Monday, June 2, 2014

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை


ஹாமீம்! தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன. அல் குர்ஆன் 44:1, 2, 3, 4.

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா?
இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழி தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்தும் நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள். (மிஷ்காத் நபி மொழி எண்: 1305 விரிவுரை மிர்காத்).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கேட்டு விட்டுக் கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும். நபிமொழி. பதிவு: பைஹகி. ஆதாரம் மிஷ்காத்: 1302.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாயகம் (ﷺ) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். “மாதங்களில் ஷஃபானில் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன் அதற்கு அண்ணலார் (ﷺ); “ நிச்சயமாக அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கிறான். என்னைப்பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.” என எடுத்துரைத்தார்கள். பதிவு அபுயஃலா. ஆதாரம் அத்தர்கீப்: 1540.

இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிப்பார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.

“வானம் பூமி படைப்பதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் விதிகளை எழுதி விட்டான்.” நபிமொழிப் பதிவு. முஸ்லிம்: 2653.

குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு கேள்விக்கு நாயகம் (ﷺ) அவர்கள் பதிலளிக்கையில்; “நீங்கள் சந்திக்கப்போகும் எல்லா விஷயம் குறித்தும் (விதி) எழுதிய பேனா (மை) உலர்ந்து விட்டது. செய்யுங்கள் அல்லது செய்யாமல் போங்கள்” என்று எச்சரித்தார்கள். விதி என்பது இவ்வுலக கட்டமைப்பிற்கான அல்லாஹ் போட்ட பிளான் (திட்ட வரைவு) ஆகும். மனிதன் போட்ட பிளான் மாறும். அல்லாஹ் போட்ட பிளான் மாறாது. முடிவெடுக்கப்பட்ட இத்தீர்மான்கள் யாவும் “லவ்ஹுழ் மஹ்பூழ்” (பாதுகாக்கப்பட்ட பேழையில்), முறையாக முன்னமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் இந்த தீர்மானகளை நடைமுறைப் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான கழா கத்ரு தீர்மானங்களை நகல் எடுக்கும் பணி அதாவது லவ்ஹுல் மக்பூழிலிருந்து பிரதியெடுக்கும் பூர்வாங்க வேலைகள் இந்த பராஅத் இரவில் தொடங்கி லைலதுல் கத்ருடைய இரவில் நிறைவு பெறும். இந்த இறை திட்ட மாதிரி வடிவங்களை அது சம்பந்தப்பட்ட இறை மேலதிகாரிகளான வானவர்களிடம் புனித லைலதுல் கத்ருடைய இரவில் ஒப்படைக்கப்படும். இந்த வகையில் தான் இந்த இரண்டு இரவுகளில் காரியங்கள் தீர்மானிக்கப்பட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில விஷயங்களை அல்லாஹ் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறான். அடியான் கேட்டால் (துஆ செய்தால்) கொடுக்கலாம். அல்லது இன்ன நன்மையான செயல் அவன் புரிந்தால் இந்த பாக்கியம் அவனுக்கு வழங்கலாம். அவனது ஆயுளை நீடிக்கலாம். இரண பாக்கியம் கூடுதலாக கொடுக்கலாம். அல்லது குறைத்து விட வேண்டியதுதான், அவன் தர்மம் செய்தால் அவனுக்கு வர வேண்டிய பேராபத்துக்களை, துர்மரணகளை, துர்முடிவுகளை தடுக்கலாம் என இறைவன் தீர்மாநித்திருப்பான். அதன் படி நடந்தால் எல்லா காரியங்களும் சு(ல)பமாக நடந்தேறும். இல்லையெனில் மாறாகத்தான் நடந்தேறும். இதுமாதிரியான கழா கத்ருக்கு “கழா முஅல்லக்” என்று பெயர். இது மேற்படி விதத்தில் மாறும். “கழா முப்ரம்” முடிவான இறை விதி மாறாது.

நாயகம் (ﷺ) நவின்றார்கள்;

“விதியை, ‘துஆ’வைத் தவிர வேறு எதுவும் மாற்றாது. ஆயுளை, நன்மையை தவிர வேறு எதுவும் அதிகரிக்கச் செய்யாது. ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்.” ஆதாரம் இப்னு மாஜா: 4914.

சில விஷயங்களை அல்ல, பல விஷயங்களை நாம் கேட்டால் தான் கிடைக்கும். தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி முதல்வராக இருந்த போதுள்ள ஒரு அனுபவத்தை சொல்லவா? சில சமயம் சில காரணத்திற்காக சில மாணவர்களின் உணவு அனுமதி நிறுத்தி வைக்கப்படும். அது பட்டினி போடுவதக்கு அல்ல. வந்து கேட்டால் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். சில பேர் வீம்பிலே வீராப்புக்காட்டி விறைத்து நின்றால், மறைமுகமாக மற்ற உஸ்தாதுமார்கள், மாணவர்கள் மூலம் அவர்களை வரவழைத்து, கேட்க வைத்து, உணவு கொடுப்போம். ஏனெனில் நிர்வாக ஒழுங்குக்காக கேட்டால் தானே கொடுக்க முடியும். சட்டம் ஒழுங்கைப் பாதுக்க இந்த தந்திர முறை அவசியமாகிறது. இந்த உதாரணம், மாணவர்களுக்கு நன்றாக புரியும் என நினைக்கிறேன். குறிப்பாக எனது மஸ்லஹி பிள்ளைகள், இதை படிக்கும்போது சிரிப்பதை நன் பார்க்கிறேன். இதைப்பற்றி தங்களுக்குள் உரையாடுவதையும், நான் கேட்கிறேன். மாணவர்களுடனான இந்த சகவாசம், என்றும் பசுமையாக மலரும் நினைவுகளாக மனதில் பதிந்திருக்கும்.

நாமளாவது மாணவர்களை மறைமுகமாக மற்றவர்கள் மூலம் அழைத்து சாப்பாடு கொடுக்கிறோம். ஆனால் ஆற்றல் மிக்க அல்லாஹ் அருளாளன். நிகரற்ற அன்புடையோனின் கிருபையைப் பாருகள். இந்த பராஅத் இரவில் முதல் வானத்திற்கு அவனே வந்து, கேளுங்கப்பா, கொடுக்கிறேன், என்று (நம்முடைய பாணியில் சொல்வதாக இருந்தால் வெட்கத்தை விட்டு) கேட்கிறான் என்றால், அவன் எவ்வளவு இறக்கமுள்ளவன்? அவனே இறங்கி வந்து நம்மிடம் கேட்கச்சொல்லும் அற்புதமான இந்த அரிய வாய்ப்பை நாம் நழுவ விடலாமா? இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஆக பல விஷயங்களை கேட்டால்தான் கிடைக்கும். மனிதர்களிடமே இப்படி என்றால் அல்லாஹ் விடம் எப்படி அவனிடமும் சில விஷயங்களைக் கேட்டால்தான் கிடைக்கும். அப்படி இருக்கும்போது அவனிடம் கேட்பதற்கு நமக்கு என்ன யோசனை? அதுவும் அவனே கிழே இறங்கி வந்து கேளுங்கப்பா! கேட்பவர்கள் இருக்கிறீர்களா? கேளுங்கள்! நான் கொடுக்கிறேன், என்று கூவி கூவி அழைக்கும் போது, அவனிடம் கேட்க நமக்கு என்ன தயக்கம்? அப்படி என்ன வெட்கம்? அவனிடம் கேட்க நமக்கு அப்படி என்ன தலைக்கணம்? இதை ஒழிக்கத்தான் அல்லாஹ் துஆவை ஏற்படுத்தினான். மனிதர்கள் கேட்டால் கோபப்படுவார்கள். ஆனால் அல்லாஹ் கேட்காவிட்டால் கோபப்படுவான். எனவே தான் கௌதுள் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரலி) அவர்கள்; “அவன் கேட்டால் தான் கொடுப்பானா? விதியில் இருந்தால் கேட்காவிட்டாலும் கொடுப்பான். விதியில் இல்லாவிட்டால் கேட்டாலும் கொடுக்க மாட்டான்.” என விதண்டாவாதம் பேசாதே! இறுமாப்புடன் தர்க்கம் செய்யாதே! உனது அடிமைத்தனத்தை (பணிவை) வெளிப்படுத்துவதற்காக அவனிடம் கேளு! துஆ செய்! கேட்ட பிறகு தான் கிடைக்கும் என்பதும் அவனது கழா கத்ரு தான் என்று நம்பு, என்று நயம் பட எடுத்துரைத்தார்கள்.

நிஸ்ஃபு ஷஃபான் என்றும், பராஅத் இரவு என்றும் அழைக்கப்படும், ஷஃபான் மாதத்தின் 15 வது இரவு விசேஷமான இரவுகளில் ஓர் இரவாகும். இப்படி, மொத்தம் 15 விசேஷ இரவுகள் உண்டு, என்று இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் தனது இஹ்யாவில் பட்டியலிடுவார்கள்.

நிஸ்ஃபு ஷஃபான் என்றால், ஷஃபானின் பாதி அதாவது 15 வது இரவு என்று பொருள். பராஅத் இரவு, என்றால் விடுதலை இரவு என்று அர்த்தம்.

“இந்த இரவில் கல்பு கோத்திரத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் அளவு மக்கள் அல்லாஹ்வால் நரக விடுதலை அளிக்கப்படுவார்கள்.” என்று (பைஹகி: 3837 அஹ்மது: 176). நாயகம் (ﷺ) அவர்கள் குறிப்பிடுவதிலிருந்து, பராஅத் இரவின் பெயர் காரணமும் அதன் பவர் (மகிமை) காரணாமும் புரிகிறது அல்லவா!

புனித பராஅத் இரவில் உலக முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை தொன்று தொட்டு பாரம்பரியமாக செய்து வரும் அமல்கள் (செயல்கள்) வருமாறு:-

1,     மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.

2,     இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.

3,   பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது. அதாவது ‘கழா’ உள்ளவர்கள் கழாத் தொழுகைகளை நிறைவேற்றுவது, தஸ்பீஹ் நஃபீல் தொழுகை, திக்று, தஸ்பீஹ் செய்வது, குர்ஆன் ஓதுவது, இஸ்திக்ஃபார் செய்வது, ஸலவாத் ஓதுவது.

4,     அன்று பகலில் நோன்பு வைப்பது.
மகத்தான இந்த பராஅத் இரவின் சிறப்பிற்கும் இதில் இப்படி அமல் செய்வதற்கும் நபி மொழி தொகுப்பிலும் நபித்தோழர்கள், வலிமார்கள்  வாழ்விலும் நிறைய ஆதாரங்கள் உள்ளது.

“இந்த ஷஃபான் 15 வது இரவில், அல்லாஹ் தனது அடியார்களின் மீது பிரசண்ணாமாகி பாவ மன்னிப்பு கேட்போருக்கு மன்னிப்பும், அருள் வேண்டுவோருக்கு அருளும் வழங்கி, சூழ்ச்சிக்காரர்களை தள்ளியும் வைக்கிறான்” (நபிமொழி பைஹகி: 3835).

“எவர் ஐந்து இரவுகளை (இபாதத் செய்து) உயிர்பிப்பாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. 1. துல்ஹஜ் பிறை 8- மினா இரவு, 2. அர/பா இரவு, 3. ஹஜ்ஜுப்பெருநாள் இரவு, 

4. நோன்புப் பெருநாள் இரவு, 5. பராஅத் இரவு.” (நபி மொழி. ஆதாரம், அத்தர்கீப்: 1643) அதாவது சொர்க்கவாசிகளுக்குத்தான் இந்த இரவில் அமல் செய்ய தவ்/பீக் (இறை உதவி) கிடைக்கும்.

முதலில் மூன்று முறை யாஸீன் ஓதி துஆ செய்வது:-
மக்ரிபுத்தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஓத வேண்டும்.

முதல் யாஸீன் ஓதும்போது அல்லாஹ்வை வணங்கவும், நன்மைகள், தானதருமங்கள் செய்யவும், நமக்கு நீண்ட ஆயுளை சரீர சுகத்தோடு கொடுக்கும் படி நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது யாஸீன் ஓதும்போது பலா முஸீபத், நோய் நொடி, துன்ப துயரங்கள் நீங்கி நிம்மதியான சுக வாழ்வு வழங்க வேண்டி நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது முறை யாஸீன் ஓதும்போது உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் பறகத் செய்யும் படியும் மரணம் வரும் வரை யாரிடமும் கை நீட்டாமல் தேவையற்றவர்களாக நாமும் நம் சந்ததியும் வாழ வேண்டும் என்று நிய்யத் வைத்து ஓதத் துவங்க வேண்டும்.

நபிகள் நாயகம் அவர்கள் நவின்றார்கள்; ஷஃபான் 15 வது இரவு வந்தால் அந்த இரவில் நின்று வணங்குங்கள் அதன் பகலில் நோன்பு பிடியுங்கள் ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அந்த இரவின் சூரியன் மறைந்(து பொழுது சாய்ந்)ததும் துன்யாவுடைய வானத்திற்கு இறங்கி வருகிறான் அப்போது அவன் கேட்கத்தொடங்குகிறான்.

பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா? நான் அவர்களை மன்னிப்பேன். வாழ்வாதாரம் தேடுவோர் உண்டா? நான் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவேன். பாதிக்கப்பட்டோர் உண்டா? நான் அவர்களுக்கு சுகம் அளிப்பேன், இன்னும் (எதையெல்லாம் கேட்க்க வேண்டுமோ, அதையெல்லாம்) கேட்பவர் உண்டா? நான் அதையெல்லாம் கொடுக்கிறேன் என்று ஃபஜ்ரு உதயம் (பொழுது விடியும்) வரை கேட்கிறான். (அறிவிப்பவர். அலி (ரலி) ஆதாரம் இப்னு மாஜா: 1388 மிஷ்காத்: 1306)

நபிமொழிப்படி பிறப்பு இறப்பு இந்த இரவில் தீர்மானிக்கப்படுவதால் ஆயுள் நீளமாக துஆச் செய்கிறோம், ரிஸ்க் இவ்விரவில் இறங்குவதாலும், இன்னும் “என்னிடம், ரிஸ்க் கேட்ப்போர் உண்டா?” என்று அல்லாஹ் கேட்பதாலும் ரிஸ்க் விஸ்தீரணத்திற்காக துஆச் செய்கிறோம். “முஸீபத்திலிருந்து பாதுகாப்பு கேட்போர் உண்டா?” என்று அல்லாஹ் கேட்பதால் நாம் அவனிடம் பாதுகாப்பும், சுகமும் கேட்டு துஆச் செய்கிறோம் இப்படி மக்ரிபிலிருந்து அல்லாஹ் கேட்கத்துவங்கி விடுவதால் வாய்ப்புக்கு முந்த வேண்டும் என்பதற்காகவும், “நன்மைகளை செய்வதில் இறை அருளைப் பெறுவதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 2:148. வசனத்திலும் “உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்கத்துக்கும் விரைந்துசெல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 3:133 வசனத்திலும் அல்லாஹ் கூறுவதற்காகவும் நாம் முந்திக்கொண்டு மக்ரிபுக்குப் பிறகே துஆச் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். முன்னதாக ஸூரா யாஸீன் ஏன் ஒதுகிறோம் என்றால், குர்ஆன் ஓதி குறிப்பாக ஸூரா யாஸீன் ஓதி துஆக் கேட்டால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான் என்று ஹதீஸில் வந்துள்ளது. “குர்’ஆன் ஓதி அதைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்”. நபி மொழி பதிவு திர்மிதி 2917. மிஷ்காத் 2210.

மேலும் அண்ணல் நபிகள் நாயகம் (ﷺ) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக்கூறுகிறான்”. பதிவு- முஸ்லிம் 2699. அபூ தாவூத் 1455.

மலக்குகள் இறங்கி இருக்கும் மஜ்லிஸில்- கூட்டத்தில் துஆக் கேட்டால் அதை அல்லாஹ் கபூலக்குவான். “சேவல் கூவும் சப்தம் கேட்டால் நீங்கள் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் ஏனெனில் அது மலக்கைக்கண்டு தான் கூவும்”. நபி மொழி புகாரி 3303. முஸ்லிம் 2729. இந்த நபி மொழி மலக் இருக்கும்போது துஆச் செய்வதை பரிந்துரைக்கின்றது என்றால் அப்போது அது கபூலாகும் என்பதால்தானே!. “குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” என்று புகாரி ஷரீபிலும் முஸ்லிம் ஷரீபிலும் ஹதீஸ் வந்துள்ளது. குர்ஆன் ஓதிய பின்னர் மலக்குகள் இருக்கும்போது துஆக் கேட்டால் அது கபூலாகும் என்றால் பத்து முறை குர்’ஆன் ஓதியதற்குச்சமமான யாஸீன் ஓதி துஆச் செய்தால் அது கபூல் ஆகாதா? “ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).

“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).

“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் (தாரமி) ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் (மக்ரிப்) துஆவை நாம் கேட்டு வருகிறோம்.

மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர பின் கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்

அல்லாஹும்ம இன் குந்த கதப்தனா அஷ்கியாஅ ஃபம்ஹுஹு வக்துப்னா சுஅதாஅ வஇன் குந்த கதப்தனா சுஅதாஅ ஃபஅஸ்பித்னா ஃபஇன்னக தம்ஹு மா தஷாஉ வதுஸ்பிது வஇன்தக உம்முல்கிதாப்

(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).

இந்த துஆவை ஷாஅபான் 15 ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)

பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.

நாம் ஓதும் பராஅத் துஆவின் மிகுதமான வாசகம் ஹதீஸிலிருந்து பெறப்பட்டதாகும் இமாம் சுயூதி அவர்கள் அத்துர்ருள் மன்சூர் என்ற அவர்களின் தப்சீரில் 13:39 என்ற வசனத்தின் விளக்க உரையில் கூறுகிறார்கள்; இப்னு அபீ ஷைபா அவர்கள் தனது அல்முசன்னஃப் என்ற ஹதீஸ் கிரந்தத்திலும் இப்னு அபித்துன்யா அவர்கள் தனது அத்துஆ என்ற ஹதீஸ் தொகுப்பிலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள் எந்த அடியான் இந்த (பராஅத்) துஆக்களை ஓதுவாரோ அல்லாஹ் அவருடைய வாழ்க்கையில் அவருக்கு வளப்பத்தை ஏற்படுத்துவான்.

“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” (அல் குர்ஆன். 13:38,39).

“எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளைச் சேர்த்துக்கொள்ளட்டும்” நபி மொழி. புகாரி: 5986. முஸ்லிம்: 1982. சில அறிவிப்புகளில்., “அல்லாஹுவைப் பயந்து கொள்ளட்டும் தனதுபெற்றோரை மதித்து அவர்களுக்கு நன்மை செய்யட்டும்” என்று கூடுதலாக வந்துள்ளது. இந்த நபிமொழியில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.

“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை (வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று 6:2-ல் கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு (அஜலை) தவணையைக் குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை (மறுமையில்) சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும். ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) வழங்கினார்கள் (தப்ஸீர் குர்துபி. 13:39 விரிவுரை)

பராஅத் இரவில் கப்று ஜியாரத்:-
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்., ஒருநாள் இரவு அண்ணல் நபி (ﷺ) அவர்களைக் காணாமல் தேடி அலைந்த போது இறுதியில் அவர்கள் ஜன்னத்துல் பகியி (மதீனா கபுறுஸ்தானி)ல் நின்று உருக்கமாக துஆச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம். நான் (எனது) உலக நலனில் அக்கறை கொண்டு (தேடிவந்து)ள்ளேன். ஆனால் நாயகமே தாங்களோ (மக்கள் நலனுக்காக) உங்கள் இறைவனிடம் தேவையாகி நிற்கிறீர்களே! (என மெய்சிலிர்த்தேன்) அங்கிருந்து வேகமாக கிளம்பி எனது அறைக்கு வந்து சேர்ந்தேன் வேகமாக நடந்து வந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது எனக்குப்பின் எனது இல்லம் வந்து சேர்ந்த சர்தார் நபி (ﷺ) அவர்கள் இதைக் கவனித்து விட்டு, இதென்ன ஆயிஷா! இப்படி மூச்சு வாங்குது? என வினவினார்கள். அதற்கு, நான் அவர்களைக் காணமல் தேடி அலைந்து இறுதியில் ஜன்னத்துல் பகியில் கண்டு பிடித்து பிறகு மிக வேகமாக இல்லம் திரும்பிய கதையை அவர்களிடம் சொன்னேன். “என்ன ஆயிஷா! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து இது ஷ/பான் 15-வது இரவு. இதில் அல்லாஹ் அடியார்களுக்கு விடுதலை அளிக்கிறான் எனக்கூறினார்கள்”. (எனவே அடியார்களுக்கு மன்னிப்பும் நரக விடுதலையும் கிடைக்க துஆ செய்வதற்காக கபுறு ஜியாரத்திற்கு வந்தேன்). ஆதாரம்.  பைஹக்கி 3837 இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் புரிகிறது அல்லவா!.

பராஅத் இரவின் இபாதத்- இறைவணக்கம்:
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றாகள்; கபுற் ஜியாரத் முடித்து விட்டு இல்லம் திரும்பிய கண்மணி நாயகம் (ﷺ) அவர்கள், ஆயிஷா!  இன்றிரவு நின்று வணங்க எனக்கு அனுமது அளிப்பீர்களா? என்று என்னிடம் வினவினார்கள் அதற்கு நான், “எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம் தாங்கள் என்னுடன் எனக்கருகே இருப்பதைத் தான் விரும்புகிறேன் ஆனாலும் உங்களது விருப்பத்தை தேர்வுசெய்கிறேன்” எனக்கூறினேன் உடன் எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள் நீண்ட நெடிய நேரம் தொழுகையில் சுஜீதிலேயே இருந்தார்கள். எந்த அளவு நீளமான சுஜீது செய்தார்கள் என்றால் நான் அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டு விட்டதோ என்று கருதிவிட்டேன். எழுந்து போய் அவர்களின் பாதத்தை தொட்டபோது அதில் உயிர்த்துடிப்பு இருந்தது. அப்போது தான் எனக்கு சந்தோசமே வந்தது சுஜீதில் அவர்கள் ஓதியதை நான் கவனித்துக் கேட்டேன்;

“அஊது பிஅஃப்விக மின் இகாபிக வஅஊது பிரிழாக்க மின் சகத்திக வஅஊது பிக மின்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக”

(யா அல்லாஹ் உனது மன்னிப்பைக்கொண்டு உனது தண்டனையை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உனது திருப்பொருத்தத்தை கொண்டு உனது கோபத்தை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உன்னைக்கொண்டு உன்னைவிட்டும் உன்னளவில் பாதுகாபுத்தேடுகிறேன் உனது திருமுகம் மகத்தானது நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்)

நான் இவ்வாறு செவிமடுத்ததை காலையில் நபி (ﷺ) அவர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள், ஆயிஷா! இதைக் கற்றுக்கொண்டாயா (நல்லது) இதைக் கற்று, கற்றுக்கொடுங்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இவ்வாறு இதைக் கற்றுக்கொடுத்து இதை சுஜூதில் திரும்பத் திரும்ப மடக்கி மடக்கி கூறிக்கொண்டிருக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.

ஆகவே, இதை நாமும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம். பராஅத் இரவில் சுஜுதில் இருந்துகொண்டு இதை நாமும் கூறிக்கொண்டிருப்போம்.

பராஅத் நோன்பு:
இதற்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்கிறது

1,     இது ஷ/பான் மாதத்தின் நோன்பு. பொதுவாக, “நாயகம் (ﷺ) அவர்கள் ரமழானுக்கு அடுத்து ஷஃபானில் தான் அதிகம் நோன்பு பிடிப்பார்கள். சில சமயம் ஷஃபான் முழுதும் நோன்பு வைப்பார்கள்” புகாரி: 1969. முஸ்லிம்: 1156.
“ரமழானையும் ஷஃபானையும் தவிர தொடர்ந்து இரண்டு மாதம் நபி (ﷺ) அவர்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லை” என்று உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் திர்மிதி: 1836.

ஷஃபானில் நீங்கள் நோன்பு பிடிக்கும் அளவு மற்ற மாதங்களில் நீங்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லையே? என, உசாமா (ரலி) அவர்கள் கேட்டபோது, “ரஜபுக்கும் ராமழனுக்கும் இடையில் இருக்கும் இந்த (ஷஃபான்) மாத(த்தின் மகத்துவ)த்தை மக்கள் உணராமல் உள்ளனர். இது அகில உலக இரட்சகனிடம் அமல்கள் உயர்த்தப்படும் ஒரு மாதம். நான் நோன்பளியாக இருக்கும்போது எனது அமல்கள் உயர்தப்படுவதை நான் விரும்புகிறேன்”. என உத்தம நபி (ﷺ) அவர்கள் பதில் அளித்தார்கள். நசயி: 210/4

2,     இது அய்யாமுல் பீழுடைய (13 ,14, 15 ஆகிய வெளுப்பு) நாட்களில் ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும். “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159. “நாயகம் (ﷺ) அவர்களின் இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வசனத்தை குர்ஆனில் அல்லாஹ் இறக்கினான்” என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).
(அதாவது 3 x 10 = 30 x 12 = 360) (திர்மிதி: 762 நசயி: 219/4)

3,     பராஅத் நோன்பு. நாயகம் (ﷺ) அவர்கள் நவின்றார்கள்., “ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)
இப்படி, சாந்த நபி (ﷺ) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக நோன்பு வைக்கும் ஷஃபான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும்  நோன்பு வைப்பது ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.

பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
“ஷஃபான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” என்று அறிவித்த அண்ணலார் (ﷺ) அவர்கள் இதில் விதி விலக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செய்பவர்கள்

·                     குறிப்பு; முப்தி தகி உத்மானி அவர்கள் கூறுகிறார்கள்:

·    பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான ஃபுகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.

·      பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

·     பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து

·       இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ, இது அடிப்படை அற்ற விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ தவறானதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும். (இஸ்லாஹீ குத்பாத்).

அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீஃ
பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத் இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அந்த ராத்திரியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் செய்வதைத்தான் மறுக்கிறார்கள்.

“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)

காண்க: மிஷ்காத் ஹதீஸ் எண்: 1308 விரிவுரை மிர்காத்.

பராஅத் போன்ற சிறப்பான இரவுகளில் தொழுகின்ற அடியார்களை தடைசெய்கின்றவர்களைக் குறித்து அன்றே அல்லாஹ் அடையாளப் படுத்தி இருப்பதைப் பார்த்தீர்களா? வஸ்ஸலாம்.....


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

0 comments:

Post a Comment