நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவரும், தஞ்சை மாவட்டம் ஆவூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் 'செங்கோட்டைச் சிங்கம்' மு. அப்துஷ் ஷக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள்,
இன்று (செவ்வாய் 29.07.2014) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கோவையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹழ்ரத் அவர்களுக்கு வயது 65.
அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (புதன் 30.07.2014) லுஹர் தொழுகைக்குப் பிறகு தஞ்சை மாவட்டம் ஆவூரில் நடைபெறும்.
சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.
செங்கோட்டை சிங்கம் என்று உலக தமிழ் முஸ்லிம் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால் அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.
மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய ஹஜ்ரத் அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சாற்றல் கொண்ட நல்ல ஒரு மனிதர். இஸ்லாமிய சரித்திரத்தின் கருவூலத்தை மனக்கண் முன் கொண்டு வரும் ஆற்றல் மிக்க சொல்லின் செல்வர். சொல்லேர் உழவர் அவர்கள். மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அவர்களின் அற்புதமான பேச்சை கேட்க குழுமியிருப்பார்கள். தமிழும் அரபியும் குர்ஆனும் ஹதீசும் அவர்களுக்கு கை வந்த கலை. கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை.தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள்.
சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.
யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.
ஹஜ்ரத் அவர்களின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் மேலச்சாலை நகரில் 24.11.1949 அன்று பிறந்த ஹஜ்ரத் அவர்கள், தன்னுடைய மார்க்கக் கல்வியை 1969ம் ஆண்டு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் மன்பயி பட்டத்துடனும், 1971ம் ஆண்டு ஃபாஜில் மன்பயீ பட்டத்துடனும் நிறைவு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து திருவாருர் மாவட்டம் ஆவூர் நகரில் அமைந்துள்ள ஜாமிஆ மஸ்ஜிதில் தலைமை இமாமாக பொறுப்பேற்றார்கள். அதே ஊரில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்கள்.
1994ம் ஆண்டு முஸ்லிம் ஜமாஅத்தின் அழைப்பின் பேரில் சிங்கப்பூருக்கும், 1995ம் ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற ஸவூதி அரேபியாவுக்கும், அதே ஆண்டு இந்திய முஸ்லிம் பேரவையின் அழைப்பின் பேரில் அபூதாபிக்கும், 1997ம் ஆண்டு தேசிய கருத்தரங்கில் உரையாற்ற அரசு விருந்தினராக இலங்கைக்கும், 2009ம் ஆண்டு ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பின் பேரில் துபாய்க்கும், 2012ம்ஆண்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அழைப்பின் பேரில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக 7ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளில் சிறப்புரையாற்ற குவைத்துக்கும் சென்று வந்துள்ளார்கள்.
இது அல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும், தமிழகத்தில் ஹஜ்ரத் அவர்கள் செல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று சிறப்புரையாற்றியுள்ளார்கள். இதுவரை ஏறக்குறைய 10,000க்கும் மேற்பட்ட மார்க்க சொற்பொழிவுகளை ஹழ்ரத் அவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.
ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளாராக பத்து ஆண்டுகள், பொருளாளராக பத்து ஆண்டுகள், தலைவராக பத்து ஆண்டுகள் சேவையாற்றியவர்கள். தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவராகவும், மன்பயீ ஆலிம்கள் பேரவையின் பொருளாளராகவும் தற்போது பொறுப்புகளை வகித்து வந்தார்கள்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபி மொழித்துறையில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரபல மார்க்க சொற்பொழிவாளர், எழுத்தாளர், இளம் முனைவர் 'செங்கோட்டை இளஞ்சிங்கம்' மவ்லவீ அ. முஹம்மது இஸ்மாயீல் ஹஸனீ M.A., M.Phil., அவர்கள், மர்ஹூம் ஹஜ்ரத் அவர்களின் மகனார் ஆவார்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஜூன் 2012, 14 முதல் 18 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்த 7ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளில் 'அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!' என்ற கருப்பொருளில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஐந்து இடங்களில் (4 பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் 3 உள்ளரங்கு நிகழ்ச்சிகள் என) ஏழு நிகழ்ச்சிகளில் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் பசுமையாக நினைவில் நிழலாடுகின்றன.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...
நன்றி ;- கலீல் பாக்கவி ஹஜ்ரத்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
0 comments:
Post a Comment