Thursday, June 9, 2016

நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும் !!!


அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:



شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ

'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)

 'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

மேலும் ரமலான் முதலாவது இரவில் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஹூபுகள் இறக்கப்பட்டன. அதன்பின் 700 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் ஆறாவது நாளில் தௌராத் வேதம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் பிறகு 500 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் 12ல் ஜபூர் வேதம் நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அதன் பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ரமலான் 18ல் இன்ஜீல் வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதன்பின் அறுநூற்று இருபது ஆண்டுகளுக்கு பின் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமும் அருளப்பட்டது.

வான்மறைகள் வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம் தான் இது.

மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும், ரமலான் எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்தியை அடைந்து கொள்வான் என்றும் கூறியுள்ளார்கள்.

ரமலான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல்களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமலான்!

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ ! அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்

நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)

இன்னுமொரு அறிவிப்பில் வருகிறது: ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், 'ஷஃபான் மாதத்தின் இறுதியிலே அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள்,' உங்கள் மீது பரக்கத் செய்யப்பட்ட ஒரு மாதம் நிழலிட்டு இருக்கிறது. இம் மாதத்திலே ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது. இம்மாதத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதைக் கட்டாயக் கடமையாக விதித்துள்ளான். அம் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதை சுன்னத்தாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒருவர் ஒ ருபர்ளை நிறைவேற்றினால் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போலவும், மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவரைப் போன்றும் ஆவார். மேலம் முஃமீன்களின் இரணத்தை விஸ்தீரணமாக்கப்படுகின்ற மாதமாகும். எவனொருவன் நோன்பாளிக்கு நோன்பு திறக்க  கொடுக்கின்றானோ அவன் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை பெற்றுக் கொள்கிறான். இது பொறுமையுடைய மாதம் என்று பெருமானார் அவர்கள் கூறிய நேரத்திலே ஸஹாபாக்கள் எல்லாம் 'யாரஸூலல்லாஹ் எங்களில் எவரும் நோன்பு திறக்க கொடுத்த சக்தி பெற்றவராக இல்லையே என்று கேட்க, 'அல்லாஹ் இந்த தவாபை பழத்தாலோ ஒரு முடர் பாலினாலோ அல்லது ஒரு முடர் தண்ணீராலோ நோன்பு திறக்கச் செய்தவர்களுக்கு கொடுக்கின்றான்' என்று கூறினார்கள்.

இன்னுமொரு அறிவிப்பில், எவன் ஒருவன் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறானோ அவனுக்காக மலக்குமார்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் இறைவனிடம் மன்னிப்பு தேடிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மன்னிப்பு தேடுகின்றனர். (ஒரு அறிவிப்பின் படி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லைலத்துல் கத்ர் இரவில் முஸாபஹா செய்கின்றார்கள் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நூல்: முஸ்லிம் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. மற்றொரு நபிமொழி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ரமலான் மாதம் வருகிறது. வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன. எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது. ஷைத்தான்கள் விளங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். நூல்:புகாரி, அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.

ரமலானைக் குறித்து 'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு), திர்மிதி-619
'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

ஹதீது குத்ஸியில் வந்திருக்கிறது, ஆதமின் மக்கள் செய்யும் நோன்பைத் தவிர மற்றெல்லா அமல்களும் அவன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரமாகும். நோன்பு மடட்டும் எனக்குரியது. நான்தான் அதற்கு கூலி கொடுப்பேன் என்றும், (பிறிதொரு இடத்தில்) ஏனெனில் ஆதமின் மகன் எனக்காக அவன் ஊண் குடிப்பு மனோ ,ச்சை ஆகியவைகளை விட்டு விடுகின்றான் என்றும், அல்லாஹ் தனித்து பிரித்து கூறியதற்கு கருத்தாவது நோன்புக்கு  நன்மை அதிகமாக இருக்கிறது. மற்ற அமல்களெல்லாம் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகுவதுடன் அதற்கும் மேலாக நன்மைகள் கிடக்கும் என்பதாகும். ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

'ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408

'சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

லைலத்துல் கத்ரு இரவின் மகிமைகள்.

லைலத்துல் கத்ரு இன்ன இரவு என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது ஆண்டில் ஓர் இரவு என்றும், பாரஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவு என்றும் ரமலானுடைய இருத்தி ஏழாம் இரவு என்றும் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான  சொல் ரமலானில் இருபதுக்குமேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும் கூறப்பட்டிருப்பதால் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களும் பள்ளியில் இஃதிகாப் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதாவது அந்த ஓரிரவு முப்பதினாயிரம் நாட்களைவிட மேலானதாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,

'லைலத்துல் கத்ரு எனும் ஓர் இரவானது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்' என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 97 :3)

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது: ரமலானில் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்பதாம் இரவென்பதாகவும், முதல் பிறை திங்கட்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்றாம் இரவென்பதாகவும், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஏழாம் இரவென்பதாகவும், சனிக்கிழமையாக இருந்தால் இருபத்தி மூன்றாம் இரவு என்பதாகவும், கூறியுள்ளார்கள். 'இந்தக் கணக்குப் படி நான் பருவமடைந்தது முதல் எனக்கு லைலத்துல் கத்ரு தப்பியதே கிடையாது' என்று ஷைகு அபுல்ஹஸன் ஜுர்ஜானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

லைலத்துல் கத்ரு இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவது சுன்னத்:



اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

'யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன், நீ மன்னிப்பை விரும்புகிறாய். ஆகையால், என்னை மன்னித்தருள்வாயாக!'

லைலத்துல் கத்ரு என்று கூறப்பட்டுள்ள 'இன்னா அன்ஜல்னாஹு' என்ற சூராவில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடைவ கூறப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்தியேழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே, இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு இரவு என்று சிலர் கூறியுள்ளனர்.

லைலத்துல் கத்ரு இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ( ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி

லைலத்துல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி,முஸ்லிம்

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்)அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ரு)இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி

'எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!'

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்கள்:புகாரி,முஸ்லிம்

'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்:புகாரி

ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்கள்: புகாரி,முஸ்லிம்

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம் காட்டாத அளவு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா); நூல்:முஸ்லிம்

'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.'

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி,முஸ்லிம்

லைலத்துல் கத்து இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்து விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும்.அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போன்று இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விரவில் தராவீஹ்க்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்த அளவு திக்ரு, கிராஅத், தஸ்பீஹ் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

'ரஸூல் ஸலல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவு லைலத்துல் கத்ரு இரவை விட மிகச் சிறந்ததாகும்' என 'மவாஹிபுல்லதுன்னிய்யா' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

நன்றி ;- sufimanzil.org

0 comments:

Post a Comment