நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள்.
01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.
02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும்.
03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும்.
04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும்.
05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள்.
ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும்.
களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்னத்தான நோன்பையும் நோற்பதாக நிய்யத் வைத்துக் கொண்டால் இரண்டும் நிறைவேறி இரண்டிற்குரிய தவாபும் கிடைக்கும். நிய்யத் வைக்கவில்லையெனில் சுன்னத்தான நோன்பு உடைய தவாபு கிடைக்காது.
ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.
ரமலான் மாதத்தை அடைந்த நாம் அதைத்தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாத ஆறு நோன்புகளைப் பற்றிய சிறப்புகளை அறிந்து அதை நோற்பது அவசியமான ஒன்றாகும்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:
'யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
'ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்: தாரிமி, இப்னுமாஜா, அஹ்மத்
இந்த ஹதீஸின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை வருடமெல்லாம் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் எவ்வளவு பலனை அடைவாரோ அந்நன்மைகளை ரமலானின் 30 நோன்புகளையும், ஷவ்வாலின் ஆறு நோன்புகளையும் நோற்றால் கிட்டுகின்றது.
இந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதுவே சிறப்பானதாகும் என்பது இமாம் ஷாபிஈ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களது கருத்தாகும்.
ஷவ்வால் மாதத்தின் ஏனைய நாட்களில், அந்த மாதம் முடிவடைவதற்குள் பிரித்து பிரித்துக் கூட 6 நோன்பையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இமாம் அபூஹனிஃபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஏனென்றால் இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்பது ஹராம் என்பதை நாம் பொதுவாக அறிந்த ஒன்றாகும். எனவே சுன்னத்தான ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை பெருநாளுக்கு பிறகு விரும்பினால் தொடர்ந்தோ அல்லது ஷவ்வால் மாதத்தில் எந்த நாளையிலும் விட்டுவிட்டோ நோற்கலாம். எனவே, இவற்றில் எது தங்களுக்கு இயலுமோ அந்த வகையில் ஷவ்வால் ஆறு நோன்பை நோற்பது சிறந்தது.
இதை அடிப்படையாக வைத்து பெரும்பான்மையான புகஹாக்கள் குறிப்பாக ஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப் இமாம்கள் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பதை அறிவுறுத்துகிறார்கள். – ஆதாரம்: ரத்துல் முக்தார், முங்னி அல் முஹ்தாஜ் ஷாஹ் அல் மின்ஹாஜ், கஸாஸஃப் அல் கினா.
ஷாபிஈ மற்றும் ஹன்பலி இமாம்கள் மிகச் சிறந்தது, ஆறு நோன்பு நோற்பதற்கு பெருநாள் கழித்த மறுநாளிலிருந்து நோன்பு நோற்பதுதான் என்று சொல்கிறார்கள். – மின்ஹாஜ், ஹயாத் அல் முன்தஹா.
இதற்குரிய காரணத்தை அல்லாமா கதீப் அல் ஷிர்பினி விவரிக்கிறார்கள், நோன்பு நோற்பதை விரைவுபடுத்துவது மிகவும் நல்லது. சோம்பேறித்தனம் மற்றைய காரணங்களால் இந்த சுன்னத்தை இறுதியில் நிறைவேற்ற முடியாமலாகிவிடும். எவ்வாறிருப்பினும் நோன்புப் பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியில்லாமல் ஷவ்வால் மாதம்ஆறு நோன்புகள் நோற்பதன் மூலம் இந்த சுன்னத்தை நிறைவேற்றிடலாம்;. -முங்னி அல் முஹ்தாஜ்.
இறுதியில் ஹனபி மத்ஹப் இமாம்கள் சொல்கிறார்கள், இரண்டும் அதாவது பெருநாளைத் தொடர்ந்த ஆறு நோன்புகள் அல்லது ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியில்லாமல் விட்டுவிட்டு நோற்கப்படும் ஆறு நோன்புகள் சுன்னத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. – ரத்துல் முக்தார்.
இருப்பினும் எவர் ஒருவர் சோம்பேறித்தனம், மறதியின்மை மற்றும் பல்வேறு காரணங்களைக் கொண்டு இந்த நோன்பை நோற்க முடியாது என்று பயந்தால், அவர்கள் ஆறு நோன்பு நோற்பதை பெருநாளைத் அடுத்த நாட்களில் விரைவுபடுத்த வேண்டும்.
- ரத்துல் முக்தார் அலா அல் துர்ருல் முக்தார் 2:125, முங்னி அல் முஹ்தாஜ் ஷரஹுல் மின்ஹாஜ் 2:184,185, புஹுதி, கஸஅஸஃப் அல் கினா 2:237,238
நன்றி ;- sufimanzil.org
0 comments:
Post a Comment