூலமாக அல்லாஹ் பாடம் கற்பித்துக் கொடுத்தான்.
இன்று உலக நாடுகளில் பல்வேறு துறைகள் இருந்தாலும், உளவுத் துறை என்பது எல்லா நாட்டிலும் இருக்கக்கூடிய முக்கியமான துறைகளில் ஒன்று. ஒரு நாட்டுக்கு எதிரான செய்திகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய முக்கியமான தகவல்களை சேகரிக்கும் அந்த உளவுத்துறை மனிதனுக்கு சொந்தமானது, மனிதனுக்கு மட்டும் விஷேசமானது என்று சொல்லமுடியுமா .....?அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டை சுலைமான் (அலை) அவர்களுக்கு ஹுத்ஹுத் பறவை சொன்னதாக குர்ஆன் சொல்கிறது.
وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ الي اخر قصة بلقيس
மட்டுமல்ல,அந்தப் பறவை வானில் உயரத்தில் பறந்தாலும் பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் அறிவையும், தெளிவையும் பெற்றிருக்கிறது. நிலத்தில் நீர் ஓட்டம் எங்கிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றால் கருவி வேண்டும். ஆனால் அது கருவி இல்லாமலேயே பார்த்து விடுகிறது. இந்த விஷயத்தில் நாம் பறவையை விட தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறோம்.
மனிதனுக்கு மருத்துவ ஞானம் இருக்கிறது என்பதால் சிறந்தவன் என்று சொல்ல முடியுமா?முடியாது.ஏனெனில் எல்லா உயிரினங் களுக்கும் தன் உடல் நலத்தைப் பாதுகாக்கும் தேவையான அறிவு இருக்கிறது.
தேவ்பந்த தாருல் உலூமின் துணை வேந்தராக இருந்த காரி தைய்யிப் ஸாப் அவர்கள் ஒரு அனுபவத்தைக் குறிப்பிடுகிறார்கள். அயோத்தியாவில் குரங்குகள் அதிகம்.வீடுகளில் அது புகுந்து செய்யும் தொல்லைகளும் அதிகம்.{குற்றால குரங்குகளில் நமக்கும் இந்த அனுபவம் உண்டு} உணவுகளை பத்திரமாக பாதுகாக்க முடியாது.அது வந்து எடுத்துச் சென்று விடும். அதற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து ரொட்டியில் விஷம் கலந்து அதை வீட்டு மொட்டை மாடியில் பரத்தி வைத்தார்கள்.
ஒரு குரங்கு வந்தது.அது அதை எடுத்து சாப்பிடப் போனது. தொடர்ந்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கு அங்கே ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வந்த குரங்கு அந்த ரொட்டியை எடுத்து சாப்பிடாமல் அதை எடுத்து நுகர்ந்து பார்த்தது.பிறகு அதை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டது.
ஆகா.....! திட்டம் தோல்வியுற்று விட்டதே என்று எண்ணிக் கொண்டிருக் கையில் சென்ற குரங்கு அங்கு பெரிய பட்டாளத்தோடு திரும்பி வந்து சேர்ந்தது.வந்த எல்லா குரங்கின் கையிலும் ஒரு செடி இருந்தது. ரொட்டியை ஒரு கடி,செடியில் ஒரு கடி. அது விஷ முறிவு மூலிகைச் செடி.வீட்டுக் காரனைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே எல்லா ரொட்டிகளையும் திண்ணுத் தீர்த்து ஏப்பம் விட்டு பை பை சொல்லிச் சென்று விட்டது.
வீட்டுக்காரன் அதற்கு புத்தி புகட்ட நினைத்தால் அது அவனுக்கு புத்தி புகட்டிச்சென்று விட்டது.இங்கே மனிதன் குரங்கிடம் ஏமாந்தான்.
எனவே எல்லா உயிரினங்களுக்கும் உடல் நலம் காக்கும் மருத்துவ அறிவு தேவையான அளவு இருக்கிறது.எனவே மனிதன் மருத்துவ ஞானத்தாலும் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியாது.
திரை கடல் ஒடி திரவியம் தேடுவதில் நாம் சிறந்தவர்கள் என சொல்ல முடியுமா....?
இதில் கடல்வாழ் மீனினங்களும்,வான் பறவைகளும் நமக்கு சளைத்தவர்கள் அல்ல.
ஐரோப்பா கண்டத்திலிருந்து சற்றும் ஒய்வெடுக்காமல் திசை தப்பாமல் வேடந்தாங்களுக்கு வருடந்தோறும் அதிசயமான முறையில் வரும் பறைவைகளை நாம் பார்த்திருக்கிறோம். உலகத்தில் வாழும் மொத்த பறவைகளில் ஐந்தில் ஒரு பங்கு குளிர்காலத்தில் இப்படி பரதேசம் போகின்றன. அண்டார்ட்டிக்கா வின் ஸ்கூவா பறவைகள் ஜப்பானுக்கு போகின்றன.
குக்கூ பறவை நியூசிலாந்திலிருந்து சாலமன் தீவுகளுக்கு பறந்து போகின்றன. சில பறவைகள்,ஆச்சரியம், நடந்து கூட போகின்றன.
வைட்டாக்கி என்னும் பறவைகள் நதிகளை கடக்கும் போது மட்டும் பறந்து, மற்ற நேரங்களில் நடந்தே செல்கின்றன. ஆர்ட்டிக் டெர்ன் என்பது படு ஆச்சரியப்பறவை. வருஷத்திற்கு இரு முறை வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை போகிறது.
பறவை மட்டுமல்ல, மிருகங்களும் கூட.....! மீன் வகைகளும் திமிங்கலங்களும் கூட இவ்வாறு பயணம் செய்கிறது. எல்லாமே குளிர்காலத்தை தவிர்ப்பதற்காகவும்,உணவு தேடுவதற்காகவும் இப்படி தூரப்பயணம் செய்கின்றன. இவற்றால் எப்படி வருடம் தவறாமல் திசை பிசகாமல் ஒரே இடத்திற்கு சென்று திரும்ப வர முடிகிறது.....?ஆராய்ச்சி செய்கிறார்கள். கிரேமர் என்பவர் குறிப்பாக பல பரிசோதனைகள் செய்திருக்கிறார்.
பறவைகளுக்குள் ஒருவிதமான காலபரிமாணம் இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். காலத்தைப்பற்றிய உள்உணர்வு இல்லாவிட்டால் இம்மாதிரி பயணம் செய்ய முடியாது. கிரேமரின் பரிசோதனைகள் பறவைகள் சூரியனின் திசைகளைக் கொண்டு பறக்கலாம் என்று நிருபித்தன. திருகுர்ஆனின் 20; 50 வது வசனத்திற்கான விளக்கமாக அமைந்த இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளும் நிரூபனங்களும் சொல்லும் செய்தி என்ன வென்றால், எல்லா உயிரினங்களும் வயிறு வளர்க்கவும், பிழைக்கவும்,உயிர் வாழவும் வழிவகைகள் தெரிந்திருகின்றன. எனவே வையகத்தில் வெறுமனே இப்படி உயிர் வாழ்வதால் மட்டும் மனிதன் சிறந்தவன் என்று கருதி விட முடியாது.
இன்னும் நாம் சிந்தித்துப் பார்த்தால் சின்னஞ் சிறிய பிராணிகளிடம் கூட மனிதனிடம் இல்லாத நேயங்களும்,இனம் காக்கும் உணர்வுகளும் அதிகம் இருக்கிறது.
அதே சுலைமான் {அலை} அவர்களைப் பற்றி இன்னொரு செய்தியும் குர்ஆனில் பதிவாகியிருக்கிறது. படைபரிவாரங்களோடு நபி சுலைமான் (அலை) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு எறும்பு சொன்ன செய்தி ;
قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ
ஆட்சியும்,ஆதிகாரமும் மனிதனுக்கு மட்டுமல்ல எறும்புக்குக் கூட இருக்கிறது, நமக்கு மட்டுமல்ல எறும்புகளுக்கும் அதிகாரம் செய்யும் ஒரு ஆட்சித் தலைவர் இருக்கிறார். தலைமைக்குக் கட்டுப்படுகின்ற தன்மை மனிதனை விட எறும்புக்கு நல்லவே இருக்கிறது என்பதை சுலைமான் {அலை} அவர்களுக்கு அல்லாஹ் அந்த எறும்பின் மூலம் உணர்த்தினான்.
தன் இனம் வாழ வேண்டும்,அது அழிந்து விடக்கூடாது என்ற கவலையும்,சமுதாய சிந்தனையும் அந்த எறும்புக்கு இருந்த காரணத்தினால், தன் இனத்திற்காக அது செய்த உத்தரவை குர்ஆனில் அல்லாஹ் பதிவு செய்திருக்கிறான்.
எறும்பு பார்ப்பதற்கு ஒரு சின்னப் பிராணியாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட எறும்புக்குக் கூட ஒரு ஆட்சியும்,கட்டமைப்பும் இருக்கிறது. தலைமைக்குக் கட்டுப்படுகின்ற தன்மை இருக்கிறது,சோம்பேறித்தனம் இல்லாத சுறுசுறுப்பு இருக்கிறது.
எறும்புகளுக்கு தன் இனத்தைக் காக்க வேண்டும்,வாழ வைக்க வேண்டுமென்ற சமூக சிந்தனையும் உண்டு.உணவிருக்கும் இடம் ஒரு எறும்புக்கு தெரிந்து விட்டால் மற்ற எறும்புகளையும் அழைத்து வந்து அவ்வுணவுப் பொருட்களை சாப்பிடும்.பிறகு எஞ்சியதை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதைப் பார்க்கிறோம்.
எனவே நாம் சிறந்தவர்கள் என அல்லாஹ் சொல்வதற்கும், நாம் கருதுவதற்கும் என்ன காரணம் என்பதை நாம் சிந்தித்தால், அதற்கான விடையை திருக்குர்ஆன் {2 ; 30} நமக்குத் தருகிறது.
إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
“மனிதன் இந்த உலகத்தில் என்னுடைய பிரதிநிதி” என்று அல்லாஹ் கூறுகிறான்.
பிரதிநிதி என்றால் பிரதிபலிப்பவன். ஆகவே அல்லாஹ்வுடைய பிரதிநிதியான மனிதன் அவனை தன்னில் வெளிப்படுத்தி அவனை பிரதிபலிக்க வேண்டும். ஒரு நாட்டினுடைய பிரதிநிதியாக இன்னொரு நாட்டிற்கு செல்லக் கூடிய தூதர் தனது நாட்டினுடைய கருத்தை அங்கே பிரதிபலிக்கிறார். தனது சொந்த நாட்டினுடைய சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் அங்கே அவர் எடுத்துச்சொல்கிறார்.
அல்லாஹ்வுடைய பிரதிநிதியாக இருக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை பிரதிபலிக்க வேண்டும். அல்லாஹ்வை எப்படி பிரதிபலிக்க வேண்டும்..?அல்லாஹ்வுக்கு கோலம் இல்லை. ஆனால் குணங்கள் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு தன்மைகள் இருக்கிறது. அந்த தன்மைகளை நாம் நம்மில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.
تخلقوا باخلاق الله
சூரியன் உதிக்கிறது.பாறையில் விழுகிறது.பாறையில் விழுகின்ற சூரியன் தெரிவதில்லை.ஆனால் தெளிந்த நீரோடையில் விழுகின்ற சூரியன் அதிலே தெரிகிறது.ஏனென்றால் அந்த நீர் தெளிந்திருக்கிறது. அதனால் அப்படியே பிரதிபலிக்கிறது.
இதுமாதிரி நம்முடைய இதயத்தை தெளிவானதாக ஆக்கினால், நம்முடைய இதயமும் இறைபண்புகளை உள்வாங்கி ஜெகத்தில் ஜொலிக்கும்.
மோசமான தீய குணங்களை இதயத்தை விட்டும் அகற்றி மனதோடு போராடி ஆசை, கோபம், காமம் இது மாதிரியான பொல்லாத அம்சங்களை அதை விட்டும் அகற்றி அதை நாம் பரிசுத்தப்படுத்தினால் இந்த பிரபஞ்சமே அதில் பிரதிபலிக்கும் என்ற உண்மையை நாம் அதில் பார்க்கிறோம்.
அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் மஸ்னவி ஷரீபில் எழுதுகிறார்கள் ; ரோமானியர்கள், சீனர்கள் இருவருமே ஒவியக்கலையில் ரொம்ப கைதேர்ந்த நிபுணர்கள். சிறந்த முறையில் ஒவியம் வரையக்கூடியவர்கள். அந்த நாட்டின் அரசரிடத்தில் வந்து எங்கள் கலையில் நாங்கள் சிறந்தவர்கள் என்று இரண்டு பேருமே போட்டி போட்டார்கள். எனவே அதை நிரூபிப்பதற்காக வேண்டி ஒரு பெரிய கட்டிடத்தின் இரண்டு சுவர்களில் ஒன்றை சீனரிடத்திலும் மற்றொரு சுவரை ரோமரிடத்திலும் ஒப்படைக்கப்பட்டது. இடையில் திரையிடப்பட்டு மறைக்கப்பட்டது-
ஒவ்வொருவரும் தங்களது ஒவியத்திறனை வெளிப்படுத்தி வரையுங்கள். நான் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு இறுதியாக அரசர் வந்து பார்க்கிறார். ஆரம்பமாக சீனர் வரைந்த அந்த ஒவியத்தைப் பார்த்து அதிசயித்துப் போன அரசர் பிரமித்துப் போய் நிற்கிறார்.
ஒரு அழகான தோட்டம். அதிலே பல மரங்கள் இருக்கிறது. பழ வகைகள் பூத்து காய்த்து கனிந்து குலுங்கித் தொங்கிக் கொண்டிருக்கிறது, பறவைகளெல்லாம் அதிலே வந்து அமர்ந்திருக்கிறது. தத்ரூபமான இந்த காட்சியை அந்த சீனர்கள் அந்த ஒவியத்தில் வரைந்து அரசரை அசத்தி விட்டார்கள்.
இப்படியே பிரமித்துப் போன அரசரவர்கள் திரையை நீக்கி இந்த பக்கம் பார்த்தால் அதை விடவும் அதிசயமாக ஒன்றை பார்த்தார். ஏனென்றால் அங்கே பார்த்த அதே படத்தை இங்கே அப்படியே பார்த்தார். அங்கே கண்ட அதே காட்சி இங்கே தெரிகிறது. ஆனால் அங்கே இல்லாத ஒரு அழகு இங்கே இருக்கிறது. அங்கே இல்லாத ஒரு வெளிச்சம் இங்கே பிரகசிக்கிறது.
என்ன நடந்தது என்று......பார்த்தால் ரோமர்கள் படம் வரைவதை விட்டு விட்டு அந்த சுவற்றை செதுக்கி பட்டை தீட்டி அதை பளபளவென்று கண்ணாடியாக ஆக்கிவிட்டிருந்தார்கள். கண்ணாடியாக ஆகிவிட்டதால் அந்த பக்கம் சுவற்றில் உள்ளது அப்படியே பிரதிபலித்து இங்கே பார்க்க முடிந்தது. சீனர்கள் தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தினார்கள், ரோமர்கள் மதி நுட்பத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இதயத்தை இவ்வாறு நாம் செதுக்கி,தெளிவாக்கி நாம் அதை அழகாக்கினால், நம் உள்ளத்திலும் அகிலத்தின் கோலத்தை, அல்லாஹ்வின் அற்புதத்தை தரிசிக்க முடியும். இந்த உலகத்தில் நாம் அல்லாஹ்வுடைய குணங்களான சகிப்புத் தன்மை, மதிக்கின்ற தன்மை, இரக்கம் செலுத்துகிற தன்மை, தனக்கு மாறு செய்தவருக்குக் கூட இரக்கம் காட்டுகிற தன்மை இது மாதிரியான உயர்ந்த பண்புகளை நம்மிடத்தில் உருவாக்கி நம்மில் அல்லாஹ்வை பிரதிபலிக்கச் செய்தால் தான் அல்லாஹ்வினுடைய பிரதிநிதியாக அல்லாஹ்வை பிரதி நிதித்துவப்படுத்தக் கூடிய உண்மையான சிறந்த மனிதனாக நாம் ஆக முடியும்.
“உனது உறவை வெட்டியவனோடு நீ ஒட்டிக்கொள். உனக்கு அநீதமிழைத்தவனை மன்னித்து விடு. உனக்கு தீங்கு செய்தவனுக்கும் நீ உபகாரம் செய்” நபிமொழி.
صل من قطعك واعف عمن ظلمك واحسن من اساء اليك
வேகத்தோடு நகருக்கு வருகிறான். அப்போது நகரத்தில் உள்ள மக்கள் மஹானை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். அதுகண்டு அதிர்ச்சியுற்ற குதிரை வீரன் நாம் நைய்யப்புடைத்த இந்த மனிதருக்கு இவ்வளவு வரவேற்பா? அப்படியென்றால் இவர் யார்? இவர் தான் பல்க் நாட்டின் பேரரசராக இருந்து முடி துறந்த இறைஞானி இப்ராஹீம் பின் அத்ஹம் என்று சொல்லப்பட்டது. அப்போது வேதனைப்பட்டு, நானிக்குருகி மஹானிடத்தில் சென்று மன்னிப்பு கேட்டான்.
நீங்கள் யார் என்று தெரியாமல் தவறு நடந்து விட்டது.என்னிடம் நீங்கள் உங்களைப் பற்றி அடிமை என்று சொன்னீர்கள்? அதனால் நடந்த விபரீதம் அல்லவா இது! ஏன் அப்படிச் சொன்னீர்கள்?. அதற்கு இறைஞானி அவர்கள்,அடிமையா?எனக்கேட்டீர். ஆம் என்றேன்.யாருக்கு அடிமை? என்று கேட்கவில்லை.கேட்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அடிமை என்று சொல்லியிருப்பேன் என்றார்.என்னை மன்னித்து எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கரைந்துருகி கேட்ட போது என்னை அடிக்கத் தொடங்கிய போதே உன்னை மன்னித்து உனக்கு சொர்க்கம் கிடைக்க பிரார்த்தனை செய்து விட்டேன் என்று சொன்னார்கள்.
அவன் உங்களுக்கு அநியாயம் செய்திருக்க அவனுக்காக இப்படியொரு பிரார்த்தனையா?எனக் கேட்கப்பட்ட போது, அவன் மூலமாக எனக்குத் தீங்கு ஏற்பட்டது. நான் மன்னிக்கவில்லை யெனில் என் காரணமாக அவனுக்குத் தீங்கு ஏற்படும் அல்லவா!
அப்படியென்றால் இருவருக்கும் மத்தியில் என்ன வித்தியாசம்? மேலும், நான் பொருமையாக இருந்ததால் எனக்கு அவன் மூலம் சொர்க்கத்தில் பதவி உயர்வு கிடைகும் போது என் காரணமாக அவனுக்கு நரகம் கிடைக்கக் கூடாதல்லவா! எனவே நான் அவனுக்காக பிரார்த்தனை புரிந்தேன் என்றார்கள்.
முற்காலத்தில் தாகத்தில் தவித்த நாயிக்கு தண்ணீர் புகட்டி தாகம் தீர்த்த ஒரு மனிதரை, இன்னொரு அறிவிப்பின் படி ஒரு வேசியை அல்லாஹ் மன்னித்து சுவனபதியை அதற்குப் பரிசாக வழங்கினான். {புகாரி}
عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ
இதற்கு நேர் எதிராக இன்னொரு செய்தி ;
ஒரு பூனையை சித்திரவதை செய்த காரணத்தினால் ஒரு மாது நரகம் சென்றாள்.அவள் அதற்குத் தானும் உணவளித்து நீர் புகட்ட வில்லை.தானாக திண்ணவும்,குடிக்கவும் விடவும் இல்லை.இப்படி சித்திரவதை செய்தாள்.{புகாரி}
عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتْ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا فَدَخَلَتْ فِيهَا النَّارَ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ لَا أَنْتِ أَطْعَمْتِهَا وَلَا سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا وَلَا أَنْتِ أَرْسَلْتِهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الْأَرْضِ
அப்போது அந்த மனிதர் வெட்கி, தலை குனிந்து கூனிக் குருகினார். அப்போது அவருக்கு இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன் மேல் கடந்த சட்டையைக் கழட்டிக் கொடுத்ததோடு ஆயிரம் திர்ஹம் அவருக்கு கொடுக்க உத்தரவிட்டார்கள்.இப்படித்தான் மனிதப் புனிதர்கள் நடந்திருக்கிறார்கள்.
روي ان زين العابدين علي بن الحسين رضي الله عنه كان في طريقه الي المسجد فسبه رجل فقصده غلمانه ليضربوه ويؤذوه فنهاهم فكف عنهم رحمة به ثم قال يا هذا انا اكثر مما تقول وما لا تعرفه عني اكثر مما تعرفه فان كان لك حاجة في ذالك ذكرته فخجل الرجل واستحيا فخلع عليه زين العابدين قميصه وامر له بالف درهم
شتم رجل احنف بن قيس وكان يتبعه فلما قرب من الحي وقف وقال يا بني ان كان بقي في قلبك شيئ فقله كيلا يسمعك بعض سفهاء القوم فيجيبك
எனவே மனதில் பகை, கோபம், விரோதம்,குரோதம் வளர்க்காமல் நல்ல மனிதப் பண்புகளை நம்மில் நாம் ஏற்படுத்திக் கொண்டால் நாம் இந்த உலகத்தில் உயர்ந்த மனிதர்களாக இறை பண்புகளை பெற்று இறைவனின் பிரதிநிதிகளாக சிறந்தோங்க முடியும்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் யார் என்றால் சந்தோசமாக வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் ஆவர். அவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய நேசர்கள் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் {அல்குர்ஆன் : 10 ; 62}
பயம் என்பது எதிர் காலத் தொடர்புடையது. கவலை என்பது இறந்த காலத்தோடு சம்பந்தப்பட்டது. இறைநேசர்கள் இறந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை நினைத்து கவலைப் படாமல்,எதிர் காலத்தில் ஏற்படும் என்று அஞ்சப்படுகிற நிச்சயமில்லாத ஆபத்துகளை நினைத்து பயமில்லாமல் நிச்சயமான நிகழ்காலத்தில் விழிப்போடு, தியாணத்தோடு சந்தோஷமாக இருப்பார்கள்.
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை திக்ர்{தியாணம்} செய்வதைக் கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன. {அல்குர்ஆன் :13 ; 28}
நிகழ் காலத்தில் இறை நினைவோடு வாழ்ந்தால் நீங்களும் சந்தோஷமாகலாம்.
இந்த நிலை உங்களுக்கும் வாய்த்தால் நீங்களும் வலிமார்களே! வலிமை வாய்ந்தவர்களே.......
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
0 comments:
Post a Comment