மாயன் இன காலண்டர்.இதுதான் இப்போது உலகெங்கிலும் பேச்சு.மத்திய அமெரிக்காவில் கி.மு.2600 க்கும் கி.பி.900 த்திற்கும் இடையில் வாழ்ந்த ஒரு முன்னேறிய சமூகம் மாயன் இனம்.தொண்மையான நாகரிகத்தைக் கொண்ட இந்த இனம்,கட்டிடக் கலை,வானவியல்,நாள்காட்டித் தயாரித்தல் போன்ற துறைகளில் திறமையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.
சூரிய,சந்திர நகர்ச்சியைக் கணக்கிட்டு இரண்டு காலண்டர்கள் தயாரித்து நடைமுறையில் வைத்திருந்தினர்.ஒன்று ஒரு வருடத்திற்கு 360 + 5 நாட்கள்,18 மாதங்களை கொண்டது.இன்னொன்று,ஒரு வருடம் என்பது 260 நாட்கள்,13 மாதங்களாகும்.ஒருமாதம் என்பது இவர்களிடம் 20 நாட்களாகும்.இந்த மாயன் இன காலண்டர்,21,12,2012 என்ற தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த தினத்தோடு -- அதாவது இன்றோடு இந்த உலகம் அழிந்துவிடும் என புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது.
இந்த மூட நம்பிக்கையினால் ஒரு பக்கம் பீதியும்,மறுபக்கம் பிராத்தனை,பாதுகாப்புச்சாதனங்கள் என வியாபாரமும்,சூடுபிடித்துள்ளது.மத அடிப்படையும்,தெளிவும் உள்ளவர்களுக்கு இதில் எந்தக்குழப்பமும்,பயமும் இப்போதும்,எப்போதும் இருந்ததில்லை.இந்த உலகம் முடிவில் ஒருநாள் அழிந்து போகும்.இது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை.இந்த யுகமுடிவுக்கான தேதிகுறிக்கப்பட்டு விட்டது.ஆனால் அது வெளிப்படையாகவும்,குறிப்பாகவும் அறிவிக்கப்படவில்லை.
ஆகவே யுக முடிவுக்கான 21.12.2012 தேதி உள்ளிட்ட எந்த தேதியும் அடிப்படை ஆதாரமற்றது. மறுமைநாள் மறுப்பாளர்கள் அது பற்றித் திரும்பத் திரும்ப யுக முடிவுநாள் எப்போது வரும் எனக் கேட்டு நச்சரித்தும்,திருக்குர்ஆன் அது பற்றி மூச்சுவிடவில்லை.இது பற்றிச் சொல்வதற்கு நபிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
எனவே இது குறித்து யார் என்ன சொன்னாலும் அது சரிதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.'' ( நபியே!) இறுதி நாளைப்பற்றி அது எப்பொழுது வரும் என அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்; அதன் அறிவு என இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத்தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது.(அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும்.திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது... (அல்குர்ஆன்,7 ; 187)
இதல்லாமல் இப்போதைக்கு உலகம் அழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.சூரியன் பலகோடி ஆண்டுகள் எரிந்து போயிருந்தாலும்,இன்னும் பல கோடி ஆண்டுகள் பிரகாசிப்பதற்குத் தேவையான எரிபொருள் அதிடம் இன்னமும் மிச்சமிருக்கிறது என விஞ்ஞானிகளும் கோடிட்டுக்காட்டியுள்ளனர்.எனவே உலகம் இப்போதைக்கு அழியாது.அதற்கு முன்பு பயங்கரமான பல சம்பவங்களெல்லாம் நிகழவேண்டியதிருக்கிறது.
வாழ்க்கையின் சகல பரிமானங்களுக்கும் பரிகாரம் சொல்லியிருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில்,யுக முடிவு நாளைக்குறித்தும் அதன் அடையாளங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. எதையும் விட்டும் வைக்காத ஏந்தல் நபி (ஸல்) இது பற்றி கூறியிருக்கிற விபரங்களை இப்போது தெரிந்து கொள்வது ரொம்ப பொருத்தமாகும்.'' இனி எந்த காலமும் வராது,அதற்குப்பிறகுள்ளது அதை விட மிக மோசமாக இருந்தே தவிர'' (நபிமொழி,புகாரி ;7068)
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக்கொண்டிருந்த தனது தோழர்களிடம் வந்து,என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்க '' நாங்கள் அழிவு நாளைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்'' என அவர்கள் பதில்கூறினார்கள்.அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதற்கு முன் பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அது வராது என அந்தப்பத்தையும் கூறலானார்கள்.
1.புகை.2,தஜ்ஜால் வருகை.3,கால்நடை வெளிப்படுதல்.4,மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல்.5,ஈஸா நபி இறங்குவது.6,யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம்.7,மூன்று நிலநடுக்கம்.ஒன்று கிழக்கில் 8,இன்னொன்று மேற்குலகில்.9,மற்றொன்று அரேபியத் தீபகற்பத்திலும் ஏற்படுவது.10,யமனிலிருந்து தீ பரவி மக்களை மஹ்ஷருக்கு ஒன்று (திரளுமிடத்திற்கு) விரட்டுவது. (முஸ்லிம் ; 2901)
இந்த நபிமொழி சற்று விரிவாக வேறு அறிவிப்பில் வந்துள்ளதைப் பார்ப்போம்.தஜ்ஜால் ; (ஏசுகிறிஸ்து மற்றும் முஸ்லிம்களின் எதிரி) ஒற்றைக்கண்ணன்.அவனது இருகண்களுக்கு மத்தியில்'' இறை மறுப்பாளன்'' என எழுதப்பட்டிருக்கும்.இதை எழுதத்தெறியாத நம்பிகையாளரும் வாசிப்பார். சிரியா, இராக் தேசங்களுக்கிடையிலிருந்து கிளம்புவான்.
பூமியெங்கும் மிகவேகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெருங்குளப்பங்கள் செய்வான்.இவன் பூமியில் நாற்பது நாட்கள் தங்குவான். இதில் ஒருநாள் ஒரு வருடம் போலவும் அடுத்த ஒருநாள் ஒருமாதம் போலவும்,அடுத்து வரும் ஒருநாள் ஒரு வாரம் போலவும்,அதற்கடுத்த நாட்கள் சாதாரன மற்ற நாள்களைப் போலவும் இருக்கும்.
நான்தான் கடவுள் என பிதற்றுவான்.இவனுக்குப்பின் யூதர்கள் அணிதிரள்வார்கள்.இவனது அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போகும் போது,வானிலிருந்து ஈஸா நபி (அலை) ,சிரியா நாட்டின் ஜாமிஃமஸ்ஜிதின் கிழக்கு வெள்ளை மினராவில் வந்து இறங்குவார்கள்,பைத்துல் முகத்தஸ் அருகிலுள்ள '' பாபுல் லுத்து'' என்னுமிடத்தில் வைத்து தஜ்ஜாலை,ஈஸா நபி கொல்லுவார்கள்.
அடுத்து யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம்.இவர்களை எதிர்த்து யுத்தம் செய்ய முடியாது.அதனால் உங்கள் சகாக்களை சேர்த்துக்கொண்டு தூர்சினாய் மலை பொதும்பில் ஒதுங்கி ஒளிந்து கொள்ளுங்கள் என ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் (காண்க ; 21 ; 96) இக்கூட்டம் புறப்பட்டு வரும்போது,இவர்களின் முதல் பிரிவினர் திப்ரீயஸைக் (கலீலி கடல்) கடப்பார்க்ள். (திப்ரீயஸ் ஏரி,கின்னரெட் ஏரி என்றும் அழைக்கப்படுகிற) இதிலிருந்து அவர்கள் நீர் அருந்துவார்கள்.
அவர்களின் கடைசி பிரிவினர் கடந்து செல்லும் போது இங்கு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்.இப்பூமியில் உள்ளவர்களைக்கொன்று குவிப்பார்கள்.இப்போது விலைவாசி,தாற்மாறாக ஏறி இருக்கும்.ஒரு மாட்டுத்தலை 100 தீனாரை விட அதிகமாக இருக்கும்.இந்த நேரத்தில் ஈஸா நபியும் தோழர்களும் பிராத்திப்பார்கள்.
அப்போது அல்லாஹ் அந்த யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் மீது ஒரு விஷப் பூச்சியை அனுப்பி அவர்களை ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக அழித்தொழிப்பான்.அப்போது பூமியெங்கும் பிணக்காட கிடக்கும்.இராட்சத பறவைகளைக் கொண்டு அப்பிரேதங்கள் அப்புறப்படுத்தப்படும்.அதற்குப் பிறகு இப்பூமியெங்கும் பெரும் மழை பொழிவிக்கப்பட்டு,பூமி கழுவப்பட்டு,கண்ணாடி போல சுத்தமாக்கப்படும்.
மீண்டும் பூமி செழிப்பாகும்.ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே சாப்பிடுவர்.பாலில் அபிவிருத்தி செய்யப்படும்.ஒரு ஒட்டகையின் பால்,பெருங்கூட்டத்திற்கும்,ஒரு மாட்டின் பால் ஒரு கோத்திரத்திற்கும்,ஒரு ஆட்டின் பால்,ஒரு குடும்பத்திற்கும் போதுமானதாக இருக்கும்.இவ்வாறு மக்கள் சுபீட்சமாக இருந்துகொண்டிருக்கையில்,அல்லாஹ் வசந்தக் காற்றை அனுப்புவான்.
அது மக்களுக்கு அக்குலுக்கு கீழே பாதிப்பை ஏற்படுத்தும்.அதில் இறை நம்பிக்கையாளர்களுடைய உயிர் கைப்பற்றப்படும்.அதன் பிறகு தீயவர்கள் மட்டுமே இவ்வுலகில் மீத மிருப்பர்.அப்பொழுது இந்த உலகம் அழியும்.(முஸ்லிம் ; 2937,திர்மிதி 2240) '' மர்யமுடைய மகன் ஈஸா நிச்சயமாக நீதியான ஆட்சியாளராக உங்களுக்கு மத்தியில் இறங்கி வருவார்.சிலுவைகளை உடைப்பார்.பன்றியைக்கொல்லுவார் '' (புகாரி ; 3438)
'' ஈஸா நபி இறங்கி வந்து கல்யாணம் முடிப்பார்கள்.அவருக்கு குழந்தை பிறக்கும்.45 வருடம் வாழ்வார்.பிறகு மரணிப்பார்.என்னுடன் எனது கப்றில் அடக்கம் செய்யப்பட்டு நானும்,ஈஸாவும் ஒரே கப்றில் அபூபக்கர்,உமருக்கு மத்தியில் (மறுமையில்) எழுவோம் '' (மிஷ்காத் ;5497) உலகம் அழிவதற்கு முன்பு சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும்.அதற்குப்பிறகு நம்பிக்கை கொண்டால் ஏற்றுக்கொள்ளப்படாது '' (முஸ்லிம் ;158)
'' ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது மறுமை நிலை பெற்றது ''.தேவையில்லாமல் இவ்வுலக அழிவைப்பற்றி சிந்திக்காமல் நமக்கு மரணம் சம்பவித்தால் அதற்குப்பிறகுள்ள வாழ்க்கைக்கு நம் கை வசம் என்ன அறச்செயல்கள் உள்ளது? என்று யோசிப்போம்.அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.வஸ்ஸலாம்..
என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்,மலேசியா.)
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.