Monday, June 9, 2014

சித்தாரிய்யா அரபுக் கல்லூரி உருவான விதம்


இந்தியாவின் தென் தமிழகத்தில் இஸ்லாமிய தொண்டை சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு செய்து வருவது நமது இராமநாதபுரம் மாவட்டம் தான். ஏர்வாடி அல்குத்பு ஷஹீது இபுராஹிம் பாதுஷா நாயகம் முதல், இன்றும் என்றும் யாராகினும் சிலரோ பலரோ இறை பணியை செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வகையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தாயிக்கெல்லாம் தாய் மதரஸா கீழக்கரை அரூஸியா தைக்கா போன்று இறை பணியை தொடங்கியுள்ள நமது சீர்மிகு சித்தார்கோட்டை சித்தாரிய்யா அரபிக்கல்லூரியும் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஐந்தாண்டுகளில் மௌலவி பட்டம் வழங்கி சீரோடும் சிறப்போடும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.



இக்கல்லூரி கி.பி.2001 ஆம் ஆண்டு முஹம்மது இபுராஹிம் - சவ்தாம்மாள் தம்பதியினரின் மகனார் மௌலானா மௌலவி அல்ஹாஜ் இ.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்களால் சித்தார்கோட்டையில் துவக்கப்பட்டு அவர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இப்பெருமகனார் தொண்டி, அம்மாபட்டிணம், பனைக்குளம் போன்ற ஊர்களிலுள்ள அரபுக் கல்லூரிகளில் முதல்வராக சிறப்பான முறையில் பணியாற்றி சிறந்த மார்க்க முத்துக்களை உருவாக்கினார்கள்.



தமது மார்க்க பணியை கடல் கடந்து மலேசியா நாட்டிலும் தொடர்ந்தார்கள். அந்த ஆலிம் பெருந்தகை, தொண்டி அஜ்ஹரியா அரபுக் கல்லூரியில் 1985-ஆம் ஆண்டு வாக்கில், அக்கல்லூரியின் விரிவாக்கப் பணிக்காக இலங்கையிலிருந்து வந்த பெரிய வியாபாரியிடம் கல்லூரி நிர்வாகிகளுடன் சென்று உதவி கோரிய போது நீங்கள் யார்? எந்த ஊர் ? என்றெல்லாம் கேட்டு தெரிந்த பின் நீங்கள், தங்களது ஊரில் ஒரு அரபுக் கல்லூரியை தொடங்க வேண்டும், அங்கும் இல்லாமல் தானே இருக்கிறது என்று அவர் சொல்ல அன்றே தனது ஆழ்மனதில் ஒரு அரபுக் கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின்பு அதுவே அவரது இலட்சியமானது. அதனை அல்லாஹ் அன்றே ஒப்புக் கொண்டான் போலும். ஆகையால் தான் சித்தார்கோட்டைக்கு இன்று ஒரு அரபுக் கல்லூரி கிடைத்திருக்கிறது.




அறிவு பசியும் ஆன்மிக பசியும் முழுமையாக போக்கும் அம்சம் கொண்ட ஊராக சித்தார்கோட்டை இருக்கிறது.அறிவு, ஆன்மிக களஞ்சியம் பெரிய ஆலிம் சாஹிப் என்ற அஹமது இப்ராகிம் பாஜில் பாகவி அவர்கள் அடங்க பாக்கியம் பெற்ற ஊராகும். அவர்கள் இராமநாதபுரம் சேதுபதி மன்னரால் சேது நாட்டின் தீன் முத்து என்று போற்றப்பட்டவராவார்கள். 



அம்மாவட்டத்தில் எந்த விஷயத்திலாவது சிக்கல் இருந்தால் அதனை தீர்த்து வைப்பார்கள். அவர்கள் அவ்வூரில் சிறு பிள்ளைகளுக்கு மார்க்கம் படிக்கும் விதமாக மல்ஹருஸ்ஸுஅதா ( சீதேவிகள் தென்படுமிடம்) என்ற மதரஸாவை உருவாக்கினார்கள். அதற்கு மேல் படிப்பாக இஸ்லாமிய ஷரீஅத்தை நன்றாக பயிலும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதே நமது சித்தாரிய்யா அரபுக் கல்லூரி ஆகும்.

தொடர்புக்கு ;-http://www.chittariyya.com
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment