ஒவ்வொரு பகுதியிலும் ஷரீஅத்,குர்ஆன் பிக்ஹு,மீலாது மாநாடுகள்,உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாமே தீர்வு' எனும் கொள்கையை பரவலாக்க, உலமாக்கள் உழைக்க வேண்டும் என்று, ஏப்ரல் 27, 28 தேதிகளில், சென்னை அடையார் குராசானி பீர் தர்ஹா மஸ்ஜிதில் நடைபெற்ற, ஜமாஅத்துல் உலமா மாநாட்டில் வேண்டுகோள் விடப்பட்டது.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கிட உழைப்பதும்,உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் வழியில் தீர்வு காண்பதும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றும் எம் நோக்கத்தில் இஸ்லாத்தின் மாண்புகளை மென்மேலும் பரவலாக்கும் முயற்சியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஷரீஅத் மாநாடுகள், மீலாது விழாக்கள்,குர்ஆன் மாநாடுகள், ஃபிக்ஹ் மாநாடுகள், சமூக விழிப்புணர்வு மாநாடுகள் போன்றவை நடத்தப்பட வேண்டும். "உலகின் எல்லாப் பிரச்சினை களுக்கும் இஸ்லாமே தீர்வு'' என்ற கொள்கையைப் பரவலாக்கிட உலமாக்கள் உழைத்திட வேண்டும்.
2. நம்முடைய முன்னோர்கள் இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி வக்ஃபு செய்த சமுதாயத்தின் சொத்துக்கள் சூறையாடப் படுவதைத் தடுத்திடவும், வக்ஃப் சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப் படவும்,மத்திய – மாநில அரசுகள் வழிகாண வேண்டும். மார்க்கம் அறிந்த ஆலிம்களையும், வக்ஃபு போர்டு உறுப்பினர்களாக நிய மிக்கவேண்டும். இதற்கு மத்திய வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
3. பயன்பாட்டில் இல்லாத வக்ஃபு நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளலாம் என்றதோர் ஆபத்தான சட்டம், நிறைவேற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது. முஸ்லிம்களின் வக்ஃபு சொத்துக்களை சட்டத்தின் துணையுடன் அபகரிக்கும் இந்த முயற்சியை, முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
4. ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜுக்குச் செல்வோருக்காகக் கொடுக்கப்பட்டு வந்த மானியம், படிப்படியாக நிறுத்தப்படுவது, முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். எனவே, மீண்டும் ஹஜ் மானியம் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜிகள், அங்கே, தமக்குரிய வழிகாட்டிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். எனவே, ஹாஜிகளுக்கு வழி காட்டிகளாக ஆலிம்களை நியமிக்க வேண்டும். குறைந்த பட்சம் 100 ஹாஜிகளுக்கு ஓர் ஆலிமை வழிகாட்டியாக நியமிக்க வேண்டும். இதற்கு ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
5. குண்டு வெடிப்புகளை யார் செய்தாலும் அது வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும்.ஆனால், அதைக் காரணம்காட்டி எந்தவித ஆதாரமுமின்றி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக்கூடாது. அத்தோடு உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை சிறைக் கைதிகளாகவே வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது. எனவே,குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய அரசு முயற்சி செய்யவேண்டும்.
குண்டு வெடிப்புகள் என்றவுடன் முஸ்லிம்களை குறிவைத்தே விசாரணை நடைபெறுவதும், காவல் துறையும்,ஊடகமும் – கைகோர்த்துக்கொண்டு முஸ்லிம்களை கைது செய்யப் பாடுபடுவதும்,தொடர் கதையாகி வருகிறது. இந்த அரச வன்முறையை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.முஸ்லிம்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும், இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வஸ்ஸலாம்......
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment