Thursday, July 17, 2014

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர்.


இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது.

பத்ர் தளம்
சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும்.

மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது.
முஸ்லிம்கள்ரமழான் 17இல் போராட்டத்துக்கு முகம் கொடுத்தனர்.போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஷியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு. இன்று இந்த சிறிய கூட்டம் அழிக்கப்பட்டால் பூமியில் உன்னை வணங்குவோர் யாரும் இருக்க மாட்டார்கள்’

நபியவர்களோடு இருந்த முஸ்லிம் போராளிகளில் முஹாஜிர்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு உள்ளாயிருந்தனர். அவர்களில் சிலர் தமது பெற்றோருக்கு எதிராகவும் வேறு சிலர் தமது பிள்ளைகளுக்கெதிராகவும் வேறு சிலர் தமது சகோதரர்களுக்கு எதிராகவும் போராடவேண்டி இருந்தனர்.

முஸ்லிம்களின் அணியில் இருந்த அபூபக்கர் ஸித்தீக்(றழி) அவர்கள் காபிர்களின் படையில் இருந்த அவர்களின் மகன் அப்துர்றஹ்மானை எதிர்கொண்டார்கள். அதுபோல் முஸ்லிம்களின் அணியில் இருந்த அபூஹுதைபா(றழி) அவர்கள் காபிர்களின் படையில் இருந்த அவர்களின் தந்தைஉத்பாவை எதிர்கொண்டார்கள்எனினும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

இறுதியில் சுமார் 313 முஸ்லிம்கள் 1000 காபிர்களுக்கு முகங்கொடுத்தனர்.எதிரிகளின் ஆயுதபலத்தையும் ஆட்பலத்தையும் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் பலவீனமானவர்களாக காணப்பட்டனர்.

முஸ்லிம்களிடம் 02 குதிரைகள்,70ஒட்டகைகள்,60போர்கவசங்கள் மட்டுமே இருந்தன. காபிர்களிடம் 100 குதிரைகள் 600போர் கவசங்கள் இருந்தன.

முஸ்லிம்கள் பசித்தவர்களாகவும் தாகித்தவர்களாகவும் இருந்தனர். காபிர்கள் ஒவ்வொருநாளும் சுமார் 10 ஒட்டகைகள் அறுத்து சாப்பிட்டு ஆடல் பாடல்களுடன் யுத்தகளத்தை நோக்கிவந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் போர்க்கொடியை முஸ்அப் இப்னு உமைர்(றழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அது வெள்ளை நிறமுடையதாக இருந்தது.மேலும் இரண்டுகொடிகள் நபி(ஸல்) அவர்களின் முன் இருந்தன. அவை இரண்டும் கறுப்பு நிறமுடையவை. அதில் ஒன்று அலீ(றழி) அவர்களிடமும் மற்றது ஸஃத் இப்னு முஆத்(றழி) அவர்களிடமும் இருந்தன.

நபி(ஸல்) அவர்களுடன் பத்ர் போர்களத்தில் இரண்டு குதிரை வீரர்கள் இருந்தனர். வலது பக்கம் ஸுபைர் இப்னுல் அவ்வாம்(றழி) அவர்களும் இடது பக்கம் மிக்தாத் இப்னுல் அஸ்வத்(றழி) அவர்களும் இருந்தனர்.

நபி(ஸல்) அவர்களுக்கு யுத்த களத்தில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களுடன் அபூபக்ர் ஸித்தீக்(றழி) அவர்கள் இருந்தார்கள்.

யுத்தகளத்தில் மலக்குகள் ஸஹாபாக்களுடன் சேர்ந்து யுத்தம்செய்தனர். வெள்ளை நிற தலைப்பாகை அணிந்தவர்களாக மலக்குகள் காணப்பட்டனர்.

ஜிப்ரீல்(அலை) அவர்கள் போர் ஆயுதங்களுடன் குதிரையில் அமர்ந்திருந்ததை நபி(ஸல்) அவர்கள்ஸஹாபாக்களுக்கு காண்பித்தார்கள்.

அலீ(றழி) அவர்கள் கூறுகின்றார்கள் “மூன்று முறை கடும் காற்று வீசியது. அப்படியான காற்றை நான் முன் எப்போதும் உணரவில்லை.ஜிப்ரீல்(அலை),மீக்காயீல்(அலை), இஸ்றாபீல்(அலை) ஆகியோர் முறையே இறங்கியதன் அடையாளமே அந்த காற்று” என்று கூறுகின்றார்கள்.

ஜிப்ரீல்(அலை) அவர்களும் அபூபக்ர் ஸித்தீக்(றழி) அவர்களும் நபி(ஸல்) அவர்களின் வலப்பக்கமாகவும், மீக்காயீல்(அலை)அவர்களும்அலீ(றழி) அவர்களும் நபி(ஸல்) அவர்களின் இடப்பக்கமாகவும் நின்று போர்செய்தனர். இஸ்றாபீல்(அலை) அவர்கள் முதல் வரிசையில் நின்று போர்செய்தார்கள்.

அல்லாஹ்தஆலாவின் உதவி கிட்டியதன் காரணமாக முஸ்லிம்கள் பத்ர் களத்தில்வெற்றி பெற்றனர்.

6 முஹாஜிர்களும் 8 அன்ஸாரிகளும் பத்ர் களத்தில்ஷஹீதானார்கள். எதிரிகளின் தரப்பில் அபூ ஜஹ்ல், உத்பா, உமையா, ஸம்ஆ, ஆஸ் போன்ற தலைவர்கள் உட்பட 70 பேர் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு இந்த யுத்தம் முஸ்லிம்களுக்கு பெரும் வெற்றியாக அமைந்து விட்டது.

இதை அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌفَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ۖ 

3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنزَلِينَ 

3:124. (நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.

بَلَىٰ ۚ إِن تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ
3:125. ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.

நன்றி ;- காதிரிய்யா சுன்னத் வல் ஜமாஅத்.

0 comments:

Post a Comment