Thursday, December 6, 2012

சால்னாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டை வீட்டுக்கும் வழங்கிடுவீர்!




நபித்தோழர் அபுதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.எனக்கு எனது நேசர் நபி (ஸல்) அவர்கள் மூன்று உபதேசம் செய்தார்கள். (1) தலைமையின் சொல் கேளு,கட்டுப்படு, அந்த சொல் மூக்கு அறுபட்ட அடிமைக்குரியதாக இருப்பினும்சரி, (2) சால்னா செய்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து,பின்னர் உனது அண்டை வீட்டுக்காரர்களைப்பார்த்து அவர்களுக்கு அதிலிருந்து கொடுத்து விடு. (3) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழு (நூல் --- முஸ்லிம்)


இனியசகோதரா! இம்மூன்று உபதேசத்தை நீயும் செயல்படுத்து, முதலாவது தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது,தலைமை என்றால் உனக்கு மேல் பொறுப்பிலுள்ளவர் என்று பொருள்.எனவே உனக்கு மேலுள்ள ஆட்சித் தலைவர்,குடும்பத்தலைவர், நீசார்ந்த அமைப்பின் தலைவர்,பணிசெய்யும் நிறுவனத்தலைவர்,இப்படி எல்லாத் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்.

இதன் மூலம் '' நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,அவனது தூதருக்கும்,உங்களில் அதிகாரமுள்ளவருக்கும் வழிப்படுங்கள்'' (4;50) என்ற இறைவாக்கை காப்பாற்றுங்கள்.புகாரி (7144) முஸ்லிமுடைய அறிவிப்பில் '' விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலைமையின் சொல் கேட்டு நடப்பது ஒரு முஸ்லிமின் மீது கட்டாயக்கடமை. பாவம் செய்ய உத்தரவிட்டாலே தவிர.அப்போது யார் சொல்லையும் கேட்டு நடக்கவேண்டியதில்லை '' என நபிகளார் (ஸல்) நவின்றார்கள்.

அனஸ் (ரலி) அறிவிக்கும் ஒரு நபிமொழியில்,உலர்ந்த திராட்சை போன்ற சிறு தலை இருக்கும் ஒரு அபிசினிய்யா கருப்பு அடிமையை உங்கள்மீது தலைவராக்கப்பட்டாலும்,நீங்கள் அவருக்கு செவிமடுங்கள் '' (புகாரி ; 7142) என வந்துள்ளது.முஸ்லிமின் (1477) மற்றொரு அறிவிப்பில்,தலைமைக்கு கட்டுப்படாமல் மரணித்தால் அறியாமைக்காலத்து (ஈமான் -- நம்பிக்கையில்லாத) மரணம் சம்பவிக்கும் '' என ஏந்தல் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

இரண்டாவது உபதேசம் ; வீட்டில் சால்னா சமைத்தால் அதை திக்காக கொஞ்சமாக காய்ச்சாமல், தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டைவீட்டாருக்கும் கொடுத்துவிடவேண்டும்.இதன் மூலம் பரஸ்பரம்,அன்பு,உதவி,உத்தாசைகளை பரிமாரிக்கொள்வதோடு,அவர்களின் பசியைப் போக்கவும் இது உதவும். மேலும் அவர்களின் ஏக்கப்பார்வை,ஆற்றாமையின் ஏக்கப் பெருமூச்சு விழாமல் உங்களைப் பாதுகாக்கும்.

நம் வீட்டின் சால்னாதாளிப்பு வாசனை பக்கத்து வீட்டினரின் மூக்கைத்துளைத்து,அது அவர்களுக்கு,குறிப்பாக சிறுவர்களுக்கு கிடைக்காது போனால் அவர்களின் நிறைவேறாத அந்த ஆசை ஆவியாகி அந்த உணவை உண்பவர்களுக்கு பல விதமான பாதிப்புகளை உண்டாக்கலாம்.

முஸ்லிம்கள் சேர்ந்து வாழும் ஊர்களில் இந்த நபிமொழி நடைமுறையில் இருந்தது.எனக்குத் தெறிய எனது வீட்டில் கறியோ,மீனோ சமைத்தால் எனது தாயார் முதலில் அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுத்தவீட்டுக்கு கொடுத்தனுப்புவார்கள். நானே சிறுவயதில் இப்படி பல முறை கொண்டு போய் கொடுத்திருக்கிறேன். அது மாதிரிஅங்கிருந்தும் வரும்.

சில சமயம் உரிமையோடு கேட்டும் வருவார்கள்.குறிப்பாக குழந்தைகளுக்காக பருப்புக்கறி பரிமாற்றம் அதிகம் நடக்கும். இது பரஸ்பரம்,பாசத்தையும்,நேசத்தையும் அதிகரிக்கச்செய்யும் சிறந்த முறையாக இருக்கின்றது.ஆனால் அழகான இந்த நபிமொழி இன்று நம்முடைய நடைமுறை பழக்கத்திலிருந்து எடுபட்டுவிட்டது.

இவ்வாறு கொடுப்பதற்கும் யோசிக்கிறார்கள்.அதை வாங்குவதற்கும் தயங்குகிறார்கள்.இப்படி வாங்குவதை கௌரவக்குறைச்சலாகவும்,சந்தேகத்திற்குரியதாகவும் இப்போது கருதுகிறார்கள்.புதுப்புது குடியேற்றங்கள் அதிகமாக நிகழும் நகர்ப்புற வீட்டமைப்பில் எல்லோரும் தனித்தனி தீவு போல் வாழ்வதால் இப்படி வாங்கி சாப்பிடுவதில் ப்ல சந்தேகங்களும் பரப்பிவிடப்பட்டுள்ளது.

முன்புள்ள வாழ்க்கை முறையில் விசாலமானதும் பரக்கத்தும்,அபிவிருத்தியும் இருந்தது. இப்போது எல்லாமே சுருங்கிவிட்டது. '' அல்லாஹ் உணவை ஊசிப்போகவைத்ததே,பணக்காரர்கள் ஏழைகளுக்கு கொடுக்காமல் அதை சேமித்து வைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான்'' என முன்வேதமொன்றில் கூறப்பட்டுள்ளதாக வஹ்ப் என்ற ப்ண்டிதர் கூறுகிறார்

இப்படி உணவு கெட்டுப்போக ஆரம்பித்தது கிமு 13 --க்குப்பிறகு -- பனூ இஸ்ராயில்கள் காலத்தில்தான்.அவர்களுக்கு முன்னர் எவ்வளவு நாட்கள் ஆனாலும் உணவு கெட்டுப்போய் துர்வாடையெல்லாம் வருவதில்லை '' இஸ்ரவேலர்கள் இல்லையெனில் இறைச்சி கெட்டுப்போய் இருக்காது. ஹ்வ்வா (ஏவால்) இல்லையெனில் எந்தப்பெண்ணும் தனது கணவனை ஏய்த்திருக்கமாட்டாள்'' என்றார்கள் எம்பெருமானார் (ஸல்) அவர்கள், (புகாரி ; 3330, முஸ்லிம் ; 1470)

ஏனெனில் அல்லாஹ்  '' மன்னு சல்வா '' என்னும் விசேச உணவை அவர்களுக்கு இறக்கி வைத்தபோது அதை நாளைக்கென சேமித்து வைக்கக்கூடாது என அவர்களுக்கு ஆணையிட்டான்.ஆனால் அவர்கள் அவநம்பிக்கையின் பேரில் அதை சேமித்து வைத்தார்கள்.அதற்குத் தண்டனையாகத்தான் உணவு ஊசிப்போக ஆரம்பித்தது.வாழ்வாதாரங்களும் வசதிகளும் பெருகிவிட்ட இந்த நவீன காலத்தில் இதயம் மட்டும் சுருங்கிவிட்டது.

எனவேதான் இப்போதெல்லாம் சாப்பிட்டபின் மிச்சம் இருந்தால் அதை குளிர்சாதனப் பெட்டியான ஃபிரிட்ஜில் வைத்து எத்தனை நாளானாலும் எடுத்து எடுத்து சூடாக்கி சூடாக்கி சாப்பிடுகிறார்களே தவிர அதை இல்லாத மக்களுக்கு கொடுப்பதில்லை.இப்படி இருக்கக்கூடாது.அண்டைவீட்டுக்காரனுக்கும் சேர்த்து சமைத்து அவனையும் கவனி என்று அண்ணல் நபி (ஸல்) அருளினார்கள்.

'' எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவாரோ அவர் அவரது அண்டைவீட்டாருக்கு உதவட்டும்'' (நபிமொழி ;முஸ்லிம் ; 48) '' அல்லாஹ்விடத்தில் சிறந்தவன் அண்டை வீட்டாரிடம்  சிறந்தவனே! '' (நபிமொழி அபூதாவூது ; 1586) ஹளரத் ஜிப்ரயீல் (அலை) அண்டைவீட்டாருக்காக தொடர்ந்து என்னிடம் வலியுறுத்திகொண்டே  வந்தார்கள். எங்கே சொத்தில் பங்கு கொடுக்கச் சொல்வார்களோ என நான் கருதுமளவிற்கு '' என்ற புகாரி (6014) முஸ்லிம் (2624) நபிமொழியை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

மூன்றாவது உபதேசம் ; தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடு. நிச்சயமாக தொழுகை முஃமின்கள் -- நம்பிக்கையாளர்கள் மீது நேரங்குறிக்கப்பட்ட  கடமையாகும் '' (4 ;103)  '' தொழுகையில் பாராமுகமாயிருக்கும் தொழுகையாளிக்கு கேடுதான் '' (107 ; 4,5) என்ற இறைவசனங்களுக்கு  '' காலதாமதமாக தொழுபவர்கள் '' என நபிமொழியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. (BAZZAR ; 392) அல்லாஹ்வுக்குப் பிரியமான தொழுகையை உரிய நேரத்தில் தொழுது அவனது பேரருளைப் பெற்றுக்கொள்ளுவோமாக! ஆமீன்!!! வஸ்ஸலாம்..



என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் S.S.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர் , மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment