Friday, January 23, 2015

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!

நமது நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தலைமுறைப் பேரராகின்றனர்.

1.    செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு

அன்னாருக்கு அபுல் ஹஸன், முர்தளா, அசதுல்லா போன்ற திருப்பெயர்களும் உள்ளது. அன்னாரின் தந்தையார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாருடன் பிறந்த அபூதாலிப் என்பவராவார். அவருடைய தந்தையின் பெயர் அப்துல் முத்தலிபு.
செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு (யானை ஆண்டிற்கு முப்பது வருடத்திற்கு பின்)  ரஜப் மாதம் பிறை 18 வெள்ளிக்கிழமையன்று திருமக்காவில் கஃபா ஆலயத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு அலி என்று பெயர் வைத்தவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர்கள் தமது தாயாரான அசது என்னும் பாத்திமா வயிற்றில் கர்ப்பமாயிருக்கும் போது, அந்த அம்மையாருக்கு அற்புதமான நல்ல பல கனவுகள் தோன்றின. ஒரு தடவை கஃபா ஆலயத்திலுள்ள, 'ஹத்தீம்' என்னும் இடத்திலிருந்து மேகம் ஒன்று எழுந்து சென்று, அவர்கள் தலைக்கு மேல் குடையைப் போன்று நிழலிடக் கண்டார்.


ஒரு தடவை ஒளிமயமான சிலர், அவர் பெறப் போகும் மகவைப் பற்றி வாழ்த்துக் கூறிப் போனதாக கண்டார். மேலும்அவர் கூறியிருப்பதாவது:

என் புதல்வர் அலி என்வயிற்றிலிருக்கும் போது, மனதில் ஒருவித மகிழ்ச்சியுணர்வும், தெம்பும் காணப்படும். நான் கஃபா ஆலயத்திற்குச் சென்று, ஏதாவதொரு விக்கிரகத்தைத் தொழுவதற்கு நாடினால், உடனே எனக்கு ஒருவித மயக்கம் வந்து விடும். நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டால், அந்த நிலைமை அகன்று விடும். இந்தத் தன்மையால் நான் விக்கிரகத்தைத் தொழுவதையே விட்டுவிட்டேன்.

அவர் என் வயிற்றிலிருந்து பிறக்கும் நேரம்  நெருங்கியவுடன், எனது கண்ணுக்கு ஏதோ  ஒரு ஒளி தென்பட்டது. எங்கிருந்தோ, அல்லாஹ்வைத் துதிக்கும் சப்தம் முழங்குவதையும் என் செவிகள் கேட்டன. அவர் பிறந்து மூன்று தினங்கள் வரை, என்னிடம் அவர் பால் அருந்தவில்லை. அதனால், குடும்பத்தார் அனைவருக்கும் அவரைப் பற்றி ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், எனது இல்லம் வந்து அவரை வாங்கி தம்முடைய மடியில் வைத்துத் தமது பரிசுத்த நாவை அவர் வாயிலிட்டு சுவைக்கச் செய்தனர். அன்று முதல் அவர் பால் குடித்து வரலானார்.

நபிகள் நாயகத்திற்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட போது அலி நாயகம் வாலிபராக இருந்தார்கள். தமக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டதை அலி நாயகத்திடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன போது, எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்காமல் உடனே இஸ்லாத்தை ஏற்றார்கள். ஹழ்ரத் அலி நாயகத்திற்கு 25 வயதானபோது பெண்கள் தலைவியாம் பாத்திமா  நாயகி அவர்களை திருமணம் செய்து வைக்கப்பட்டது. நிகாஹ் மஸ்ஜிதே நபவியில் மிக எளிமையாக நடந்தது.
அலி நாயகத்தின் வாழ்க்கை எல்லாவிதத்திலும் தனிச்சிறப்புடையதாகவே இருந்தது. நற்குண ஒழுக்கங்கள் அவர்களிடம் பிறவியிலேயே அமைந்திருந்தன. வீட்டு வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்வார்கள்.

நபிகள் பிரான் மதீனமாக நகரில் பள்ளிவாசல் கட்ட ஆரம்பித்தபோது, செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சாதாரண கூலி ஆட்களைப் போல் வேலை செய்தார்கள்.
அகழ் யுத்தத்தின் போது நகரத்தைச் சுற்றிலும் அகழி தோண்டும்போது, அந்தப் பணியில் மும்முரமாகவும், முதன் முதலாகவும் ஈடுபட்டது அலி நாயகம் அவர்களே. அவர்களின் உணவு பழக்கமும் உணவு உண்பதிலும் எளிமையையே கடைபிடித்து வந்தனர். அன்னாரின் ஆகாரம் மட்டரக கோதுமையாகவே இருந்தது. துணைக்கறி இருப்பின் உபயோகித்துக் கொள்வார்கள். இல்லையேல் ரொட்டியை மட்டும் புசித்துவிட்டு எழுந்து விடுவார்கள். அன்னாரின் படுக்கை விரிப்பு – ஒரு கம்பளத்தை மெத்தையாக தைத்து அதனுள் பேரீத்த மட்டை நார்களை நிரப்பிப் படுக்கைக்கு உபயோகித்து வந்தனர்.

பணிவு, பயபக்தி, இரக்கம், ஈகை, நேர்மை போன்ற உன்னத குணங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒருங்கே அமைந்திருந்தன. அலி நாயகம் எவரையும் வெறுத்ததில்லை. ஏழை, எளிய மக்களிடம் இவர்கள் காட்டிவந்த இரக்கத்திற்கு ஈடு இணையே இல்லை.
அலி நாயகம் அவர்கள் எங்கள் அனைவரையும் விடப் பெரும் வீரம் படைத்தவர்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள். அன்னாரின் வீரதீரங்களைப் பற்றி  கூறுவதாயின் வரலாறு பெரியதாகி விடும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்தின் போது மதீனாவின் அன்சாரிகளுடன் மக்கா முஹாஜிர்களை இணையாதக்கி வைத்தபோது அலி நாயகத்தை மட்டும் எவருடனும் சேர்த்து விடவில்லை. அதுபற்றி பெருமானாரிடம் வினவியபோது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாசத்தோடும், பரிவோடும் அலி நாயகத்தை கட்டித் தழுவிய வண்ணம், அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு, அலியே! இம்மையிலும், மறுமையிலும் உம் சகோதரன் நானே! என்று கூறினார்கள்.

ஒருமுறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாசத்தோடும், பரிவோடும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, 'அலியே! மூசா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, ஹாரூன் நபி அலைஹிஸ்ஸலாம் இருந்து வந்த இடத்தில் நீவிர் எனக்கு இருந்து வருகிறீர். ஆனால் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் நபியாக இருந்தார். எனக்குப் பின்னரோ, நபியில்லை. ஆதலால் நீர் நபியல்ல எனினும் நான் உம்மைச் சேர்ந்திருக்கிறேன். நீர் என்னைச் சேர்ந்தவராயிருக்கிறீர் என்று கூறினார்கள்.

கலீபாக்களில் நான்கானவராயிருப்பினும்  அலி நாயகத்தை அந்த மூன்று கலீபாக்களும் கேளாமல் எதையும்  செய்ததில்லை. செய்யிதினா அலி நாயகம் செய்யிதினா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் சஹாபாக்களின் ஏகோபித்த  முடிவின்படி கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பதவிக்கு வந்த பிறகு குழப்பங்கள் தலைதூக்கின. இருந்தபோதும் நீதிபரிபாலனத்தில்  அணுவளவும்  அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. அதற்காகவே தங்களது ஆட்சியின் தலைமை பீடத்தை கூபா நகருக்கு மாற்றிக் கொண்டனர். அங்கு சென்று நான்கு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களும் நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தியபின் தமது அறுபத்தி மூன்றாம் வயதில் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டு, ரமலான் மாதம் 21ம் நாள் காலைத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் சென்று கொண்டிருந்தபோது 'இப்னு முல்தஜிம்' என்னும் பெயருடைய கயவன் ஒருவனால் விஷம் தோய்த்த வாளால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள்.

2.    செய்யிதினா இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு

இந்தப் பெருமகனாரின் வாழ்க்கை பிரபல்யமானது. சரித்திரங்களில் மிகத்தெளிவாக இவர்களின் வாழ்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இமாம் அலி நாயகம் செய்யிதினா பாத்திமா ஜொஹ்ரா ரலியல்லாஹுஅன்ஹுமா ஆகியோருக்கு முதல் மகனாக இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 15ல் பிறந்தார்கள். இவர்களுக்கு  ஹஸன் என்ற பெயரைச் சூட்டியவர்கள் நானில வேந்தர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அரபு மொழி வரலாற்றிலே, ஹஸன் எனப் பெயரிட்டது அதுவே முதல் தடவை என்பது
குறிப்பிடத்தக்கது.


செய்யிதினா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறவிலேயே அழகும் முகக்களையும் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் சாயல் கிட்டத்தட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒத்திருந்தது என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் தந்தை செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் கலீபாப் பதவியேற்று, ஆறு மாதங்களே நீதியாட்சி நடத்தினர். அதன்பின் ஹிஜ்ரி நாற்பத்தொன்றாம் ஆண்டு, மூன்று நிபந்தனைகளின் பேரில் அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வசம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு, உலக விவகாரங்களிலிருந்தும் ஒதுங்கித் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினர்.
ஒரு முறை அவர்களுக்கு பணக் கஷ்டம் ஏற்பட்டபோது, அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதி உதவி தேட முற்பட்டனர். உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, மகனே! உமக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கிக் கொள்ள அல்லாஹுத்தஆலாவிடம் முறையிடுவதை விட்டுவிட்டு உம்போன்ற ஒரு மனிதனுக்கு ஓலை எழுதத் துணிந்து விட்டீரோ? என வியப்போடு வினவினார்கள். உடனே இமாம் அவர்கள் கடிதம் எழுத முயற்சித்ததை நிறுத்தி விட்டனர். பெருமானார் அவர்கள் அன்னாருக்கு ஒரு பிரார்த்தனை கற்றுக் கொடுத்தனர். அதனை இமாம் அவர்கள் ஓதிவந்தனர். அதன்பலனாக அமீர் முஆவியாவிடமிருந்து அவர்களுக்கு வேண்டியதற்கு மேலாக பணம் வந்து சேர்ந்தது.

இமாம் அவர்கள் பதவி விலகியபின் கூபா நகரை விட்டு விட்டு மதீனா நகர் சென்று அங்கேயே இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருமுறை தங்கள் சொத்து அனைத்தையும் தர்மம் செய்து விட்டார்கள். மூன்றாம் முறை தமது இல்லத்திலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் உள்பட பாதிப் பொருட்களையும் தருமம் செய்து விட்டார்கள்.

ஒருசமயம் தங்கள் வீட்டின் முன்வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பட்டிக்காட்டு அரபி தங்கள் முன் வந்து தங்களையும், தங்கள் அருமைத் தகப்பனார் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் அதிகமாகத் திட்டினார். அவருடைய இந்தக் கடுஞ்சொல்லை மிகப் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏசிப்பேசி முடித்தபின் சகோதரரே நீர் பசியுடன் இருக்கிறீரா? என்று கேட்டார்கள். அவர்களுடைய இந்த வார்த்தை;யைக் கேட்டவுடன் அந்த அரபி முன்னிலும் பல மடங்காகத் திட்டினார். அதையும் மிகப் பொறுமையுடன் கேட்டவுடன் முன்னிலும் பன்மடங்காக சப்தமிட்டுத் திட்டினார். அதையும் மிகப் பொறுமையுடன் கேட்டு முடிந்தபின் தன் அடிமையிடம் சையிக்கினை செய்தார்கள். அவர் வீட்டினுள் சென்று ஆயிரம் வெள்ளிக்காசு கொண்ட ஒரு பையை ஹழ்ரத் அவர்களிடம் வந்து கொடுக்க அதை அந்த ஏழையிடம் கொடுத்து சகோதரரே இப்பொழுது என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். ஹழ்ரத் அவர்களின் பெருந்தன்மையையும், பொறுமையையும்  கண்ட அந்த அரபி ரசூலுடைய மகனே என்னை மன்னித்து விடுங்கள், உங்களுடைய பொறுமையை சோதிப்பதற்காகவே இப்படி நடந்து கொண்டேன் என்றார்.
இமாம் அவர்களின் பகைவர்கள் இமாம் அவர்களைவ pஷம் வைத்து கொன்று விட எத்தனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் முடியவில்லை. இறுதியில் இமாம் அவர்களின் மனைவி ஜுவுதாவினால் நஞ்சு கொடுக்கப்பட்டார்கள். நான்கு தினங்கள் நஞ்சின் உபாதையால் கஷ்டப்பட்டார்கள். சையிதினா இமாம் ஹஸன் அவர்கள் ஹிஜ்ரி 3 ரமலான் மாதம் பிளை 15 திங்கட்கிழமை பிறந்து, ஹிஜ்ரி 35ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 49ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் பிறை 5ல் ஷஹீதானார்கள்.

3.    ஹழ்ரத் சையிது ஹஸனுல் முதன்னா ரலியல்லாஹு அன்ஹு

இவர்களைப் பார்த்தவர்கள் இவர்களை இமாம் ஹஸன் என்றே சொல்வார்கள். சொல்லிலும், செயலிலும் தம் தந்தையரைப் போலவே இருந்தார்கள். இதனால் ஜனங்கள் இவர்களை ஹஸனுல் முதன்னா(இரண்டாவது ஹஸன்) என்று அழைத்து வந்தார்கள். இவர்களுக்கு ஐந்து ஆண் குழந்தைகள் இருந்தார்கள். 1. ஹழ்ரத் செய்யிது அப்தில்லாஹில் மஹல் 2. ஹழ்ரத்  இப்றாகீம் 3. ஹழ்ரத் ஹஸனுஸ் ஸாலிஸ் 4. ஹழ்ரத் தாவூது 5. ஹழ்ரத் ஜஃபர்  முந்தைய மூன்று குழந்தைகளும் ஹழரத் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் செய்யிதா பாத்திமுத்து ஜெஹரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிறந்தவர்கள். பிந்திய இருவரும் பீபி ஹபீபாவின் மக்கள்.
கர்பலா யுத்தத்தில் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு  அன்ஹு அவர்களுடன் இருந்து  போர் செய்தார்கள். இறுதியில் சிலர்களை கைது செய்து கூபாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இவர்களும்இருந்தார்கள்.

அவர்களை சில காரணங்களுக்காக இப்னு ஜியாத் விடுதலை செய்து மதீனாவிற்கு அனுப்பிவிட்டான். பின்னர் வலீதிப்னு அப்துல் மலிக் உடைய ஆட்சிகாலத்தில் மஸ்ஜிது நபவியை விரிவுபடுத்தும்போது அதற்காக தாங்கள் தங்கியிருந்த வீட்டை கொடுத்து அதிலிருந்து வெளியேறினார்கள். இவர்கள் ஹிஜ்ரி 29 ரமலான் மாதம் பிறை 12ல் பிறந்தார்கள். ஹிஜ்ரி 45ல் தம் தகப்பனார் இமாம் ஹஸன் ரலியல்லாஹு  அன்ஹு அவர்களிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 97ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 17ல் வபாத்தானார்கள். மதீனாமுனவ்வராவில் உள்ள ஜன்னத்துல் பகீ என்னும்  கப்ர்ஸ்தானத்தில் அடங்கப்பட்டுள்ளார்கள்.

4.    ஹழ்ரத் செய்யிது அப்துல்லாஹில் மஹல் ரலியல்லாஹுஅன்ஹு

இமாம் அவர்கள் செய்யிதுஷ் ஷுஹதா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளார் பாத்திமா ஜொஹரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அருமை வயிற்றில் ஹிஜ்ரி எழுபதாம் வருடம் ரபீயுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை மதீனாவில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை ஹஸனுல் முதன்னா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
தந்தை, தாய் ஆகிய இருவர் வழியிலும் செய்யிது வமிசத்தை சேர்ந்தவர்களாயிருந்ததால் மக்கள் இவர்களை மிகவும் மதித்து  வந்தனர். எனவே இவர்களுக்கு மஹ்லு – சொக்கம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இவர்களுக்கு முஹம்மது, இப்றாகிம், மூசா, யஹ்யா, சுலைமான், இத்ரீசு என ஆண்மக்கள் அறுவர் இருந்தனர். இவர்கள் ஹிஜ்ரி 92ம் ஆண்டு ஷஃபான் மாதம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். கலீபா மன்சூர் அப்பாசி காலத்தில் பகுதாது சிறைக்கூடத்தில் ஹிஜ்ரி 145ம் ஆண்டு ரமலான் மாதம் 18ம் நாள் மறைந்தார்கள்.

5.    ஹழ்ரத் செய்யிது அப்துல்லாஹ் தானி ரலியல்லாஹு அன்ஹு

இவர் செய்யிது அப்துல்லாஹ் மஹல் அவர்களின் புதல்வர். இரவு முழுவதும் கண் அயராது தவம் செய்யும் தன்னிகரில்லாத தவயோகி. பின்னிரவாம் 'தஹஜ்ஜத்' நேரத்தில் இரண்டு ரக்அத்துத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பார்கள். பகல் காலத்திலும் இறைதியானத்திலேயே ஈடுபட்டிருப்பார்கள். வெள்ளி, திங்கள் ஆகிய இரு கிழமைகளிலும் பொதுமக்களுக்கு நல்லுபதேசம்  புரிவார்கள்.
இவர்களுக்கு ஆண்மக்கள் ஐவர் இருந்தனர். துருக்கி, புகாரா ஆகிய பிரதேசங்களில் வாழும் செய்யிது வமிசத்தார் இவருடைய சந்ததியரே ஆவர். இவர் ஹிஜ்ரி 103ம் ஆண்டு ரஜப் மாதம் மதீனமா நகரில் பிறந்து ஹிஜ்ரி 133ம் வருடம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்று 156ம் ஆண்டு ஜமாஅத்தில் ஆகிர் மாதம் மறைந்து மதீனாவில் அடங்கப்பட்டார்கள்.

6.    ஹழ்ரத் செய்யிது மூஸா ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் அவர்களின் தாயார் இமாம் ஜெய்னுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் செய்யிதா ருகையா ரலியல்லாஹு அன்ஹா ஆவார்கள். ஹழ்ரத் அவர்களுக்கு இரண்டு சகோதரர்கள். செய்யிது முகம்மது, செய்யிதுஇப்றாஹிம் ரலியல்லாஹு  அன்ஹுமா ஆகியோர்.
இமாம் பாகிர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் மகள் ருகையாதானி அவர்களை இவர்களுக்கு நிக்காஹ் செய்து கொடுக்கப்பட்டது.  தவத்தில் மிகுந்த ஈடுபாடு காரணமாகவே இவர்களின் தேகம் மிகவும்  மெலிந்து விட்டது.

ஒருசமயம் இவர்கள் ஹாரூன் ரஷீத் பாதுஷாவின் தர்பாருக்கு செல்ல வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் கால் இடறி விழுந்தார்கள். இதைப்பார்த்த அரசவையிலுள்ளவர்களும், பாதுஷாவும் சிரித்தார்கள். உடனே இமாம் அவர்கள், 'நான் கால் இடறிதான் விழுந்தேன். குடித்துவிட்டு தடுமாறி விழவில்லை' என்று நறுக்கென்று பதிலுரைத்தார்கள். இதைக் கேட்ட தாம் சிரித்ததற்காக வெட்கப்பட்டார்.

ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 152ம் ஆண்டு ரமலான் மாதம் 14ல் மதீனா முனவ்வராவில் பிறந்து, ஹிஜ்ரி 198ம் வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 213ம் ஆண்டு ரபீயுல் ஆகிர் மாதம் புனித ஜும்ஆ தினத்தில் வபாத்தாகி மதீனாவில் அடங்கப்பட்டார்கள்.

7.    ஹழ்ரத் செய்யிது மூஸா தானி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிது மூஸா என்பது இவர்களது  மேலான  திருப்பெயராகும். இவர்களின் தந்தையின் பெயரும்  மூஸா என்றிருப்பதனால் இவர்களை மூஸா தானி -இரண்டாவது மூஸா என்று அழைக்கப்பட்டது. இவர்களுடைய சைக்கினை பெயர் அபூ உமராகும். இவர்கள் இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைத் திருப்பேரனாவார்கள். இவர்களின் தாயார் பெயர் செய்யிதா ஹாலா என்பதாகும்.

இவர்களின் தர்பாரில் பக்தர்களின் காணிக்கை குவிந்து கொண்டேயிருக்கும். மறுபகுதியில் ஏழை எளியோருக்கு அது வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஜும்ஆத் தொழுகை முடிந்தவுடன் மிம்பரில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் புரிவார்கள்.

அன்னாரின் பேச்சைக் கேட்டு நூற்றுக்கணக்கான பிற சமயத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்களுக்கு  இறைவன் அறிவுப் பாக்கியத்தை அளவின்றி கொடுத்திருந்தான். இவர்கள் செய்யிதினா இப்றாஹீம் முர்த்தளாவின் புதல்வி ஜெய்னம்பு என்பாரை மணந்திருந்தார்.
இவர்களின் வழியிலிருந்து செய்யிதினா தாவூது என்பாருடன் ஆறு ஆண்மக்களும், மூன்று பெண்மகளும் இருந்தார்கள்.இரண்டாவது மனைவியின் பெயர் பீபி மைமூனா. இவர்களுக்கு மூன்று ஆணும், இரண்டு பெண்களும்  பிறந்தனர்.

ஹிஜ்ரி 193ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 6ல் மதீனாவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 238ல் ரபீயுல் ஆகிர் மாதம் தங்கள் தந்தையிடம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 288ம் வருடம் ஸபர் மாதம் வபாத்தாகி மதீனாவில் அடங்கப்பட்டிருக்கிறார்கள்.

8.    செய்யிதினா தாவூது ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு சிராஜுத்தீன் என்ற பெயரும் உண்டு.இவர்களின் சைக்கினைப் பெயர் அபூ முஹம்மது அபூபக்கர் ஹழ்ரத். ஒவ்வொரு கணமும் இறையச்சத்திலேயே வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான சமயத்தில் இறையச்சத்தினால் தன்னிலை மறந்து அழுது கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் ஓதிக் கொண்டேயிருப்பார்கள். தம் குடும்பத்தார்களுக்கும், பந்துக்களுக்கும்  உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள்.

அவனுடைய படைப்புகள் அனைத்தையும் தம்மை விட மேலானதாகவே கருதி வந்தார்கள். தாம் எந்த இடத்தில் அமர்கிறார்களோ அந்த இடத்திலேயே மற்றவர்களையும்  அமர வைப்பார்கள். தாங்கள் உடுத்தும் உடுப்பையே மற்றவர்களையும் உடுத்தச் செய்வார்கள்.
ஒருமுறை இவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது, ஜனங்கள் இவர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நின்றார்கள். அச்சமயம் அன்னார் பணிவுடன் அல்லாஹ்வின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்று உபதேசிக்கத் துவங்கிவிட்டு அழுதார்கள். இதைக் கண்ட ஜனங்களும் அழுதார்கள்.

அன்னாருக்கு நான்கு ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தது. ஆண் மக்கள்: 1. முஹம்மது அப்துல்லாஹ் 2. முஹம்மது  ஆபித்3. ஷஹாபுத்தீன் ஹழ்ரத்.
இவர்களுக்கு இரண்டு மனைவியர். ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 245ம் ஆண்டு துல்ஹஜ்ஜு மாதம்  பிறை 11ல் மதீனாவில் பிறந்து ஹிஜ்ரி 277ம்  ஆண்டு தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 321ம் ஆண்டு வபாத்தாகி மக்காவில் அடக்கப்பட்டார்கள்.

9.    ஹழ்ரத் செய்யிது முரீத் ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு ஆபிதீன் என்றும், ஷம்சுத்தீன் என்றும் இரு பெயர்கள் உண்டு. இயற்பெயர் முஹம்மது. சைக்கினைப் பெயர் அபுல்காசிம். இதுமட்டுமில்லாமல் முத்தகீ முதவாழிவு ஆபித், ஸாகித் என்றும் பட்டப்பெயர்கள் சொல்லப்பட்டு வந்தது.

ஹிஜ்ரி 229ம் வருடம் ரமலான் மாதம் 12ம் நாள் திருமதீனாவில் பிறந்தார்கள்.இவர்களுடைய மகனாரான யஹ்யா என்பவர்கள் தம் தந்தையைப் பற்றி கூறியுள்ள சம்பவம் பின்வருமாறு:
அதாவது என் தந்தை தஹஜ்ஜத்து தொழுவதற்காக வெகுசீக்கிரமாக எழுந்துவிடுவார்கள். ஏதாவது ஒருஇரவில் அசந்து தூங்கி விட்டால் 'அஸ்ஸலாமு அலைக்கும் மினன் நௌம் யாகாசிம்' என்று ஒரு சப்தம் கேட்கும். உடனே தந்தையார் அவர்கள் எழுந்து தொழுகைக்கு சென்று விடுவார்கள்.சப்தம் வந்தவுடன் அக்கம்பக்கம்  சுற்றிப் பார்ப்பேன். எவரும் தென்படமாட்டார்கள். இந்த சப்தத்தை பலதடவை கேட்டிருக்கிறேன். சப்தமிட்டவர்களை காணமுடியவில்லை. கடைசியில் என் தந்தையிடமே இதைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு தந்தையவர்கள் அது ஒரு ஜின்னாகும். இந்த ஜின்னை என்னுடைய பணிவிடைக்காக அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்றார்கள். எனது தந்தை மறைந்த சமயத்தில் அது மனிதஉருவில் வந்து அழுது துக்கப்பட்டது.

இந்த ஜின் பல சமயங்களில் என்னிடம் வரும்.நான் அந்த ஜின்னைப் பார்த்து என் தந்தைக்கு பணியாளராக இருந்தது  போல் என்னிடமும் ஏன் இருக்கக் கூடாது என்று கேட்டேன். அதற்கு அது மெதுவாக பணிவாக, 'சையிது முஹம்மது அவர்களே உங்கள் தந்தை பெற்றுக் கொண்ட பதவியை நீங்கள் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே உங்கள் தந்தையிடம் சென்று இதற்கு ஒரு வழி காணங்கள் என்று உபதேசித்தது.

அது இந்தவிசயத்தை சொன்னவுடன் ஒரு வெள்ளிக்கிழமை தந்தையின் கப்ருக்குச் சென்று முறையிட்டேன். அந்த இரவில் என் தந்தை என் கனவில் தோன்றி, 'லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹான இன்னீ குன்து மினல்லாலிமீன்' என்ற விருதை  21 நாள்வரை ஓதி வரும்படி சொன்னார்கள். நானும்  அதேபிரகாரம் ஓதிவந்தேன். மேற்படி ஜின் என்னிடம் வந்து பணிவிடை செய்தது.
ஒரு சமயம் யூதர்கள் அன்னாரிடம் வந்து , உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி கேள்விகள்  கேட்டனர்.அன்னார் இறைவனின் குமாரர் அல்ல என்று விளக்கமாக, உருக்கமாக பதிலுரைத்தனர் இமாம் அவர்கள். அதைக்  கேட்டு அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினர்.
அன்னாருக்கு ஆறு ஆண் மக்களும், மூன்று பெண்மக்களும் இருந்தார்கள்.

1.அப்துல் வாகிது 2. அப்துல் வஹ்ஹாபு 3. அப்துர்ரஜ்ஜாக் 4. யெஹ்யா ஷாஹித் 5. அப்துல்காதிர் 6. அஹ்மது என்ற ஆண்மக்களும், 1. ஆமினா 2. ஜைனபு 3. ஆயிஷா ஆகிய பெண்மக்களும் இருந்தனர்.
செய்யிது யஹ்யா தவிர அனைத்து ஆண்மக்களும் சிறுபிராயத்திலேயே மறைந்து விட்டனர்.
ஹிஜ்ரி 299ம் ஆண்டு ரமலான் மாதம் 12ல் மதீனாமுனவ்வராவில் பிறந்து ஹிஜ்ரி 349ம் வருடம் தம் தந்தையிடம் பைஅத்து செய்து கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 415ம் வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் 17ல் வபாத்தாகி ஜன்னத்துல் பகீவு மதீனா கப்ரஸ்தானில் அடக்கப்பட்டார்கள்.

10.    செய்யிதினா யஹ்யா ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு குன்யத்துப் பெயர் அபூஸாஹிது என்ற பெயரும் உண்டு. குழந்தை பருவத்திலேயே இவர்களிடம் அற்புதக் காரணங்கள் வெளியாயின. ஆறு வயதில் கல்வி கற்க பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிரியர் போதிக்கும் பாடங்களைக் கடந்து முன்னேறிவிடுவது இவரது வழக்கம். இதைக் கண்டு ஆசிரியர் வியப்படைந்தபோது, ஆசிரியரை நோக்கி, நான் தங்கள் மாணவன். இப்னு ஜரீர் என்னும் மேதை தாயின் வயிற்றிலிருக்கும் போதே பேச ஆரம்பித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. எனக்கோ வயது ஆறு. இப்பிராயத்தில் நான் இவ்வாறு பாடங்களை படித்துக் கொண்டு போவதில் என்ன வியப்பிருக்கிறது? எனக் கேட்டனர். இது அல்லாஹ்வின் நன்கொடை. அதை அவன் விரும்பியவர்களுக்கு அளிப்பான் என்று கூறலானார். ஆசிரியர், அவரை அன்று முதல் ஆரிபுபில்லாஹ் -மெய்ஞ்ஞானி என அழைத்து வரலானார்.

இவர் பதினைந்து வயது முதல் தமது இறுதிக்காலம்  வரை ஜமாஅத்துத் தொழுகையை தவறவிட்டதில்லை. சுன்னத்து, நபில் தொழுகைகளை வீட்டில் தொழுவதும், பர்ளான தொழுகைக்கு மட்டும் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இவர்களுக்கு மூஸா, அபூஅப்துல்லா என்ற இரு ஆண் மக்களும், பெண் மகள் இருவரும் இருந்தனர். பெண்மக்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர்.
ஹிஜ்ரி 340ம் ஆண்டு ஷஃபான் மாதம் 17ல் மதாயினில் பிறந்து, ஹிஜ்ரி 370ம் ஆண்டு தம் தந்தையிடம் பைஅத்துச் செய்து கிலாபத்து பெற்றார்கள்.  ஹிஜ்ரி 430ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 24ல் வபாத்தாகி பழைய பாக்தாத் ஷரீபில் அடக்கப்பட்டார்கள்.

11.    ஹழ்ரத் செய்யிது அபூஅப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

இவர் பிறவித்துறவி. ஞானத்திற்கும், நற்பண்புகளுக்கும் உறைவிடம்.இவர்கள் இறைத் தியானத்திலேயே மூழ்கியிருப்பார்கள். அன்த்தல் ஹாதீ, அன்தல் ஹக்கு, லைசல் ஹாதீ இல்லாஹு (அல்லாஹுத்தஆலாவே நீயே வழிகாட்டி, நீயே மெய்யன். ஹக்குத்தஆலாவைத் தவிர வேறொரு வழிகாட்டி இல்லை) என்பதையே அவர்  வாய் சொல்லிக் கொண்டிருக்கும்.
ஜாதி, மத பேதமில்லாமல்  ஹழ்ரத்  அவர்களின் உபதேசத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடி  வருவார்கள். இந்த மாபெரும் கூட்டத்தில் ஆரிபீன்கள், ஒளலியாக்கள், ஸாலிஹீன்கள் இருப்பார்கள்.

ஒருநாள் வெண்குட்ட நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் தூரத்தில் நின்றுகொண்டு, அபூஅப்துல்லாஹ் அவர்களே! என்போன்ற நிர்க்கதியாளன் மீதும் ஒரு பார்வை இருக்கட்டும் என்றான். உடனே அவர்கள் எழுந்து, அவனருகே சென்று அவனுக்காக ஹக்குத்தஆலாவிடம்  இறைஞ்சலானார்கள். அக்கணமே அவன் பிணி நீங்கி குணமடைந்தான்.

இவர்கள் ஹனபீ மத்ஹபை பின்பற்றியிருந்தார்கள். இவர்களுக்கு இரு மனைவியர். ஒரு மனைவியின் பெயர் பாத்திமா. செய்யிதினா மூஸா ஜங்கிதோஸ்து என்பவரும், மற்றும் நான்கு ஆண் மக்களும், ஆயிஷா என்றொரு பெண் மகளும் இந்த அம்மையார் வயிற்றில் பிறந்தவர்கள்.
இரண்டாம் மனைவியின் பெயர் ரஹ்மத். இவர் வயிற்றில் ஆண் ஒன்றும்,பெண் ஒன்றும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்து ஐந்து தினங்களில் இறந்து விட்டனர்.

ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 365ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 13ல் ஜீலானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 387ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 14ல் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 473ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் வபாத்தாகி ஜீலானில் அடங்;கப்பட்டார்கள்.

12. ஹழ்ரத் அபூஸாலிஹ் மூஸா ஜங்கிதோஸ்து ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு ஜங்கிதோஸ்து –போர்ப்பிரியர் என்ற காரணப் பெயரும் உண்டு. இவர் சதா தமது நப்ஸு என்னும் துர்ஆத்மாவுடன் போராடி, அதனை அடக்கிக் கொண்டே இருந்ததால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று என்று ரயாலுல் ஹக் என்ற கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த மகானுடைய திருவதனம் எப்போதும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும். மிகத் திறமையுடைய பேச்சாளராக இருந்து வந்தார்கள். இவர்கள் பேசஆரம்பித்துவிட்டால் அது முடியும்வரை சபையோர்கள் மெய்மறந்து விடுவர்.

நான் அல்லாஹுத்தஆலாவுடைய அடிமை. என்னுடைய நாயனுக்கு என்றும் அடிபணிவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். அல்லாஹுத்தஆலாவை எப்போதும் அஞ்சியே இருக்கிறேன். ஜனங்களே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருநாமத்தை கேட்கும் சமயமெல்லாம் அந்த நபியின் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். இறைவனை எப்போதும் மறந்து விடாதீர்கள். எப்போதும் அவன் உங்கள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறான். உங்கள் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணுங்கள் என்று உபதேசிப்பார்கள்.

ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 400ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 27ல் ஜீலானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 460ம்ஆண்டு தம் தந்தையிடம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 489ம் ஆண்டு துல்கஃதா மாதம் 11ல் வபாத்தானார்கள். அடக்கவிடம் ஜீலானில் இருக்கிறது.

13.    ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

ஹிஜ்ரி 407ம் ஆண்டு ரமலான் மாதம் முதல் பிறையன்று அபூசாலிஹ் பின் மூஸா – பாத்திமா தம்பதியருக்கு ஹழ்ரத் கௌதுல் அஃலம் மகனாகப் பிறந்தார்கள். இவர்கள் பிறக்கும்போது இவர்களின் தாயாருக்கு வயது அறுபது.

இந்த மகான் பிறந்தபோது பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தேறின. இவர் பிறந்த தினத்தன்று அவர் தந்தையின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அபூசாலிஹே! உமக்கு அல்லாஹுத் தஆலா அருந்தவப்புதல்வரை அளித்திருக்கிறான். அவர் எனக்கும் அல்லாஹ்வுக்கும்  மிகப் பிரியமானவர். வலிகள், குதுபுகள்  ஆகியோரிடையே அந்தஸ்து மிக்கவர்' என அறிவித்தார்கள்.

இவர்கள் கருவிலிருக்கும் போது இவரது அன்னையின் கனவில் ஹழ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி 'உமது  கர்ப்ப அறையில் இருப்பவர் எல்லா வலிமார்களுக்கும் தலைவரான முஹ்யித்தீன் என்பவராவார் என்று நன்மாராயம் கூறிச் சென்றனர். இவர்கள் பிறந்த இரவில் ஜீலான் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண் குழந்தைகள் பிறந்தன. பெண்குழந்தைகள் ஒன்றுகூட இல்லை. இக்குழந்தைகள் யாவும் பிற்காலத்தில் பரிபூரணமான வலிகளாகவே திகழ்ந்தார்கள்.

ஒருமுறை ரமலான் பிறை ஒன்று அன்று இவர்கள் பால் அருந்தாதினால் அன்றுதான் ரமலான் பிறை ஒன்று என்று கணித்தார்கள். பின்னர் மார்க்கச் சட்டப்படி ரமலான் பிறை ஒன்று அன்றுதான் என்பதற்குரிய  ஆதாரங்கள் கிடைத்தன.

இவர்களின் இயற் பெயர் அப்துல் காதிர். சிறப்புப் பெயர் முஹ்யித்தீன். காரணப் பெயர் அபூ முஹம்மது. மக்கள் அழைப்பது கௌதுல் அஃலம் எனும் பெயர். இவர்கள் பிறந்த ஊர் ஜீலான் என்பதாக பொதுவாகச் சொல்லப்படுகிறது. இவர் பிறந்த இடம் 'நீப்' என்றும் வேறு பலர் 'புஷ்தீர்' என்றும்  கூறுகின்றனர். இந்த இரண்டும் ஒரே பெயராக இருக்கக் கூடும். என்றாலும், இவ்வூர்கள் ஜீலான் நகரைச் சார்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. குத்பு நாயகம் அவர்களின் தாய், தந்தை ஆகிய இருவழிகளிலும் செய்யிதினா இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் வம்சத்தைச் சார்ந்தவர்கள். கௌதுநாயகம் அவர்களுக்கு விபரம் தெரியும் முன்பே அன்னாரின் தந்தையார் மறைந்து விட்டார்கள். தந்தையை இழந்த நமது நாயகத்தை அவரது தாய்வழிப் பாட்டனாராகிய அப்துல்லாஹ் ஸெமஈ அவர்களே வளர்த்து வந்தார்கள்.

ஆரம்பத்தில் கல்வியை தம் சொந்த ஊரான ஜீலான் நகரிலேயே கற்றார்கள். பதினெட்டு வயதை அடைந்த பொழுது உயர்கல்வி கற்பதற்காக பகுதாது நகர் செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். அவரின் இந்த முடிவைக் கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள் அன்னாரின் தாயார் அவர்கள். தந்தையார் அபூசாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை நாயகம் அவர்களின் சட்டைப் பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.
அச்சமயம் தம் மைந்தரை நோக்கி, எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று உபதேசித்து அனுப்பி வைத்தார்கள். பகுதாதிற்காக பயணமாகிச் செல்லும் வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் நாயகமவர்கள். இவ்வியாபாரிகள் ஹமதான் எனும் நகரைக் கடந்து செல்லும் போது வழிப்பறித் திருடர்கள் அறுபது பேர் இவர்களை வளைத்துக் கொண்டார்கள். 

நாயகமவர்களை கொள்ளையர்கள் சோதித்து கேட்டபோது, தம்மிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாக உண்மையை சொன்னார்கள். ஆனால் திருடர்கள் நம்பவில்லை. இறுதியாக திருடர்கள் தலைவரிடம் கொண்டு சென்றனர். அங்கும்  அவர்கள் உண்மையே பேசினார்கள். நாயகமவர்களை சோதித்துப் பார்த்த போது, அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியவந்தது. வியப்புற்ற கள்வர்கள், காரணம் கேட்டபோது, தாயாரிடம் கொடுத்த வாக்குறுதி படி நான் உண்மையையே பேசினேன் என்றுரைத்தார்கள். இதைக்  கேட்டு கள்வர்கள் திருந்தி, இனிமேல் பாவச் செயல்களில் ஈடுபட போவதில்லை என்று நாயகமவர்களிடம் சத்தியம் செய்து கொடுத்தனர். இறைவனிடமும் பாவமன்னிப்புத் தேடினர். பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் வலிமார்களாக திகழ்ந்தனர் என சரித்திரம் கூறுகிறது.

மிகவும் கஷ்டப்பட்டு புறக்கல்வியை கற்று முடித்தார்கள்.ஹழ்ரத் ஹம்மாது நாயகம்  ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சில காலம் மார்க்கக் கல்வி கற்றார்கள். பகுதாது நகரில் ஹலாலான உணவுக்காக தேடி அலைந்தார்கள். அது கிடைக்கும்வரை பசியாக இருந்தார்கள். மாணவராக இருந்த காலகட்டத்தில் பாடம் படித்து விட்டு, காட்டிற்கு சென்று விடுவார்கள். கீரை, தழை முதலியவற்றை புசித்தே பசியை தீர்த்துக் கொண்டார்கள் என்று காயிதுல் ஜவாஹித் நூல் பக்கம் 7,8ல் காணப்படுகிறது.
புறக்கல்வியைக் கற்றுத் தேர்ந்தபின் தரீகத் என்னும் அகக் கல்வியில் புகுந்தார்கள்.  ஆத்மீகக் கல்வியை அதன் ஒழுக்க முறைகளை காஜி அபூஸயீதுல் முபாரக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்று முறையாக அனுமதியும் பெற்றார்கள். ஆகவே மக்களை விட்டுப் பிரிந்து காடு, மலைவனப்பகுதி ஆகியவைகளிலேயே காலங்கழிக்கவும் இறையை வணங்கவும் தியானம் செய்யவும் தொடங்கினார்கள். இதில் ஹழ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்கள். மாபெரும் தவத்தை அங்கு மேற்கொண்டார்கள்.
ஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன்? என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள். நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.

இதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததுமாக இருந்தது. அன்னாரின் பேச்சை கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் இருந்து எழுதிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் பகுதாது நகருக்கு வெளியில் உலாவச் சென்று திரும்பி வரும்போது வியாதியால் பீடிக்கப்பட்டு மெலிந்த ஒருவன் மிகவும் சீர்கேடான நிலையில் என்முன் தள்ளாடித் தள்ளாடி வந்து பலஹீனத்தால் கீழே விழுந்து, என் தலைவரே! எனக்கு கைகொடுத்து உதவுங்கள். தங்களின் அற்புத சக்தியின் பலத்தால் என் மீது ஊதுங்கள். என்னுடைய நிலைமை தங்களால் மேன்மையுறும்' என பணிவுடன் கூறினார். வலிகள் கோமான் அவரை ஆசிர்வதித்து ஓதி ஊதவே அதி அற்புதமான சக்தி பெற்று பூவைப்போல் அழகானான். அதன் பின் அவர் கூறியதாவது: அப்துல்காதிரே! நான் யார் என்பதை அறியவில்லையா? நான்தான் உன் தாய் வழிப்பாட்டனாராகிய ஹழ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மார்க்கம் ஆவேன். இக்காலத்தில் நலிவுற்றேன். உம்முடைய முயற்சியால் நான் நலம் பெற்றேன். என்னை உயிர்ப்பித்ததால் நீர் முஹ்யித்தீன் ஆவீர் எனக் கூறி மறைந்தார். பின்னர் பகுதாது நகருக்கு வந்து மஸ்ஜிதுக்கு சென்றபோது, மக்கள் நாயகமவர்களை சூழ்ந்து கொண்டு முஹ்யித்தீன், முஹ்யித்தீன் என்று அழைத்தனர்.

ஒரு சமயம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் தம்முடைய சொற்பொழிவின் இடையே, 'என்னுடைய பாதம் எல்லா வலிமார்களின் பிடரியின் மீதும் இருக்கிறது' எனக் கூறினார்கள். நமது நாயகம் அவர்களின் இவ்வார்த்தையைக் கேட்டவுடன் அச்சபையில் இருந்தோரும், ஞானதிருஷ்டியால் உணர்ந்தவர்களும் தங்கள் தலையை தாழ்த்தி நாயகமவர்களின் பாதங்களை தலை மீதும், கண் மீதும் வைத்துக் கொண்டார்கள்.

குத்பு நாயகம் அவர்கள் எண்ணற்ற அற்புதங்கள் (கராமத்துகள்) நிகழ்த்தியுள்ளார்கள். உலகின் போக்கையே மாற்றினார்கள். ஹிஜ்ரி 562ம் வருடம் ரபீயுல் ஆஹிர் பிறை 11 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அன்னாரின் புனித ரவ்லா ஷரீப் பகுதாது நகரில் அமைந்திருக்கிறது.
நாயகம் அவர்கள் நீண்டநாள் வரை திருமணம்  செய்யாமல் இருந்தார்கள். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆன்மீகத் துறையில் பிரவேசிப்பதற்குத் தடையாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம். ஒரு நாள் நபிகள் நாயகம் கனவில் தோன்றி, மணவாழ்க்கையில் ஈடுபட்டு சுன்னத்தை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டதற்குப் பின் அக்கட்டளைக்குப் பணிந்து நான்கு மனைவியரை மணந்தார்கள். இந்நால்வரிலிருந்து இறைவன் நாற்பத்தொன்பது பிள்ளைகளை இவ்வுலகில் தோற்றுவித்தான்.

மனைவியர்:

1.    மீர் முஹம்மது ரஹிமஹுல்லாஹ் அவர்களது புதல்வியான ஹழ்ரத் மதீனா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்
2.    ஸெய்யிது முஹம்மது ஷப்பி ரஹிமஹுல்லாஹ் அவர்களது புதல்வியான பீபீ ஸாதிக்கா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்
3.    பீபீ ஹழ்ரத் மூமீனா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்
4.    பீபீ ஹழ்ரத் மஹ்பூபா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்

புதல்வர்கள்:

1.    ஸெய்யிது ஸைபுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
2.    ஸெய்யிது ஷர்புத்தீன் ரஹிமஹுல்லாஹ்
3.    ஸெய்யிது ஈஸா ரஹிமஹுல்லாஹ்
4.    ஸெய்யிது அப்துர் ரஜ்ஜாக் ரஹிமஹுல்லாஹ்
5.    ஸெய்யிது அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ்
6.    ஸெய்யிது அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
7.    ஸெய்யிது ஸிராஜுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
8.    ஸெய்யிது அப்துல் ஜப்பார் ரஹிமஹுல்லாஹ்
9.    ஸெய்யிது ஷம்சுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
10.    ஸெய்யிது தாஜுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
11.    ஸெய்யிது அப்துல் முஇஸ்ஸி ரஹிமஹுல்லாஹ்
12.    ஸெய்யிது இப்றாஹீம் ரஹிமஹுல்லாஹ்
13.    ஸெய்யிது அபுல் பஜ்ல் ரஹிமஹுல்லாஹ்
14.    ஸெய்யிது முஹம்மது ஜாஹித் ரஹிமஹுல்லாஹ்
15.    ஸெய்யிது அபூபக்கர் ஜக்கரிய்யா ரஹிமஹுல்லாஹ்
16.    ஸெய்யிது அப்துர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ்
17.    ஸெய்யிது முஹம்மது ரஹிமஹுல்லாஹ்
18.    ஸெய்யிது அபுன் நஸ்ரு மூஸா ரஹிமஹுல்லாஹ்
19.    ஸெய்யிது ஜியாவுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
20.    ஸெய்யிது யூசுப் ரஹிமஹுல்லாஹ்
21.    ஸெய்யிது அப்துல் காலிக் ரஹிமஹுல்லாஹ்
22.    ஸெய்யிது ஸைபுர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ்
23.    ஸெய்யிது முஹம்மது சாலிஹ் ரஹிமஹுல்லாஹ்
24.    ஸெய்யிது ஹபீபுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்
25.    ஸெய்யிது மன்சூர் ரஹிமஹுல்லாஹ்
26.    ஸெய்யிது அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்
27.    ஸெய்யிது யஹ்யா ரஹிமஹுல்லாஹ்

புதல்வியர்கள்:

1.    ஆஃபியா பீ
2.    யாசீன்பீ
3.    ஹலிமா பீ
4.    தாஜ்பீ
5.    ஸாஹிதாபீ
6.    தாஹிராபீ
7.    உம்முல் பஸல்
8.    ஷரீபாபீ
9.    ஆபிதாபீ
10.    கதீஜாபீ
11.    ரஜிபீ
12.    உம்முல்பத்ஹு
13.    ஸஹராபீ
14.    ஜமால்பீ
15.    கைருன்னிசா
16.    ஷாஹ்நாஸ்பீ
17.    ஷாஹ்பீ
18.    பாக்கிராபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் அஜ்மஈன்
இருபத்திரண்டு பேரில் நான்கு பேர்களின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை.
நூல்: கலாயிதுல் ஜவாஹிர். தாரிக் பக்தாத்.

கௌதுல் அஃலம் இயற்றிய நூல்கள்

1.    குன்யத்துத் தாலிபீன் 2. புத்தூஹுல் கைப் 3. பத்ஹுர் ரப்பானீ 4. கஸீதா கௌதிய்யா 5. பஷாயிருல் கைராத் 6. அல்பவாயிது வல் ஹிந்து 7.அழ்ழயூலாதுர் ரப்பானிய்யா 8. அல் மவாஹிபு ரஹ்மானிய்யா.

நன்றி ;- sufimanzil.
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment