எந்த ஒரு தத்துவத்தையும் அறிவுப்பூர்வமாக விவாதிப்பது,அதை இழிவுபடுத்துவதாகாது.மாறாக,ஆதாரத்தின் அடிப்படையில்,ஒரு கொள்கை ஆராயப்படுவது ஆரோக்கியமான ஒன்றேயாகும்.ஆனால் மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை அவமதித்து,இழிவுபடுத்துவது,ஒரு சமூகத்தால் கடவுளாக கொண்டாடப்படுபவற்றை வசவுபாடி இழிவுபடுத்துவது ஏற்புடையதன்று.
'' ( நம்பிக்கையாளர்களே! ) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என)அழைக்கின்றார்களோ,அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.அதனால் அவர்கள்,அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள்.'' அல் குர்ஆன் ;-- ( 6 ;108 )
'' பெற்றோரை திட்டுவது பெரும்பாவங்களில் ஒன்று '' என பெருமானார் நபி (ஸல்) அவர்கள் நவின்றபோது, ஒரு மனிதன் தனது பெற்றோரையுமா திட்டுவான்? '' என நபித்தோழர்கள் வியப்போடு வினவினார்கள்.'' அடுத்த மனிதரின் பெற்றோரை திட்டும்பொழுது அவன் பதிலுக்கு இவனுடைய பெற்றோரை திட்டுவானல்லவா?'' என நாயகம் (ஸல்) பதிலளித்தார்கள். ( புகாரி ; 5973, முஸ்லிம் ; 90 )
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு அதன் சாதக, பாதகங்களைப் பற்றி சிந்திக்கவேண்டும்.நம்முடைய சொல்லால்,செயலால் தீய விளைவுகள் ஏற்படும் என்று பயந்தால் அதை கைவிடவேண்டும்.எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிக்கவேண்டும்.யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக்கூடாது.
ஒரு முறை ஒரு முஸ்லிமுக்கும், ஒரு யூதருக்கும் ஏதோ ஒரு வாக்குவாதம்.அப்போது அந்த முஸ்லிம் ( தனது வாதத்தை வலுவூட்டுவதற்காக) '' அகிலத்தாரை விட முஹம்மதை தேர்ந்தெடுத்த இறைவனின் மீது ஆணையாக '' என்று கூறினார்.அதற்கு அந்த யூதர்,'' அகிலத்தாரை விட மூஸாவை தேர்ந்தெடுத்த இறைவனின் மீது ஆணையாக. '' என்று கூறினார்.
அதனால் கோபமடைந்த முஸ்லிம், அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவுமா?'' எனக்கேட்டவராக தனது கையை ஓங்கி யூதனை தாக்கினார்.உடனே அந்த யூதர்,முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து,தன்னை தாக்கிய அந்த முஸ்லிமைப்பற்றி புகார் செய்தார்.அப்போது அந்த முஸ்லிமை அழைத்து,அங்கு நடந்த விபரத்தை கேட்டறிந்த நபி (ஸல்) அவர்கள்,மற்ற நபிமாரை விட உன்னை உயர்த்தி பேசவேண்டாம்.மக்களெல்லாம் மறுமையில்,மயக்கத்தில் இருப்பார்கள்.
மயக்கம் தெளியும் முதல் நபராக நானே இருப்பேன்.அங்கே மூஸா,அர்ஷின் நிலைப்படியைப் பிடித்தவராக நிற்பார்,அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து விட்டாரா? அல்லது சினாய் மலையில் அவர் அடைந்த மயக்கத்திற்கு பகரமாக இங்கே அவருக்கு மயக்கம் ஏற்படவில்லையா? என நானறியேன்.'' எனக்கூறினார்கள். (புகாரி -- 2412 )
காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு.ஒவ்வொரு இனத்திற்கும் அவர்களின் தலைவரே சிறந்தவர்.இந்த வகையில், யூதர் தன்னுடைய தலைவரை முன்னிலைப்படுத்தியது தவறன்று.எனவே முஸ்லிம் அவரை அடித்தது சரியன்று.நமது தலைவர் உலகத்தலைவர்களை விட சிறந்தவர் என்று நாம் நம்புகின்றோம் என்பதற்காக அதை மற்றவர்களையும் ஏற்கச்செய்ய வன்முறை சரியான அனுகுமுரையன்று.
அறிவின் ஒளியில்,ஆதாரத்தின் அடிப்படையில்,ஆராயவேண்டிய தலைப்பை ஆத்திரத்தின் ஆக்கிரமிப்பில் அடித்து நொறுக்கி விடக்கூடாது.இந்த வகையில்தான், நம்பாதவர்களிடம் பொத்தாம் பொதுவில் என்னைஅவரை (மூஸாவை) விட சிறந்தவராக்கி பிரச்சனையாக்காதீர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
இது மத சகிப்புத்தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.உண்மை உரைக்கப்படவேண்டிய இடத்தில் தாம் உரைக்கவேண்டும்.உதாசீனப்படுத்தப்படும் இடத்தில் -- சமையத்தில் அதை உரைத்து ஊனப்படுத்திவிடக்கூடாது.
இரண்டாம் கலீபா ஹளரத் உமர் (ரலி) அவர்களின் நீதிமிக்க பொற்கால ஆட்சியில்,எகிப்தின் ஆளுனராக ஹளரத் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.அப்போது அங்கே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்துவிட்டது.யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபரால் ஏசுநாதரின் உருவச்சிலையில் மூக்குப்பகுதி உடைக்கப்பட்டுவிடுகின்றது. இதனால் அங்கு மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகின்றது.
குற்றவாளியைக்கண்டு பிடிக்கமுடியவில்லை.பதிலுக்கு நாங்களும் முஹம்மது நபிக்கு சிலை வடித்து அதில் அவரது மூக்கை உடைத்து சேதப்படுத்துவோம்,என போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டார்கள்.பதறிப்போன ஆளுனர், '' அப்படி ஒன்றும் செய்துவிடவேண்டாம்.வேண்டுமானால் எனது மூக்கை வெட்டி எறிந்து விடுங்கள்.
முஹம்மது நபியின் கற்ப்பனை உருவத்துக்கூட சேதம் விலைவிக்க நான் மட்டும் அல்ல உலகில் எந்த முஸ்லிமும் மனம் ஒப்பமாட்டான். '' என்று தனது மூக்கை அறுக்க நாளும்,நேரமும் அறிவித்துவிட்டார்.குறிப்பிட்ட தேதியில்,மிகப்பெரும் மக்கள் திரளில் வைத்து,ஆளுனரின் மூக்கைப் பதம் பார்க்க இருந்த தருணத்தில்,எங்கிருந்தோ வந்த சப்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினார்.''
தன்னால் ஒரு நிரபராதி,நீதிமிக்க ஆளுனரின் மூக்கு தாக்கப்படக்கூடாது.நான் தான் அந்தக்குற்றவாளி என்னை தண்டியுங்கள்.'' என்று சொல்லிக்கொண்டு தானாக முன்வந்து தனது மூக்கை நீட்டினான் குற்றவாளி இந்த சமத்துவ ஆட்சி கண்டு அகிலமே அசந்துபோனது.அன்று அசைக்க முடியாத மிகப்பெரிய வல்லரசாக இருந்த இஸ்லாமியக்குடியரசு,நினைத்து இருந்தால் போராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியிருக்கலாம்.
அல்லது இந்த நாட்டில் தனிமனித சுதந்தரத்தில் நாங்கள் தலையிடமுடியாது.எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை.என்று கருத்தாடியிருக்கலாம்.ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல்,தங்களது சகோதரத்துவ கிறிஸ்தவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆளுனரே அதற்கான தண்டனையை ஏற்க முன்வந்த இஸ்லாத்தின் உயர் பண்பை பாராட்டிய பாரதியார், ''
'' உருவப்படத்தை உடைப்பதும்,உயிருள்ளவரின் மூக்கை உடைப்பதும் இரண்டுமே குற்றமே '' எனக்கூறி தனது கையிலிருந்த வாளை உறையிலிட்டார்.இது தான் ஒரு வல்லரசுக்கு அழகும்,அறிவும்.இப்படி மக்களின் மன, மத உணர்வுகளை மதித்து,ஆட்சியாளர்கள் செயல்பட்டால் உலகில் வன்முறைக்கு இடமேது.ஸலாம் சத்து மலேசியா (SALAM SATU MALAYSIYA)அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்!! வஸ்ஸலாம்!!!..
என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர், மலேசியா)
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
0 comments:
Post a Comment