''அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி வருவதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படி செய்தோம் '' அல்குர்ஆன் 32 ; 21 நீ, திருந்தி அவனிடம் திரும்பி வரவேண்டும் என்பதற்காகத்தான் அவன் உனக்கு சிறிய வேதனையைத் தருகின்றான்.
சந்தோஷங்கள் உன்னை இறைவனை விட்டும் தூரமாக்கும் போது கவலைகள் தாம் உன்னைக்கட்டிப்போட்டு அவனிடம் கொண்டு போய்ச்சேர்க்கின்றது. மௌலானா ரூமி கூறுவார்கள் ; தாய்மார்களுக்குப் பிரசவ வேதனை ஏற்படாதவரை குழந்தை பிறப்பதற்கு வேறு வழி எதுவும் கிடையாது.அதாவது வேதனை மிகவும் முக்கியமானது.ஞானமெனும் அமானிதம் உள்ளத்தில் இருக்கின்றது. உயிரோ அதை கருவுற்றுள்ளது.
மற்றபடி இந்த அறிவுரைகளெல்லாம் அமானிதத்தை வெளிக்கொணர்வதற்கு தாதியைப் போன்றது.தாதியானவள் கூறுகிறாள் ; பெண்ணுக்கு இன்னும் பிரசவ வேதனை ஏற்படவில்லை.அந்த வேதனை ஏற்ப்பட்டால் தான் குழந்தை பிறப்பதற்கு வழி உண்டாகும்.அதாவது அறிவுரைகள் பயன்தரவில்லை என்றால் நன்மையின் செயல்பாடுகள் எதுவும் நடைபெறாது. '' மஸ்னவி ஷரிஃபு.
உனக்கு வலி வந்தாலே உன்னிடம் உள்ள உண்மை பிரசவிக்கும். இது ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல,எல்லாத் துறைக்கும் இது தான் பொது விதி.சாதனைப் படைத்தவர்களெல்லாம் வேதனைப்பட்டவர்கள் தாம்.கஷ்டப்பட்டு படித்தால் தான் பார் போற்றும் பேரறிஞனாக முடியும்.அல்லும் பகலும் அயராது பாடுபட்டால்தான் பெரிய தொழில் அதிபராக நீ உயர முடியும்.
எதிர்ப்புகள் கண்டு கண் கலங்காமல் எதையும் தாங்கும் இதயத்துடன் வீறு நடைபோட்டு தீரத்துடன் செயல்பட்டால்தான் நீ, தலைவன் ஆகி பிரகாசிக்க முடியும். உடலுக்கு வரும் வியாதி மனிதனுக்கு தனது உடலின் மீது கவனத்தை திருப்புகின்றது. தலைவலி,வயிற்றுவலி போன்ற நோய்கள் வரும்போது தான் தனக்கு தலையும்,வயிறும் இருக்கின்றதே என்ற ஞாபகமே வருகின்றது.
ஆரோக்கியமாக இருக்கின்றபோது தனக்கு உடல் என்று ஒன்று இருக்கின்ற சிந்தனையே வருவதில்லை.எனவே வியாதி வருவதே,நம் உடலின் மீது நமது கவனத்தை திருப்பத்தான்.இப்படி வியாதி,உடலை கவனப்படுத்துவதைப்போல மனக்கவலை நமக்கு மனதைக்கவனப்படுத்துகிறது. '' தன்னை அறிந்தவனே தனது இறைவனை அறிகின்றான் '' என்பது நபிமொழி.
தன்னைப்பற்றிய நினைப்பே வராத போது எப்படி அதனைப்பற்றி அறிய முடியும்.இந்த வகையில் ; மனவேதனை தன்னைப்பற்றிய விழிப்பு நிலை உண்டாக வழி செய்கின்றது ஒருவருக்கு மனவேதனை ஏற்ப்படவிலையெனில் ஆணவம் தலைக்கேறி அவரது ஆன்மா அழிந்து விடும்.
மனதிற்கு உண்டாகும் வலிகள் மனிதனை பணிவும்,பண்பும் உள்ளவனாக,புடம் போட்ட தங்கமென அவனை மிளிரச்செய்கின்றது உராய்வில்லாமல் ரத்தினங்களை பள பளப்பாக்க முடியாது.சோதனைகளின்றி மனிதரை சரியானவராக்க முடியாது '' என்றார்கள் ஃபூயூசியஸ். மனசு -- நப்ஸு,ஒரு புற்று நோய்.அதற்கு வலியெனும் மின் அதிர்வைக் கொடுக்காமல் சிகிச்சை செய்ய முடியாது.
துன்பங்கள் தரும் வலியே,மனிதனை தியாண நிலைக்கு அழைத்துச்சென்று இதய தரிசணத்தின் மூலமாக,இறை தரிசணத்தைப் பெற்றுத்தருகின்றது'' துன்பத்தின் இன்பமே! சித்தரவதை,சிறை,வெறுப்பு,சாவினை நேருக்கு நேர் சந்திப்பது,தூக்கு மரத்தில் ஏறுவது ; துப்பாக்கி சூடுகளுக்கு அஞ்சாமல் நிதானமாக முன்னேறுவது கடவுளாகவே உண்மையில் மாறுவது'' வால்ட்விட்மன்.
'' நான் உடைந்து போன இதயத்தில் இருப்பேன் '' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) மறுமை நாளில் அடியானிடம் அல்லாஹ் ஆதமின் மகனே! நான் நோயுற்று இருந்தேன் நீ ஏன் என்னிடம் வந்து நலம் விசாரிக்கவில்லை? பசியோடும்,தாகத்தோடும் உன்னிடம் உணவும்,தண்ணீரும் கேட்டேன் நீ எனக்கு தண்ணீரும்,உணவும் அளிக்கவில்லையே என்று கேட்பான்.
அதற்கு அந்த அடியான், '' நீ அகிலங்களின் அதிபதி.உனக்கு நான் எவ்வாறு உணவும், தண்ணீரும் அளிப்பேன்.உன்னிடம் வந்து எப்படி நலம் விசாரிப்பேன் '' என திருப்பிக்கேட்பான்.அப்போது அல்லாஹ், எனது இன்ன அடியான் (பசியுடன்) உன்னிடம் உணவு கேட்டான் நீ,அவனுக்கு உணவளிக்கவில்லை.நீ அவனுக்கு உணவளித்திருந்தால்..... அவ்வாறே,தாகித்து உண்ணிடம் தண்ணீர் கேட்டு வந்தவனுக்கு நீர்,புகட்டி இருந்தால்... '' அவனிடம் என்னைக்கண்டிருப்பாய் '' என்பான் நபிமொழி -- முஸ்லிம்
கொண்டாட்டங்கள் உன்னை வெளியே கொண்டு சென்று விடுகின்றபோது, கவலைகள்தாம் உன்னை உள்நோக்கி பயணமாக்கிவிடுகின்றது.உள்ளத்தின் உள்ளே...உள்ளின் உள்ளே..... உள்ளே..... செல்ல வலிகளை வழித்துணையாக
ஆக்கிக்கொள்வோமாக!!! அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!! வஸ்ஸலாம்..
என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர், மலேசியா)
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
0 comments:
Post a Comment